Thursday, February 10, 2011

மன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே

rvs alone
ஆர்.வி.'எஸ்.'
கன்னிப் பருவத்திலே அப்படிங்கற மாதிரி பள்ளிப் பிராயத்திலே என்று ஆரம்பித்துவிட்டேன். அழகி மற்றும் தங்கர்பச்சான் போன்றோரின் யதார்த்த படங்களில் வருவது போல "ஓரோன் ஒன்னு" என்று மண் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து ராகம் பாடி குனிந்து தலை தரையை முட்டி நிமிர்ந்தெழுந்து வாய்ப்பாடு சொல்லும் பள்ளிப் பதிவு இல்லை இது. கை கால் ஸ்திரமாக வளர்வதற்கு முன்னால் ப்ளே ஸ்கூல், கே.ஜி என்று  அனுப்பி ஐ.ஐ.டிக்கான போஷாக்கான மூளை வளர்ப்பில் ஈடுபடும் இக்காலப் படிப்பிற்கும் மன்னையில் நாங்கள் படித்ததற்கும்(?) எவ்வளவு வித்தியாசம் என்று ஆச்சர்யபட்டு புருவம் தூக்கி சொன்னால் நான் ஏதோ மொஹஞ்சதாரோ ஹரப்பா காலத்தில் படித்தவன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடும். மேலும் நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் CBSE, Matriculation, State, வார்டு, டிஸ்ட்ரிக்ட், நேஷனல் போன்ற பல தினுசுகளில் போதிக்கும் முறைகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கோட் அடித்து ஒரே கிளாசில் ஒன்பது வருஷம் உட்கார்ந்திருக்கும் உதவாக்கரை மாணவன் கேஸாக இதையே பதிவு பூரா எழுதி போரடித்துவிடுவோம். ஆகையால் 'ஜோ' மழைக்கு சொல்ப பேர் ஒதுங்கும் படியாக இருந்த ஒரு கூரைப் பள்ளியில் நான் புது ட்ராயர் சொக்காவுடன் நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன் சேர்க்கப்பட்டதிலிருந்து தொடங்குவோம்.

சின்னக் கான்மெண்டு என்று தான் வழிவழியாக அந்தப் பகுதியில் இருந்த எல்லோரும் அப்பள்ளியை கூப்பிட்டு வந்தார்கள். பெயருக்கேற்றாற்போல் உப்புக்காரத் தெரு இறக்கத்தில் வலது பக்கம் கூரை வேய்ந்த கொட்டாயும் இடது பக்கம் கான்க்ரீட் கட்டிடமுமாக சின்னதாக ரெண்டுபட்டிருந்தது அந்த ஸ்கூல். கூரைக் கொட்டாய் நிச்சயம் புராண காலத்து குருகுலவாசத்தின் ஃபீலை கொடுக்கும். மழை பெய்தால் கீழே மியூசிக் கேட்கும். பசங்கள் உட்காராத எறும்பூரும் ஓரங்களில் கார்பொரேஷன் பைப்புகளில் தண்ணீர் வருவது போல லேசாக சொட்டும். தமிழ் மீடியம். ஆனால் "உள்ளேன் ஐயா"-வெல்லாம் கிடையாது. சிலர் "ப்ரஜன்ட் டீச்சர்" இன்னும் சிலர் "ப்ரஸண்ட்  டீச்சர்". ஐந்தாம் கிளாஸ் படிக்கும் போது புன்னகை அரசியாய் பாடமெடுத்த சகாய மேரி டீச்சர் இன்னமும் நினைவில் சிரிக்கிறார்கள். சிடுசிடுவென்று ராணுவ ஒழுக்கம் கற்றுக்கொடுத்த தையல்நாயகி டீச்சரும்தான். சுவற்றில் கருப்பு அடித்து பார்டர் கட்டிய போர்டில் ஈசான்ய மூலையில் கட்டம் போட்டு பதிவு, வருகை நிரப்பச் சொல்வார்கள். அதில் எழுதினால் அவன் அந்த வகுப்பில் பெரியாள். இந்திய கிராமங்களின் அனேக பள்ளி வளாக வாசலைப் போல் புழு நெளியும் நான்வெஜ் இலந்தைப்பழம், தண்ணீர் குடித்தால் தொண்டையில் ஜில்லிடும் அதியமான் அவ்வைக்கு பரிசளித்த பெரிய நெல்லிக்காய், அந்த பிஞ்சு வயசிலேயே கண்ணடிக்க வைக்கும் அருநெல்லி, முருகன் அவ்வைக்கு கொடுத்த சுட்ட நாகப்பழம் என்று பலசரக்கும் அஞ்சு பத்து பைசா டினாமிநேஷனில் கிடைக்கும். அவித்த மரவள்ளிக் கிழங்கு, கமர் கட்டு, ஜவ்வு மிட்டாய் போன்ற ஈ மொய்க்கும் பண்டங்களும் வயதான பல்லு போன தொள்ளைக் காது ஆயாக்கள் கையை விசிறி விசிறி விற்பார்கள்.

rvs-nostalgia1
அதே ஆர்.வி.எஸ்.
மூன்றாவது படிக்கும் போது முன்னோர் நினைப்பில் ஜானி கூரைக்கொட்டையின் ஒவ்வொரு உத்தரக் கம்பமாக தொங்கி ஊஞ்சலாடி தாண்டி எனக்கும் ஆவலைத் தூண்டியதில் நானும் அந்தரத்தில் கொஞ்ச நேரம் ஹாயாக ஆடினேன். ஒன்று ரெண்டு என்று லாவகமாக ஆடித் தாண்டி போகையில் மூன்றாவது கம்பத்தில் ஏற்கனவே எனது விதி குடியேறி மொழுக்கென்று வழுக்கியதில் கைநழுவி 'சொத்'தென்று கீழே விழுந்து ரெண்டு கையையும் முறித்துக் கொண்டேன். மரண வலி. கடைசி பெல் அடிக்கும் வரை பொறுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மூச்சுக் காட்டாமல் புத்தக மூட்டையை ஹால் ஓரத்தில் தூக்கி கடாசிவிட்டு இரு கையையும் தொடைகளின் இடுக்கில் சொருகிக்கொண்டு உடம்பை சுருக்கி படுத்துவிட்டேன். பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. நேரமாக நேரமாக கை புசுபுசுவென்று ஸ்பினாச் தின்னும் போப்பாய் தி செய்லர் போல வீங்கி முறிந்ததை காட்டி கொடுத்தது. கம்பத்தில் ஆனந்த ஊஞ்சலாடிய கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டி பதினைந்து நாள் கன்னூஞ்சலாட விட்டார்கள். அதன் பின்னர் யாராவது கம்பியில் அல்லது கம்பத்தில் வானரமாய்த் தொங்கி ஆடிப் பழகினார்கள் என்றால் AVM சரவணன் போல இருக்க கைகட்டி கண் மட்டும் பார்க்க பழகிக்கொண்டேன்.

பெரிய கான்மெண்டு என்று ஒரு விசாலமான அழகிய ஸ்கூல் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் தங்கச்சிகளும் தாவணி போட்ட பெரிய அக்காக்களும் படிப்பது என்பது எங்கள் ஏரியாவிலிருந்து பெரிய ஸ்கூலிற்கு தன்னந்தனியே சைக்கிள் ஓட்டிக்கொண்டு போனபோது தான்  தெரிந்தது. முழு பேண்ட் போட்ட நிறைய பெரிய கிளாஸ் படிக்கும் அண்ணாக்கள் குறுக்கு வழியில் ஸ்கூலுக்கு போகாமால் பஸ் ஸ்டாண்ட் சுற்றி அக்கா தங்கைகள் படிக்கும் அந்தப் பள்ளி வழியே 'லுக்' விட்டுக்கொண்டே வந்த மர்மம் எனக்கு அப்போது விளங்கவில்லை. தலை சீவுதல் ஒன்றே தங்களின் தலையாய கடமை போல் கையாலும் உள்ளங்கை அளவு சீப்பாலும் கபாலத்தில் வரி விழும்படி கை ஓயாமால் வாரிக்கொண்டே இருப்பார்கள். பெரிய கான்மெண்டுக்கு முன்னால் தங்களுடைய நட்புகளின் கடைகளில் ஒரு நிமிடம் ஒதுங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டு ரெண்டு இன்ச் பவுடர் பூசி தலைவாரி மீண்டும் பளிச்சென்று சைக்கிலேறிப் புறப்பட்ட மன்மத அண்ணாக்கள் பலரை அப்போது விஷயம் தெரியாமல் வியப்பாக கண்விரிய பார்த்திருக்கிறேன்.

பெரிய லாங் ஸைஸ் ரெகார்ட் நோட்டுகளை மார்போடு வாரி அனைத்து குனிந்த தலை நிமிராமல் கொவ்வைச் செவ்வாய் மூடி செல்லும் வெள்ளைத் தாவணி நீல நிறப் பாவாடை சீருடை அக்காக்கள் பின்னாலேயே போய் 'டிங்கி..டிங்கி..' என்று சைக்கிள் மணி கழண்டு விழும் வரை அடித்தும் "டேய்..கோபாலு...." என்று தெருமுனை திரும்பும் முகம் தெரியாத நண்பனை தொண்டை கிழிய கத்தி கூப்பிட்டும் அக்காக்களின் கவனத்தை தன் வசம் ஈர்க்க முயலுவார்கள்.  பதிலுக்கு "க்ளுக்" என்று நகைத்து பக்கத்து வாண்டு தங்கைகளிடம் பேசிக்கொண்டே தான்பாட்டுக்கு மான் போலத் துள்ளி துள்ளி போய்கொண்டே இருப்பார்கள். அந்தத் தளிர் சிரிப்பு கிடைக்கப்பெற்ற அண்ணாக்கள் அன்று முழுவதும் போதமுற்று இருப்பார்கள். அந்தப் பெண்கள் படிக்கும் பள்ளியை தீவிரமாக முற்றுகையிடுவது தேசிய மேனிலை பள்ளி மற்றும் பின்லே மேனிலைப் பள்ளி என்ற இரண்டு ஆண்கள் போகும் பள்ளிகள். தேனிருக்கும் பூவை சுற்றி வண்டுகள் ரீங்காரமிட்டு பறப்பது போல மகளிர் எண்ணிக்கையை விட காளைகளின் டிராஃபிக் அந்த ரோடில் நெட்டித் தள்ளும்.

nhss
ரெண்டு வருஷத்துக்கு முன்னால் ஷூட் பண்ணியது. இந்தக் காம்பவுண்டு அப்ப இவ்ளோ பெருசு இல்லை.
டென்னிஸ் ராக்கெட்டுகளுக்கு நெட் பின்னும் சாமி கடை எங்கள் தே.மே பள்ளி காம்பவுண்டு சுவற்றுக்கு பத்தடி தள்ளி இருக்கும். உறுதியாக ஆறரை அடி இருப்பார். எங்கள் ஊர் பெரியகோவில் மூலவர் பரவாசுதேவர் மாதிரியான நெடிதுயர்ந்த ஆகுருதியான சரீரம். மஞ்சள் வெள்ளையில் நெற்றி நிறைய வடகலை நாமம். எப்போதும் எட்டுமுழம் வேஷ்டியுடன் இருப்பதால் மேல்சட்டை அணியா தேகம் முழுவதும் சத்யராஜ் போல சுருட்டை சுருட்டையாய் இருமடங்கு அடர்த்தியான கேசம். ஜடைப் பின்னி ரிப்பன் கட்டலாம். கடையில் பிரதானமான ஷெல்பில் நடுநாயகமாக இப்போதைய 36 இன்ச் டீ.வி பொட்டி போல வால்வ் ரேடியோ ஒன்று எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். மாலை 6:30-க்கு மாநிலச் செய்திகள் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் இருந்து அங்கே ஒலிபரப்பாகும். மற்ற நேரங்களில் தெரு கிரிக்கெட் கமெண்டரி ஒலிபரப்பினால் கூட கர்மஸ்ரத்தையாக காது கொடுத்து கேட்பார். அப்படி ஒரு கிரிக்கெட் பித்தம் பிடித்த வெறியர். ரீசஸ் பீரியடில் காம்பௌண்டை ஒட்டி நின்றுகொண்டு "ஸ்கோர் என்ன?" என்று கையை என்ன போஸில் சைகையால் கேட்டால் சளைக்காமல் கேட்ட அத்துணை பேருக்கும் அன்பாக ஸ்கோர் சொல்வார்.

சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளின் அப்துல் ஜபார், கூத்தபிரான், ராமமூர்த்தி போன்றோரின் சுந்தரத் தமிழ் கமேன்ட்டரியை சத்தமாக வைத்து ஒரு மாய சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை மன்னைக்கு வரவழைத்து விடுவார். சாரியின் சிறப்பு வர்ணனை அவர் உச்சரிப்பில் கொஞ்சம் காதில் விழாமல் தகராறு பண்ணும். சட்டென்று புரியாது. பெரியவர் சாரி எல்லா ஆட்டக்காரர்களையும் "அவன்" "இவன்" என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவார். பெல் அடித்தாலும் கரவொலியோ "ஹோ.." என்ற சப்தமோ நம்மை நிறுத்திவிட்டால் ஒன்றுக்கு கூட போகாமல் நின்று கேட்டுவிட்டு வகுப்புக்கு ஓடுவோம். கேட்பவர்களின் ஆர்வம் அதிகமாகி நச்சரிக்க ஆரம்பித்த தருணங்களில் ஒரு அட்டை போர்ட் வாங்கி  அதை ஸ்கோர் போர்டாக்கி எழுதி தொங்கவிட்டு விட்டார். இந்த முறையில் வகுப்பின் ஜன்னலிளிருந்தும் லேட்டஸ்ட் ஸ்கோர் பார்க்க வசதியாயிருந்தது.

மன்னையின் அதிகாரப் பூர்வ ஸ்கோரிங் பார்ட்னர் திருவாளர் சாமி.

தே. மேனிலைப் பள்ளி நாட்களில் மற்றுமொரு முக்கியமான அம்சம் பகவத் கைங்கர்யம். பெரியகோவில் ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனி தேர். அம்பாள் படி தாண்டா பத்தினி. உள் பிரகாரத் தேர். ஸ்வாமிக்கு வெளியே மாட வீதி பெரிய தேர். இரண்டு இமாலயத் தேர்களை இழுக்கும் கட்டளை எங்கள் பள்ளியுடையது. இன்றுவரை தொடருகிறது. ஆறிலிருந்து பன்னிரண்டு வரை படித்த ஏழு வருடங்களும் அந்தத் தேர் வடம் பிடித்து மீண்டும் நிலைக்கு வரும் வரை இழுத்திருக்கிறேன். தேர் அன்று அணிந்த யூனிஃபார்ம் மீண்டும் உடுத்த முடியாது. எவ்வளவோ பாட்டிகள் நடுவில் வந்து தேர் வடம் தொட்டு கும்பிட்டு போவார்கள். மஞ்சள் கிழங்கு சட்டி பானை விற்பார்கள். மாட வீதிகளில் சில வீடுகளில் நடுவில் நிறுத்தி அர்ச்சனை செய்வார்கள். எல்லாம் முடிந்து ஆறு ஆறரை மணிக்கு தேரை நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி கீழே இருந்து அண்ணாந்து ராஜகோபாலனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு வீடு சென்றது இன்னமும் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது.

முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் தேர் இழுத்த என்னை இதுவரை வாழ்க்கையில் சௌக்கியமாக இழுத்து வந்திருக்கிறான் ராஜகோபாலன். நான் நிலைக்கு வரும் வரை இனிமேலும் கட்டாயம் இழுப்பான். கோபாலனுக்கு அனேக கோடி நமஸ்காரம்.


பின்குறிப்பு: 
பதிவு முழுக்க ஸ்கூலுக்கு போனதைப் பற்றியும் அண்ணாக்களின் அட்டகாசங்கள் பற்றியும் ஸ்கோர் கேட்டதை பற்றியும் தேர் இழுத்ததை பற்றியும் எழுதினீர்களே தவிர நீங்கள் படித்ததை பற்றி எதுவும் இல்லையா என்று கேட்போருக்கு.. மீண்டும் உங்களுக்கு அந்த அறிவியல், வரலாறு புவியியல், ஆங்கிலம் படிக்க ஆசையா? என்னால முடியாதுங்க. டெர்ரர் தாண்டான் சார் முட்டி போட வைப்பார்! ஜாக்கிரதை!!

(ஆசிரியர்களைப் பற்றியும் வகுப்பு ரகளைகள் (ஏராளம்!! ஏராளம் !!!!) பற்றியும் எழுத ஆசை. இதுவே ஆஞ்சநேயர் வாலாக வளர்ந்துவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொண்டேன். பிறிதொரு பதிவில் முடிந்தால் அட்டகாசங்கள் மட்டும் எழுதுகிறேன்.)
-

71 comments:

எல் கே said...

//திவில் முடிந்தால் அட்டகாசங்கள் மட்டும் எழுதுகிறேன்./

அதுதான் முக்கியம் அண்ணாத்த

பொன் மாலை பொழுது said...

மேலே உள்ள படத்தில் இடது புறம் நிற்கும் குட்டி பாப்பா யார் கண்ணா?
இதுக்குத்தான் போட்டோ ஷாப் தெரியனும்கிறது,

Unknown said...

தமிழ் வாத்தியார் பத்தி ஒண்ணும் சொல்லலையே? நிறைய எ.பி.:-( மேல்நிலைப் பள்ளி... //வகுப்பின் ஜன்னலிளிருந்தும் லேட்டஸ்ட் ஸ்கோர்// ஜன்னலிலிருந்தும்... சரி, சரி, லூஸ்ல விட்டுர்றேன்....

என்னைப் போல எல்லாருக்கும் தோன்றப் போகும் கேள்விகளைக் கேட்டு விடுகிறேன்:-) முதல் படத்துல தங்கச்சிப்பாப்பா ரொம்ப க்யூட்டா இருக்கும்கிறதால், கட்டா? அத்த விட, முதல் படத்துல தங்கையை ஏதோ சீண்டிக்கிட்டு இருக்கிற சிரிப்பு அம்மாவோட இருக்கும் இரண்டாம் படத்தில் இல்லியே? (உங்க தங்கை இதைப் படித்துக் கொண்டிருந்தால், அனானியாக உண்மையைச் சொல்ல வேண்டும்!)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வரிக்கு வரி ஹைலைட் பண்ணவேண்டிய ஆசாமி நீங்க.

நேர்ல எப்படிப் பேசுவீங்க எஸ்விஎஸ்?சுத்து சுத்துனு சுத்தி ஒரு விஷயத்தைச் சொன்னாலும் அந்த ஜவ்விலும் ஒரு சுவாரஸ்யம்.

ஜாலிக்கு மறுபெயர் எஸ்விஎஸ்ன்னு சொல்லிடலாமோ?

RVS said...

@எல் கே
எழுதிடலாம் எல்.கே.. வடை வருகைக்கு நன்றி!!! ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
எனது உறவினர் மகள்! இன்னும் ரெண்டு பேர் அந்த போட்டோல இருக்காங்க... கட் பண்ணிட்டேன் கக்கு-மாணிக்கம்!! ;-)

RVS said...

@கெக்கே பிக்குணி
மன்னார்குடி டேஸின் முதல் பதிவுலேயே அவர் பெயர் சொல்லித்தான் ஆரம்பித்தேன். போன பதிவுல கூட இலக்கண இல்லக்கிய கேள்விக்கு பதில்ல அழுத்திச் சொல்லியிருக்கேன். அங்கங்க.. வல்லினம் மெல்லினம் இடிக்கிது. ப்.. ச்.. விட்டுது.. கரெக்ட் பண்ணுங்க... நான் ஒன்னும் பெரிய ரைட்டர் இல்லை!!! லூச லூஸ்ல விடாதீங்க.. .(இது ஐஸுக்கே ஐஸு வைக்காதே அப்படிங்கற மாதிரி...) இனொன்னு நான் திரும்ப படிச்சு பார்த்து ஏத்தறது இல்லை.. கொஞ்சம் கொஞ்சம் தட்டச்சும்போதே பார்ப்பேன்... அப்புறம் படத்தை கோர்த்து அப்படியே ஏத்திடுவேன்.. சிலது ஏத்தினப்புறம் தோணும்... உங்க நினைப்பு வரும்.. ஆனா விட்டுடுவேன்..

உங்களோட போட்டோ சம்பந்தப்பட்ட ரெண்டு கெஸ்ஸும் தப்பு..
முதல் போட்டோ ஒரு உறவினரின் மகள்...
ரெண்டாவது போட்டோவில் இருப்பது சிறுவயதில் அல்பாயுசில் தவறிப்போன என் அன்பு அத்தை!! கட்டிப் பிடித்து இச்.இச்..இச் என்று நாலு தெரு கேட்கும் அளவிற்கு சத்தமாக முத்தம் தருவாள். இதில் இன்னும் இருவர் உள்ளனர். ஒன்று என் அத்தை.. மற்றொன்று என் அக்காள். என்னை விட்டு விட்டு இருவரும் போட்டோ எடுக்க சென்றனர். ரன்னிங் அண்ட் கேட்சிங் செய்து போட்டோ எடுக்கும் முன் கடையில் என்ட்ரி கொடுத்து எடுத்துக் கொண்டது. அதான் அந்த குறும்பு சிரிப்பு மிஸ்ஸிங். ;-)

ஸ்ரீராம். said...

வருடா வருடம் மன்னை போகிறீர்களா ஆர் வி எஸ்? இப்போதும் ராஜகோபாலன் கைங்கர்யம் உண்டா?

RVS said...

@சுந்தர்ஜி
வாழ்த்துக்கு நன்றி சுந்தர்ஜி!!!
கைலாசம் போன "மை எவர் லவ்விங்" ஸ்வீட் சாரதாப் பாட்டி சொன்ன திருவாசகத்தை உங்களிடம் திரும்பச் சொல்கிறேன்...
"தம்பி... பேச்சை கொஞ்சம் நிறுத்திட்டு மூச்சை விடேன்!!! " ;-) ;-) ;-)
என் கிண்டலுக்கு ஆசிரியர் அவள்தான்!! My Inspiration!!! ;-) ;-)

அதென்ன எஸ்.வி.எஸ்ன்னு சொல்லிட்டீங்க... அகஸ்மாத்தா சொன்னாலும் இதுவும் ஒரு வகையில கரெக்க்டுதான்.. என் பொண்டாட்டியின் பெயரின் ஆரம்பம் வருகிறது... நன்றி.. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
இல்லை தலைவா!! வேலை நெருக்கடியில் போக முடியவில்லை.. ஆனால் எப்போதும் என் நெஞ்சுக்குள் கோல்டன் ஃபிரேமில் இருக்கிறார்!! ;-) ;-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வெரி ஸாரி ஆர்விஎஸ்.

ட்ரைவர்கிட்ட வீட்டு சாமான் லிஸ்ட் சொல்லும்போது எஸ்விஎஸ் கடலை எண்ணை சொல்லிக்கிட்டே டைப் பண்ணிட்டேன்.

சலங்கை ஒலி கமல் சொல்ற மாதிரி இன்னிக்கு டூ மிஸ்டேக்ஸ்.

சுதாவை ஜெயஸ்ரீயா முதல்ல.
எவர்க்ரீன் ஆர்விஎஸ்ஸை எஸ்விஎஸா ரெண்டாவது.

ஆர்விஎஸ்!ப்ளீஸ் தப்பா எடுத்துக்க மாட்டீங்கதானே?

RVS said...

@சுந்தர்ஜி
ஸாரியாவது ... . பூரியாவது... இதெல்லாம் வேண்டாம் ஜி! நாந்தான் நீங்க கொடுத்த டைட்டிலையும் ஏத்துக்கிட்டேனே.. ;-) ;-) ;-)
எஸ்.வி.எஸ். எண்ணெய்.... ஆர்.வி.எஸ். வெண்ணை... இது எப்படி இருக்கு.. ஹா ஹா..ஹா... ;-)

எல் கே said...

//முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் தேர் இழுத்த என்னை இதுவரை வாழ்க்கையில் சௌக்கியமாக இழுத்து வந்திருக்கிறான் ராஜகோபாலன். நான் நிலைக்கு வரும் வரை இனிமேலும் கட்டாயம் இழுப்பான். கோபாலனுக்கு அனேக கோடி நமஸ்கார/


கண்டிப்பா காப்பாத்துவார் அண்ணாச்சி

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசம்.... அசத்துங்க....

இராஜராஜேஸ்வரி said...

மன்னாகுடி டேய்ஸின்
மலரும் நினைவுகளில்
மனம் மகிழ்ந்து திளத்திருப்பவருக்கு
மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!

Madhavan Srinivasagopalan said...

// முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் தேர் இழுத்த என்னை இதுவரை வாழ்க்கையில் சௌக்கியமாக இழுத்து வந்திருக்கிறான் ராஜகோபாலன். நான் நிலைக்கு வரும் வரை இனிமேலும் கட்டாயம் இழுப்பான். கோபாலனுக்கு அனேக கோடி நமஸ்காரம்.//

Touching Finish....

@ Sriram
வருஷா வருசம் நான் கண்டிப்பா ஒரு தடவையாவது மன்னிக்கு போவேன்..ஆனா உத்சவத் டயத்துல போக முடியாது.. பசங்களுக்கு ஸ்கூல்..
(ஹி.. ஹி..வசங்க சின்னவங்களா இருந்தாலும் இப்பலாம் நேனைச்சப்ப ஸ்கூலுக்கு லீவு போட முடியுறது இல்லையே )

raji said...

//முழு ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் தேர் இழுத்த என்னை இதுவரை வாழ்க்கையில் சௌக்கியமாக இழுத்து வந்திருக்கிறான் ராஜகோபாலன். நான் நிலைக்கு வரும் வரை இனிமேலும் கட்டாயம் இழுப்பான். கோபாலனுக்கு அனேக கோடி நமஸ்காரம்//

இனியும் கடினங்களற்ற சீரான பாதையில் உங்கள்
வாழ்க்கை தேரை இழுத்து செல்ல அந்த மன்னார்குடி ராஜகோபாலனை
மனமாற ப்ரார்த்திக்கிறேன்

raji said...

சீக்கிரத்தில் அட்டஹாசங்களை வெளியிட்டு
அனைவரின் கலாய்ப்புக்கும் ஆளாகும்படி
கேட்டுக் கொள்கிறேன்

வெங்கட் நாகராஜ் said...

வரிக்கு வரி நகைச்சுவை ததும்ப இப்படி எழுதும்போது, திடீர்னு அது என்ன ”எழுதறதை கொஞ்சம் நிறுத்திட்டு படிக்கலாம்னு” இருக்கேன்னு சொன்னது இன்னும் மனசு ஆறல!

பள்ளி சென்று செய்த குறும்புகள் பற்றி சீக்கிரம் எழுதுங்க! நாங்க செஞ்ச லூட்டிலாம் எந்த லெவல்-னு யோசிக்க உதவும் : ))))

இளங்கோ said...

நினைவுகள் எப்போதும் அழகு தானே.. அருமை...
[மனதுக்குள் மெலிதாக : இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியது இருக்கிறதோ.. :) ]

Vidhya Chandrasekaran said...

அட்டகாசத்தையும் அட்டகாசமா எழுதுங்க..

RVS said...

@எல் கே
நன்றி எல்.கே. ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ! ;-) எப்போதும் ரெண்டு வரியில் கமென்ட் போடறீங்க!! ;-)))))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி! இதை எழுதும் அந்த நேரத்தில் ட்ரான்ஸில் மன்னையில் இருந்தேன். ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan

Thanks Madhava!! ;-) ;-)

RVS said...

@raji
உங்கள் மனமார்ந்த பிரார்த்தனைக்கு நன்றி லாஜி! ;;-) ;-) ;-)

RVS said...

@raji
அட்டஹாசத்தை உங்கள் எல்லோராலும் பொறுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. மைல்ட் ஆக உள்ளதை பகிர்கிறேன். நன்றி ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கு நன்றி தலை.தலை.!!
நான் ரொம்ப சாதுவானப் பையன். மத்தவங்க செஞ்ச அட்டூழியங்களை மனதில் படம் பிடித்து வைத்திருக்கிறேன். அதை அவிழ்த்து விடுகிறேன். ;-)

RVS said...

@இளங்கோ
ஹி..ஹி.. இப்படியெல்லாம் அலுத்துக் கிட்டாலும் நாங்க உடமட்டோம். எழுதியே தீருவோம். நீங்கள் படித்தே தீரவேண்டும். நன்றி ;-) ;-)

RVS said...

@வித்யா
நன்றிங்க.. சொன்னபடியே செஞ்சுடறேன்.... ;-);-)

Chitra said...

அட்டகாசமான அட்டகாசங்களை பற்றி தொடராக எழுத மறக்காதீங்க!

பத்மநாபன் said...

சீக்கிரம் பதிவு போட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் உங்க கடமையுணர்வுக்கு பாராட்டு...
உங்கள் சின்ன வயது அட்டகாசங்கள் ..என்னை நான் படித்த பத்து பள்ளிகளுக்கும் அழைத்து சென்றுவிட்டது.... தாவணி அக்காக்களும் பேண்ட் அண்ணன்களும் ஏன் அப்படி விவஸ்தையில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பது நாம் பேண்ட் மாட்டியவுடன் தான் விவஸ்தையின்மையின் அவஸ்தை புரிந்தது...

தக்குடு said...

மன்னார்குடி மைனரோட முதல் போட்டோல இருக்கும் டவுசர் இரண்டாவது டவுசரை விட கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும் போலருக்கே!!..;PP அப்போ நீங்களும் அந்த காலத்துல கைப்புள்ள மாதிரி "என்ன ஒரு காத்த்த்த்தோட்டம்ம்ம்!!"னு சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு!னு ரசிகமணி வந்து சொல்லுவார் பாருங்கோ!! மிச்சத்தை மோஹன்ஜி & அப்பாஜி வந்து சொல்லுவா!!..:)

Anonymous said...

>>> CLASSIC. வேறென்ன சொல்ல!

Porkodi (பொற்கொடி) said...

awwwwww! kutti paiyan is very cute!! valara valara samathu ellam kanama poiducho??? :P

Anonymous said...

அட்டகாசங்களுக்காக வெயிட்டிங்! ஃபினிஷிங் டச் சூப்பர் அண்ணா! ;)

Unknown said...

அட்டகாசம் பண்ணிருக்கீங்க...

Unknown said...

நம்ம ஊரு காரவங்கள நீங்க
வாங்க வாங்க
எவ்ளோ நாள் தெரியாம போயிட்டே
அண்ணே...

மீண்டும் வருகிறேன்

sriram said...

மாங்கா பத்தையைத் தவிர எல்லாத்தையும் கவர் பண்ணிட்டீங்க..

//எஸ்.வி.எஸ். எண்ணெய்.... ஆர்.வி.எஸ். வெண்ணை... இது எப்படி இருக்கு.. ஹா ஹா..ஹா..//

அது அப்படி இல்லை

எஸ் வி எஸ் வெறும் எண்ணெய், ஆர் வி எஸ் வெளக்கெண்ணெய்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

இதனால என்ன தெரிகிறது என்றால் இலந்தைப் பழமும் , கடலைமிட்டாயும், நாவல் பழமும் விற்காத பள்ளிக்கூடங்களே இல்லை என்பதுதான்.
கொடுத்துவைத்தவர் நீங்கள். அந்தக் குண்டு ராஜகோபாலனைத் தரிசிக்கும் புண்ணியத்தில் எனக்கும் பங்கு கொடுங்கோ.

அப்பா உடைத்துக் கொண்ட கைகள் வலிக்காமல் இருக்க்கிறதா.

வல்லிசிம்ஹன் said...

அப்ப என்று படிக்கவும்.

Unknown said...

நினைவுகல அழகா சொல்லி இருக்கீங்க

ADHI VENKAT said...

அண்ணாக்கள், அக்காக்கள் செய்த லூட்டிகளை மட்டும் சொன்னா போதாது. உங்களோட லூட்டிகளையும் சொல்லுங்க.

அருநெல்லிக்காய், இலந்தைப்பழம், ஜுவ்வு மிட்டாய் வரிசையில் தேன் மிட்டாய் என்று சொல்லுவார்களே அதை விட்டு விட்டீர்களே!

விரைவில் பள்ளி பருவ லூட்டிகள் தொடரட்டும்!!!!!!!

பத்மநாபன் said...

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயார் ஆயிட்டிங்க போல....

RVS said...

@Chitra
நிச்சயமா சித்ரா! நேயர் விருப்பம் ஏறிக்கிட்டே போகுது.. செய்யறேன்.. ;-)

RVS said...

@பத்மநாபன்
//ஏன் அப்படி விவஸ்தையில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பது நாம் பேண்ட் மாட்டியவுடன் தான் விவஸ்தையின்மையின் அவஸ்தை புரிந்தது...//
அட்டகாசம் பத்துஜி!
அரிச்சந்திரன் மேல் ஆணை, நிஜமாவே ஒரு ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு ஒரு எண்ணம். ரொம்ப எழுதி அறுக்கறோமோ என்று ஒரு சுய குத்தல். உங்களைப் போன்றோரின் தொடர் ஊக்கம் என்னை எழுத உசுப்பிவிடுகிறது. நன்றி ;-);-)

RVS said...

@தக்குடு
வெளியில நடமாடினதுனால அன்னிக்கி முழு ட்ரஸ்ல வந்தோம்.
இதுக்கு இப்படி ஓவரா ராக் பண்ணினா.. ஆலிலை கிருஷ்ணன் போஸ்ல என்னோட ஒரு வயசு போட்டோ ஒன்னு இருக்கு. அதை எடுத்து நெட்ல விட்ருவேன். ஜாக்கிரதை!! ;-) ;-)

RVS said...

@! சிவகுமார் !
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சிவா!!

RVS said...

@Porkodi (பொற்கொடி)
ரோஜாப்பு கலர்ல இருப்பேன்! படுபாவி கலர் போட்டோ எடுக்காம உட்டுட்டான். திருஷ்டி போட்டு வைக்க வேற மறந்துட்டாங்க!
வளர வளர குறும்பு வளருது.. வளர்ந்த பையன் செய்யற குறும்பு அவ்வளவா யாருக்கும் பிடிக்கிறதில்லை!! ;-) ;-) ;-)

RVS said...

@Balaji saravana
பொறுமை...பொறுமை.. உடனே இன்னொரு ம.டே எழுதினா எல்லோரும் சேர்ந்து மடேர்னு என் மண்டையில் போடுவாங்க...
கடைசியில் டச்சுக்காக எழுதலை.... சத்யமான உண்மை.. ;-)

RVS said...

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி செந்தில்! அடக்கமான அட்டகாசம் தான்! ;-)

RVS said...

@siva
நன்றி!! அடிக்கடி வாங்க சிவா.. ஒரே ஊர் காரவுக நாம.. ;-)))))

RVS said...

@sriram
ஏன்னா நாட்டாமை ரொம்ப நாளா ஆளைக் காணோம். வேறெதுவும் பஞ்சாயத்தா?
வெளக்கெண்ணை - வயித்துக்கு ரொம்ப நல்லது.. ;-) ;-)

RVS said...

@வல்லிசிம்ஹன்
திவ்ய தரிசனமாக கோபாலன் சேவை சாதிக்கும் போது நம் மெய் மறப்பது திண்ணம். ராஜகோபாலனது பங்குனிப் பெருவிழா பற்றிய பதிவு விரைவில் பதியப் போகிறேன். ;-)
அப்புறம் ... அந்த உடைந்த கை.... மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாண்டேன்.. அதே கையேடு... ஒபெனிங் பௌலர்... மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.... பகவான் சித்தம்...;-);-)

முதல் வருகைக்கு நன்றி.. அடிக்கடி உங்களின் தடம் பதிக்கவும்.. ;-)

RVS said...

@விக்கி உலகம்
நன்றிங்க.. ரசித்தமைக்கு.. ;-)

RVS said...

@கோவை2தில்லி
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
பள்ளிப் பருவ பாய்ச்சல்களை விரைவில் எழுதுகிறேன்.. ;-)

RVS said...

//பத்மநாபன் said...

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயார் ஆயிட்டிங்க போல....//

எத்தங்கானும் நீர்!!! ;-)

பத்மநாபன் said...

டெம்ப்ளேட்ட வச்சு சொன்னேன் டிஸ்ட்ரிக்ட் ப்ளெயரே

அப்பாதுரை said...

தமிழ்க் காமென்டரி நினைவு படுத்தினீர்களே! அந்த நாளில் ரொம்ப ரசித்துக் கேட்டிருக்கிறேன். கூரைக்கொட்டகைப் பள்ளிக்கூடங்கள் பல நினைவுகளைக் கிண்டின - முதல் முதலாக கூரைக் கொட்டகைப் பள்ளியில் படிக்க வேண்டி வந்ததும் சிறைக்குப் போனது போல் உணர்ந்தேன்.. ஹ்ம்ம்

புது வடிவம் ஜோர்.

இளங்கோ said...

Hiya.. New Template.. :)

எல் கே said...

புது சட்டை(டெம்ப்ளேட்) நல்லா இருக்கு

பத்மநாபன் said...

//தமிழ்க் காமென்டரி நினைவு படுத்தினீர்களே! அந்த நாளில் ரொம்ப ரசித்துக் கேட்டிருக்கிறேன்.//

அஹா ... ராமமூர்த்தி எனும் வர்ணனையாளரின் வர்ணனையை கேட்டு கொண்டே இருக்கலாம் ...அடுத்து அப்துல் ஜபார் அவர்கள்...ஒரு டெஸ்ட் மாட்ச்சில் ( யாரோடு என்பது மறந்து விட்டது) யஸ்பாலும், குண்டப்பா விஸ்வநாத்தும் நாள் பூராம் அவுட் ஆகாமல் ரன் அடித்து கொண்டிருக்கிறார்கள்... ஜபார், சிதம்பரத்தில் நடராஜரை பொன்னால் அலங்கரிப்பார்கள்...இங்கு சிதம்பர ஸ்டெடியத்தை ரன்னால் அழங்கரிக்கிறார்கள்...இப்படி நிறைய மேட்ச்சை விட வர்ணனை ஜோராக இருக்கும்...

Anonymous said...

நல்லா இருந்தது.

அந்த குச்சி ஐஸ் உங்க ஊரில் இல்லையா? நாங்க எல்லாம் சேமியா ஐசுக்கு அலைவோம்.

தமிழ் கமெண்டரி - கூத்தபிரான் பேச்சு ரொம்ப பிடிக்கும். அதை விட நண்பனொருவன் பையில் திருன்சிசிடோர் வைத்துகொண்டு பைமேல் சாய்ந்து கொண்டு Four, சிக்ஸர் மற்றும் அவுட் என லோக்கல் Umpire கணக்கா சிக்னல் கொடுப்பது நினைவுக்கு வந்தது. இடை வேளையில் நாங்கள் Anand Settlewad, Jaishimha போல பேசி மிச்சம் மீதி உள்ள இங்கிலீஷ்காரர்களை விரட்டுவோம்.

நிறைய நினைவுகளை கிளறி விட்டீர்கள். நன்றி.

ரகு.

RVS said...

@பத்மநாபன்
ப்ளாகோட பேருக்குகாகவும் அந்த மைதானம் பத்துஜி! ;-)

RVS said...

@அப்பாதுரை
இங்க்ளிபீச்சு அவ்வளவா தெரியாத காலத்ல (இப்ப அப்பிடியே சேக்சுபியரு.. ) தமிழ் காமென்ட்ரி காதில் விழும் இன்பத் தேன்!
வடிவம்... மைதானம் ஃபான்ட் ரெண்டையும் முடிக்க பிடிக்க அரை மணி ஆயிற்று.. ;-)

RVS said...

@இளங்கோ
நல்லா இருக்கா? ;-)

RVS said...

@பத்மநாபன்
என்ன ஒரு ஞாபகம் பத்துஜி உங்களுக்கு... அதெல்லாம் தான் அட்டகாசமா இருக்கும்.. ;-)

RVS said...

@ரகு.
சேமியா ஐஸ் எங்கள் ஊரிலும் உண்டு... எனக்கு அவ்வளவா பிடிக்காது... விட்டுட்டேன்..
கிரிக்கெட் நினைவுகள் இன்னும் நிறைய இருக்கு.. அப்புறமா பதியறேன்... ;-)

Anonymous said...

ethai patriyum kurainthathu 1 mani neram pesum vallamai padaithavar...oru oru visayathirkum oru vilakamum, sontha karuthum ullavar...

Anonymous said...

ethai patriyum kurainthathu 1 mani neram pesum vallamai padaithavar...oru oru visayathirkum oru vilakamum, sontha karuthum ullavar...

p.selvaraj said...

இந்த சின்ன கான்வெண்டைப் பற்றி நான் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். 1வதிலிருந்து 8வது வரை படிக்க கூடிய புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளி என்பது இதன் முழு பெயர். அங்கு இருந்த ஜான் கென்னடியின் போட்டோவில் இருந்த வாசகம் "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்தாய்" இன்னும் என்னை மட்டுமே கேட்பது போல் உணர்கிறேன். நான் இங்கு 1வ்திலிருந்து எட்டாவது வரை படித்தேன். வகுப்பிலேயே முதல் மாணவன் என்பதால் எல்லா ஆசிர்ய்ர்களிடமும் செல்ல பிள்ளை. குறிப்பாக 5வது டீச்சர் ருக்மணி, 6 வது டீச்சர் அருள்மேரி, 8வ்து டீச்சர் சுசீலா. என் கையெழுத்து நன்றாக இருப்பதால் எதிர்த்தாப்ல இருந்த தபாலாபீசில் போய் மாதாமாதம் டீச்சர்களுக்கு ஆர் டி கட்டுவது என் வேலை. ஒரு சமயம் அருள்மேரி டீச்சருக்கு சாப் மற்றும் இதர சாமான்கள் வாங்க வாடகை சைக்கிள் எடுத்துப் போய் வழுக்கி விழுந்து கன்னத்தில் ஏற்பட்ட காயத்தின் வடு இன்னும் எனக்கு இந்த பள்ளியை ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்கிறது.
3 வது வகுப்பில் படித்த போது காங்ரெஸ் மாநாட்டுக்கு திறந்த காரில் ஊர்வலமாய் போன இந்திரா காந்தி அம்மையாருக்கு பள்ளியின் சார்பில் மாலை அனுவித்தது மறக்க முடியாத அனுபவம்.
இன்னும் நிறைய ஞாபகம். மற்றவர்களுக்கு போர் அடித்துவிடும் எனவே இத்துடன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails