Sunday, December 4, 2011

கண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்

நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ” என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் ”இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்”மை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன் வருணனோடு வரும் வாயுபகவான் தான். அவர்தான் அடுத்தவரிடம் அதைப் பற்றவைக்கும் ஏஜெண்ட்.


“மச்சான். குளிக்காம வர்ற டிக்கெட்டெல்லாம் தான் உடம்பு பூரா செண்டு தெளிச்சிக்கும்” என்று பி.எஸ்.ஸியில் கடைசி செமஸ்டரில் அரியர்ஸ் வைத்து ஃபெயிலாகிப் போன மணி ஒவ்வொரு நறுமண நங்கைகள் எங்களைக் கடக்கும் போதும் சொல்வான். மகளிர் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவன் ஒரு wiki.manipedia.com. பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் தியேட்டரில் காமத்துப்பால் சொட்டும் சில மலை மலையான மலையாள ஆன்டிகள் நடித்த கொக்கோகப் படங்களைப் பார்த்துவிட்டு ஸ்த்ரீ சம்பந்தப்பட்ட அவனுடைய சில நுணுக்கமான பார்வையின் விஸ்தரிப்புகளில் வாத்ஸ்யாயனரின் ஜீன் அவனுக்குள் பாய்ந்துள்ளதோ என்று எல்லோரும் வியப்பார்கள். ’குண்டு’ ராஜா ஒரு சிலிர்ப்புடன் பாதியில் அந்த இடத்தை விட்டு எழுந்துவிடுவான். ”கொழந்தப் பையன். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கதான் லாயக்கு” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டுவான் மணி.

இந்த க்ஷணம் இங்கே மணி இல்லையே என்று எனக்கு :-(. இந்நேரத்திற்கு வார்த்தைகளால் வர்ணனை மழை பொழிந்திருப்பான். என் காதுக்கு மோட்சம் கிட்டியிருக்கும். கடைசியாக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனை ஊரில் தேரடி தாண்டி குமார் லாட்ஜ் வாசலில் மினுமினுக்கிய தெருவிளக்கின் அரையிருட்டில் பார்த்தேன். கையில் கிங்ஸ் துணையுடன் ஏதோ ஒரு பூப்போட்ட கைலியுடன் ”அவ கிடக்காடா. அவ ஒரு மேனாமினிக்கிடா” என்று அளந்துகொண்டிருந்தான். இதுதான் என்னுடைய பிரதான வீக்னெஸ். பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள். ச்சீ.ச்சீ... போடா மணி!


இவள் ஸ்ருங்காரமாக மிதமான தேகக்கட்டுடன் பார்வையாக இருந்தாள். குறத்திகள் இடுப்பில் சொருகும் சுறுக்குப்பையைவிட ஐந்து அங்குலம் பெரியதாக இருக்கும் தோல்பை ஒன்றை தோளில் மாட்டி ஒய்யாரமாக பக்கத்து இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள். மீசை முளைப்போமா என்று எட்டிப்பார்க்கும் ஒரு விடலை அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் ஏதோவொரு பாக்கியசாலியினால் பொன் தாலியேறப்போகும் கழுத்தில் வேலை பார்க்கும் கம்பெனியின் ப்ளாஸ்டிக் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. தற்காலப் பெண்டிரின் தலையாய ஸ்டைலான தலைவிரி கோலத்துடன் இருந்தாள். ”காளிதாசன் உன்னைக் கண்டால் மேகதூதம் பாடுவான்.” என்று ரஜினி எனக்குள்ளே டூயட் பாடிக்கொண்டிருந்தார். கணினியின் கர்ஸர் பிளிங்க் போன்ற கண் இமைப்பில் இந்தக் கன்னி என் சித்தத்தைக் கலைத்துப் பித்தம் கொள்ள வைக்கிறாள். அட! ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே! இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம். அவளுடைய கால் ஹீல்ஸின் சைஸ் என்னை மிரட்டி நான் எக்குவதற்குத் தடைபோட்டது.

இன்னும் மாலினி யார் என்று சொல்லவில்லையல்லவா? மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் விளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா?” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு? அறிவெதற்கு?” என்று அப்போதே நான் தான் ஏற்ற இறக்கங்களுடன் வைரமுத்துக் கவிதையாகக் கேட்டேன். முதுகுக்கு பின்னால் ரெண்டு பேர் என்னை வித்தியாசமாகப் பார்த்தது முன்னால் திட்டு வாங்கியவன் முகத்தில் தெரிந்தது.

நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது எங்கள் ஊரில் இருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு சம்மர் வெக்கேஷனுக்கு வந்த ஒய்யாரி. பட்டிணத்துப் பெண் பார்க்க எப்படியிருப்பாள் என்று ரோல் மாடல் பார்க்க போட்டி போட்டுக்கொண்டு கழுகாய் பொன்னா பாட்டி வீட்டை வட்டமடித்து சைட் அடித்தார்கள். மணி கண்கொத்திப் பாம்பாக யார்யார் எத்தனை மணிக்கு அவள் வீட்டைக் கடக்கிறார்கள், உள்ளே பார்க்கிறார்கள், அவளிடம் இளிக்கிறார்கள், பாட்டியிடம் பேசுகிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டு வறுத்தெடுத்தான். “வெக்கமாயில்ல. புதுசா ஒரு பொட்டைப் பொண்ணு ஊருக்கு வந்துடக்கூடாதே. பின்னாலையே அலைவீங்களே” என்று திட்டிவிட்டு மத்தியானம் ”கொல்லையில பாத்ரூம் தாப்பா ரிப்பேர்னு சொன்னீங்கல்ல” என்று கார்பெண்டர் சகிதம் போய் நின்று தச்சருக்கு சித்தாளாக பணிபுரிந்து டெல்லிப் பார்டியின் நன்மதிப்பை பெற பிரயத்தனப்பட்டான்.

பொ.பாட்டி இல்லத்திற்கு 24x7 சிறப்பு செக்கியூரிட்டி ட்யூடி பார்த்தார்கள். பித்துப்பிடித்த இரண்டு பேர் விடியலில் அவள் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடும் முறைவாசல் செய்யக்கூட சித்தமாய் இருந்தார்கள். பொன்னா பாட்டி கெட்டிக்காரி. அந்த மாதம் முழுவதும் கடைத்தெரு மண்டியிலிருந்து அரிசி மூட்டை எடுத்துவருதிலிருந்து அந்துருண்டை வாங்குவது வரை கன ஜோராக பசங்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டாள். பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்!

ஒரு நாள் வாசலில் நின்று கை நகம் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தவளை நாக்கைத் தொங்கப்போட்டுப் பார்த்துக்கொண்டே சென்ற எங்கள் தெரு பெண் ஆர்வலன் ஒருவன் எதிரில் வந்த எண்ணைச் செட்டியாரின் மூன்று சக்கர சைக்கிளில் மோதி தலையோடு கால் ஜொள்ளோடு எண்ணையும் வழிய பேந்தப் பேந்த முழித்தபடி பரிதாபமாக நின்றான்.  கழுத்திலிருந்த முறுக்குச் செயினை விரல்களில் சுருட்டிக் கோர்த்துக்கொண்டு கருங்குழல் முன்னால் விழ அவள் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததில் பயல்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அம்பேல். ஆல் அவுட். அப்போது வாயில் ஈ, கொசு என்ன டைனோசரே பூந்தாலும் தெரியாது.

“மச்சான். மூஞ்சியில கரியப் பூசாம எண்ணைய பூசிப்புட்டா” என்று மூன்று நாளுக்கு வீதியில் எண்ணைக் காப்பு ஆனவனை வீட்டுக்கு வீடு நிறுத்தி கேலி பேசினார்கள். ஒரு காந்தத்தைச் சணலில் கட்டித் தெரு மணலில் இழுத்துக்கொண்டு போனால் சிறு சிறு இரும்பு மற்றும் துறுப்பிடித்த சேஃப்டிபின், ஹேர்பின் போன்ற ஐட்டங்கள் ’பச்சக்’கென்று ஒட்டிகொண்டே போவது போல அந்தத் தெரு வாலிபங்களைக் அவள் பின்னால் கட்டியிழுக்கும் காந்தமாக வளைய வந்தாள். கண்ணிரண்டும் மின்சாரம் பாய்ச்சுவதால் “மச்சான். நீ சொல்றா மாதிரி அவ சாதாரண மாக்னெட் இல்ல. அவ ஒரு எலக்ட்ரோ மாக்னெட்டா” என்று கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்த புது அறிவியல் அறிஞனொருவன் என்னிடம் சொன்னான்.

உன்
தேகம் வாழைத்தண்டூ
பேச்சு அல்வாத்துண்டூ
கன்னம் கற்கண்டூ
மொத்தத்தில்
நீ
கை கால் முளைத்த பூச்செண்டூ

என்று கரியால் அவர்கள் வீட்டு வாசலில் கிறுக்கியிருந்ததைப் பார்த்து பொன்னாப் பாட்டி திட்ட ஆரம்பித்ததில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது தெருச் சண்டையாய் விடிந்தது. எல்லா வரியிலும் ”டூ...டூ”ன்னு நெடிலில் இருந்ததில் யார் என்று ஈசியாகப் பிடித்துவிட்டோம். ”மண்டூ” என்று பேப்பரில் அதிகாரப்பூர்வமாக எழுதி என்னைத் திட்டிய மணி தான் அந்த அசடு. அதிரடி விசாரணையில் தெரிய வந்த சங்கதி இதுதான். மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான். அப்புறம் மாலினியின் அப்பா வந்து அவளை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போகும் போது “ஈரமான ரோஜாவே! என்னைப் பார்த்து மூடாதே” என்று பாட்டை சத்தமாக வைத்து துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

மாலினியின் அடுத்த வருட விஸிட் எங்கள் ஊரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் வருடம் கண்ணை உருட்டி உருட்டி சங்கோஜமாக மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தவள் இரண்டாம் வருடம் “ஏ”, “அப்டியா”, ”சீ”, ”ஏஏஏன்”, ”தோஸ்த்”, “போடா”, ”புண்ணாக்கு”, “தடியா” என்று மணிரத்னம் படம் வசனம் போல ஷார்ட்ஹாண்ட் வசனங்கள் பேச ஆரம்பித்தாள். அவளது அந்த சுந்தரமொழியில் மயங்கியோர் பலர். அவளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆர்வத்தில் எல்லோரும் கோரஸாக காலை மாலை ஹிந்தி படித்தார்கள். ஒரு விஷமன் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று “ஏக் காம் மே” வசனத்தை “ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான்” என்று அழுத்திச் சொல்லி அவளை அசத்தப் பார்த்தான். ”அட அசத்தே” என்று ஒரு அலட்சிய லுக் விட்டாள். ’ஸ்’ஸில் மேலே ஒட்டிய உதடு அவனுக்கு ரெண்டு நாளைக்குப் பிரியவே இல்லை.

அந்த வருடம் மணிக்கொரு தரம் கரெண்ட் கட் செய்து மக்களுக்கு பில்லில் மிச்சம் பிடித்தார்கள். தெருவாசிகள் தங்கள் வீட்டுக் கூடத்தில் இருந்த நேரத்தை விட வாசற்படியில் உட்கார்ந்து கழித்த நேரமே ஜாஸ்தி. வடநாட்டில் ஆண்களுடன் சகஜமாக பேசிப் பழகிய பெண்ணாகையால் அவர்கள் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பாட்டிக்கு உள்ளூர ஒரு பயம்தான். தடித்தாண்டவராயன்களை வைத்துக்கொண்டு பெயர்த்தியை காபந்து பண்ண வேண்டுமே என்று கவலைப்பட்டாள். அவள் கவலைப்பட்டது போலவே ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு நடந்தது.

இங்கு மழை இன்னும் விட்டபாடில்லை. பஸ்ஸும் வந்தபாடில்லை. அவளும் நகர்ந்தபாடில்லை. நானும் இங்கிருந்து கிளம்பியபாடில்லை. ஷேர் ஆட்டோக்களில் பிறத்தியான் மடியில் உட்கார்ந்து மழைக்கு இதமாக சில மாந்தர்கள் சொகுசாகப் பயணித்தார்கள்.  கால் கடுக்க நின்றாலும் பக்கத்திலிருக்கும் அந்த அழகியினால் வலி தெரியாமல் இருந்தது. உயரத்தைப் பார்த்தால் அவளாக இருக்குமோ என்று விடாமல் மூளை அரித்துக்கொண்டிருந்தது.

போன பாராவுக்கு முதல் பாரா கடைசியில் சொன்ன அந்த நிகழ்ச்சி என்னவென்றால்...... வழக்கம் போல உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. கையில் இருந்த மோதிரத்தை சுழற்றியபடியே இருந்த மாலு (இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்) அதை தொலைத்துவிட்டாள். எங்கேயோ உருண்ட மோதிரத்தை பூச்சிபட்டு கடித்தால் கூட பரவாயில்லை என்று உயிர்தியாகம் செய்யும் உத்வேகத்துடன் நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள். பொ.பாட்டி “உள்ள போய் மெழுகுவர்த்தி கொண்டு வரேன்”ன்னு உள்ள போனாங்க. ஏதோ சாமான் உருள்ற சத்தம் கேட்டவுடனே பாட்டி விழுந்துட்டான்னு மாலு எழுந்து உள்ளே ஓடினா.

ஒரு ரெண்டு நிமிஷத்தில கரண்ட் வர்றதுக்கும் பாட்டி “ஐயோ”ன்னு அலறுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு கும்பலாக உள்ளே ஓடிப்போனதில் முதல் கட்டு தாண்டி இரண்டாம் கட்டில் இருந்த ஸ்டோர் ரூம் வாசல் தரையில் அலங்கோலமான நிலையில் மணியும் மாலுவும். எவ்வளவோ பேரின் ஆசைக் கனவில் மணி மண்ணள்ளிப் போட்டுவிட்டான். ரெண்டு பேர் சட்டையைப் பிடிக்க “ஓடி வந்ததுல படிக்கு பக்கத்தில இருந்த மேட் தடுக்கி ரெண்டு பேரும் விழுந்துட்டோம்டா”ன்னு கேவிக் கேவி சொன்னாலும் யாரும் கிஞ்சித்தும் நம்பவில்லை.

கிட்டத்தட்ட அரச மரத்தடி பஞ்சாயத்து போல நடந்த விசாரணையில் கேட்டபோதும் தேய்ந்த கீரல் விழுந்த எம்.பி த்ரீ ஸி.டி போல அதையே திரும்ப திரும்ப சொன்னான். மாலு வாயைத் திறக்காமல் நின்றது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணினார்கள். மாலுவின் டை கட்டும் வேலை பார்க்கும் அப்பாவும், வாராவாரம் புதுதில்லி லேடீஸ் க்ளப் சாகரத்தில் சங்கமிக்கும் அம்மாவும் “கண்ட்ரீ ப்ரூட்ஸ்” என்று திட்டிவிட்டு கப்பல் போல காரில் ஏறி கிழக்கு திசை நோக்கிப் போனார்கள். பொன்னா பாட்டி அடிக்கடி பசங்களைப் பார்க்கும் போதெல்லாம் துடைப்பக்கட்டையை சிலம்பமாகச் சுழற்றி காண்பித்துக்கொண்டிருந்தாள். அதற்கப்புறம் எல்லாப் பசங்களும் பொ.பாட்டி வீடருகே வந்தால் ஓரமாக எதிர்சாரியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாளுக்கப்புறம் அவனை ஆசுவாசப்படுத்தி தெரு மூலைக்கு ஒதுக்கிக் கொண்டு போய் விசாரித்ததில் ”மேட் தடுக்கி கீழே விழுந்தது உண்மைதான்டா. ஆனா அருணாசலம் சினிமால வர்ற மாதிரி அப்படியே ஒரு லிப் கிஸ் அடிச்சுப் பார்த்தேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. ” என்று ஒரு போடு போட்டான். காண்டுல அவனை எல்லோரும் நாலு சாத்து சாத்தினார்கள்.

இது நடந்து ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும். இந்தப் பொண்ணைப் பார்த்ததும் அந்த நினைப்பெல்லாம் பொங்கிக் கொட்டுது. ஒரு வழியாக மழை லேசாக விடத்தொடங்கியிருந்தது. தூரத்தில் கார்பொரேஷன் பஸ் வருவது தெரிகிறது. நாளைக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது. ரூமுக்கு போனால் அங்கு வேறு விடியவிடிய கூத்தடிப்பார்கள். எவனோ ஒரு பைக் ரேஸ் பிரியன் அந்த பஸ்ஸை முந்திக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறான். சர்ர்ர்ர்க் என்று ப்ரேக் அடித்தான். பக்கத்தில் நின்றவள் லாவகமாகத் தாவி பில்லியனில் அமர்ந்து அவனைச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். முதல் கியரில் அவளை இன்னும் தன் முதுகோடு நெறுக்கி இரண்டாவது கியரில் பறந்தான்.

அவன் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே! ஆ! அடப்பாவி. அது மணி தான். அப்போ இவள்?

பின் குறிப்பு: இன்றைய தினமணி கதிரில் வந்தக் கதை இது.

-

30 comments:

வெங்கட் நாகராஜ் said...

தினமணி கதிரில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் மைனரே....

ரிஷபன் said...

மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான்.

தினமணி கதிரில் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.

A.R.ராஜகோபாலன் said...

மனமும் மதியும் ஒரு சேர மகிழ்ந்தேன் நண்பா...............
சுஜாதா போல இன்னொரு சங்கீதா....
வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

Interesting narration. Congrats for getting published in magazine

Rekha raghavan said...

அருமை.தினமணி கதிரில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

கதையை தனியாக பதிவிட்டதற்கு நன்றி.. க்ளிக் செஞ்சு படிக்க முடியலிங்க.
விக்கிமணிப்பிடியா சுவாரசியம்.
பாராட்டுக்கள். டூவுக்கும் வெரி குட்டூ.

raji said...

வர்ணனைகளும் வார்த்தைப் பிரயோகங்களும் அருமை.
வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நல்ல நடை ஆர்.வி.எஸ்.

கதையில் மெகா பைட் ஜெட்டா பைட்டை எழுதுகிறீர்-விக்கிமணிப்பீடியா எழுதுகிறீர்.ஆனால் தோஸ்த்துக்கு மணி என்கிற முப்பதுவருஷப் பழைய பேர் வைக்கிறது நியாயமா என்று மணியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.(நாய்களுக்கே மணி இப்போல்லாம் ஔட் டேடட் ஸ்வாமி)

//இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம்.//

//பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள்.//

//(இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்)//

// // வரிகளெல்லாம் ரைட்டர்ஸ் ட்ரீட்.

ப்ராப்பரா டீடெய்ல்ஸ் கொடுத்தும்
பாவாடை சட்டைக்குப் பதிலாக ஸ்லீவ்லெஸ் பனியனும் ஜீன்ஸும் போட்ட ராமுவுக்கு ஒரு ஷொட்டு.

பைக்கில் விரட்டிவந்தது மணியென்று ஆர்.வி.எஸ்ஸை அடாது படிக்கும் என்னைப் போன்ற தீவிர வாசகர்களால் யூகிக்க முடிந்தது.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அருமையாக இருக்கு.
தினமணி கதிரில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள்.
சங்கீதா பெயர் நன்றாக இருக்கு.

Unknown said...

speed,interesting,

Different Way of writting...

Very Nice Brother..

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்கு..

தினமணி கதிரில் வெளியானதுக்கு வாழ்த்துகள்..

ADHI VENKAT said...

நேற்றே கதிரில் படித்து விட்டேன் . பிரசுரமானதற்கு வாழ்த்துகள் சகோ.

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி! :-)

RVS said...

@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி முனைவரே! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைவரே! :-)

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! :-)

RVS said...

@A.R.ராஜகோபாலன்
பாராட்டுக்கு நன்றி நண்பா! :-)

RVS said...

@மோகன் குமார்
Thanks Mohan. :-)

RVS said...

@ரேகா ராகவன்
Thanks Sir! :-)

RVS said...

@அப்பாதுரை
உறவுப் பையன் ஒருவனுக்கு தமிழ் தகராறு. அவன் நினைவில் எழுதியடூ.... :-)

RVS said...

@raji
நன்றிங்க மேடம். :-)

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி!
படம் கரெக்ட்டுதானே!
தல! மணிங்கிற பேர் தற்காலத்தில் சூட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதா? :-)))

RVS said...

@RAMVI
நன்றிங்க மேடம். சங்கீதா என் மனைவியின் பெயர். :-)

RVS said...

@siva
Thanks brother. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
பாராட்டுக்கு நன்றிங்க மேடம். :-)

RVS said...

@கோவை2தில்லி
மிக்க நன்றி சகோ! :-)

Ponchandar said...

பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்!


சூப்பர் பழமொழி ! !

Madhavan Srinivasagopalan said...

"பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்"
----- ஆப்பெர்ச்சுநிஸ்ட் .

சூப்பர்.வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

வீட்டில் தினமணி வாங்கியும் படிக்காமல் விட்டு விட்டேனே.
தேடி எடுத்து கதிரிலியே படித்து விடுகிறேன், இங்கு படிக்கப் போவதில்லை.
இந்த எழுத்தாளர் என் Friend என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளட்டுமா RVS?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails