Saturday, February 19, 2011

ட்ரைவன்!

"யார்ரா அந்த ட்ரைவன்?" என்று கிண்டல் தோரணையில் வண்டியை குறுக்கு நெடுக்காக சிலுப்பி சிலுப்பி ஒட்டியவனைப் பார்த்துக்கொண்டு செட்டில் பக்கத்தில் நின்றவனிடம் கேட்டான் கட்டை கார்த்தி. புரியாமல் குழம்பி "என்ன" என்பது போல சமிஞ்ஞை செய்து தலையை ஆட்டினால், "மாப்ள. டிரைவர் அப்படின்னு கூப்பிட்டா அது அவனுக்கு மரியாதை. ட்ரைவன் அப்படின்னு கூப்பிட்டா தானே அவனை திட்டினா மாதிரி இருக்கும்" என்று கேட்டுவிட்டு அகில உலகத்திர்க்கும் ஆங்கில அகராதிக்கு ஒரு புதுவார்த்தையை அறிமுகம் செய்து வைத்தான். கட்டை கார்த்தி சவுக்கு உருட்டுக் கட்டை போல இருப்பான். நாலேமுக்காலிலிருந்து ஐந்தடிக்குள் வாட்டசாட்டமாய் வளர்ந்திருப்பான். டாக்சி ஸ்டாண்டில் வண்டியைப் போட்டுவிட்டு பக்கத்து கிராமங்களுக்கோ அல்லது ப்ளஷர் கார் வைத்துக்கொண்டு போகும் அளவிர்க்கு லக்ஷ்மிகடாக்ஷம் நிரம்பிய தனவான்களுக்கோ வாடகைக் கார் ஓட்டுபவன். பலகாத தூரம் நிற்காமல் ஓட்டச்சொன்னாலும் பீடி சிகரெட்டிற்கு நிற்காமல் கண்கொட்டாமல் ஓட்டும் நல்ல தேர்ந்த டிரைவர். 

ஒருமுறை அமாவாசை கும்மிருட்டில் பக்கத்து கிராமத்திற்கு சிங்கப்பூர் ரிடர்ன் சவாரிக்கு சென்றதில் அம்பாசிடர் காருக்கு அளவெடுத்து கட்டியது போல இருந்த ஒரு சிங்கிள் பெட் வாய்க்கால் பாலத்தில் ரசமட்டம் பிடித்தாற்போல ஓட்டி கின்னஸ் சாதனையை மன்னை சாதனையாகச் செய்தவன். கட்டையாய் பிறந்த காரணத்தினால் காலை எக்கி எக்கி பெரிய சைக்கிள் சீட்டின் மீது டான்ஸ் ஆடி லோக்கலில் பெடலடிப்பதால் ஹாண்டில் பார் ரொம்பவும் கோச்சுக்கும். வேண்டாம் வேண்டாம் என்று தலையை பெண்டுலமாய் ஆட்டும். இதைப் பார்த்துவிட்டு "ஹையோ!" என்று தலையில் அடித்துக்கொண்டு "சைக்கிள் கூட ஓட்டத்தெரியலை" என்றுதான் அவன் பராக்கிரமம் தெரியாத ஊர்ஜனம் பேசும். ஸ்டீரிங் வீலோடு சேர்ந்து சுழன்று சுழன்று கை ரெண்டும் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ள வண்டியை கண நேரத்தில் தலை வால் மாற்றி திருப்பிப் போடுவான். நான் அவனை "அசகாயசூரன் டிரைவர்" என்று தான் அழைப்பேன்.

************
Lorrydriver
ரொம்ப தூரம் குவாலிஸில் இரவுப் பயணங்கள் செல்லும் போது எங்கள் டிரைவர் அண்ணனிடம் "எப்படின்னே இதுல லைட்டு எரியுது?" என்று பெட்ரோமாக்ஸ் விளக்கு செந்தில் ரேஞ்சுக்கு கேள்விகள் கேட்டு துளைத்துவிடுவேன். நடுநிசிக்களில் ரெண்டுபேரும் தூங்கக் கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வு கேள்வி பதில் செஷன் வைத்துக் கொள்வேன். தன் தகுதிக்கு மேல் போகும் இடங்களிலெல்லாம் பிளாஸ்டிக் கார்டு தேய்த்து கண்ட சாமான்கள் வாங்கி லோல்படும் அப்பாவி மனித ஜீவன்கள் போல எட்டு டன் லாரியில் முட்டமுட்ட பதினெட்டு டன் ஏற்றி "கன்னி" லாரியை இரவோடு இரவாக நிறைமாத "புள்ளைத்தாச்சி"யாக்கி ஓட்டிச் செல்லும் டிரைவக் கிளிகளையோ குரங்குகளையோ பற்றி நான் கேட்ட வினாக்களும் டி.அண்ணனின் விடைகளும் இங்கே தருகிறேன்.

இதற்குமேல் ஒரு குண்டூசி பாரம் கூட தாங்காத முழு லோடில் வானூர்தி சப்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் "டர்ர்ர்ர்ரர்ர்ர்ர்" என்ற டயர் ஓசை காதைக் கிழிக்க சென்ற ரோடூர்தியைப் பார்த்து.....
ரா.வெ.சு: வெயிட் ரொம்ப அதிகமா இருக்கேன்னே.
டி.அண்ணன்: மரம் லோடு தம்பி!
ரா.வெ.சு: எப்படின்னா சொல்றீங்க?
டி.அண்ணன்: அது தான் போர் மாதிரி ஒன்னுமேல ஒன்னு அடுக்க முடியும் தம்பி.
ரா.வெ.சு: எங்க போகுது.
டி.அண்ணன்: திருப்பூர்.
(அத எப்படிச் சொன்னீங்க என்று கேட்கவில்லை!)
ரா.வெ.சு: ஆக்சிலேட்டேரை விட்டு காலை எடுக்க முடியாதுல்ல! பாவம் கால் கடுக்கும்.
டி.அண்ணன்: எடுத்துருவாங்க தம்பி.
ரா.வெ.சு: எப்படின்னே! (மீண்டும் பெட்ரோமாக்ஸ் விளக்கு செந்தில் வாய்ஸ்)
டி.அண்ணன்: ஆக்சில் மேல செங்கல்ல வச்சுருவாங்க.
ரா.வெ.சு: எப்படின்னே! 
(இம்முறை கேட்டவுடன் சிரிப்பார்!)
ரா.வெ.சு: செங்கல்ல வச்சா எப்படி பிரேக் போடுவாங்க?
டி.அண்ணன்: கல்ல உதச்சு தள்ளிட்டு ப்ரேக் போடுவாங்க.
ரா.வெ.சு: கால் வலிக்காது?
டி.அண்ணன்: அதான் ஆக்சிலேட்டர்ல அழுத்தி வைக்கலையே..
ரா.வெ.சு:  ஊஹூம். கல்ல காலால உதைச்சா வலிக்காதான்னு கேட்டேன்.
(அடுத்த டீக்கடை வரும்வரை ஆள் "கப்சிப்")

நாங்கள் டீக்கடையில் அந்தக் கழனியைக் குடித்துவிட்டு வண்டி எடுக்கும்முன் வந்து சேர்ந்த அந்த புள்ளைத்தாச்சி லாரி டிரைவரிடம்.. (வண்டியை ஒரு தடவை உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு)
ரா.வெ.சு: அண்ணே!
பு.டிரைவர்: (ஒட்டிய களைப்பில் சற்றே விரைப்பாக) என்ன?
ரா.வெ.சு: காலால எப்படி ஓட்டரீங்க?
பு.டிரைவர்: (முதல் கேள்வியிலேயே விக்கித்துப்போய் மேலும் கீழும் ஏற இறங்க பார்த்துவிட்டு)  கையாலயும் ஓட்டறோம்!
ரா.வெ.சு: இல்ல ஆக்சில் மேல செங்கல்லு வைப்பீங்கலாம். அதான் கேட்டேன்.
பு.டிரைவர்: அதெல்லாம் ஒன்னும் இல்ல.. (என்மேல் கல்லைத் தூக்கிப் போடும் அளவிற்கு கோபம் வந்து கண்ணாமுழி பிதுங்க என்னைப் பார்த்துவிட்டு அந்த ரோட்டோர இரவுக் கடையில் "ஒரு முட்ட தோசை..." என்று சொல்லி கைகழுவி பெஞ்சில் உட்கார்ந்து எங்கள் வண்டி ரோடு ஏறும்வரை திரும்பித் திரும்பி முறைத்துப் பார்த்தார். 

எங்கள் டிரைவர் அண்ணனுடன் பேட்டி தொடர்கிறது...

ரா.வெ.சு: தூக்கம் வாராதான்னே?
(உள்ளுக்குள்ள ஒரு கிலி.. அதனால இந்தக் கேள்வி)
டி.அண்ணன்: ஜில்லுன்னு தண்ணி போட்டு மூஞ்சி களுவக் கூடாது.
ரா.வெ.சு: மூஞ்சி அலம்பினா ஃபிரஷ் ஆயிடும்ல.
டி.அண்ணன்: மொதெல்ல நல்லாருக்கும். அப்புறம் போகப்போக கண்ணை இழுத்துடும் தம்பி.
ரா.வெ.சு: எப்படின்னே!
டி.அண்ணன்: அந்த சில்லு தண்ணிக்கும் காத்துக்கும் தூக்கம் தன்னால வந்து கண்ணை அசத்திடும் தம்பி.
ரா.வெ.சு: தூக்கம் வராம இருக்க என்ன செய்யணும்?
டி.அண்ணன்: சில பேர் பச்ச மொளகா கடிச்சுகிட்டே ஓட்டுவாங்க..
ரா.வெ.சு: பச்ச மொளகாவா?
டி.அண்ணன்: ஆமாமாம்...
(சுரத்து இல்லாமல் மெயின் ரோட்டைப் பார்த்து தன் விதியை நொந்து வண்டியை விரட்ட ஆரம்பித்தார்!)
எங்கள் டிரைவரும் பு.லாரி டிரைவர் ராஜாக்கண்ணும் ரொம்ப நல்லவர்கள்! என்னை ரொம்பவும் சகித்துக்கொண்டார்கள். நன்றி.

**********
கல்லூரிக் காலங்களில் பயணம் செய்த பஸ்களில் வரும் டிரைவர் அண்ணாத்தேக்கள் பலரும் பலவிதம். சர்க்கார் வண்டி ஓட்டுபவர்கள் எப்போதும் ஏதோ சிந்தனையில் ரோடிலிருந்து வைத்த கண் எடுக்காமல் ஏறியவர் இறங்கினவர் கவலையில்லாமல் நாற்பது தாண்டாமல் உருட்டி நல்ல டிரைவர் என்று பெயர் எடுத்து அவார்ட் வாங்குவார்கள். ஒரு ஆத்திர அவசரத்திற்கு வரப்பிலிருந்து ஓடி வந்து கை காண்பித்தால் கூட பிரேக் மேல் கால் வைக்க மாட்டார்கள். நிறுத்தத்திற்கு நிறுத்தம் ஆள் இருந்தாலும் நாய் படுத்திருந்தாலும் ஒரு முறை நின்று பார்த்துவிட்டு கிளம்புவர். ஒரு நல்ல மாரிக்காலத்தில் வானத்தை பொத்துக்கொண்டு ஊற்றிய மழையில் சிவலிங்கத்துக்கு மேல் தாரா பாத்திரம் தொங்கவிட்டு நீர் சொட்ட விடுவது போல சொட்டசொட்ட உடலெங்கும் நனைந்து கண்ணில் வழியும் மழை நீரை வழித்து உதறி ஒட்டிய ஒரு நீலச் சட்டை போட்ட வயசான டிரைவரை சல்யூட் அடித்து "உயர்திரு டிரைவர்" என்று எழுந்து நின்று இந்த தேசமே கூப்பிடலாம்.

தனியார் வண்டிதான் அந்தக் காலத்தில் மஜாவே. உள்ளே நுழைந்ததும் இளமை பொங்கும். தைரியமாக வெள்ளைப் பேன்ட் போட்டுக்கொண்டு பயணிக்கலாம். உட்கார்ந்தால் அழுக்கு ஒட்டாது. சீட்டும் சீட்டுக்கு அடியிலும் ஒரு அடி நீள ப்ரஷால் துடைத்திருப்பார்கள்.  செட்டு கட்டி பாட்டு போடுவார்கள். குறுந்தகடு டெக்னாலஜி அப்போது பிறக்காததால் கேசெட்டு தான். ஸ்டாப்பிங்கில் பூவையர் காத்திருந்தால் அவர்களின் அடுத்த அடி நிச்சயம் பஸ் படிக்கட்டில் எடுத்து வைக்கும் அளவிற்கு பக்கத்தில் ஆதரவாக நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். நிச்சயம் அந்த குஜிலிகள் ஏறும் ஸ்டாப்பிங் முன்னால் ஒரு முறை சிகையழகை சீர் படுத்திக் கொள்வார்கள்.

காலேஜ் மங்கையர் ஓடி வந்து பஸ் ஏறி நான் பார்த்தே இல்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் அரைச் சேலையான தாவணி தென்பட்டால் வண்டி இம்மியளவு கூட நகராது. மூச்சிரைக்காமல் வேர்க்காமல் நோகாமல் பெண்ணினம் ஏறிய பின்னர் மனமெங்கும் சந்தோஷம் பொங்க முன்னால் இருக்கும் பின்னால் பார்க்கும் காண்ணாடி எல்லாவற்றிலும் ஒரு முறை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வண்டி குலுங்க கிளப்புவார். சாயந்திரம் பெண்கள் டிக்கெட்டுகள் வண்டியை காலி செய்தவுடன் காற்றிரக்கிய பலூன் போல புஸ்ஸாகி கடனே என்று ஓட்டி ஸ்டாண்டில் விடுவார். இவர்கள் "மன்மத ஓட்டுனர்கள்" என்கிற இளமை வகையறாவை சேர்ந்தவர்கள்.

*******
சென்னை மாநகரப் பேருந்துகளில் நான் பார்த்தவர்கள் தான் இந்த லோகத்திற்கு நல்லது செய்யும் மாந்தர்கள். எந்த ஒரு ஸ்டாப்பிலும் பஸ் ஸ்டாப் என்று போட்ட இடத்தில் இருந்து குறைந்தது இருபது அடி முன்னோ பின்னோ நின்று சோம்பேறியாக நிற்கும் மக்களை உள்ளே ஏற்றுவதர்க்குள் ஒரு சிறு உடற்பயிற்சி கொடுக்கிறார்கள். சுகர் கொலஸ்ட்ரால் உள்ள மக்களுக்கு மிகவும் ஏற்றது சென்னை நகர பஸ்கள். ஏறிய பின்னர் இவர்கள் அடிக்கும் கட்டிர்கும் ப்ரேக் குத்திர்க்கும் கூட்டத்தில் நின்று கசங்கி பஞ்சாமிர்த வாழைப்பழமாக ஆக்கிவிடுவார்கள். ரெண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டுவிட்டு சைதாப்பேட்டையில் ஏறினால் நந்தனம் வருவதற்குள் ஜீரணம் நிச்சயம். இவர்கள் பஸ்ஸையே ஜிம்மாக பாவித்து மக்களுக்கு தொண்டு புரிவதால் "மாஸ்டர் டிரைவர்கள்" என்ற கேட்டகரியில் அடங்குகிறார்கள்.

அப்படியே நிறுத்தலாம் என்று கொஞ்ச நஞ்சம் மனசாட்சியுடன் நெஞ்சில் ஈரம் உள்ள டிரைவரைக் கூட நிறுத்தவிடாமல் செய்பவர்கள் அடாவடி ஆடோக்காரர்கள். இவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் டிரைவன்கள் மீதி பேர் டிரைவர்கள். மக்கள் காத்திருக்கும் இடமெங்கும் இவர்களுக்கு நிறுத்தங்கள். மெயின் ரோடு ஓரம் மகாவீர் சந்த் இலவச பொது கழிப்பறை வாசலில் கியூவில் நின்றால் கூட பக்கத்தில் சென்று "எங்க சார் போகணும்?" என்று கேட்பார்கள். இன்னும் சிலர் சவாரி ஏற்றி சர்க்கஸ் காண்பிப்பார்கள். என்னுடைய ஆட்டோ ராஜாக்கள் பதிவு இதை விலாவாரியாக புட்டுபுட்டு வைத்துள்ளது. இந்த மயிர்க்கூர்ச்செரிய வைக்கும் மக்களை பற்றி அங்கே சென்று தெரிந்துகொள்ளுங்கள். இவர்கள் "தாதா டிரைவர்கள்" என்றழைக்கப் படுவார்கள்.

சமீப காலங்களில் பிரபலமான இன்னொரு டைப் ஒட்டுனர்கள் ரயில்பஸ் ஓட்டுனர்கள். நோக்கியா, ஹுண்டாய் கம்பெனிகள் மற்றும் சென்னையின் புறநகர்ப் புகுதி வயற்புரங்களை கல்லூரிப்புரங்களாக உருமாற்றிய எஞ்சினியரிங் கல்லூரிகள் போன்றவற்றின் பிரத்யேக பேருந்துகள் ரயில்பஸ் என்ற விசேஷ கலப்பின ஜாதியில் அடங்கும். பஸ் திரும்பி ரெண்டு செகண்டு பின்னர் தான் வால் திரும்புகிறது. ரயிலின் ரெண்டு கோச்சு சேர்த்தார்போல இருக்கும் நீள பஸ்ஸை நகரின் சந்து பொந்துகளில் எல்லாம் அனாயாசமாக விட்டுத் திருப்பி கல்விப்பணி மற்றும் தொழிலாளர் நலம் நாடும் டிரைவர் அண்ணாக்கள் "எஞ்சின் டிரைவர்கள்" என்று அழைக்க தகுதியானவர்கள்.

பின் குறிப்பு: ட்ரைவன் என்று மன்னையில் சொன்னவரை நேற்று சென்னையில் பார்த்தேன். எழுந்த சிந்தனைகளை பதிந்து உங்களுக்கு எனக்குத் தெரிந்தவர்களை சற்று காட்டினேன். இதற்காகவே என்னைப் பதிவன் என்று அழைத்தாலும் ஏற்றுக்கொள்வேன். நன்றி.

பட உதவி: http://k53.pbase.com

-


33 comments:

மதுரை சரவணன் said...

டிரைவன் பேட்டி அருமை.. பகிர்வுக்கு நன்றீ .வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது said...

மைனரே வார்த்தைகள் , உதாரணங்கள் விளையாடுகிறதே உம்மிடம்! மைனர் வெறும் மல்லு வெட்டி மைனர் இல்லை.சாப்ட் வேர் இஞ்சினியர் அல்லவா!? அதுசரி, நீங்கள் எந்தவகை "ஓட்டுனர் " ??

இராஜராஜேஸ்வரி said...

டிரைவர்களை ரொம்ப நல்லா செமையா ஓட்டியிருக்கிறீர்கள்.

மாதேவி said...

நல்லாக கலாய்த்துள்ளீர்கள்.

மோகன்ஜி said...

அடடா ஆர்.வீ.எஸ்!'ஸ்க்ரூ டிரைவர் ' தவிர எல்லா டிரைவரையும் கொண்டு வந்துட்டீங்க.ஓட்டுறதுக்கு உங்களுக்கு சொல்லியா தரணும்?
"இப்போ எதுக்கு லாப்டாப் முன்னால உக்காந்து லூசாட்டம் சிரிச்சாறது?"என்று
இங்க கேக்க வச்சுட்டீங்களே?

அப்பாதுரை said...

மென்பொருள் காரராச்சே டிரைவர்னு வேறே ஏதாவது எழுதி கலங்கடிப்பீங்களோனு நெனச்சேன். ஓவர்வெயிட் டிரக் போலவே ஓவர்வெயிட் நகைச்சுவை ஏத்திக்கிட்டுப் போயிருக்கீங்க. இலவசக் கழிப்பறை இன்னும் சிரிக்க வைக்குது.

டிரைவர் பத்தின டேஸ்மேக் சிரிப்பு வேணுமா? டைகர் உட் சமாசாரம் வெளிவந்தப்ப ஜிம்மி ஃபேலன் வெளியிட்ட லேட் நைட் விடியோ ஒண்ணு இருக்கு -யூட்யூப்ல கிடைக்கலாம்.

எல் கே said...

பழைய நினைவுகளை தூசு தட்டி விட்டாச்சு .. கல்லூரி காலத்தில் தினமும் ஒரு மணிநேரம் (போக வர இரண்டு மணி ) தனியார் பேருந்தில் சென்றோம்.. அது ஒருக கனாக் காலம் ஆகி விட்டது

அன்பரசன் said...

வரிகளை கோர்த்துள்ள விதம் அருமை...

raji said...

ஓட்டுனரை ஓட்டிய உயர்திரு பதிவர் அவர்களே

நீர் வாழ்க!நின் குலம் வாழ்க!

(இன்னும் லெஃப்ட் ஹேண்ட்தான் :-(( )

பத்மநாபன் said...

அண்ணே...அண்ணே பேட்டி அருமை...
மன்மத ஓட்டுனர்களின் உடல்மொழியும் வண்டியின் வேகமும் ஏறும் வண்ணங்களை பொறுத்து மாறும்.....
ஒட்டுனர்களை வகைப் ``படுத்தி`` விட்டீர்கள்

சாய்ராம் கோபாலன் said...

// டைகர் உட் சமாசாரம் //

என்னிடம் ஒரு பச்சைபச்சை ஜோக் இருக்கு வேணுமா ?

Unknown said...

டிரைவர்கள்" பலவிதம்
உங்கள் பதிவை போல
நல்ல கருத்துக்களும்
விமர்சனமும் அருமை

அமைதி அப்பா said...

//அந்த சில்லு தண்ணிக்கும் காத்துக்கும் தூக்கம் தன்னால வந்து கண்ணை அசத்திடும் தம்பி.//

ஆமாம், நானும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை முகம் கழுவினால் தூக்கம் போய்விடும் என்று நினைத்திருந்தேன். ஒரு டிரைவரை "முகம் கழுவிவிட்டு வண்டி ஒட்டுங்களேன்" என்றேன். அதற்கு அவரும் இதே விளக்கத்தைத்தான் கொடுத்தார். அதன் பிறகு, தினந்தோறும் முகம் கழுவிவிட்டு தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

நிறைய விஷயங்களை ஒரே பதிவில் சொல்லிவிட்டீர்கள். குறிப்பாக "எஞ்சின் டிரைவர்கள்" என்னை நிறையவே பயமுறுத்துகிறார்கள். இது சென்னைவாசிகளுக்கு நன்கு அனுபவப்பட்ட விஷயம்.

எழுதி ஆறுதலடைய வேண்டியதுதான்.
நன்றி.

தக்குடு said...

என்கிட்டயும் ஒரு பஸ் கதை இருக்கே!!!..:)

@ மாணிக்கம் அண்ணா - //அதுசரி, நீங்கள் எந்தவகை "ஓட்டுனர் " ??//

அதான் 'மன்மத ஓட்டுனர்'னு ஒன்னு இருக்கே, தனியா வேற ஒன்னு வேணுமா நம்ப மைனருக்கு?..:PP

வெங்கட் நாகராஜ் said...

விதம் விதமான ஓட்டுனர்கள் விதம் விதமான வண்டிகளுக்கு!

Sivakumar said...

//ரா.வெ.சு: அண்ணே!
பு.டிரைவர்: (ஒட்டிய களைப்பில் சற்றே விரைப்பாக) என்ன?
ரா.வெ.சு: காலால எப்படி ஓட்டரீங்க?//

!!! அவரை நீங்க ஒட்டுனதுதான் அதிகம். எப்படி இப்படி ஓட்டுறீங்க?

சிவகுமாரன் said...

கோவையில் படிக்கும் போது KG இல் செகன்ட் சோ பாத்துட்டு லாரியில் ஹாஸ்டல் வந்த நினைவு வருது.
வித்தியாசாம யோசிக்கிறீங்க

RVS said...

@மதுரை சரவணன்
நன்றி சரவணன். ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
நான் சர்க்கார் ஓட்டுனர் மாதிரி... ரோட்டைப் பார்த்து ஓட்டுவேன். வைத்த கண்ணை எடுக்க மாட்டேன். சாலையின் இருமருங்கும் அப்சரஸ் போனாக் கூட... ஒன்னரைக்கண்ணால் கூட பார்க்கமாட்டேன். ;-) ;-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஓட்டியவர்கள் ஓட்டப்பட்டார்கள்.. ;-)

RVS said...

@மாதேவி
நன்றி மாதேவி! ;-)

RVS said...

@மோகன்ஜி
அண்ணா ரசித்ததற்கு நன்றி!
ஸ்க்ரூ டிரைவர்.. ஒரு முறை இதை வைத்து நடந்த கலாட்டாவை அப்புறம் பகிர்கிறேன்! ;-)

RVS said...

@அப்பாதுரை
பல நேரங்களில் விண்டோஸ் டிரைவர் கிடைக்காமல் நெட்டில் அல்லாடியிருக்கிறேன். அதைக் கூட பகிரலாம். ரசித்ததற்கு நன்றி அப்பாஜி! ;-)

RVS said...

@எல் கே
போஸ்ட்டா போடுங்க எல்.கே. ரசிக்கறோம்!

RVS said...

@அன்பரசன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.. உங்களுடைய எந்தாயி நல்லாயிருந்தது. ;-)

RVS said...

@raji
இந்தப் பதிவனை உயர்திரு பதிவர் ஆக்கியதற்கு நன்றி! ;-)
(இன்னுமா கை சரியாகலை.. ;-( )

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி!
சின்னக் கவுண்டர் விஜயகாந்த் போல தலையை வழித்து சீவி சந்தனப் பொட்டிட்டு ஒரு ஓட்டுனர் வருவார். அண்ணன் கண்ணில் காதல் தாண்டவமாடும். சிரித்துக்கொண்டே வண்டி ஓட்டுவார். காதல் பாடல்களில் நல்ல ரசனை. அரைமணி வெயிட் பண்ணி அவர் வண்டியில் போன காலம் எல்லாம் உண்டு... இது ஒரு நாலைந்து பதிவுக்கு வரும்.. இன்னும் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் எழுதினால் படிப்பார்களா? ;-)

RVS said...

@சாய்
என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னா.. ;-) ;-)

RVS said...

@siva
நன்றி சிவா! ஊர் எப்படியிருக்கு.. மன்னை டாக்கீஸ் பதிவில் தமிழ்-ஹிந்தி கமென்ட் படித்தேன்! ;-)

RVS said...

@அமைதி அப்பா
என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம். வேலை ஜாஸ்தியா?
பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. ;-)

RVS said...

@தக்குடு
எனக்கு தெரியுமே!
முன் சீட்ல உட்கார்ந்திருந்த பொண்ணுகிட்ட புக்ஸை கொடுத்துட்டு பின்னாடியே ஒத்தைக்கால்ல நின்னுண்டே போனது! அப்புறம் வேற ஒரு கேரக்டர் வச்சு அவா பண்ணினா...இவா பண்ணினான்னு நம்ம கதைய எடுத்து விட வேண்டியதுதானே! படிக்க ரெடியா இருக்கேன்..
நான் "மன்மத டிரைவர்" இல்லை! "சமத்து டிரைவர்" ;-);-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பெரிய விளக்கம் ஒரு வாத்தையில் தல. நன்றி ;-)

RVS said...

@! சிவகுமார் !
ரொம்ப சத்தமா கேக்காதீங்க.. கடிபட்டவங்க வண்டிய மேல ஏத்திடப் போறாங்க... ஹி..ஹி...
நன்றி ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails