Tuesday, February 22, 2011

கடற்கரைக் காட்சிகள்

கடற்கரை சமீபம் நெருங்க நெருங்க மக்கள் அலை அடித்துக் கொண்டிருந்தது. இந்த வருடம் சட்டென்று குளிர் விட்டு வெய்யில் காய ஆரம்பித்திருந்தது. புழுக்கம் தாங்காமல் கடற்காற்று வாங்க வியர்வை உரச மக்கள் கரையில் அலைமோதினர். பொதுவாக எனக்கு காந்தியும் கண்ணகியும் குடியிருக்கும் மரீனாதான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இம்முறை பெஸன்ட் நகர் சென்றோம். மாதா கோவில் மணியோசையுடன் கலகலப்பாக இருந்தது எலியாட்ஸ் பீச். சர்ச் தாண்டி உள்ளே நுழையும் அந்த குறுகலான சந்து திருப்பத்தில் தான் நீங்கள், நான், என் கார், பிளாஸ்டிக் பேப்பர் தின்னும் பசு மாடு, தெருவில் ஓடும் சொறி நாய், வெளிமாநில மற்றும் லோக்கல் பிச்சைக்காரர்/காரி, தள்ளுவண்டி வாழைப்பழக்காரர், ஸ்கார்பியோவை நடுரோடில் நிறுத்திவிட்டு முருகன் இட்லி கடையில் ஜிகர்தண்டா பருக வரும் மென்பான ப்ரியர்கள், பீச்சில் மறைவில் ஒதுங்குவதற்கு நுழையும் முன்னரே இறுகக் கைப்பற்றி தோளோடுதோள் உரச ஈருடம்பு ஓருயிராய் செல்லும் காதலர்கள் என்று சகலமும் சகலரும் செல்லவேண்டும். 

பொறுமை இதைத் தாண்டி உள்ளே இருக்கும் கடலை விடப் பெரிது. எல்லோருக்கும் வழி விட்டு அமைதி காத்து உள்ளே ஆடினாலும் வெளியே புன்னகைத்து பீச்ரோடில் இணைந்தோம். இரண்டு பக்கமும் ஒரே வாகன வெள்ளம். குழந்தைகள் தள்ளும் நடைவண்டியில் ஆரம்பித்து எங்கூருக்கு கிழக்கே இருக்கும் கிராமத்தில் இருந்து மெட்ராச சுத்திப்பாக்க வந்த ஜனம் பயணித்த டூரிஸ்ட் பஸ் முதற்கொண்டு அங்கே எனக்கு முன்னால் துண்டுபோண்டு இடம்பிடித்து நிறுத்தியிருந்தார்கள். அந்த ரோட்டின் இடது புறத்தில் செல்லும் பல கிளை சாலைகளில் அப்பகுதி வீடுகளில் குடியிருப்போர் போல் வால்ட் தாண்டி வெளியே வரும்படி அவர்கள் வீட்டு வெளிக்கதவை அடைத்து பலபேர் "யார் எக்கேடுகெட்டா எனக்கென்ன" என்ற உன்னத பாலிசியில் வண்டி நிறுத்தியிருந்தார்கள். முருகன் ஞானப்பழத்திற்காக உலகத்தை சுற்றியது போன்ற ஒரு முழு வலம் அந்த ரோடைச் சுற்றி வந்து சோத்துக்கைப் பக்கம் வந்தோம். எங்கிருந்தோ ஒருவர் இயக்கிய தானியங்கி கதவு திறப்பான் "பீப்..பீப்.." ஒலித்ததும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அந்த ஹோண்டா சிட்டி அருகில் ஒரு நிமிடம் காந்திருந்தோம். ஆடி அசைந்து லெக்கின்ஸ்-டிஷர்ட் மாட்டியிருந்த ஒரு நவயுக நங்கை வந்து அலட்சியமாக கதவை திறந்து டிக்கி கூடையில் வைத்திருந்த ஒரு பேபி ஜட்டியை எடுத்துக்கொண்டு எங்களை ஏளனமாகப் பார்த்துக்கொண்டு போனாள்.

எங்களுக்கும் இந்த புண்ணிய பீச்சில் ஒரு இடம் கொடுத்து இறைவன் ஆட்கொள்ளமாட்டானா என்று குலதெய்வத்திடம் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொள்ளாத குறையாக பார்க்கிங் தேடினோம். நாங்கள் நம்பிய தெய்வம் எங்களை கைவிடவில்லை. எங்கள் பிரார்த்தனை பலித்தது. பிளானெட் யெம் வாசலில் காரை ஒருவர் ரிவர்சில் எடுப்பது கண்களுக்கு புலப்பட்டது. ஒரு இரண்டுசக்கர வாகனாதி "அண்ணன் எப்போ காலியாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று ரெடியாக இடத்தை பிடிக்க வாகனத்தை உறுமிக்கொண்டு எதிர்திசையில் நின்றுகொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த தர்மபத்தினியை தட்டி எழுப்பி ஓடோடி சென்று அந்த ஸ்லாட்டில் நின்று இடம்பிடிக்க சொன்னேன். அவர் நின்று இடம் பிடித்ததால் ஒரு கார் நிற்கும் இடத்தை அவர் நிரப்புவார் என்றில்லை என்பதை அறிக. ஒரு ஆயுளின் கனவாக கிடைத்த அந்த இடத்தில் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு சமுத்திர ராஜனின் தரிசனத்திற்கு மணலில் கால் புதைய உள்ளே புகுந்தோம்.
maize vendor

கதிரவன் காதலர்களுக்காக மறையத் தொடங்கியிருந்தான். பொங்கும் கடலில் ஆண் அலையும் பெண் அலையும் ஓடிப்பிடித்து விளையாண்டு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. இக்கரையில் ஆணும் பெண்ணும் ஒருவருக்குள் ஒருவர் ஒளிஞ்சுப் பிடிச்சு விளையாண்டு கொண்டிருந்தார்கள். ஒருத்தர் தோளுக்கு இன்னொருவர் முட்டுக்கொடுக்க பேராதரவாக உட்கார்ந்து இருந்தார்கள். இது சாயங்காலமா மடிசாயுங்காலமா என்று ஆண் மடியில் பெண், பெண் மடியில் ஆண், ஆண் மடியில் ஆண் (சிநேகிதர்கள் போல) என கட்டையை நீட்டிப் படுத்து மண்ணில் புரண்டார்கள். அரை மணி குளித்தாலும் அந்த ஜீனி மண் போகாது. தலை கோதி, கை கோர்த்து, சிரித்து, ஐஸ் கிரீம் நக்கி லவ்வினார்கள். அரை நிஜார் போட்ட சுண்டல் பையன் பக்கத்தில் வந்த ஸ்மரணை கூட இல்லாமல் லஜ்ஜை கெட்டுப் போய் இருவர் கரைபுரண்ட காதலில் காற்றுப் புகா வண்ணம் இருக்க்க்க்க்க்க அணைத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் சோளம் சுட்டுத் தரும் அடுப்பில் இருந்து அவர்களை பற்றவைப்பது போல தீப்பொறி ஈசலாய் பறந்தது. சினிமாவிற்கு A சான்றிதழ் வழங்குவது போல பீச்சில் சில இடங்களுக்கு A போர்டு போட்டால் அரசாங்கத்திற்கு ஒரு ஜே போடலாம். குழந்தைகளை ஜாக்கிரதையாக U போட்ட இடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

elliots

பீச்சில் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு சிமென்ட் உட்காரும் இடம் சுற்றியும் நின்றுகொண்டே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எட்டூருக்கு நாறிக்கொண்டிருந்தது. அதற்கு எதிப்பக்கத்தில் இருவர் வாசனையோடு மிளகாய் பஜ்ஜி சுவைத்துக் கொண்டிருந்தனர். அவ்விருவருக்கும் ஆண் வாசனையும் பெண் வாசனையும் அன்றி அந்நேரத்தில் வேறு துர்கந்தங்கள் தெரிய வாய்ப்பில்லை. நேற்றைக்கு தான் ஆர்மியில் இருந்து ரிடையர் ஆனா மாதிரி ஒரு வடக்கத்தி தாத்தா குண்டப்பா விஸ்வநாத் கால கிரிக்கெட் போட்டி ரவுண்டு தொப்பி, டிஷர்ட்டை இன் பண்ணி ஷார்ட்ஸ் சகிதம் அட்டேன்ஷனாக லெஃப்ட் ரைட் போட்டுக்கொண்டிருந்தார். ஒரு ரவுண்டு, மொத்தம் ஏழு குண்டுகள், பத்து ரூபாய் மேனிக்கு பலூன் சுடுவதற்கு வேஷ்டித் திரையில் வண்ண வண்ண பலூன் கட்டி காற்றில் படபடக்க கன்னம் ரெண்டும் வாய்க்குள் சுருண்டுகொள்ள ஒட்ட தம் கட்டி இழுத்து மலபார் பீடி பிடித்துக்கொண்டு கடைக்காரர் போனிக்கு உட்கார்ந்திருந்தார்.

லல்லுவோ, மாயாவதியோ, அத்வானியோ, மன்மோஹனோ, பால் தாக்கரேவோ பேசும் ஒரு பாஷையில் 'பாத்'திக்கொண்டு தினமும் சுக்கா சப்பாத்தி ஆலுவுடன் போஜிக்கும் ஆறரை அடி கணவனும் ஐந்தரை அடி மனைவியும் பலூன் சுடுவதற்கு வந்தனர். கோதுமை தோலில் மின்னியது. அந்தம்மா கைகாட்டி சொல்லும் பலூன் எல்லாவற்றையும் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தி கார்கில் போரில் இந்திய சேனையோடு சென்றுவந்த ஒரு வெற்றிவீரனாக துப்பாக்கி முனையை "ஃபூ" என்று ஊதி வாகை சூடிக்கொண்டிருந்தார். அவர் நகர்ந்ததும் ஆசை விடாமல் நானும் என்வீட்டு அம்மணியை டார்கெட் காண்பிக்க சொன்னேன். அவ்வளவு ஒன்றும் மோசம் இல்லை. ஏழுக்கு ஐந்து பணால்.

சோடியம் வேபோர் விளக்குகள் பற்றி எரிந்துகொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் இருந்த ஜோடிகள் இன்னும் விலகியபாடில்லை. நடைபாதையில் குடும்பக் கூட்டம் அதிகரித்தது. அந்தத் தார் சாலையில் ஒன்றிரண்டு இளசுகள் யமஹாவில் வட்டமடித்து புர்ர்ரினார்கள். எதிரே எருமையில் எமன் வருவது நம் கண்களுக்கு தெரிகிறது. இளங்கன்று யமனறியாது. குவாலிட்டி வால்ஸில் இருபது ரூபாய்க்கு குல்ஃபி ஐஸ் விற்றார்கள். பத்தடி நூல் கைக்கு கொடுத்து பானாக் காத்தாடி விற்றார்கள். சிங்கம் புலியில் இரண்டு சிறுவர்களை உட்காரவைத்து கையால் சுற்றும் குடை ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கிண்ணி இருபது ரூபாய்க்கு அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் பெப்பர் மற்றும் மசாலா போட்டு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊதினால் மட்டும் சங்கீதம் வரும் என்பது போல இருக்கும் புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நடைபாதையில் பள்ளி சென்று படிக்கும் வயதில் பழைய புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தான் அழுக்குச் சட்டை போட்ட சிறுவன் ஒருவன். அவனுக்கு நன்றாக போனியாகவேண்டுமே என்று மீண்டும் ஒருமுறை தெய்வத்தை ப்ரார்த்தித்துக்கொண்டேன்.

பின் குறிப்பு: சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றுவந்தது.

பட உதவி: http://www.trekearth.com மற்றும் http://www.sulekha.com/mstore/rangarajan/albums/default/elliots.jpg

-


36 comments:

jokkiri said...

பயணக்கட்டுரை (இப்படி சொல்லலாமா!!) பலே..

கண்டு ரசித்ததை அழகாய் வார்த்தையில் வடித்தமை நன்று...

கூடவே உங்கள் அக்மார்க் நகைச்சுவை (எங்களுக்கும் இந்த புண்ணிய பீச்சில் ஒரு இடம் கொடுத்து இறைவன் ஆட்கொள்ளமாட்டானா என்று குலதெய்வத்திடம் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொள்ளாத குறையாக பார்க்கிங் தேடினோம். )..ஹா.ஹா..

//முருகன் ஞானப்பழத்திற்காக உலகத்தை சுற்றியது போன்ற ஒரு முழு வலம் அந்த ரோடைச் சுற்றி வந்து சோத்துக்கைப் பக்கம் வந்தோம்.//

சூப்பர் வர்ணனை...

புது லே-அவுட் பச்சை பசேலென்று கண்களுகு குளுமை வார்க்கிறது...

தொடர்ந்து கலக்குங்கள் தலைவா...

தக்குடு said...

அண்ணா! உங்க தங்கமணி பக்கத்துல இல்லாத சமையம் அந்த கவுந்த படகு கிட்ட கசமுசாவா ஒரு காட்சியை கள்ளத் தனமா பாத்தேளே!! அதை பத்தி ஒன்னுமே சொல்லலையே?..:P அக்கா போய் நின்னா ஒரு கார் பார்க்கிங் அளவுக்கு இடம் கிடைக்குமா?? இருக்கட்டும்! இருக்கட்டும்! இதற்கு உரிய தக்க சன்மானத்தை அக்கா வழங்குவார்!..:)

Sivakumar said...

//ஒரு வடக்கத்தி தாத்தா குண்டப்பா விஸ்வநாத் கால கிரிக்கெட் போட்டி ரவுண்டு தொப்பி//

Simply Outstanding Comment!!

இராஜராஜேஸ்வரி said...

அந்தம்மா கைகாட்டி சொல்லும் பலூன் எல்லாவற்றையும் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தி கார்கில் போரில் இந்திய சேனையோடு சென்றுவந்த ஒரு வெற்றிவீரனாக துப்பாக்கி முனையை "ஃபூ" என்று ஊதி வாகை சூடிக்கொண்டிருந்தார். //
அனுபவம் சுடுகிறது...

இளங்கோ said...

கடற்கரை என்றாலே அது ஒரு தனி சுவாரசியம். நாங்கள் சென்னையில் இருந்த போது, நண்பர்கள் கூட்டமாக சென்று கபடி ஆடி விட்டு உடல் முழுவதும் மண்ணாக ரூமுக்கு வருவோம். மெரினாவை விட பெசன்ட் நகர் பீச் எனக்கு பிடிக்கும்.

//பழைய புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தான் அழுக்குச் சட்டை போட்ட சிறுவன் ஒருவன். அவனுக்கு நன்றாக போனியாகவேண்டுமே என்று மீண்டும் ஒருமுறை தெய்வத்தை ப்ரார்த்தித்துக்கொண்டேன்.//
பாவம் அந்த சிறுவன்.

பொன் மாலை பொழுது said...

பீச் போகும் போதெல்லாம் நம் மக்கள் அங்கும் செய்யும் அசுத்தமும், சுகாதார உணர்வற்றவர்களின் செயல் களையும் கண்கொண்டு கோபமே வரும். நம் ஜனங்களுக்கு ஆண் பெண், குழந்தைகள் அத்தனையும் வீண் பகட்டிலும் ,வெற்று ஆடம்பரங்களிலும் உள்ள ஆர்வமும் நாட்டமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ,சுகாதாரமாக பொது இடங்களில் நடந்து கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்குது....

பத்மநாபன் said...

கடலுக்கு சென்று கடலை பார்க்காமல் / போடாமல் , வலைபூவுக்கு வசமான ரிப்போர்ட் தேர்த்தி விட்டீர்கள்.. பார்க்கிங் தொல்லை டு பட்டாணி சுண்டல் சிறுவன் வரை நல்ல ரிப்போர்ட்

ADHI VENKAT said...

மகள் கடற்கரை செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். அடுத்த முறை ஊருக்கு வரும் போது காட்ட வேண்டும். நீங்கள் எழுதி இருப்பதை பார்த்தால் சுற்று வட்டாரங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை போலிருக்கிறது. வழக்கம் போல் நகைச்சுவையான விவரங்கள்!

எல் கே said...

@ஆர்வீஎஸ்

அட்டகாசம். எதை விடறது எதை சொல்றது? அட்டகாச வர்ணனை

Anonymous said...

ரைட்டு! ரொம்ப நாள் கழிச்சு பீச் போனிங்களா அண்ணே!
முதல் கமெண்ட்டை கன்னா பின்னா வென வழிமொழிகிறேன். ;)

சாய்ராம் கோபாலன் said...

சிறுவயதில் - வீடு மயிலையில். அடிக்கடி என் அப்பா எங்களை பீச் அழைத்து செல்வார். அவர் வேலை பளு இல்லாத நாட்களில். சில சமயம் முடியாதபோது "சாய், இன்னிக்கு பீச் லீவு என்று சால்ஜாப்பு சொல்லுவார்". நானும் நம்பிவிடுவேன்.

எனக்கு சேல்ஸ் ஜாப் என்று அன்றே தெரிந்து விட்டது. ஏனென்றால், எதாவது பேசிக்கொண்டோ அல்லது கேட்டுக்கொண்டே இருப்பேன். அதே போல் படுத்தலும் ஜாஸ்தி. ஒரு நாள் பீச் கூட்டிக்கொண்டு போனபோது "சாய், நீ ரொம்ப படுத்தறே. நான் கடல்க்குள்ளே போறேன் என்று" என் அப்பா சொன்னார். அதற்கு முன் தன் எங்களுக்கு வேர்க்கடலை வாங்கி இருந்தார் அப்பா.

நான் உடனே "அப்பா, நீ போ ஆனால் வேர்க்கடலை கொடுத்துவிட்டு போ என்றேன்"

என் குடும்பத்தில் என் பேச்சு இப்படி பிரிசித்தி !!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வர்ணனை! எல்லா இடங்களுமே இப்படித்தான் ஆகிவிட்டன!

மோகன்ஜி said...

போங்க ஆர்.வீ.எஸ்! பீச்சை பத்தி எழுதி மனசை எல்லாம் கலக்கிட்டீங்க.. நீங்க பகல்ல பீச் போயிருக்கீங்களா?
மெரீனா உலகின் மிகப் பெரிய குப்பைதொட்டின்னு சொன்னால் ஒத்துக்கத்தான் வேணும். ஒருதரம் மண்ணைக் கைகளால் அளைந்து கொண்டு,பேசிக்கொண்டிருந்தபோது கிடைச்சது பாருங்க ஒரு வஸ்த்து... அதுக்கப்புறம் எப்போ பீச் போனாலும் 'ஹென்ட்சப்' பொசிஷன்லதான் உக்காருவேன்.

RVS said...

@jokkiri
ரொம்ப தூரம் போனாத்தான் பயணக் கட்டுரைன்னு எழுதுவாங்க நினைக்கிறேன். ;-)
பாராட்டுக்கு நன்றி கோபி! ;-)
பசேல் டெம்ப்ளேட்.. எல்லோர் கண்களுக்கும் குளுமையாக.. ;-) ;-)

RVS said...

@தக்குடு
ஒரு டெலிபதில தோஹாலேர்ந்து உனக்கு தெரிஞ்சிருக்கு பாரு ... அதான் உனக்கும் எனக்கும் உள்ள சின்க். ;-) ;-)
அக்கா சன்மானம் அல்ரெடி வாங்கியாச்சு.. ;-);-)

RVS said...

@! சிவகுமார் !
Thank you Siva!! ;-);-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஒரு வரி நறுக் கமென்ட். ;-)

RVS said...

@இளங்கோ
பெசன்ட் நகர் பீச் உங்களுக்கு ஏன் பிடிக்கும்ன்னு எனக்கு மட்டும் தெரியும். நான் உங்க வீட்ல சொல்ல மாட்டேன். ;-) ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
விவேக் ஜோக்க்தான்..
வெளிநாட்டுக்காரன் வெளியிலே கிஸ் அடிக்கறான் உள்ளே பிஸ் அடிக்கறான்..
நம்மாளு வெளியிலே பிஸ் அடிக்கறான் உள்ளே கிஸ் அடிக்கறான்.. ;-) ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
பதிவு தவறாமல் பாராட்டும் மனோவுக்கு நன்றிகள் பல.. ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி! கடலை நான் என்றுமே யாருடமும் போட்டதும் இல்லை வறுத்ததும் இல்லை.. வாங்கி சாப்பிட்டது தான் அனுபவம். ... ;-) ;-)))))))))))))))
(யப்பா.. கொஞ்சம் அசந்தா ஆளைப் போட்டுடுவாங்கப்பா...)

RVS said...

@கோவை2தில்லி
இது சென்னையில் இப்போது எங்கும் உள்ளது.. பயப்படாமல் வாருங்கள்.. ;-)

RVS said...

@எல் கே
மனமார்ந்த பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.... ;-)

RVS said...

@Balaji saravana
என்னப்பா ரொம்ப நாளா ஆளைக் காணோம். ஆபிஸ்ல திருகாணியா?
பாராட்டுக்கு நன்றி தம்பி. .. ;-)

RVS said...

@சாய்
அப்போது உங்களுக்கு கடலை விட கடலை ரொம்ப முக்கியம்.. சரியா...
அப்பா என்ன சொன்னார் சாய்? ;-) ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பாராட்டுக்கு நன்றி தல. ;-)

RVS said...

@மோகன்ஜி
ஹாண்ட்ஸ் அப் பொசிஷன்லையா... எவ்ளோ நாழி பாஸ். யாராவது நீங்க யோகா பண்றீங்க அப்படின்னு நினைச்சுப்பாங்க.. ;-) ;-) ;-)

ஒரு தடவை பகல்ல காலேஜ் எதிர்த்தார்ப்ள போயிட்டு.... ஐயோ..ஐயோ.. போதும்..;-)

Madhavan Srinivasagopalan said...

//RVS @சாய்
அப்போது உங்களுக்கு கடலை விட கடலை ரொம்ப முக்கியம் //

Repeattoi..

நானும் கிரிக்கெட் பத்தி கொஞ்சம் காமெடி ட்ரை பண்ணி இருக்கேன்.. முடிஞ்சா ஒரு எட்டு வந்து பாத்துட்டு போங்க.. (நன்றி)

சாய்ராம் கோபாலன் said...

//RVS said... @சாய் அப்போது உங்களுக்கு கடலை விட கடலை ரொம்ப முக்கியம்.. சரியா... அப்பா என்ன சொன்னார் சாய்? ;-) ;-) //

என்னத்தை சொல்லறது ? என்னை கடலில் முக்கி இருக்கலாம்னு இப்போ தோணுதோ என்னவோ ??

அப்பாதுரை said...

அப்படியா?
>>>ஆண் மடியில் ஆண் (சிநேகிதர்கள் போல)

Vidhya Chandrasekaran said...

எங்க ஏரியா உள்ள வராத:)))

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா.. நெட்டில் உன் அட்டகாசங்கள் அதிகமாயிடிச்சி.. ;-) ;-)

RVS said...

@சாய்
ஹி..ஹி.. ;-)

RVS said...

@அப்பாதுரை
அப்படித்தான் என்று நினைக்கிறேன்.. அப்பாஜி! (வம்புல கொண்டு வந்து விட்டுடாதீங்க.. ;-) ;-) )

RVS said...

@வித்யா
நீங்க வெளியில வருவீங்களா? ;-) ;-) ;-)))))))))))))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails