Sunday, February 12, 2012

பாரீஸ் பாரீஸ்


பாரீஸ் போய் ரொம்ப நாளாச்சு. லண்டன் பாரீஸ் இல்லை. நமக்கேது அவ்வளவு ஹைவேஜு. காளிகாம்பாளும் கந்தகோட்டமும் அருள்பாலிக்கும் பாரீஸ். கனம் கோர்ட்டார் அவர்கள் நீதிதேவதைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு குழுமி நின்று நீதியைக் கட்டிக் காக்கும் சென்னையின் பாரீஸ். மூ.நாற்றத்தோடு மன்னைக்கு பஸ்ஸேரும் அந்தக்கால திருவள்ளுவர் பஸ் நிலையம் இருந்த பாரீஸ். ரோட்டை நோண்டிப் போடாத அக்கால பாரீஸ். தருமமிகு சென்னையின் பாரிமுனை.

இந்தக் குழந்தைக்கு ஒரு அப்பாம்மா வேணும் என்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனால் அது விரும்பியது போலக் கிடைத்துவிடும் என்று இந்தக் குழந்தையை ஒருவர் ஃபேன்ஸி கூரை வாங்க கையைப் பிடித்து அழைத்துப்போனார்.

பாரீஸ் வழக்கம் போல ஜேஜேவென்று இருந்தது. பழக்காரர்களும், ஆட்டோக்களும் கொஞ்சமும் அவர்களது நெறி பிசகாது பாதிரோட்டில் தங்களது வேலைகளை கடமையாய் செய்துகொண்டிருந்தார்கள். இன்னமும் ”புரட்சித்தலைவர் வாழ்க” என்று இரட்டை இலை, எம்ஜியார் படம் போட்ட ஒரு அற்புத ரிக்ஷாவைப் பார்தேன். கையைக் கட்டிக் கொண்டு ரிக்ஷா பின்னால் சிரித்தார் எம்ஜியார். சமீபத்தில் தீயில் பற்றிக்கொண்ட அரசாங்க எழிலகத்தைச் சீர் செய்துகொண்டிருந்தார்கள். ”சாவுகிராக்கி” திட்டு வாங்காமல் ஒருவாராக நீந்திக் கரையேறி ஃப்ளவர் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகில் தட்டுத்தடுமாறி வந்தேன். மொஸார்ட்டின் கீதம் போல சென்னையில் அமுக்கப்படும் அனைத்து ஹார்ன் சப்தங்களும் ஒருசேரக் கேட்டேன்.

போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருக்கும் 10x10 இடத்தில் நூறு நாற்சக்கர வாகனங்களை பலவந்தமாகக் கிஸ் கொடுக்க வைத்து அந்தப் பட்டியில் அடைத்துவைத்திருந்தார்கள். வரம்பு மீறிய சில இரண்டு சக்கரங்களும் கலப்பு மணம் செய்து கொண்டு காரோடு சேர்த்து அணைத்துவைக்கப்பட்டிருந்தது. டோக்கன் போடும் பையன் லங்கோடு அளவு இருக்கும் ஒரு சந்தில் “ரிவர்ஸ்ல வந்து உடுங்க சார்” என்று என்னுடைய ட்ரைவிங் திறமையை பரிசோதித்தான். எட்டு போடச்சொல்வதெல்லாம் வேஸ்ட். ஆர்.டி.ஓ ஆபீஸில் செக்கிங் இன்ஸ்பெக்டர் வேலைக்கு நிச்சயம் உபயோகப்படுவான்.

மயங்கினேன். தயங்கினேன். ”அப்டியே அந்த சிக்னலாண்ட போ சார். பாலல் பார்க்கிங் கீது”ன்னான். சிக்னலாண்ட வரைக்கும் தெளிவாகப் புரிந்தது. அப்புறம் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. போ என்று உரிமையுடன் ஒருமையிலும் சார் என்று மரியாதையும் கலந்து கூப்பிடும் மொழிச்சிறப்பு சென்னை மாகானத்துக்கே சொந்தமானது என்று விளங்கியது. முதல் சுற்றில் மங்காராம் எதிரே மரத்தடியில் இரண்டு லக்ஸுரி கார் ஸ்பேஸில் உட்கார்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் “ஏம்மா இங்க பார்க்கிங் இருக்கு” என்று கேட்டேன். வெற்றிலைச்சாறை புளிச்சென்று துப்பிவிட்டு “இங்க அல்லா இடமுமே பார்க்கிங்குதான். வேல முஞ்சா கெளம்பிடுவாங்கோ...” என்று கையை அரைவட்டமடித்துச் சொன்னது “இப்பூவுலகே ஒரு பார்க்கிங் ஸ்லாட்தான். வியாபாரம் முடிந்தவுடன் கிளப்பிக்கொண்டு போய்விடுகிறோம்” என்கிற வாழ்க்கைச் சித்தாந்தத்தை எளிமையாக விளக்கியது.

நேர்த்திக்கடனாக கல்யாணம் ஆவதற்கு 108 அடிப்பிரதக்ஷினம் வேண்டிக்கொண்டு அம்மன் கோயிலில் பிரதக்ஷிணம் வரும் கன்னிப் பெண்கள் போல ஐந்து முறை சலிக்காமல் அந்த ஏரியாவைச் சுற்றினேன். இரண்டு பேர் நடந்து சுலபமாகக் காரைத்தாண்டி நடக்கும்போது கோட்டை ஸ்டேஷனில் இறங்கி பொருமையாக நடந்து வந்திருந்தால் கூட இந்நேரம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் மம்மு சாப்பிட்டிருக்கலாம் என்று மனஸ் திட்டியது. பார்க்கிங் இடத்தை கண்களால் ஸ்கேன் செய்யும்போது தான் மெட்ராஸ் பாஷை பாலல் என்பது ஆங்கில Parallel என்று புரிந்தது. பார்க்கிங்கில் கேஷ் பேக்கோடு ஒழுங்குபடுத்தும் கலெக்ஷன் ஏஜெண்டை காணோம். ஆறாவது முறை முன்பு ஃபளவர் பஜார் போ.ஸ்டேஷன் அருகே காண்பித்த லங்கோட்டை பாதியாய் கிழித்த இடத்தில் வண்டியை நிறுத்தி பார்க்கிங் கிங்கானேன்.

இரண்டு ஆள் சேர்ந்து உள்ளே நுழைய முடியாத ஒரு சந்தருகில் “தேவராஜ முதலித் தெரு இப்படிப் போளாங்களா?”ன்னேன். “ஷ்ட்ரெயிட்டா போயி ரைட்டு திரும்பி லெஃப்ட்ல போ”ன்னார். கரெக்ட்டாக தப்பாக போனோம். கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் தெலுங்கு, நிறைய தமிழ் காதில் விழுந்தது. லெஃப்ட் போய் ரைட் திருப்பினால் ஒரு முட்டுசந்து. இடப்பக்கம் முந்தானையுடன் முக்காடு போட்ட வடக்கத்திய மாதாஜி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். ஒரு ரூபா காயின் நெற்றிப்பொட்டோடு இருந்த அவருக்கு கையில் ஒரு சூலம் கொடுத்தால் புடவை கட்டிய கல்கத்தா காளி போல இருப்பார். அவருடைய ”ஆவோஜி”க்கு முன்னால் ஒரு அவசர யூடர்ன் எடுத்தோம்.

நெருக்கமான சந்தில் மக்கள் அன்போடும் ஆதரவோடும் இருக்கிறார்கள் என்பதற்கு தேவராஜ முதலித் தெருவை எடுத்துக்காட்டாக சொல்லலாம். எல்லாக் கடைக்காரர்களும் பொருட்களை கடை உள்ளும் டெலிவரியை ரோட்டிலும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஈஷிக்கொண்டு நடந்தார்கள். காதலர்க்கு ஏற்ற இடம். மூன்று சக்கர சைக்கிள், ”சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே” ஆட்டோ, கினிங் கினிங் என்று சினுங்கும் சைக்கிள், சைக்கிளில் சமோசா விற்கும் பாய்,  தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் விற்கும் பட்டை போட்ட வியாபாரி என்று இத்தனை இரைச்சலிலும் சம்ப்ரோக்ஷனம் கண்ட கேசவபெருமாள் கோயிலில் இருந்து எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மி பக்தி மணம் கமழ “குறையொன்றுமில்லை..” பாடிக்கொண்டிருந்தார். இவர் கடை ஷீட்டை அவர் கடை வாசலில் போட்டு அறுக்கலாம். தப்பில்லை. சகோதர பாசத்துடன் விட்டுக்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு கிராக்கி கிடைக்கும் வரை!

இரண்டு மூன்று கடை ஏறியிறங்கி பேரம் படிந்து ஷீட் வாங்கிக்கொண்டு வரும் போது கேசவப்பெருமாள் கோயில் ஒரு கதவு அடைத்துவிட்டார்கள், சமோசா பாய் தெருவோர டீக்கடையில் டீ அடித்துக்கொண்டிருந்தார், சனிக்கிழமை வாங்கிய பேமெண்ட்டில் மில்லி அடித்து பெண்டுலம் போல ஆடிக்கொண்டு ஒரு தொழிலாளி சென்று கொண்டிருந்தான், கல்லாவில் நூறையும் ஐநூறையும் ரகம் வாரியாக பிரித்து ஒரு கடை முதலாளி சொட்டை வியர்க்க எண்ணிக்கொண்டிருந்தார்(கையில் மோதிரம் ஜொலித்தது), இரவுக் கன்னி ஒருத்தி ஷோல்டர் பேக்கோடு வாடிக்கையாளரை எதிர்பார்த்து ஒதுங்கியிருந்தாள், “நாளைக்கு வேணா எனக்குத் துட்டு தரவேண்டாம் பாய்! ஆனா இன்னிக்கு குடு” என்று யாரோ அஷ்டலெக்ஷ்மி பெற்ற பெரியவர் ஒரு கடை வாசலில் கெஞ்சிக்கொண்டிருந்தார், மங்காராம் வாசல் பூக்கடைக்காரி தண்ணீர் தெளித்த பூவோடு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். என் சேப்பாயியை திருகி கிளப்பிக்கொண்டு வரும் போது இன்னொரு சாயந்திரத்திற்கு தயாராக பாரீஸ் உறங்கப்போயிற்று.

படம்: நன்றி:- www.thehindu.com

16 comments:

RAMA RAVI (RAMVI) said...

காதும்,கண்ணும் உங்களுக்கு விலாசமா இருக்கு. எல்லாத்தையும் கரெக்டா நோட் பண்ணி வந்து எழுதிடீங்க. பாரீஸ் கார்னர் இன்னும் மாறவேயில்லையே!!

பதிவு சிறப்பாக இருக்கு.

பொன் மாலை பொழுது said...

அதெல்லாம் அந்தகாலம். எனக்கு நம்ம "பாரீஸ் கார்னர் " போக வேணுமென்றால், எப்படியெல்லாம் அதனை தவிர்க்கலாம் என்ற சிந்தனை வந்துவிடும். பஸ், எலெக்ட்ரிக் ட்ரெயின் என்றாலே பாதி ஜென்மம் கடைதேறிவிடும்,இதில் உங்கள் சேப்பாயியையும் உடன்அழைத்துக்கொண்டு சென்றால் இப்பிறவியில் செய்த அணைத்து பாவங்களும் அம்பேலாகிவிடும். பாவமையா நாம், நம் சென்னை வாழ் கார் வைத்துகொண்ட தமிழர்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Yaathoramani.blogspot.com said...

படத்தை விட உங்கள் விவரிப்புதான் சூழலை மிக அழகாக
உணரவைக்குது.ரசித்துப் படித்தால் ஒளி ஒலி பார்ப்பது போல்
அந்தக் காட்சிகள் அப்படியே கண் முன் முன் விரிவது ஆச்சரியம்
மனம் கவர்ந்த பதிவு

விஸ்வநாத் said...

working in Indian express but using the foto published in The HINDU.

செஞ்சோற்றுக்கடன் ?

அப்பாதுரை said...

i miss madras.

தக்குடு said...

பாரிஸ் கார்னர் போய் ஒரு சாமான் வாங்கிண்டு வந்ததை கலிவர்ஸ் டிராவல் நாவல் மாதிரி எழுதர ப்ராப்தத்துக்கு ஹரித்ரா நதில முங்கி குளிக்கனும் போலருக்கு! :)))

ADHI VENKAT said...

பாரீஸ் கார்னரை உங்க விவரிப்பால் கண் முன் கொண்டு வந்து நிறுத்திட்டீங்க...... நான் போனது கிடையாது....

என் அப்பா அலுவலக வேலையாக AGS OFFICEக்கு வந்து விட்டு வேலைகளை முடித்துக் கொண்டு மாலை பாரீஸ் கார்னரில் பேருந்து பிடித்து வந்ததாக சொல்லி இருக்கிறார்.

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம். இன்னும் சில மனிதர்களை சந்தித்தேன். கதையாக எழுதலாம் என்று விட்டுவிட்டேன். :-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
ஆமாம்! தலைவரே சென்னை வந்துட்டீங்களா? :-)

RVS said...

@Rathnavel Natarajan
நன்றி சார்! :-)

RVS said...

@Ramani
ரசித்ததற்கு நன்றி! கமெண்ட்டை ரசனையுடன் எழுதும் உங்களது பழக்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதிலுக்கு இதுபோல என்னால் கருத்துரைக்க முடிவதில்லை. :-)

RVS said...

@விஸ்வநாத்
விசு! விடு!!
இந்தப் படம் தான் பொருத்தமாக இருந்தது. நாம குப்பைக் கொட்டற இடத்தை எதுக்குப்பா பப்ளிக்கா போடற... :-))

RVS said...

@அப்பாதுரை
வந்துடுங்க தல. ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சுடலாம். நீங்க வந்து எழுத ஆரம்பிச்சா பாதி பேர் கடையைக் கட்டிடுவாங்க.. :-)

RVS said...

@தக்குடு
பாராட்டு மழைக்கு நன்றி தக்குடு. :-)

RVS said...

@கோவை2தில்லி
பாரிமுனை ஒரு அற்புதமான இடம். எல்லா சாமான்களும் கிடைக்கும். சபர்பன் ஏரியாக்களில் கடைப் போட்டிருக்கும் சிறு கடைக்காரர்களுக்கு பாரீஸ் தான் கொள்முதல் இடம். :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails