Monday, February 6, 2012

கமெண்ட்டரிக் காலங்கள்


சமீபத்தில் வழக்கம்போல இந்தியாவை ஆஸி. பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்த இறுதி டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தை வானொலியில் நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த ப்ரொஃபெஸர் ரவி சதுர்வேதிக்கு இவ்வாண்டின் விளையாட்டு வர்ணனைக்காக பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்பது அலாதியானது. சில நேர்முக வர்ணனையாளர்களின் கமெண்ட்டரி சிக்ஸர்களும், பவுண்டரிகளும் நம்மை நேரே ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை. கண்ணில்லாத திருதிராஷ்டிரனுக்கு சஞ்சயன் மஹாபாரதப் போர் கமெண்ட்டரி கொடுத்தது போன்றவை அவை.


டிவிக்களின் சர்வாதிகாரம் இல்லாதக் காலங்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரான்சிஸ்டர்கள்தான் லவ்வர்கள். பெரும்பான்மையான இந்தியனுக்கு இரத்தத்தில் ஊறிய சாராயம்.... ஸாரி! சமாசாரம் கிரிக்கெட். ப்ளாஸ்டிக் பாலோ ரப்பர் பாலோ அல்லது பவுன்சரில் மண்டையைப் பிளக்கும் விக்கி ப்ராண்ட் கார்க் பாலோ எதாகிலும் சுயசேவைத் திட்டத்தின் கீழ் தயாரித்த மட்டையைக் கொண்டு லொட்டுலொட்டென்றுத் தட்டிக்கொண்டிருப்பார்கள். சென்னையை விட மன்னையில் ஓடியாட இடம் ஜாஸ்தி. அடித்து ஆடலாம். சரி! இப்ப கமெண்ட்டரி கேட்போம்.

சிகப்பு கலரில் உள்ளங்கையகல செவ்வகப் பொட்டி. முன்பக்க கீழ் முக்கால் பகுதி ஸ்பீக்கருக்கு புள்ளிப்போட்ட ஓட்டையும் மேல் கால் பகுதியில் மெகாஹேர்ட்ஸும் நம்பரும் போட்டிருக்கும். உச்சியில் குடுமி போல கருப்புக் கயிறு கைப்பிடி. கமெண்ட்டரி கேட்க சரியான கம்பானியன் இந்த பானஸோனிக் கம்பெனியாரின் தரமிகு தயாரிப்பு. டெஸ்ட் மாட்ச் ஒரு நாள் என்ற போட்டி பேதமில்லாமல் ஓயாமல் கமெண்ட்டரிக்குக் காது கொடுப்போம். ”செய்திகளுக்காக டெல்லி அஞ்சல்...” என்று சொல்லி ஒரு பத்து பீப்பீப்புகளுக்கப்புறம் “ஆல் இண்டியா ரேடியோ, யே ஆகாஷ்வாணி ஹே.....” என்ற கட்டைக்குரல் “பிரதமமந்த்ரி நைதில்லிமே” ஆரம்பிக்கும்போது க்ரீஸில் உயிர் உசலாடிக்கொண்டிருந்த மனீந்தர் சிங் இந்நேரம் அவுட்டா நாட் அவுட்டா என்று நெஞ்சு திக்திக்கென்று பீதியில் அடித்துக்கொள்ளும்.

”இப்ப யார் இவனுங்கள்ட நாட்டு நடப்பைக் கேட்டா?” என்றுத் திட்டி ஏஐஆரை வாயாரச் சபிப்போம். முப்பது நிமிஷம் ஆங்கிலம், முப்பது நிமிஷம் ஹிந்தி என்று நேரம் பிரித்துக்கொண்டு நேர்முக வர்ணனை நடைபெறும். தெரிந்தது ஏனோதானோ ”ஏக் காம் மே ஏக் கிஸான் ரகுதாத்தா” ஹிந்தி. ஏக் தோ தீன், சார், சே, சக்கா, பச்சீஸ், அக்லிகேன் போன்ற வார்த்தைகளையும் விளையாடும் மட்டையாளரின் ஆட்ட சுபாவத்தையும் வைத்து ஹிந்தி வர்ணனைகளை ஒருமாதிரி புரிந்துகொண்டு ஒப்பேத்துவோம். “ஏக் சோ அட்டாரா தீன் கிளாடியோன் அவுட்....” என்று மூச்சு விடாமல் வர்ணித்தால் எங்களைப் பொருத்தவரையில் அது பாண்டித்ய ஹிந்தி. அதற்கு எங்களது மொழியறிவு பத்தாது. ”மூனு பேருக்கு மொத்த ஸ்கோர் எவ்ளோடா?” என்று அக்கம்பக்கம் விஷாரத் பூர்வாத் முடித்த பண்டிட்ஜீக்களிடமும் அத்யாபக்குகளிடமும் கையேந்தி ஹிந்திப் பிச்சை எடுத்து தெரிந்துகொள்வோம். அவர்களும் கை கால் விரல்களை விட்டு தோராயமாக எண்ணிச் சொல்வார்கள்.

ந்யூமராலஜி போல கமெண்ட்ரியாலஜி என்று ஒரு ஆட்ட ஆருடம் உண்டு. முக்கியமான இறுதிப் பந்தயத்தில் ஆங்கில வர்ணனையில் இந்தியாவுக்கு மளமளவென்று விக்கெட் சரிந்தால் அது அந்த மேட்சிற்கு ராசியில்லாத கமெண்ட்ரியாகிவிடும். இன்னும் ஒரு படி மேலே போய் விக்கெட் விழும்போது சொன்ன வர்ணனையாளர் ராசியில்லாதவர். ஒவ்வொரு முறையும் ஆங்கிலம் ஆரம்பிக்கும் போதும் இஷ்ட தெய்வத்திடம் ”விக்கெட் விழக்கூடாதே” என்று மனமுருக ப்ரார்த்தித்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராமுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொள்வோம். நெஞ்சோடு சேர்த்து ரேடியோவை அள்ளியணைத்துக் காதையும் கொடுப்போம். சில சமயங்களில் இந்த அராசி அபாக்கிய நிலை ஹிந்தி கமெண்ட்ரிக்கும் வரும்.

எங்கள் வகுப்பு சிவா நெஞ்சுரம் மிக்கவன். சிக்ஸ் ஃபூட்டர். அவ்வளவு லேசில் யாருக்கும் பயந்துவிடமாட்டான். பத்தாவது படிக்கும்போதே கால்சட்டை பாக்கெட்டில் ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கொண்டு ஹீரோயிஸம் காட்டி அசத்தியவன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்ததால் என்னைப் போல் மாப்பிள்ளை பெஞ்ச் கோஷ்டி. அவன் காதிற்கு மட்டும் துல்லியமாக கேட்கும் விதத்தில் ஆர்டர் செய்து வாங்கியது போல அந்த பானஸோனிக் ட்யூன் ஆகியிருக்கும். வகுப்பில் அவ்வப்போது அவனைக் “ஸ்கோர் என்ன?” கேள்வியாய் கழுத்து சுளுக்க திரும்பிப் பார்ப்போருக்கெல்லாம் நோட்புக்கில் கடைசிப் பேப்பரைக் கிழித்து ஸ்கோர்போர்டாய் மாற்றி பென்சிலால் எழுதிக் காண்பிப்பான். லாஸ்ட் பெஞ்சில் புறப்பட்ட அந்த பேப்பர் ஸ்கோர்போர்ட் முன் பெஞ்ச் வரை ஒரு வலம் வரும்.

ஒரு முறை கை தவறுதலாக ட்ரான்ஸிஸ்டர் காதோரத்தில் இருக்கும் வால்யூம் வளையத்தில் பட்டு “சே ரன்!!” என்ற உற்சாக உச்சஸ்தாயி கமெண்ட்டரி வாத்தியார் காதில் விழக்கூடாதென்று “ஆ” என்று க.பெஞ்சு மக்கள் அனைவரும் அலறி, “என்னடா அங்க சத்தம்?”என்ற வாத்தியார் மிரட்டலுக்கு “என் காலை மிதிச்சிட்டான் சார்” என்று ஐந்து பேர் கோரஸாகக் காரணம் கத்தினோம். ஏதோ வெறுங்காலில் அசிங்கத்தை மிதித்தது போன்ற பார்வையை எங்கள் மீது உதிர்த்து “உக்காருங்கடா”ன்னார். ஆனால் எங்களுக்கு அசிங்கமாக இல்லை. கூட இருந்து குழி பறிக்கும் கருங்காலிகளின் சதிவேலையால் வகுப்பறையில் ட்ரான்ஸிஸ்டர் கேட்பது கண்டுபிடிக்கப்பட்டு வகுப்பறையில் ரெய்டு நடந்தது. தடயங்கள் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் பள்ளி வாசலில் முழுமேனியையும் தடவி ஸ்கான் செய்து அனுப்பினார்கள். தடவுகையில் கண்ட இடங்களில் கை படும் போது எங்களது பத்தினித்தன்மை கொஞ்சம் கெட்டது. கிரிக்கெட்டில்லா வகுப்பு பாழ் என்ற புதுமொழிக்கேற்ப போட்டிக்காலங்களில் வகுப்பறை வாட்டிவதைத்தது.

பள்ளிக்கூட வாசலில் ரெங்கன் நினைவு பாஸ்கட் பால் கோர்ட் உண்டு. டொம் டொம்மென்று நிலமதிர பந்து தட்டி விளையாடுவார்கள். தென் திசையில் வடக்குமலையான் போல நாமமணிந்து சேவை சாதிக்கும் சாமியின் கடை இருக்கும். அது ஒரு பொட்டிக்கடை. பீடி சிகரெட் விற்பனை கிடையாது. சாக்பீஸ், கடலை பர்பி, தேன் மிட்டாய் அப்புறம் பக்கத்தில் பிள்ளையார் கோவில் இருந்ததால் சூடம், பழம், தேங்காய் கூட விற்றதாக ஞாபகம். மன்னையிலேயே டென்னீஸ் ராக்கெட்டுகளுக்கு சல்லிசாக அங்கே தரமான நெட் பின்னப்படும். சாமி ஒரு உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும். சதா கை நரம்பு புடைக்க ராக்கெட்டுக்கு நரம்பு கோர்த்துக்கொண்டிருப்பார்.

சாமிக்கு பின்புறம் திருவாசி போல மார்க்கோனி காலத்தில் வடிவமைத்த வால்வ் ரேடியோப் பொட்டி ஒன்று முக்காலமும் பேசிக்கொண்டிருக்கும். ஆன் செய்து வால்வ் கொஞ்சம் சூடனா பின்புதான் படிப்படியாக அதன் குரல் உயரும். அதன் சேஸிஸ் மரத்தாலானது. அவருக்கு திரிக்காலமும் அப்பொட்டிதான் உற்ற துணை. கிரிக்கெட் போட்டிக் காலங்களில் காலை பதினோரு மணி ரீசஸ் ப்ரீயடில் பள்ளிக் காம்பௌண்ட் சுவர் எக்கி “ஸ்கோர் என்ன?” என்று குரல் கொடுத்தால் சட்டென்று “ஸ்ரீகாந்த் 30, சாஸ்திரி 10” என்று உடனடி ஸ்கோர் சொல்வார். ஒரே ஆளுக்கு திரும்பத்திரும்ப ஜோசியம் கேட்டால் பேசப் பழகின கிளி கூட கடுப்பாகும் ஆனால் சாமி எள்ளளவும் கோபித்துக்கொள்ளமாட்டார். கிரிக்கெட் ஸ்கோர் சேவையில் தன்னை பூரணமாக அர்பணித்துக்கொண்டார். நிறைய ஸ்கோர் கேட்கும் டிமாண்ட் ஏறியவுடன் ஒரு ஸ்லேட்டும் சாக்பீஸும் கொண்டு தாற்காலிக ஸ்கோர்போர்டு தயாரித்து மன்னையின் முதல் அதிகாரப்பூர்வ ஸ்கோரர் அந்தஸ்த்தைப் பெற்றார்.  டெஸ்ட்டோ ஒன் டேவோ எதாயிருந்தாலும் கேட்ட மாத்திரத்தில் ஓட்ட எண்ணிக்கை நிச்சயம் பெறலாம்.


ஆரம்பத்தில் வடக்குத்தெரு கோபால் அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. அவர் ரெங்கராஜன் சார். சின்ஸியர் ஹெட்மாஸ்டர். ஓயாமல் நாங்கள் விளையாடிய கிரிக்கெட் அவருக்கு அந்த அயர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அடிக்கடி நாங்கள் எங்கள் மூச்சுக் காற்று அவர்மேல் படும் தூரத்தில் பார்த்துக் கேட்டுப் பேசி கிரிக்கெட்டை சுவாசித்ததால் எங்களிடமிருந்து அவ்வியாதி அவருக்கும் சுலபமாக கிருமித்தொற்று போல ஏற்பட்டு அவரை விடாமல் பிடித்துக்கொண்டது. ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையையும் மனப்பாடமாக சொல்லும் அளவிற்கு அவரது ஆர்வம் அசுர வேகத்தில் வளர்ந்தது. கூடிய சீக்கிரத்தில் ஒரு நடமாடும் மட்டைப்பந்து அட்டவணையானார். அவர்களது கருப்பு பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டர். பெரிய பேட்டரி போடவேண்டும். அதற்குக் கச்சிதமாகத் தோலுறை வாங்கி மாட்டி அதைக் கௌரவித்திருப்பார். கிரிக்கெட் இல்லா இரவுகளில் பத்துமணிக்கு அப்பாலும் விவதபாரதி ஒலிபரப்பும் கர்நாடக இசைக்கச்சேரிகள் கேட்பார். மொத்தத்தில் சார் எப்போதும் ரேடியோவும் காதுமாக இருப்பார்.

சென்னையில் போட்டி நடக்கும்போது விடாமல் கமெண்ட்டரி கேட்போம். பெரும்பாலும் பொங்கல் விடுமுறையில் போட்டி நடக்கும். ஒருமுறை எங்களது விபரீத ஆசையில் டி.வியில் மாட்ச் ஓடிகொண்டிருக்க ராமமூர்த்தியும் அப்துல் ஜப்பாரும் பக்கத்தில் ரேடியோவில் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். அது டிவியும் ரேடியோவும் கைக் கோர்த்த ஜுகல்பந்தி. ”கால்திசையில் வந்த பந்தை ஆன் திசையில் அடித்து ஆடினார் ஸ்ரீகாந்த். ஆகாய மார்க்கமாக வந்த பந்து ஆளில்லா பிரதேசத்தில் விழுந்து ஒரு எழும்பலில் எல்லைக்கோட்டை கடந்தது. நான்கு ரன்கள்!” வர்ணனைகளுக்கு நடுவே ரங்காச்சாரி என்ற முதுபெரும் ஆட்டக்காரரின் சிறப்புக் கண்ணோட்டமும் உண்டு. அவர் ”ஸ்ரீகாந்த் இப்படி அடிச்சிருக்கவே வேண்டாம். அவன் ஆடினது தப்பாட்டம்” என்று அவன் இவன் போட்டு ஏகவசனத்தில் பேசுவார். அவர் ஜகதலப்பிரதாப ஸ்பின்னர் என்றும் ப்ராட்மேனையே டக் அவுட் ஆக்கியிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் செய்யப்படாத செவிவழிச் செய்தி.

பல வருடங்களாச்சு! தூய தமிழில் கமெண்ட்டரி கேட்டு! கூத்தபிரான், ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார்.... நேயர்களே உங்களை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்திற்கு வரவேற்கிறேன். பூவா தலையாவில் கெலித்த இந்திய அணி மட்டை பிடிக்க உத்தேசித்துள்ளார்கள்... முதலில் ஆடுவதற்கு ஸ்ரீகாந்தும்......

பின் குறிப்பு: இந்தக் கட்டுரை, அக்கப்போர், அனுபவம் கட்டுரை.காம்மில் இடம்பெற்றது.

பட உதவி: www.thehindu.com

28 comments:

Sugumarje said...

Superb !

தக்குடு said...

மன்னார்குடி, கிரிகெட், பிகர்கள் - சம்பந்தமான டாபிக் வந்தா ஓவருக்கு ஏழு பாலும் சிக்சர் அடிச்சு விளாசரீர் மைனர்வாள்! (ஒரு ஓவருக்கு 6 பால்தானே!னு யோசிக்கவேண்டாம். ஒரு பால் நோ பால் ஆயிடுத்து) :))

Anonymous said...

//டிவிக்களின் சர்வாதிகாரம் இல்லாதக் காலங்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரான்சிஸ்டர்கள்தான் லவ்வர்கள்.//

ஆனால் அதற்குப்பின் டி.வி.க்கு தாலி கட்டி கடும் சிரமத்தினூடே குடும்பம் நடத்தி வருவது சகஜமாகிவிட்டது.

Anonymous said...

எம் போன்ற ரேடியோ வர்ணனை கேட்காத இளைஞர்களுக்கு இப்பதிவு சுவாரஸ்யத்தை அள்ளித்தருகிறது. கலக்கரேள் போங்கோ!!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

க்ளாஸ் ஆர்.வி.எஸ்.

பொறாமையா இருக்கு உம்ம எழுத்தப் பாத்து.

RAMA RAVI (RAMVI) said...

படித்ததும் 30 வருடங்கள் பின் நேக்கி சென்று விட்டது என் நினைவுகள். அருமையான கமெண்ட்டரி காலங்கள்..

//பல வருடங்களாச்சு தூய தமிழில் கமெண்ட்டிரி கேட்டு.// ஆமாம்,மறுபடியும் கேட்க வேண்டும் போல இருக்கு.

kaialavuman said...

ஆரம்பத்தில் வடக்குத்தெரு கோபால் அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. அவர் ரெங்கராஜன் சார். சின்ஸியர் ஹெட்மாஸ்டர். ஓயாமல் நாங்கள் விளையாடிய கிரிக்கெட் அவருக்கு அந்த அயர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அடிக்கடி //நாங்கள் எங்கள் மூச்சுக் காற்று அவர்மேல் படும் தூரத்தில் பார்த்துக் கேட்டுப் பேசி கிரிக்கெட்டை சுவாசித்ததால் எங்களிடமிருந்து அவ்வியாதி அவருக்கும் சுலபமாக கிருமித்தொற்று போல ஏற்பட்டு அவரை விடாமல் பிடித்துக்கொண்டது. ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையையும் மனப்பாடமாக சொல்லும் அளவிற்கு அவரது ஆர்வம் அசுர வேகத்தில் வளர்ந்தது.//
”ராஜகோபால்” என்ற எங்கள் கணக்கு வாத்தியாரின் ஞாபகம் வருகிறது. தேர்வின் பொழுது கூட, நடு நடுவே ‘ஸ்கோர்’ சொல்லி ‘டேய் கவலைப் படாம எழுதுங்கடா!! பசங்க பின்னறாங்க என்றோ’ அல்லது சொதப்பினால், ‘மேட்ச் ஊத்திகிட்டாங்க பரிட்சையாவது ஒழுங்கா எழுதுங்கடா’ என்று கூறுவார்.

எப்பொழுதும் போலவே ஆர்வத்தைத் தூண்டும் பதிவு. நன்றிகள்.

CS. Mohan Kumar said...

Now in CCL, they give Tamil commentary in TV itself. But this cannot be compared with the excellent Tamil commentary given by Ramamoorthy, Koothabiraan, etc

Madhavan Srinivasagopalan said...

செமை... சான்சே இல்லா..
என்னமா ஒரு எழுத்து.....
-------
இந்தியா பங்கேற்காத ஆட்டங்களிலும்.. முக்கியமாக ஆஷஸ் சீரிஸ் ஸ்கோர் வேண்டுமாலும், ஓய்வு பெற்ற அந்தத் தலைமையாசிரியர் ரெங்கராஜனிடம் ஐயா அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவரது ஆர்வம் உண்டானது..
-------
'Fixures' என்ற வார்த்தையை நான் அவரிடம் தான் தெரிந்துகொண்டேன்..
No.. no.. it was not 'match fixing'.
No 'match fixing' those days..

pudugaithendral said...

கமெண்ட்ரி நானும் கேட்டிருக்கேன். அப்பா டீவி வாங்கிய பிறகு அந்த வர்ணனையை மிஸ் செய்ததால், மெல்லமாக ரேடியோவில் தனியாக வர்ணனை கேட்டதும் உண்டு. நாமே மேட்ச் பார்ப்பது போல இருக்கும் அந்த வர்ணனை.

அருமையான பகிர்வு. (கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க)

பொன் மாலை பொழுது said...

அப்துல் ஜபாரின் தமிழ் குரலில் மயங்கியது ஒரு காலம். கூத்தபிரான், ராம மூர்த்தி இவர்களைதொடர்ந்து தமிழில் வர்ணனையாளர்கள் வேறு யாரும் இப்போது இருகிறார்களா மைனரே?

பத்மநாபன் said...

நாளாச்சு வந்து... '' வர்ணனை'' வர்ணனை ஓடி வரவைத்து விட்டது ... அனுபவிச்சதை அனுபவிச்ச மாதிரி சொல்வதில் ஆர்வி எஸ்ஸை அடிச்சுக்க முடியாது .... ஜபார், ராமமூர்த்தி அவர்களின் தேன் ஒழுகும் வர்ணனை கேட்பதற்காகவே சென்னை கிரிகெட்டிற்கு ஏங்கிய நாட்கள் உண்டு ....

Porkodi (பொற்கொடி) said...

//செமை... சான்சே இல்லா..
என்னமா ஒரு எழுத்து.....//

sometimes, it's okay to copy-paste someone else's comment, when you dont find better words :)

RVS said...

@Sugumar Je
Thank you!! :-)

RVS said...

@தக்குடு
உங்கள் கமெண்ட்டில் பிகர்கள் என்று ஒரு பதம் வருகிறதே. அப்படியென்றால் என்ன? :-)))))))))

RVS said...

@! சிவகுமார் !
வர்ணனை கேட்காத இளைஞர்கள் என்று சொல்லிக்கொள்வதன் மூலம் எங்களை பெருசுகள் என்று சொல்கிறீர்களா?
புத்தகக்காட்சியில் என்னைப் பார்த்துமா இந்த கருத்து? :-))))))))

RVS said...

@சுந்தர்ஜி
ஜீ! நீங்கெல்லாம் பிக் பீப்பிள். இது சோட்டா எழுத்து. உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. :-))

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம். :-)

RVS said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்
அந்த வாத்தியாரை நினைக்கும்போது புல்லரிக்கிறது. என்ன ஒரு சேவை! கருத்துக்கு நன்றிங்க.. :-)

RVS said...

@மோகன் குமார்
ஜப்பாரும், கூத்தபிரானும், ராமமூர்த்தியும் கட்டிக்காத்த கமெண்ட்டரி உலகத்தை யாரால் நிரப்பமுடியும். :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
தேங்க்ஸ் மாதவா! சாரைப் பற்றியே தனியா ஒன்னு எழுதலாம். :-)

RVS said...

@புதுகைத் தென்றல்
கருத்துக்கு நன்றிங்க... இந்தப் பதிவை எழுதும்போது என் காதில் நான் கேட்ட ரேடியோ ஒலித்துக்கொண்டிருந்தது. :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
என்னாச்சு! ரொம்ப நாளா ஆளையே காணோம். நல்லா இருக்கீங்களா?
ஏதோ சி.சி.எல்லில் தமிழில் கமெண்ட்டுகிறார்களாம். :-)

RVS said...

@பத்மநாபன்
ரசிகமணியை வலைவீசி தேடிக்கிட்டு இருக்கோம். ரொம்ப பிசி...... கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@Porkodi (பொற்கொடி)
Thank you! Nowadays we could not see you also in the blogosphere. :-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல் போஸ்ட்...:)

RVS said...

@அப்பாவி தங்கமணி
பாராட்டுக்கு நன்றி! :-)

Ponchandar said...

அட நானும் டிவி-யில் சென்னை மேட்ச் ஓடிக்கொண்டிருக்க.. வால்யூமை ம்யூட் செய்துவிட்டு ட்ரான்ஸிட்டரில் தமிழ் வர்ணனை கேட்ட காலம் சுகமாக நினைவுக்கு வருகிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails