Wednesday, September 17, 2014

பார்த்திபன் கனவு - ஒலிப் புத்தகம்

நேற்று மாலை மயிலை சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம் ரொம்பி வழிந்தது. ட்ராஃபிக் வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டதில் நான் முக்கால் மணி லேட். டான்னு ஏழுக்கு ஆரம்பித்திருக்கிறார்கள். ஆஃபீஸ் ஜிகிரி தோஸ்த் சத்யாவோடு நுழைந்தேன். பேரன்பு காசி பெத்தாச்சிக் கதவோரம் காத்திருந்தார். “கீள இடமில்ல.. பால்கனிக்கு போங்க...” என்று மூவரையும் கண்டித்து வழி திருப்பிவிட்டார் ஒரு மகானுபாவர். ரிட்டயர்ட் மேத்ஸ் வாத்தியாராக இருந்திருப்பார். கையில் பிரம்பில்லாதது பகவத் சங்கல்பம். நட்பின் இலக்கணம் வீகேயெஸ்ஸும் வல்லபாவும் தம்பதிசமேதராய் இரசித்துக்கொண்டிருந்த வேளையில் நட்புக் கரடியாய் நுழைந்து பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்.

ஸ்வர்ண சம்க்கிகள் வைத்து கண்ணைப் பறித்த ராஜாங்க ஆடை ஆபரணங்களில் கவனமாக தமிழ் பேசி நடித்துக் கொண்டிருந்தார்கள். ஆடைத் தேர்வும் மேக்கப்பும் கனக் கச்சிதம். குந்தவி மேடை நிறைத்தார். பின்னால் நீலத்திரை. வசனமே பிரதானம். இரண்டொரு காட்சிகள் பார்க்க முடிந்தது. மன்னை கீழப்பாலம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒரு பொட்டி ஒரு தபேலாவோடு ஒருவர் கூத்து பாட ”மகனே லோகிதாசா....” என்று சந்திரமதி ஸ்பீக்கர்களில் கதற அரிச்சந்திரா நாடகம் பார்த்தது நியாபகம் வந்தது. நடிகர்கள் இங்குமங்கும் நடக்க மேடைப் பலகை எழுப்பும் ”டக்..டக்” கூடுதல் பெர்கஷன். கடைசியில் வரிசையாய் நிற்க வைத்து அறிமுகப்படுத்தினார் பாம்பே கண்ணன்.

மேடையில் சேர் போட திரை போட்ட இடைவெளியில் ஜேயார் சாரும், ஸ்ரீதர் ஸ்வாமிநாத்ஜியும், பல்லவ ராஜகுமாரி குந்தவியாக இந்த பா.கனவின் குரல் ஹீரோயின் அநன்யாவும் அவரது மதர் தெரஸாவும் பலகனிக்கு வந்து ஜோதியில் ஐக்கியமானார்கள். ஸ்ரீதர் ஸ்வாமிநாத்தை போன ஜென்மத்தில் சக ஸ்நேகிதங்களுடன் பார்த்தது. நேற்று மீண்டும் பார்த்தேன்.

அமரர் கல்கியின் அமர காவியம் பார்த்திபன் கனவை ஆடியோ புத்தகமாக்கி வெளியிட்டார்கள். கல்கியின் கலாபூர்வமானப் படைப்பை பிட்பைட்டாக்கி வட்டுக்குள் இட்டுவிட்டார்கள். பட்டு நூல், மெட்டு நூல் என்று நிகழ்ச்சித்தொகுப்பாளரால் புகழப்பட்ட நல்லி செட்டியார் தலைமையும் முதல் பிரதியை வெளியிட்டும் பேசினார். சிகே. வெங்கட்ராமன் பளபள தலையுடன் பக்காவாகப் பேசினார். பாம்பே கண்ணனுடன் பொன்னியின் செல்வனில் கைகோர்த்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அவ்வப்போது ஜேயார் சார் காதைக் கடித்து தோளைச் சுரண்டிய எனக்கு மேடை நுட்பங்களைப் புரிய வைத்தார்.

”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் அதீத உழைப்பைப் பற்றி பேசினார். முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி அடிக்கடி கேட்பார்களாம். ஊருக்கெல்லாம் உதவும் ஒரு தனவந்தரும் அவர் வீட்டருகே ப்ளாட்ஃபார பிச்சைக்காரருக்கும் மோட்சம் கிடைத்த கதை ஒன்றைச் சொன்னார். தனவந்தர் வள்ளலாக இருந்ததால் மோட்சம், இந்த பிச்சைக்காரருக்கு ஏன் மோட்சம் என்று கேட்டால், கஷ்டப்படுபவர்களுக்கு “அவர் வீட்டுக்குப் போ.. தானம் தருவார்... அவர் வீட்டிற்கு போ உதவி செய்வார்.. ” என்று எல்லோருக்கும் கைகாட்டியதால் அவருக்கு கைகாட்டி மோட்சம் என்று சுவையாகக் கதை சொன்னார்.

இந்திரா சௌந்திரராஜன் தமிழ் தாத்தாவை தமிழ் தாதாவாக்கிப் பேசினார். இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் நுட்பத்தில் கொடுக்க இதுபோன்ற ஒலிப்புத்தகங்கள் அவசியம் என்றார். பால்கனியில் இருந்து கீழே பார்த்ததற்கு ஒரே நரைத் தலையர்களாகக் காட்சியளித்தனர். பாற்கடல். பயணங்களில் பாட்டு கேட்டுச் செல்வதற்கு பதிலாக இதுபோன்ற காவியங்களையும் கேட்டுச் செல்லலாம் என்றார்.

கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி மிட்டாய் கலரில் டாலாக அமர்ந்திருந்தார். ஏஆரெஸ் வொயிட்&வொயிட்டில் அடுத்து பேச தயாராய் இருந்தார். வரலக்ஷ்மி விரத முஸ்தீபுகளில் ஈடுபட்டிருந்த மனைவியின் ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு (பொட்டிப்பாம்பாக என்று வம்பர்கள் சொல்வார்கள்) வீட்டிற்கு பாதியிலே கிளம்பினேன். வீகேயெஸ் கையாலேயே ”ஏன்” கேட்டார். ஃபோனை காண்பித்தது நான் பின்னங்கால் பிடறியில் அடிக்க கிளம்பியதில் அர்த்தம் புரிந்து சிரித்தார். வெளியே அட்டை பாக்ஸில் சிடி விற்றுக்கொண்டிருந்தார்கள். சலுகை விலையில் ரூ.200க்கு வாங்கிக் கொண்டேன்.

பார்த்திபன் கனவு சீலைப் பிரிக்காமல் சேப்பாயிக்குள் பத்திரமாக இருக்கிறது. கனவைக் கேட்கவேண்டும். கேட்டதில் பிடித்தது என்று பகிரவேண்டும்.

கணபதி முனி - பாகம் 7 : துர்க்காமந்திர் யோகி

...கூட்டத்திலிருந்து தலையைத் திருப்பிய முண்டாசுக்காரன் “தர்பங்கா சமஸ்கிருத கல்லூரியின் முதல்வர் சிவகுமார் விடுமுறையில் வந்திருக்கிறார்... சமஸ்கிருத இலக்கிய விழா போல ஒன்று இங்கே நடைபெறுகிறது...” என்றான். சிவகுமார் ஆந்திரத்தில் பிரசித்தியான பண்டிதர் பாலா சாஸ்திரியின் பிரதான சிஷ்யர். கணபதி அந்த வித்வத் சதஸில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். சமஸ்கிருதத்தில் புகுந்து விளையாடினார். கூட்டம் வியந்தது. அங்கே கணபதியின் பிரகாசம் கூடியது. “பிரம்ம தேஜஸுடன் ஜொலிக்கும் இந்த சூட்டிகையான யுவன் யார்?” என்று அக்கம்பக்கம் வினவினார் சிவகுமார்.

கணபதி அந்த சதஸ்ஸில் உபன்யாஸம் செய்தார். சமஸ்கிருத அறிஞர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கொட்டியது. கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல பீறிட்டுப் பிரவாகமாக வந்தன இலக்கிய எடுத்துக்காட்டுகளும் இதிகாச புராண சம்பவங்களும். கேட்கக் கேட்ட இது சிவகுமாரைக் கட்டிப் போட்டது. மந்திரம் போட்டது போல ஒரேயிடத்தில் அமர்ந்திருந்தார். வங்காளத்தின் பிரசித்திப் பெற்ற நவத்வீப சமஸ்கிருத மையத்தில் போய் மேற்படிப்புப் படிக்கும்படி அறிவுறுத்தி கைப்பட சிபாரிசுக் கடிதமும் கொடுத்தார்.

சிவகுமார் தர்பங்கா திரும்பும் வரையில் இருவரும் திண்ணையில் அமர்ந்து சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்களை அக்கக்காக அலசுவதில் பொழுது ஓடியது. வீட்டுச் சுவர்களெல்லாம் சமஸ்கிருதத்தில் தேறின. அவர் காசியை விட்டுச் சென்ற மறுகணம் கணபதி தபஸுக்கு ஊர் அண்டாத ஒரு இடத்தைத் தேடி மீண்டும் அலைய ஆரம்பித்துவிட்டார். ஆனால் எந்த ஒரு இடமும் தோதாக இல்லை. இறுதியில் காசியில் தான் விருந்தாளியாகத் தங்கியிருந்த பவானி சங்கரத்தின் கிரஹத்திலேயே ஜபதபங்களைத் தொடர்ந்தார்.
அன்று காலை கணபதி வழக்கம்போல நித்யபடி தியானத்தை செய்துகொண்டிருந்தார்.

“கணபதி... கணபதி... ”.

ஒரு கணீர்க் குரல். கண் விழித்தார் கணபதி. கண்களில் ஆச்சரியம் பொங்கஉள்ளே நுழைந்தவர் ஆஜானுபாகுவாக இருந்தார். கார்வண்ணன். பஞ்சகச்சம். கட்டுக் குடுமி. நெற்றியில் விபூதிப் பட்டை. கழுத்தில் பெரிதும் சிறிதுமாக ருத்ராட்ச மாலைகள். ”யாரிவர்?” என்ற யோசனையோடு கைகூப்பினார். அவரை கண்ணெடுக்காமல் தீர்க்கமாகப் பார்த்தார் கணபதி. “ஹே! பவானி சங்கரம் நீ இங்கு வந்திருப்பதாகச் சொன்னார். உன்னைச் சந்தித்து பேசும் ஆவலில் பல மைல் கடந்து வந்தேன். ஆனால் உன்னோடு இப்போது பேச இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்று தெரிகிறது. சரி.. சரி... நீ உன்னுடைய தியானத்தை முதலில் செய்து முடி.. பிறகு நாம் விஸ்ராந்தியாக பேசலாம்...” என்று நடு கூடத்தில் தூணில் சாய்ந்து சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார்.

கணபதிக்கு ஆச்சரியமும் குழப்பமும் கை கோர்த்துக்கொண்டது. நெற்றியில் சுருக்கங்கள் நெளிந்தன. வந்த பெரியவரைப் பார்த்துக் கொஞ்சமாகப் புன்னகைத்தார். “மன்னிக்கவும். தாங்கள் யாரென்று என்னால் அடையாளம் காண முடியவில்லையே...” என்று திக்கித் திக்கிக் கையைப் பிசைந்தார். மீண்டும் கும்பிட்டார்.

“அப்பனே! என்னை ஞாபகமில்லையா? அது சரி.. தன்னையே மறந்தவனுக்கு என்னை எப்படி ஞாபகமிருக்கும்? நான் ராமநகர் துர்க்காமந்திர் யோகியப்பா... ”. சிரித்தார் யோகி.

“ஸ்வாமி என்னை க்ஷமிக்கணும். யோகி ஆவதற்கு முன்னர் தங்கள் பூர்வாசிரமப் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் மிகவும் தன்யனாவேன்”. பவ்யமாக கணபதி.

“சோமயாஜுல ஸூர்யநாராயணா. ஆனால் நான் யோகியாவதற்கு முன்பே நாமிருவரும் தொடர்பில்தானே இருந்தோம்...”

“எப்படி? புரியவில்லையே.... ”. கணபதிக்கு அவரது பேச்சு புதிராக இருந்தது.

“அடப்போப்பா! பத்ரகா மாதிரி எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லணுமா?”

பத்ரகாவின் பெயரைக் கேட்டமாத்திரத்தில் கணபதி ஆர்வத்தில் துள்ளி எழுந்தார். ஆச்சரியமான ஆச்சரியம். ”ப....த்..ர...கா...” ரகஸியம் பேசுவது போல வாய்விட்டு ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார்.

“உங்களுக்கும் பத்ரகாவைத் தெரியுமா?... ம்.. தெரியுமா?” வார்த்தைகளால் வந்திருந்தவரை உலுக்கினார்.

“ஏன் தெரியாது? நாமெல்லாம் ஒரே குழுவினர். நம்மில் மொத்தம் பதினாறு பேர். இப்போது மறு ஜென்மம் எடுத்திருக்கிறோம். பத்ரகாவிற்கு சித்தித்த எல்லையில்லா ஆனந்த நிலைக்கு நாமும் பிரயர்த்தனப்படுகிறோம். என் பெயர் ஸுகேது. ராமநகர் துர்க்காமந்திர் எனது வசிப்பிடமாக இருப்பதால் நான் துர்க்காமந்திர் யோகியாக ஜனங்களால் அழைக்கப்படுகிறேன்.”

“நானெப்போது எங்கே கரையேறுவேன் ஸ்வாமி? இப்போதே தெரியப்படுத்துவீர்களா?” ஆர்வத்தில் திளைத்தார் கணபதி.

“ ’ஸ்தூலசிரஸி’டமிருந்து நீ அதை தெரிந்துகொள்வாய். அதுவரை அமைதியாயிறு. அறிந்து கொள்ள அலையாதே. கடும் தவம் புரிந்து உன்னை நீயே வருத்திக்கொள்ளாதே. இப்புவியில் நீ ஜனித்தகணத்திலிருந்தே உன்னுடன் தவமியற்றும் வலிமையும் இருக்கிறது. தக்க நேரத்தில் அது சித்திக்கும். அதுவரையில் பரோபகாரியாக இருந்து கஷ்டப்படுபவரின் வாழ்க்கைப் பாதையில் இருக்கும் தடைகளைக் களைந்து பயனடையுமாறு உதவிகள் பல புரிவாயாக.....”

“ஆனால் என் முன் தோன்றிய பத்ரகா தவமியற்றச் சொன்னாரே! ஏன்? லோகக்ஷேமத்திற்காகவா? அல்லது எனக்காகவா?” அடுத்தடுத்து கேள்விகளை பாணங்களாய் தொடுத்தார் கணபதி.

“உன் சுயலாபத்திற்காக அல்ல. லோகக்ஷேமத்திற்காகத்தான். ஜகத்தினில் நல்லது செய்வது லேசுப்பட்ட காரியமல்ல. நற்தொண்டு புரிபவர்களுக்கு இப்போது பல தடைகள், சங்கடங்கள், முட்டுக்கட்டைகள். இந்த இடர்களை ஜெயித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பாடுபடும் அந்த தர்மவான்களுக்கு ஒத்தாசையாக இருப்பதே இப்போது உனக்கிட்ட பணி”

கூடத்தில், கொல்லையில், சந்தில், திண்ணையில் என்று நெடுநேரம் அங்குமிங்கும் நடந்தும் நின்றும் உட்கார்ந்தும் வெகுநேரம் பல கார்யங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். யோகி நிறைய பேசினார். கணபதியின் நிறைய சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். கணபதிக்கு மனநிறைவு ஏற்பட்டதை அவரது பளபளக்கும் கண்கள் காட்டிக்கொடுத்தது. வந்த வேலை முடிந்தது என்று யோகி எண்ணினார்.

“சரி கணபதி! உனக்கு இப்போது எல்லாம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் புறப்படுகிறேன்” என்று துர்க்காமந்திர் யோகி வாசலுக்கு வந்தார். “தேவரீர்! நான் என்னை அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன். என்னை விட எனது பிதாவிற்கு என்னைப் பற்றி அறிய ஏகப்பட்ட ஆவல். இப்போது நிகழ்ந்த இந்த சந்திப்பையும் நீங்கள் அறிவுரை செய்ததைப் பற்றியும் அவருக்கு நானொரு லிகிதம் எழுதவிருக்கிறேன். அதில் நீங்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதினால் நான் புண்ணியம் செய்தவனாவேன். எனது பிதாவும் மிக்க மகிழ்ச்சியடைவார்” என்று விண்ணப்பித்தார்.

“தங்களது புத்திரனை தவம் செய்ய அனுமதியுங்கள். இல்லறப் பொறுப்புகளைக் கொடுத்து அவனை வீணடித்துவிடாதீர்கள்.” என்று இரண்டு வரிகள் எழுதிக் கோடிட்டு “சோமையாஜுல ஸூர்யநாராயணா” என்று கையெழுத்திட்டார். பின்னர் அஞ்சலுறையில் ஆங்கிலத்தில் நரசிம்ம சாஸ்திரியின் முகவரியைக் கேட்டு எழுதினார். “நீ ஒரு முறை துர்க்காமந்திர் வாப்பா” என்று சிரித்தார். கணபதியிடம் லிகிதத்தைக் கேட்டு வாங்கி அவரே வரும் வழியில் ஒரு தபால்பெட்டியில் சேர்த்துவிட்டு துர்க்காமந்திருக்கு சென்றுவிட்டார். இவ்வளவு அமர்க்களங்கள் இங்கேநடந்த போதும் பவானி சங்கரம் அங்கே தலைகாட்டவேயில்லை.

லிகிதம் கண்ட நரசிம்ம சாஸ்திரி பரமானந்தம் அடைந்தார். “ரொம்ப சந்தோஷம்” என்று பதிலுக்கு தந்தி அடித்தார். கணபதிக்கு துர்க்காமந்திர் போக கால்கள் துறுதுறுத்தன. ராமநகருக்கு விரைந்தார் கணபதி. அங்கு ஒரு பேராச்சரியம் அவருக்குக் காத்திருந்தது. ஊரில் பலரிடம் விஜாரித்தும் அவருக்கு ஒரே பதில்தான் கிடைத்தது. “துர்க்காமந்திர் யோகி என்று இங்கே யாருமில்லையே” என்று எல்லோரும் கையை விரித்தார்கள். வித்தியாசமாகப் பார்த்தார்கள். துர்க்காமந்திரில் அந்த யோகியைக் காணத் தவம் கிடந்தார். பிரயோஜனமில்லை. அப்படியொருவர் இல்லவே இல்லை என்று ஊர்ஜிதமானதும் கணபதிக்கு மெய் சிலிர்த்தது. சரீரமெங்கும் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. எங்கும் நிறைந்த பரம்பொருளே நேரில் வந்து எனக்கு காட்சி தந்தானா என்று கண்களிலிருந்து நீர் தாரைதாரையாய் சொரிந்தது. காசிக்குத் திரும்பினார். மாமா தாத்தா பவானி சங்கரத்திடம் ராமநகரில் நடந்தவைகளை ஒன்றுவிடாமல் கூறினார்.

“நீ புண்ணியாத்மா கணபதி. வீட்டில் யாருமில்லா நேரத்தில் அந்த சர்வேஸ்வரனே துர்க்காமந்திர் யோகியாக உனக்கு நேரில் காட்சியளித்திருக்கிறார். சோமயாஜுலுவுடன் உங்கள் குடும்பத்தின் இஷ்ட தெய்வமான ஸூர்யநாரயணரின் பெயரைக் கூட்டிக்கொண்டு உன்னிடம் சித்து விளையாடியிருக்கிறார். பத்ரகாவும் ஸுகேதுவும் இப்புவியில் எந்த மூலையிலாவது ஜனித்திருப்பார்கள். உங்களுடைய அவதார மகிமையைக் காட்டுவதற்கும் பிறந்த நோக்கத்தை தூண்டி விட்டு நினைவுறுத்தவுமே இந்த ஸுகேது தோன்றியிருக்கிறார். பதினாறு பேர்கள் என்று சொன்னாரே.. அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்துவார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் நீ முப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்....” என்றார் பவானி சங்கரம்.

அன்றிரவே ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர்........

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_7‬
‪#‎கணபதி_முனி‬

கணபதி முனி - பாகம் 6 : காசியில் கணபதி

எதிரே குபுகுபுவென்று வெண்புகை கிளம்பியது. முழுநீள தாடியுடன் அவ்வெண் புகையில் நனைய மசமசவென்று கண் முன் தோன்றிய அந்த உருவம் கணபதியைப் பார்த்து தமிழில் சரளமாகப் பேச ஆரம்பித்தது. “நான் பத்ரகா. நீ கணகா. உனக்கும் எனக்கும் முன் ஜென்மாந்திர தொடர்பு உண்டு. நீயும் நானும் முற்பிறவில் சகதபஸ்விக்கள். இப்பிறவியிலும் நீ தவ வாழ்வில் ஈடுபட வேண்டும்.” அவ்வளவுதான். செய்தி தெரிவிக்கப்பட்டது. அவ்வுருவம் பட்டென்று மாயமாய் மறைந்துவிட்டது. சூழ்ந்த புகை விலகியது.

கணபதி தமிழ் பக்கம் போகாதவர். ஆனால் எம்மொழிக் கிரந்தமானாலும் அக்ஷரம் பிசகாமல் நினைவில் நிறுத்திக்கொள்ளும் அபார நினைவாற்றல் இருந்தது. கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரிக்கு தமிழ் தெரியும். அவரிடமிருந்து பத்ரகா சொன்னதை தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டார். அப்போதிலிருந்து கணபதியின் மனஸ் தவமியற்ற தவியாய்த் தவித்தது.

இதற்கிடையில் நந்திகிராமம் சென்றிருந்த கணபதியின் தம்பி சிவராம சாஸ்திரி தந்தைக்கு ஒரு லிகிதம் எழுதினார். அதில், கணபதி ஒரு பிரம்ம தேஜஸான தவ சிரேஷ்டருடன் ஐராவதத்தின் மீதேறி எங்கோ தவமியற்றப் போவது போன்று கனவு கண்டதாக எழுதியிருந்தார். நரசிம்ம சாஸ்திரி தனது மகன் ஒரு அபூர்வச் செயலுக்காக இப்புவியில் பிறந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டார். கணபதி தவமியற்ற போவதற்கு ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். ”தங்களது கட்டளை என்ன?” என்று தாள் பணிந்து கேட்டார் கணபதி. “நான் அழைக்கும் போது உடனே நீ திரும்பிவிட வேண்டும்.” சங்கரருக்கு ஆர்யாம்பாள் இட்ட கட்டளை போன்ற கேள்வி. கணபதி ஒத்துக்கொண்டார்.

கணபதி தவமியற்றித் திரும்பும் வரையில் விசாலாக்ஷி பிறந்தகத்திலேயே இருக்க ஏற்பாடாயிற்று. தனது இருபதாவது பிறந்தநாளில் (18-11-1897) தந்தையின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் காசி க்ஷேத்திரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

புண்ணிய காசியை வந்தடைந்து வைத்தியநாத சாஸ்திரியுடன் ஸ்நேகிதரானார். அவரின் ஸ்நேகிதர் கைரேகை சாஸ்திர விற்பன்னர். கணபதியின் உள்ளங்கையில் ஓடிய ரேகைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு “ரேகைகளில் சங்கு சக்கர அடையாளங்கள் தெரிகிறது. தெய்வாம்சம் பொருந்திய ரேகைகள்” என்று கண்கள் விரிய அதிசயித்தார்.

வைத்தியநாத சாஸ்திரியிடம் சொல்லிக்கொண்டு அங்கவஸ்திரத்தில் கொஞ்சம் அவலை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு கங்கையைத் தாண்டிவிட்டார். அங்கிருக்கும் சங்கமாதவ கோயிலின் மண்டபத்தில் தவமியற்ற சம்மணமிட்டார். ஆளரவமற்ற நிசப்தமான பகுதி. எப்பவாவது பட்சிகள் எதாவது சப்தமிடும். காற்று வீச கிளைகள் அசையும் அரவம் கேட்கும். மற்றபடி எவரும் தொந்தரவு செய்யாத இடம். கண்களை மூடி இரவு முழுவதும் ”நமசிவாய... நமசிவாய....” என்று சிவ பஞ்சாட்சரம் ஜெபித்தார்.

கண் விழித்த போது பொழுது விடிந்திருந்தது. அவரது கம்பளி, வேஷ்டி துண்டு மற்றும் வைத்திருந்த சொற்ப அனாக்களும் காணாமல் போயிருந்தன. இராவேளையில் நடமாட்டம் இல்லாத அந்த இடத்திற்கு தனியாளாக எவரும் நுழைந்திருக்க சாத்தியம் இல்லை. அவசியமும் இல்லை. கடைசியில் அங்கே மீதமிருந்தது அவரது கமண்டலமும் ஒரே ஒரு வேஷ்டியும். மனிதர்கள் யாரும் வரவில்லை என்றால் எப்படி மற்றவையெல்லாம் காணாமல் போயிருக்கும்? கணபதிக்கு இதில் ஆச்சரியமேதுமில்லை.மெலிதாக புன்னகைத்தார். இது கடவுளின் லீலை. தன்னை பரீட்சிக்கும் சோதனை.

அது உடல் விரைக்கும் குளிர் காலம். பனிக்கட்டியாய் ஜில்லிட்ட கணபதி விடாமல் தவமியற்றினார். கையில் கொண்டு சென்ற அவல் பத்து இரவுகளின் பசியை ஆற்றியது. பகற்பொழுதில் வாயில் எதையும் போடாமல் தவ வேள்வியில் ஈடுபட்டார். பத்து நாட்கள் தொடர் தவத்திற்கு பிறகும் தெய்வாதீனமாக எதுவும் நடக்கவில்லை என்றதும் குந்துமணியளவு மனம் குன்றினார். கங்கைக்கு அருகில் கடவுளைத் தேடும் சிலருக்கு இதன் ரகஸியம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தார். கங்கைக் கரையில் தனியனாய் இங்குமங்கும் அலைந்து திரிந்தார்.

சதா சர்வகாலமும் இறை சிந்தனையோடு பல மைல்கள் நடந்து ஒரு ஆசிரமக் குடிலை அடைந்தார். அங்கு தொங்கு தாடியுடன் இருந்த சிரேஷ்டர் ஒருவர் கணபதிக்கு இலை போட்டு பிராம்மண போஜனம் அளித்தார். சற்றுநேரம் அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவரும் இறை தரிசனத்திற்காக இங்கே தவமிருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு நாளிரவு மட்டும் அங்கு தங்கினார். காலையில் மீண்டும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

அப்போது எதிர்புறம் வந்த ஒரு பிரம்மச்சாரி தவம் செய்வதற்கு தோதான ஒரு இடத்தைக் காண்பிப்பதாக அழைத்துச்சென்றார். அவர் ஹம்ஸ தீர்த்தத்தைக் காட்டினார். அயோத்தி மஹாராஜா நிர்மாணித்த சமஸ்க்ருத ஆசிரமப் பள்ளியும் அங்கு இருந்தது. அப்பள்ளியின் இலக்கண ஆசிரியர் கணபதியின் முகப்பொலிவைக் கண்டு பரம சந்துஷ்டியோடு குளிருக்கு ஷாலும் சில துணிமணிகளும் கொடுத்து உதவினார். மீண்டும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து தவமியற்றினார். பின்னர் கணபதிக்கு அவ்விடம் கசந்தது. அங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமாக ஆனது.

சூரியகிரஹணத்திற்காக அந்த ஆசிரமவாசிகளும் மற்றவர்களும் காசிக்குப் பயணப்படவேண்டும். கிரஹணத்திற்கு இன்னும் ஒரு மாசம் இருந்தாலும் அதற்கு முன்னரே உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓயாமல் ஆரவாரம் செய்தார்கள். கணபதியின் தவத்திற்கு இது இடைஞ்சலாகி முட்டுக்கட்டைப் போட்டது.

காசிக்குப் புறப்பட்ட அவர்களுடன் கணபதியும் படகில் ஏறிக்கொண்டார். விந்தியமலைச்சாரலை அப்படகு வந்தடைந்தவுடன் அதிலிருந்து இறங்கினார். அங்கே தவம் செய்யலாம் என்று ஒரு உத்வேகம் அவருக்குள் ஏற்பட்டது. விந்தியமலைச்சாரலின் பிரதான தெய்வம் நந்த தேவி. நந்ததேவியை வணங்கிவிட்டு அன்றிரவு உக்கிரமான ஜபத்தில் ஆழ்ந்தார். ஜபத்தின் ஊடே அவரது உடம்புக்குள் ஏதோ புகுந்து கொண்டது போல அவரது மேனி தடதடவென்று உதறியது. சம்மணமிட்டக் கால்கள் தூக்கித் தூக்கி போட்டு படபடவென்று அடித்துக்கொண்டது. கண்கள் மேலே சொருகியிருந்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது....

அவரை ஏதோ ஒரு சக்தி அப்படியே அலேக்காக ஒரு பதினைந்து அடி தூரம் தரையிலிருந்து தூக்கியது. சில வினாடிகளில் மீண்டும் ஒரு புஷ்பம் போல மெதுவாகதரையில் இறக்கி வைத்தது. இந்த புதுவித அனுபவத்தில் கணபதி ரொம்பவும் ஆடிப்போனார். உடம்பு ஒருவித பயத்தில் வெடவெடவென்று நடுங்கியது. அப்போது அவர் ஒரு ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தார்.

அவந்த்யா விந்த்யா பூமி ப்ருத்
ததால்யா தயாவதி
விசார தௌத சேடஸம்
இயம் பயம் வ்யபோஹது
[வளமிகுந்த விந்தியமலைச்சாரலில் அமைந்திருக்கும் கோயிலில் உறையும் அன்னையே..உனது அருளாலும் உன் கருணா விசாரணையால் உன்னைத் துதிப்பவரின் மனோ பயங்கள் துடைக்கப்படட்டும் என்ற அர்த்ததில் எழுதப்பட்ட ஸ்லோகம். சமஸ்கிருத ஸ்லோகத்தை தமிழில் என்னல் இயன்றளவுக்கு எழுதியிருக்கிறேன்]

தெய்வ சிந்தனைக்கு எதிரான தீயசக்திகள் நடமாடும் இடம் போலிருப்பதாக எண்ணி அது தவமியற்ற ஏற்ற இடமல்ல என்று அங்கிருந்து அகன்றார் கணபதி முனி. மறுநாள் அங்கிருந்து நாராயணபுரம் என்ற கிராமத்தை வந்தடைந்தார். நாராயணபுரத்திலிருந்து ஒன்பது மணிநேரங்கள் நடையாய் நடந்து வ்யாஸ காசிக்கு(ராமநகர்) வந்தார். அங்கே கடைவீதியில் அவருடைய அங்கவஸ்திரத்தைஇரண்டு அனாக்களுக்கு விற்றார். ஒரு அனாவிற்கு வாழைப்பழங்கள் வாங்கிக்கொண்டார். இன்னொரு அனாவை படகுக் கட்டணமாகக் கொடுத்துக் கங்கையைக் கடந்து காசி வந்தடைகிறார்.

காசியில் வசிக்கும் ஆர்யசோமயாஜுலு பவானி சங்கரம் என்ற பெரியவர் கணபதியின் தந்தை நரசிம்ம சாஸ்திரியின் தாய் மாமன். அவர் வீட்டில் தங்கினார். அன்று அன்னபூரணி மற்றும் காசி விஸ்வநாதர் தரிசனம் கிட்டியது. காசி நகரை ஒரு வலம் வந்தார். ஓரிடத்தில் மக்கள் ஆர்வம் ததும்ப திரளாக கூடியிருந்தனர். ”இங்கே என்ன நடக்கிறது..” என்று கணபதி எட்டிப் பார்த்தபோது.....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_6‬
‪#‎கணபதி_முனி‬

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails