Wednesday, November 10, 2010

மன்னார்குடி டேஸ் - இரு பைத்தியங்கள்

இளவயதில் நான் கண்டு ரசித்த இரண்டு சித்த ஸ்வாதீனம் இல்லாத மனிதர்களை பற்றிய பதிவு இது. பல காரியங்களை பற்றி சிந்தித்து பலதையும் போட்டு குழப்பி அடிப்பவர்கள் சித்தத்துடன் தெளிவாக இருப்பதாகவும், சிரித்தால் சிரிப்பையும், அழுதால் அழுகையையும், வெறித்துப் பார்த்தால் வெறிப்பதையும் ஒரே நிதானமாகவும் மீண்டும் மீண்டும் பிசகாமல் அப்படியே செய்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள். வாழ்க்கையில் விரக்தி ஏற்ப்பட்டு, அவமானப்படுத்தப் பட்டு, ஏமாற்றப் பட்டு பலதையும் பட்டு பட்டு மன உளைச்சலில் மன அழுத்தத்தில் மென்டல் ஆனோர் ஏராளம். பைத்தியங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். இப்போது நாம் இந்த இருவரைப் பற்றி பார்ப்போம்.

mental

 மேலே இருக்கும் அந்தப் படத்தையே ஒரு பத்து நொடி  உற்றுப் பாருங்கள். அந்த சித்த ஸ்வாதீனம் இல்லாதவர் உங்களைப் பார்த்து ஒரு முறை கண் அடித்தால் உங்களுக்கு இந்தக் கிட்டுவையும், ராமுவையும் ரொம்ப பிடிக்கும்.

1. கிட்டு
பழுப்பு  நிறத்தில் இருக்கும் வெள்ளை வேட்டியை இடுப்பில் சுற்றி, பெண்கள் புடவைக்கு கொசுவம் வைத்துக் கொள்வது போல முன்னால் சுருட்டி சொருகிக்கொள்வான். "அர்" விகுதி பின்னால் சேர்த்துக்கொள்ளலாம். எப்போதும் கலைந்த சுருட்டை முடித் தலை. சுருட்டை முடி இருந்தால் சாப்பாட்டுக்கு  பஞ்சம் வராதாம். யாரோ சாமுத்ரிகா லக்ஷணம் படித்த பண்டிதன் கூறியது போலும். கிட்டுவிற்கு சாப்பாட்டிற்கு எப்போதும் குறை வந்ததில்லை. தலையில் ஆங்காங்கே கொஞ்சம் நரை முடி தென்படும். நெஞ்சாங்கூடு தெரியும் ஒடிசலான தேகம். சும்மா இருந்தாலே மோத்தா கோலிக்குண்டு அளவிற்கு குழி விழுந்த கன்னம். ஊட்டமின்மையால் தளர்ந்த தோல். எப்போதும் புழுதி படிந்த கால்கள். இதற்க்கு மேல் வர்ணிப்பதற்கு அவனிடம் ஒன்றும் இல்லை. அவன் என்ன சினிமா நடிகையா?

"மாமி... சாப்ட எதாவது இருக்கா.." என்று ராத்திரி எட்டுமணிக்கு மேல் வாசலில் நிழலாடி கீச்சு குரல் கேட்டால் அது கிட்டுதான். கண்ணை இடுக்கி உள்ளே எட்டிப் பார்ப்பான். ஒரு இரண்டு நிமிடம் காலை ஆட்டி ஆட்டி காத்திருந்து விட்டு அப்புறம் விருட்டென்று போய்விடுவான். ரொம்பவும் ரோசக்கார பிச்சை. ஞானிகள் பதினைந்து நொடிகளுக்குமேல் ஒருவீட்டு வாசில் நின்று பிக்ஷை கேட்க மாட்டார்களாம். இவன் எங்கள் தெரு ஞானி. இரண்டு நிமிட அவகாசத்திற்குள் பிச்சை இடவில்லையென்றால் கிட்டுவை அவருடைய ராஜ்ஜியத்தில் தான் சென்று பார்க்கவேண்டும். ராயர் வீட்டு திண்ணை தான் கிட்டுவின் பங்களா. திண்ணையின் கடைக்கோடியில் பல பிய்ந்த கோரைப் பாய்களை சேர்த்து கட்டி அறையாக மறைத்திருப்பான். பழைய கிழிந்த துணிகளை பந்தாக சுருட்டி தலைக்கு வைத்து கால் மேல் கால் போட்டு படுத்திருப்பான். இரண்டு மூன்று பாத்திரங்களில் மிச்சம் மீதி கொண்டு வந்து "கிட்டு...யேய்..கிட்டு.." என்றால் ராஜா வெளியே வரமாட்டார். "அங்கேயே வச்சுட்டு போங்க..." என்ற உத்தரவு பாயை கிழித்துக்கொண்டு வரும். நாம் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு அவனுக்கு கம்பெனி கொடுக்கும் ஒரு சிகப்பு நாய்க்கு பலநாள் விருந்தளித்திருக்கிறான். அவ்வப்போது எங்கேயோ சோப்பு பிச்சை கேட்டு வாங்கி வைத்திருக்கும் பிட்டு சோப்பால் அலம்பி துடைத்து பாத்திரம் வீடு வந்து சேரும். 

மனம் உவந்து சில நாட்கள் திண்ணையில் நாங்கள் விளையாடும் போது பக்கத்தில் வந்து உட்காருவான். அப்போது அவனுக்கு நார்ப்பத்தைந்து வயதிருக்கலாம். இளமை முழுவதும் தொலைந்து முகமும் உடலும் அறுபது காட்டும். பிளேட் கேட்டு வாங்கி நேர்த்தியாக கை கால் நகங்களை திருத்திக் கொள்வான். தேங்காய் எண்ணெய் பத்து அம்மாவிடம் கேட்டு வாங்கி வறண்டு போன உடலுக்கும் தலைக்கும் பூசிக் கொள்வான். ஒரு உடைந்த சீப்பை வைத்து ஒரு சில்லு கண்ணாடியை பார்த்து தலைவாரிக் கொண்டு திரும்பவும் தன் இருப்பிடத்திற்கு சென்று படுத்துக் கொள்வான். இது போன்ற அலங்கார நாட்களில் படுத்துக்கொண்டே "ஊ...ஆ..ஊ...யே..." என்று பல ராகங்களில் ஊளையிடுவது போன்று பாடுவான். அவனுக்கு அது நீலாம்பரி. அன்றைக்கெல்லாம் அமாவாசை அல்லது பௌர்ணமியாக அமைந்தது அவன் ஒரு பைத்தியம் என்ற ஊரார் கூற்றுக்கு வலு சேர்த்தது. "என்ன கிட்டு வாட் இஸ் யுவர் நேம்?" என்று கேட்டால் அமெரிக்கன் போல "ஐ அம் கிருஷ்ணமூர்த்தி. நாட் கிட்டு" என்று சூவிங் கம் அடைத்த வாய் போல் வைத்துக்கொண்டு பதில் சொல்லுவான். "செக்கஸ்லோவாக்கியா ஸ்பெல்லிங் சொல்லு" என்று கேட்டால் அட்சரசுத்தமாய் அழகான ஆங்கிலத்தில் சொல்லுவான்.

ஒரு ஜுரம், ஜலதோஷம் என்று கிட்டு ஒருநாள் கூட படுத்ததே கிடையாது. ராயர் ஆத்து மாமி ஏன் கிட்டுக்கு அந்த திண்ணை கொடுத்திருக்கிறாள் என்ற ரகஸியம் எனக்கு பத்து தான் ஒருநாள் சொன்னான். கிட்டு அந்த மாமிக்கு மச்சினன் உறவாம். அந்த வீடே அவனுக்கு தான் சொந்தமாம். முன்னோர்கள் சொத்து. வீடு அவர்களுக்கு வேண்டும் என்பதால் முட்டை மந்திரித்து அவனுக்கு செய்வினை வைத்து விட்டார்களாம். வீட்டையே அபகரித்துக் கொண்டதால் பாவம் பரவாயில்லை என்று சலுகையாக அந்த இருபது அடி திண்ணையை அவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்களாம். பத்து சொன்ன கதை நன்றாக இருந்தது அது நிஜமா என்று மாமியிடம் கேட்பதற்கு அப்போது தில் இல்லை. இப்படி நன்றாக அவன் உண்டு அவன் பொழுது உண்டு என்று இருந்த கிட்டு ஒரு நாள் சாயந்திரம் வரை அவனுடைய திண்ணை போர்ஷனில் இருந்து வெளியே வரவே இல்லை. ஒரு நாலரை மணி போல போய் எட்டி பார்த்ததில் தலைக்கு அழுக்கு மூட்டை தலைகானியோடு வானம் பார்த்த வாய் சற்று "அ" போல பிளந்து பிராணன் போயிருந்தது. வாத்தியாருக்கு சொல்லி ஏற்பாடு பண்ணி நாங்களே பாடை தூக்கி இடுகாடு வரை அவனை கொண்டுபோய் விட்டு காரியம் செய்து முடித்தோம். இன்னமும் "ஐ அம் கிருஷ்ணமூர்த்தி" என்று சொல்லும் அந்த கிட்டு என் நினைவு அடுக்குகளில் வாழ்கிறார்.

2. ராமு
ரொம்பவும் டீக்கான டிரஸ் போட்ருப்பார். யாராவது தானமாக தந்த சட்டையை இஸ்திரி போட்டுதான் அணிவார். காலர் கிழிந்து போன சட்டை போட்டிருந்தாலும் அதில் அழுக்கு ஏறக்கூடாது என்று கரிசனமாக ஒரு கந்தலான கர்சீப்பை கழுத்துக்கும் காலருக்கும் மத்தியில் சொருகியிருப்பார். நீலம் போட்ட வெளிர்நீல வேட்டி. முக்கால்வாசி நேரம் டப்பா கட்டு. முன்னால் சொட்டையும் பின்னால் முடியும் இருக்கும் தலை. பவுடர் யார் தருகிறார்கள் என்று தெரியாது ஆனால் கட்டாயம் பாண்ட்ஸ் மணக்கும் முகம். ஐலைனெர் வைத்து வரைந்தது போல இருக்கும் மீசை. தலைமுடி மீசை எல்லாம் வெள்ளைக் கலர். நரைத்திருக்கும். இந்த கெட்டப்பிற்கு மகுடம் வைத்தார்ப்போல் வாயில் ஒரு சிகரெட். ஒரு நாள் சட்டை பாக்கெட்டில் 555 பாக்கெட் இருந்தது. யாரோ ஒரு தர்மவான் சிகரெட் தானம் செய்திருக்கிறார்.

எப்போதும் நுனிநாக்கு ஆங்கிலம் தான். கிட்டு மேலப்பாலம் என்றால் ராமு கீழப்பாலம் ஏரியா. முதல் தெரு, புதுத் தெரு, ஒத்தை தெரு, கீழப் பாலம் பகுதி மக்களுக்கு ராமுவும் அவரது ஆங்கிலமும் மிக பிரசித்தம். சிகரெட் பிடிப்பது மிகவும் ஸ்டைலாக இருக்கும். கண்கள் சொருகி ஒரு மோன நிலையில் ஆழ உள்ளிழுத்து மிக நிதானமாக புகையை வெளியே தள்ளுவார். ஒரு அகோரி கஞ்சா அடிக்கும் பாணியில் சாதா கத்திரி சிகரெட் பிடிப்பார். எப்போதும் சிரித்த முகம். யாரைப் பார்த்தாலும் கையேந்தி "ஒரு ரெண்டு ரூபா கொடு" என்று டினாமிநேஷன் போட்டு யாசகம் கேட்கும் லாவகம். குறைந்தது ஒரு ரூபாயாவது வாங்கிவிடும் நேக்கு எந்தப் பைத்தியத்திற்கு வரும். ராமுவுக்கு பிச்சை போடுவதற்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். அதில் என் தந்தையும் ஒருவர். ராமு கண்ணில் தென்பட்டால் தட்சணை வைக்காமல் போகமாட்டார். வண்டியை நிறுத்தி "ராமு.." என்று வாயாரக் கூப்பிட்டு உளமார தானமிடுவார். வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிடுவார்.

ராமுவின் வாழ்க்கை ரகசியத்தை என் கீழப்பால நண்பன் ஒருவன் எனக்கு சொன்னதாக நினைவு. ராமு ஏதோ வெளியூர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராம். ஷேக்ஸ்பியர் இவருக்கு நெருங்கிய உறவு போல அவனுடைய எல்லா ஆக்கங்களை புட்டு புட்டு வைப்பாராம். அவருக்கு அப்சரஸ் மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தாங்களாம். அது மேல ராமுவுக்கு கொள்ளை பிரியமாம். அவங்களுக்கும் அதே ஊர்ல இருந்த ஒரு ரோமியோக்கும் கள்ள கனெக்ஷன் ஏற்ப்பட்டுடுச்சாம். அந்தக் கன்றாவியை ஒருநாள் இவர் நேரே பார்த்ததிலிருந்து இந்த மாதிரி ஆயிட்டாராம். அந்த பொம்பளை இன்னமும் அவன் கூட குழந்தை குட்டியோட சந்தோஷமா எங்கயோ வெளியூர்ல இருக்காம். ஆங்கில மீடியம் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் பரீட்சைக்கு கிராமர் போகிற போக்கில் வழியில் ராமுவைப் பார்த்து கேட்டுக்கொண்டு போகும். ஹவருக்கு ஆன் போடணும் அப்படின்னு சொல்லிக்கொடுக்கும். மதிய வேளைகளில் கைலாசநாதர் கோயில் வாசலில் படுத்துறங்கும் என்பது செவிவழிச் செய்தி. என்னுடைய கடைசி மன்னை காலங்களில் நான் ராமுவை பார்க்கவே இல்லை. யாராவது நன்றாக பவுடர் பூசி, காலருக்கு கர்சீப் கொடுத்து, வெளிர்நீல வேட்டி கட்டிப் போனால் ராமு போல வாயில் சிகரெட் இருக்கிறதா என்று தேடுகிறேன்.

பைத்தியங்கள் பலவிதம் என்பதற்கு ஏற்ப, கடைத்தெருக்களில் சிடுக்கு விழுந்து ஜடாமுடியோடு ஒன்று உலாத்தும். பேரெல்லாம் தெரியாது. கிருஷ்ணா, ஜீவா பேக்கரி வாசலில் வந்து நிற்கும். ரஸ்க் வாங்குவோர் ஒன்றிரண்டு அதற்க்கும் தூக்கி போடுவார்கள். அழுக்காக தாடி மீசையுடன் தோற்றமளிக்கும். உடம்பு அழுக்கை அரை இன்ச் அளவிற்கு சொரண்டி எடுக்கலாம். இடுப்பில் ஒரு லுங்கி. தேகம் முழுவதும் உரோமத்துடன் தான் திரியும். எதுவும் பேசவே பேசாது. அது வடமாநில பைத்தியம் என்று பேசிக்கொண்டார்கள். பார்த்தால் கோரமாக பயப்படும்படி இருக்குமே தவிர யாரையும் தொந்தரவு செய்யாது. "டேய் .. இது பயித்தியம் இல்லைடா... இது ஒரு சி.ஐ.டி. நம்மூர்ல நிறையா பிளாக் மணி இருக்காம்.. அதையெல்லாம் கண்டுபிடிக்க தான் இதுமாதிரி பைத்தியம் வேஷத்துல திரியுது..." என்று ஒரு நாள் இரண்டு அண்ணாக்கள் பேசிக்கொண்டு போனார்கள். "எப்படி சொல்ற?" என்ற எதிர்கேள்விக்கு.. " நீ வேணா பாரு.. ராத்திரி இதை எங்கயுமே பார்க்க முடியாது... சீக்ரெட்டா அசேஷம் தாண்டி ஒரு இடத்துக்கு போய்டும்.." என்று அந்த அண்ணா கூட நின்று பார்த்த மாதிரி இன்னொரு அண்ணாவிற்கு ரீல் சுற்றிக்கொண்டு போனார்.

பொம்பளை பைத்தியம், சொத்து பைத்தியம், விளையாட்டு பைத்தியம், பாட்டு பைத்தியம், கஞ்சா பைத்தியம், படிப்பு பைத்தியம், பதவி பைத்தியம், புகழ் பைத்தியம், பாராட்டு பைத்தியம், சாப்பாட்டு பைத்தியம், வாகனப் பைத்தியம்..... இப்படி பைத்தியங்கள் பலவிதம்.. நிச்சயம் இந்த கிட்டு, ராமு மாதிரியும் வாழ்க்கையில் சில பேரை சந்திச்சிருப்போம்.

பின் குறிப்பு: பைத்தியங்கள் பற்றிய பதிவு உங்களை பைத்தியம் பிடிக்க வைக்காமல் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில்.. அடுத்த மன்னார்குடி டேஸ் பாகத்தில் சந்திக்கிறேன்.

பட உதவி: http://www.mentaladvisoryproductions.com/

-

29 comments:

Chitra said...

வாழ்க்கையில் விரக்தி ஏற்ப்பட்டு, அவமானப்படுத்தப் பட்டு, ஏமாற்றப் பட்டு பலதையும் பட்டு பட்டு மன உளைச்சலில் மன அழுத்தத்தில் மென்டல் ஆனோர் ஏராளம்.

பொம்பளை பைத்தியம், சொத்து பைத்தியம், விளையாட்டு பைத்தியம், பாட்டு பைத்தியம், கஞ்சா பைத்தியம், படிப்பு பைத்தியம், பதவி பைத்தியம், புகழ் பைத்தியம், பாராட்டு பைத்தியம், சாப்பாட்டு பைத்தியம், வாகனப் பைத்தியம்..... இப்படி பைத்தியங்கள் பலவிதம்..


.......மனிதர்களில் இத்தனை நிறங்களா? மனதை தொட்ட பதிவு!

வெங்கட் நாகராஜ் said...

பயித்தியங்கள் பற்றிய பகிர்வு. நல்லது. பெரும்பாலானவர்கள் இது போன்றவர்களை துன்புறுத்துவதுதான் பரிதாபம்.

எஸ்.கே said...

வித்தியாசமான பதிவு! ரசித்தேன்!

RVS said...

பாராட்டுக்கு நன்றி சித்ரா.. பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். மற்ற சாதாரண மனிதர்களை விட அபாயமற்றவர்கள். ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆமாம் வெங்கட். ஆனால் நான் குறிப்பிட்ட அந்த ரெண்டு நபர்களும் மணமும் வாசனையுமாய் இருந்தார்கள். ;-)

RVS said...

@எஸ்.கே
நன்றி எஸ்.கே. ;-)

Anonymous said...

தெருவில் இவர்களைக் காணும்போது ஒரு சின்ன உறுத்தல் வந்து போகும்..
அவர்களைப் பற்றிய இப்பதிவுக்கு ஒரு எக்ஸ்ட்ரா சல்யூட் அண்ணே!

RVS said...

@Balaji saravana
அவர்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் பாலாஜி... ;-)

suneel krishnan said...

அவர்களுக்கும் நமக்கும் நூலளவு தான் வித்யாசம் :)
நாம் பைத்தியமா இல்லையா என்பதை நமது சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது .
மிக நல்ல பதிவு.ஏன் இத்தனை நெகடிவ் வோட்டு

RVS said...

புரியலையோ என்னவோ... டாக்டர்.. நா ஒரு பைத்தியம்... இப்படி ஒரு பதிவு போடுவேனா..;-) ;-) ;-)

ADHI VENKAT said...

வித்தியாசமான பகிர்வு. நானும் சிறு வயதில் ஊரில் ஒருவரை பார்த்திருக்கிறேன். ஆங்கிலப் புலமை அருமையாக இருக்கும். இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

RVS said...

@கோவை2தில்லி
ஆமாம். நிறைய பேர் கேலி செய்து விளையாடுவார்கள். ஒரு துன்பகரமான செயல்.

Madhavan Srinivasagopalan said...

உண்மையச் சொல்லனும்னா 'டச்சிங்'..

'பயித்தியம் / பைத்தியம்' என்ற வார்த்தையை பயன் படித்தியமையை கண்டிக்கிறேன்.. அதனை 'மாற்றுத்-திறனாளி' என மாற்றிப் படிக்கும்படி தாய்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

RVS said...

@Madhavan
மாதவா.. இங்கு நான் கிண்டலுக்காக "பைத்தியம்" என்ற பதத்தை பயன்படுத்தவில்லை.
எனக்கு ஜோடனை வார்த்தைகள் புனையத் தெரியாது. கருத்துக்கு நன்றி.

பத்மநாபன் said...

மன நிலை குன்றியவர்களையும் கருத்தில் கொண்டு பதிவு போட்ட உங்களை பாராட்ட வேண்டும்..
கடவுளின் சிறப்பு குழந்தைகள் என்ற முறையில் தான் அவர்களை பார்க்கவேண்டும்.

எந்திரன் அளவுக்கு இயந்திரத்தை வைத்து முழு மனித மாற்றத்தை எற்படுத்தும் முயற்சியில் இறங்கிய இந்த கால கட்டத்தில் , இம்மாதிரி மன நிலை குன்றியவர்களையும் ,இயந்திரம் கொண்டு சீராக்குவது பற்றி முயற்சி செய்யலாம்...

RVS said...

பத்துஜி... நீங்க ஒரு கதையை மிஸ் பண்ணிட்டீங்க... இந்தச் சுட்டி போயிட்டு வாங்க... http://mannairvs.blogspot.com/2010/11/blog-post_08.html

சிவராம்குமார் said...

உருக்கமான பதிவு.... ஆனா பைத்தியங்கிற வார்த்தை வேணாமே!!! பிளீஸ்!

SESHA said...

RVS

ALL BLACK NOW WHITE. IS IT.

SESHA /DUBAI

தினேஷ்குமார் said...

முதல் முறையா வர்றேன் உங்க உலகத்துக்கு நெஞ்சை தொட்ட பதிவு

மனமே
ஒரு
பைத்தியம்
குணம்
மாறும்
வைத்தியம்
நிலைமாறா
மனிதர்கள்
நினைவில்
நிற்க......

sriram said...

ஹிட்ஸ் மற்றும் பின்னூட்டப் பைத்தியங்களைப் பற்றி சொல்லாமல் விட்டுட்டீங்களே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஸ்ரீராம். said...

நானும் இது போன்ற மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். ஜெயகாந்தனின் 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' நினைவு வரும்.

RVS said...

@சிவா
மாதவனுக்கு சொன்னது தான் சிவா. நான் கிண்டல் ஒன்னும் பண்ணலை. வேற எந்த வார்த்தை போட்டாலும் அதுல ஒரு டெப்த் இருக்காதுங்கரதுனால... சரி.. அடுத்த முறை மாற்றுத் திறனாளி போட்டுடுவோம்..

RVS said...

@SESHA

YES.. Moments I enjoyed.. ;-)

RVS said...

@dineshkumar
வாங்க கவிதைக்காரரே... இந்தமுறையும் அசத்துறீங்க... உங்களுக்கு அப்படியே பிச்சுகிட்டு கொட்டுது... நன்றி மீண்டும் மீண்டும் வருக...

RVS said...

@sriram
அச்சச்சோ.... விட்டுட்டேன்.. பதிவு, ப்ளாக், இணையம் இந்த பக்கம் வராம விட்டுட்டேன். ஸ்பெஷல் பதிவா ஒரு முழு ரேக்கு ரேக்கிடலாம்.

RVS said...

@ஸ்ரீராம்.
ஜெயகாந்தனின் அந்த ஆக்கத்தை நான் படிக்கவில்லை. ஒரு முறை பார்க்கிறேன்.. நன்றி ஸ்ரீராம். ;-)

ஹேமா said...

மனதைப் பாரமாக்கிய பதிவு ஆர்.வி.எஸ்.

நாங்களும் ஒருவைகைப் பைத்தியங்கள்தான்.அவர்கள் அதிக மன உளைச்சளைச் சேமித்துக்கொண்டார்கள் அவ்ளோதான் !

RVS said...

@ஹேமா
அப்படிப் பார்த்தால் எல்லோரும் ஒருவகையில் அவர்களே...

Kri said...

The jada mudi one is the older brother of our neighbor in hospital road. I don't know if you know that side of Mannai well, but there lived a big shot "Thevar" (who used to do aarthi to the Sun god in his komanam when college girls used to go past his house). This Jada Mudi, I was told by "Thevar's son" Kamban, that it was his Periyappa who lost "it" and thus goes around the town like that. Vasu used to know a lot more.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails