Wednesday, March 17, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- I

சமீபத்திய சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை இருபது உலகை புரட்டிபோடும், மாற்றி அமைக்கும் தன்மையுள்ள ஐடியாக்களை பட்டியலிட்டுள்ளது. அதில் சில....

1. சூரியசக்தித்    தகடு

சூரியசக்தித் தகடு மூலம் மின்சாரம் தயாரித்து பயன் படுத்துவது. இது முன்னரே சகலருக்கும் அறிமுகமான தொழில்நுட்பமானாலும் இதை பயன் படுத்துவதில் சில பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றன. இந்த தகடுகளை விலை கொடுத்து வாங்குவதற்கு சொத்தை எழுதிக் கேட்கும் அளவிற்கு இருப்பதால் இது தலை எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறது. அதனால் யு.எஸ்ஸில் 4000 வாடிக்கையாளர்கள் கொண்ட சோலார் சிட்டி என்ற நிறுவனம் இந்த சூரிய தகடுகளை இலவசமாக கொடுத்து மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கிறது. இந்த முறை தகடு விற்பவர், பயன்பெறும் வாடிக்கையாளர் இருவருக்கும் மிகவும் லாபகரமாக இருப்பதாக சோலார் சிட்டி தெரிவிக்கிறது. சன் ரன் என்ற அமெரிக்க நிறுவனமும் இதே போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இது நன்றாக செல்லுபடியானால் இன்னும் கொஞ்ச காலத்தில் எல்லோர் வீட்டு மாடியிலும் செயற்கைக்கோள் தட்டு உள்ளது போன்று சூரியத் தகடுகளும் வரலாம். மின்சாரம் இல்லை என்று பாடாவதியான டி.என்.இ.பி அலுவலகத்திற்கு யாருமே எடுக்காத தொலைபேசியை அழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். கரண்ட் ஆபிஸிலிருந்து வந்து போஸ்ட் ஏறி பியூஸ் போட்டு தலைசொரிபவருக்கு சில்லரை கொடுக்கும் நிலை இல்லாமல் போவதற்கு சூரிய பகவானை பொங்கலன்று மட்டும் அல்லாமல் என்றென்றும் வணங்கும் நிலை வரலாம்.

2. எனர்ஜி மீட்டர்ஸ்

மக்கள் தங்களுடைய சாதனங்களிளிருந்து எவ்வளவு சக்தியை உபயோகிக்கிறார்கள் என்று நிமிடத்திற்கு நிமிடம் அந்தந்த சாதனங்களிலேயே மீட்டர்(நம் உள்ளூர் ஆட்டோ மீட்டர் மாதிரி இல்லாமல்) போட்டு காண்பித்துக் கொண்டே இருந்தால் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை சக்தி வீணாவது குறைகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் உள்ளூர்  தொழில்நுட்ப ஆசாமிகளுடன் சேர்ந்து இந்த சக்தி உபயோக கணக்குகளை இணையத்தில் ஏற்றி மக்கள் ஒரு விழிப்புணர்வோடு இருக்க உதவி புரிய வருகின்றன.

3.மின்சார காற்று

நாம் வாழும் இப்புவியிலிருந்து பத்து கி.,மீக்கு மேல் ஐம்பது கி.மீக்குள் இருப்பது ஸ்ட்ரடோஸ்பியர். இந்த இடத்தில் ஓயாமல் நல்ல வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த வெயிலுக்கு அங்கே போய் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் சிந்திக்கும் இவ்வேளையில் லோகஷேமதிற்காக சிந்தித்த சில புண்ணியவான்கள் அங்கு அடிக்கும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரமானது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தேவையைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கலிபோர்னியாவின் ஸ்கை வின்ட்பவர் என்ற நிறுவனம் ராட்சத கோபுரங்களை நிறுவப்போகும் வேளையில், இத்தாலியின் கைட்ஜென் என்ற நிறுவனம் மிக உயரப் பறக்கும் பட்டம் (மேலே படத்தில் இருப்பது அதுவே) மூலமாக ஸ்ட்ரடோஸ்பியர் காற்றிலிருந்து கரண்ட் உருவ முயற்சி செய்கிறார்கள்.
(ஐடியாக்கள் தொடரும்)

1 comments:

R.Gopi said...

பலே ஐடியாக்கள்.....

சூப்பர் பதிவு........

வாழ்த்துக்கள்.......

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails