சனிக்கிழமை சத்தியத்தில் கருத்துக் களேபரங்கள் முடிந்து காலையில் பின் வீல்
பஞ்சரான அதே ஐராவத இன்டிகா, அதே பதினாறு வயது மீசை முளைக்காத ட்ரைவர், அதே
லொடலொடா மற்றும் க்ரீச் க்ரீச் சத்தத்துடன் ஆஃபீஸ் திரும்பினேன்.
நிகழ்த்திய உபன்யாசத்திற்கு ஒரு தேங்காய் மூடியாவது கிடைக்கும் என்று
எதிர்பார்த்த என் எண்ணத்தில் மண். ”தேங்க்யூ சார்” என்று புன்னகையுடன்
வாயார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.
சென்னைப் பட்டிணத்தின் விசேஷ வாசனைகள் உட்புகா வண்ணம் நாற்புறமும் கண்ணாடி உசர்த்திக் காரோட்டிய நான் அன்று பொது வாகனத்தில் வீடு வந்தேன். டீ காஃபி குடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக ட்ரைவர் கண்டக்டர் ஏறும் பஸ் நிலையம் அருகில் என்னுடைய காரியாலயம் இருப்பதால் சிரமபரிகாரமாக உட்கார்ந்து வருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பிருந்தது.
சென்னைப் பட்டிணத்தின் விசேஷ வாசனைகள் உட்புகா வண்ணம் நாற்புறமும் கண்ணாடி உசர்த்திக் காரோட்டிய நான் அன்று பொது வாகனத்தில் வீடு வந்தேன். டீ காஃபி குடித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாக ட்ரைவர் கண்டக்டர் ஏறும் பஸ் நிலையம் அருகில் என்னுடைய காரியாலயம் இருப்பதால் சிரமபரிகாரமாக உட்கார்ந்து வருவதற்கு நூறு சதவீதம் வாய்ப்பிருந்தது.
சாலையில் சென்ற பேருந்துகள் புழுதியைக் கிளப்ப அஸ்வங்கள் ஓடிய குருக்ஷேத்திரம் போல பஸ்நிலையம் போர்க்களமாகக் காட்சியளித்தது. என்னுடைய தடத்தில் செல்லும் பேருந்து நிழலாகக் கண்ணில்பட்டது. இளந்தாடி ஓட்டுனர் ஹாரனைத் தடவிப் பார்த்துக்கொண்டு தீவிர யோசனையில் அமர்ந்திருந்தார். வண்டி ஹைட்லிங்கில் டீசலைக் குடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது. பரவலாக பல சீட்கள் அழுக்காக காலியாய் இருந்தன. கமலஹாசன்களுக்கு அமலாக்களுடன் வலையோசை கலகலவென பாடமுடியாதபடி கூட்டமில்லாத பஸ். ஜீன்ஸும் கலைந்த கேசமுமாய் இரண்டிரண்டாக இரண்டு சீட்களில் பொங்கும் இளைமையுடன் நால்வர் உட்கார்ந்திருந்தார்கள். கூடவே “ஏய்.....” “டேய்....” “ஹெஹ்ஹே...” என்று கேலியும் கிண்டலும் பஸ்ஸை உலுக்கியது. எதிர் வரிசையில் மெத்து மெத்து சீட்கள் பூவையருக்காக காத்திருந்தது.
துள்ளிப் பேருந்தில் ஏறிய கண்டக்டருக்கு ரஜினி இன்ஸ்பிரேஷனாக இருக்கக்கூடும். ”போலா ரை” என்று இருவார்த்தையையும் “ம்””ட்”டில்லாமல் ஸ்டைலாகப் பேசி வண்டியைக் கிளப்பினார். நான்கு முறை சக்கரம் சுற்றுவதற்குள் என்னிடம் வந்த கரகர "டிக்கெட்..டிக்கெட்”டிற்கு ”பொன்னியம்மன் கோயில் ஒன்னு” என்றேன். பத்தொன்பது ரூபாய்க்கு கிழித்துக் கொடுத்தார். பல வருடங்களுக்குப் பிறகு பஸ் பிரயாணம். பரீட்சைக்குப் படிப்பது போல ஆர்வமாய் டிக்கெட்டைப் படித்தேன். மேலே ஒரு ஆல்ஃபா ந்யூமரிக் சீரியல் நம்பர். வலமும் இடமும் “மே” “கீ” என்று தோரணமாய் கட்டம்கட்டி ஸ்டேஜ் நம்பர்கள் நடுவில் தடிமனான எழுத்தில் 19-00 என்று அச்சடித்திருந்தது. அதற்கு மேலே சக்கரத்தில் ”மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை” என்று லோகோ. கீழே மாற்றத்தக்கதல்ல, பரிசோதனைக்கு உட்பட்டது போன்ற அரசாங்க விதிமுறைகள்.
“டே! அந்தப் பொண்ணு தெலுங்கு. நம்மப் பய தமிலு. லாங்குவேஜு செட் ஆவல”
“இங்கிலீசுல பேசுறான்.”
“ஹி..ஹி.ஹி..ஹீ..”
“ம்..ம்.. இவனுக்குதான் ஏ பி சி டியத் தவிர இங்கிலீசு தெரியாதே. ஏதோ தஸ்ஸு புஸ்ஸுன்னு பீட்டர் வுடறான்”
“ஒரு வெளம்பரத்துல வேலைக்காரி இங்கிலீஸ் பாடி தர பெருக்குமே. அங்க போய் கத்துக்கறான்”
யாரிடமோ ஃபோனிலும் பக்கத்திலும் பார்த்து பார்த்து ஆணழகன் ஒருவன் பஸ் முழுவதும் கேட்கும்படி பொதுக்கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
இப்போது ஒரு சிக்னல். நெட்டித்தள்ளும் கூட்டமில்லை. சாயந்திரமாக இருந்தாலும் காலையில் இருந்து சூடாக வறுத்தெடுத்ததால் வடாம் பொறித்த இரும்புச்சட்டி போல தரையிலிருந்து உஷ்ணம் தகித்தது. டிரைவரை அது இம்சித்திருக்கக்கூடும். விஷயம் என்னவென்றால் முன்னால் ஒரு வெள்ளைக் கார் நேரே போவதற்கு நின்றிருந்தது. இடதுபுறம் ஒரு ஆட்டோ நுழைய இடம் இருந்தது. அதில் அந்த ஆஜானுபாகுவான பஸ்ஸை அனாயாசமாக நுழைக்க முற்பட்டார். ஏனென்றால் நாங்கள் இடதில் திரும்பவேண்டும். அது ”இலவச” இடது கூடக் கிடையாது.
மூன்றாவது பாராவில் ஹாரனைத் தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் என்று படித்திருப்பீர்கள். இப்போது அதை வாசிக்க ஆரம்பித்தார். இளையராவிடம் உதவியாளராக பணிபுரிந்தது போன்ற ஒரு திறமை அவரிடம் இருந்தது. சுதிலயம் மாறாமல் விட்டுவிட்டு வாசித்தார். காரின் கண்ணாடிகள் உறுதியாக மூடியிருந்தது. பின்னால் இருந்து பார்த்ததில் இவரது சங்கீத ஹாரனை மிஞ்சும் வகையில் காரினுள் ரஹ்மான் சிவமணியின் உதவியோடு அடித்து நொறுக்கி தவிடுபொடியாக்கிக்கொண்டிருந்தார். காரின் பின்புறக் குலுங்களில் ரஹ்மான் பீட் தெரிந்தது. பொறுமையிழந்த ஒரு பெரியவர் பஸ்ஸினுள் இருந்து குரல் கொடுத்தார் “லேசா இடிப்பா”. சிக்னல் இன்னமும் ரெட் காட்டிக்கொண்டிருந்தது.
போருக்குப் புறப்படும் மனோகராவிற்கு கலைஞரின் வசனம் தட்டி எழுப்பி ஒரு கிளர்ச்சியைத் தருவது போல பஸ் டிரைவர் இப்போது அந்த பெரியவரால் முடுக்கிவிடப்பட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் கொலையாளியை பிடிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் ரத்தத்தைப் பாய வைக்கும் விரைவு இசை போல ஹார்ன் அடித்தார். வெர்னா அசைவதாக தெரியவில்லை. இங்கே பஸ்ஸில் அந்தக் கிழவர் வெகுண்டார். எழுந்து ட்ரைவர் சீட்டருகே சென்று சென்னைச் செந்தமிழில் வைதார். எங்கள் பஸ் ட்ரைவர் மணிக்கட்டு முறியும் வரை ஹார்ன் ஒலி எழுப்பினார். உஹூம். பலனில்லை.
சில விநாடிகளில் பச்சை விழுந்தது. தனது பீ.பியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொறுமையாக கோடு தாண்டினார்கள். இப்போது பின் சீட்டு இளைஞர்கள் காதலிப்பதற்கு பெண்களை வகைப்படுத்தி தேடிக்கொண்டிருந்தார்கள். பி.ஏ.கிருஷ்ணனின் “அக்கிரகாரத்தில் பெரியார்” என் பையில் இருந்தது. கொஞ்ச நேரம் திருப்பினேன். இடையிடையே வந்த நிறுத்தங்களில் பயணிகளை ஓடவிடமால் காலருகே கொண்டு போய் வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொண்டார் ட்ரைவர் உருவில் இருந்த அந்த ஹார்ன் இசைக் கலைஞர். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அனிச்சை செயலாக ஒரு முறை ஹார்னை தட்டுகிறார். சில முறை லேசாக. பலமுறை பலமாக. தூக்கத்தில் எப்படி என்று தெரியவில்லை!
இரு முதல்வர்களின் பெயர்களை தாங்கிய பிரம்மாண்ட கல்வெட்டுகளைக் கொண்ட கோயம்பேடு என்கிற பன்னாட்டு பஸ் நிலையத்தில் அந்த இளைஞர் கோஷ்டி ”கெக்கெக்கே” என்றபடி படியிறங்கியது. பஸ் உள்ளே இருக்கைகள் தாராளமாக இருந்தும் ஈருடல் ஓருடலாக தள்ளுமுள்ளுவில் திபுதிபுவென ஏறினார்கள். நமது ஹார்ன் கலைஞர் பத்து பேர் ஏறுவதற்குள் இருபது முறை ஸ்ருதி பிசகாமல் சப்த சங்கீதம் வாசித்தார். என்னோடு புத்தகத்தில் பேசிக்கொண்டிருந்த பி.ஏ.கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவாரோ என்கிற அச்சம் எழுந்தது.
சிறிதுநேரம் லேசாகக் கண்ணயர்ந்த நான் எழுந்தது இன்னொரு புதுவிதமான ஹார்ன் வாத்தியக் கலைஞரால். பின்னால் பாடி திறந்த ஒரு டாட்டா 407ல் குதிர் குதிராய் ஸ்பீக்கர்கள் அடுக்கி அதன் மேல் சிலர் பள்ளிகொண்ட பெருமாள் போல ஒரு கையை கொடுத்து தலையை தூக்கிப் படுத்துக்கொண்டு பயணப்பட்டிருந்தார்கள். 407 நெற்றியில் பாலு ஸ்ருதி என்று ஸ்டிக்கரால் எழுதியிருந்தது. அந்த ட்ரைவர் கொஞ்சம் முரட்டு வாத்தியமாக வாசித்ததில் எனக்கு முழிப்பு வந்தது. தனது வாகனத்தின் அகலத்திற்கு உள்ளே முன்னால் ஒரு ஈ எறும்பு நுழைந்தாலும் ஹார்னால் அலறினார். வெறித்த பார்வையும் முறுக்கிய மீசையும் அலறும் ஹார்னும் அந்தப் பிரதேசத்தையே காதைக் கழற்றி கீழே வைக்க நிர்பந்தப்படுத்தியது. திருமங்கலம் அருகே ஏறி வண்டி நான்கடி நகர்வதற்கும் குறட்டை விட்ட என் பக்கத்து சீட்டு ஆளைக் கூட எழுப்பிட்டது அந்த ஹார்ன் ஒலி. எழுந்து உதடோரத்தில் கோடவாய் வழிந்ததைத் துடைத்துக்கொண்டு அந்த 407வை சுட்டெரிக்கும் பார்வையால் பொசுக்கிவிடுவது போலப் பார்த்தார்.
நம்முடைய மெல்லிசை வாசிக்கும் பஸ் ஓட்டுனருக்கும் வல்லிசையில் விளையாடும் 407க்கும் இப்போது நடுரோட்டில் சங்கீதப் போட்டி ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் கிராஸ் செய்வதும் பஸ் இரண்டு “பாம்..பாம்” அடித்தால் 407 நான்கு முறை நிறுத்தாமல் அடித்தது. நடுரோட்டில் ஹார்ன் இசைவெள்ளம் பிரவாகமாக வழிந்தோடியது. இவ்வளவு முறை சலிக்காமல் ஹார்ன் அழுத்தும் ஓட்டுனருக்கு இருதய நோய் நிச்சயம். ஒருசில சமயங்களில் 407 ட்ரைவர் எழுந்து ஹார்ன் மேல் நின்றுவிட்டது போல அந்த வண்டி பிளிறியது. பஸ்ஸில் இருந்த சொற்ப பயணிகளும் செவிடாக வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு நமது பஸ் ட்ரைவர் அடித்தார்.
கிண்டி எஸ்டேட் அருகில் இந்த சூப்பர் ஹார்னர் போட்டி நிறைவிற்கு வந்தது. எஸ்டேட் பக்கம் வண்டியை ஒடித்து இந்த போட்டியை முடித்துக்கொண்டதாக பஸ் ட்ரைவர் அறிவித்தார். கழுத்து ஒடியும் வரை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார் பாலு ஸ்ருதி டாடா 407. பிப்...பீம்..பிம்.
கிண்டி தொழிற்ப்பேட்டையில் வரிசையாக துரித உணவுக் கடைகள். பிளைன் பிரியாணி (குஸ்கா) என்று எழுதி போர்டில் தொங்கிய நித்யஸ்ரீ செட்டிநாடு ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தினார். பயணிகளை துரிதகதியில் அழைத்து ஏற்றுவதற்காக இவ்வளவு நேரம் கையொடிய ஹார்ன் வாசித்தும் கவலையில்லாமல் மீண்டும் ஒலியெழுப்பினார். இப்போது இந்த சங்கீதம் என் காதுகளுக்குப் பழக ஆரம்பித்துவிட்டது. நிமிடத்திற்கு ஒருமுறை இதைக் கேட்காவிட்டால் எதையோ இழந்தது போல மனசு துடிக்க ஆரம்பித்தது.
ஒரு கொத்துப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். இம்முறை பெண்கள் பக்கம் ரொம்பி வழிந்தது. பேச்சு சத்தம் அதிகமானது. ஏறியவர்களுக்கு பேசுவதற்கு வீட்டிலும் நாட்டிலும் நடக்கும் அநியாயங்கள் தீனி போட்டன.
“ஹக்காங்.. இவன் மண்ணுமோகன் மேரியே இருக்கான். அவ தான் சோனியா. இளுத்த இளுப்புக்கு ஆடுறான் இவன்” தேசிய அரசியல் களத்திலிருந்து உதாரணங்களைப் பொறுக்கி வீட்டு அரசியலுக்கு ஒப்புமைப்படுத்தி சொல்லிக்கொண்டிருந்தாள் ஒரு கிழவி. ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கிழவியின் வாசகங்களுக்கு உயிரூட்டும் பின்னணி இசையாக ஹார்ன் அடித்தார் நமது பஸ் டிரைவர் போர்வையில் வாழும் இசைக்கலைஞர். மெய் சிலிர்த்தது!
பஸ் கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளை ஸ்டாப்தோறும் உதிர்த்துக்கொண்டே வந்தது. கிழவியும் அவளுடன் வந்த குமரியும் இறங்கிக்கொண்டார்கள். ஹார்ன் டிரைவர், நான், நடத்துனர் மட்டுமே பஸ்ஸில் இருந்தோம். இன்னும் இரண்டு ஸ்டாப் மிச்சம் இருந்தது. நான் ட்ரைவரைக் கூர்ந்து கவனிக்கலானேன். கியர் மாற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வெறி வருகிறது. அதைப் போக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் ஹார்னைப் பதம் பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
இவ்வளவு நாட்கள் கண்ணாடி ஏற்றிய காரில் பயணித்தபோது இவ்வளவு விதமான ஹார்ன் சப்தங்களை என் காது கேட்டறியவில்லை. மொஸார்ட்டின் இசைக்கு ஒப்பாக இவ்வளவு கலைஞர்கள் நம் தேசத்தில் ட்ரைவர் ரூபத்தில் நடமாடுவது இந்த இசை ஏழைக்குத் தெரியவில்லை. எனது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். வண்டி எடுக்கும் போது மீண்டும் இருமுறை ஒலித்தார். ஆஹா.. அபாரம்! அபாரம்!! என்னவொரு ஸ்ருதி! என்ன ஒரு லயம்!! நடந்து வீடு வந்து சேரும் வரை காதுகளில் இசைத்துக்கொண்டே இருந்தது.
வீட்டினுள் நுழைந்தவுடன் பெயர் தெரியாத ஒரு சேனலில் நாதஸ்வரக் கலைஞர் ஒருவர் முழுத் தெம்புடன் பீப்பீ வாசித்துக்கொண்டிருந்தார். என் செவிக்கு ஹாரனீயமாய் அது எட்டியது. கொஞ்சம் உன்னித்துப் பார்த்தால் அவருக்கு இளந்தாடியும் இருக்கிறது. கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது.
பின் குறிப்பு: ஹார்மோனியம் போல ஒரு இசைக்கருவியாக ஹார்னை உபயோகித்தால் அதற்கு ஹாரனீயம் என்று பெயர்.
-
10 comments:
சென்னையின் அசுர டிராஃபிக்கில் சிக்கினாலும் முடிந்தவரை டைம் மெயின்டெயின் செய்யும் இந்த டிரைவர்களின் திறமை அபாரமானது! பற்குண பொதுமக்களை அனுசரித்துப் போகும், மேய்க்கும் வேலையும் மிகக் கடினமே.
இதற்கு தலைப்பு 'ஒரு பஸ் பயணம் பதிவாகிறது' என்றும் கொடுத்திருக்கலாம்! :))
@ஸ்ரீராம்.
நன்றாகத்தான் ஓட்டுகிறார்கள். ஹார்னில் கைவைக்கவில்லையென்றால் இன்னும் நன்றாக இருக்கும்.
பஸ் பயணத்தில் ஏற்பட்ட சப்த அனுபவங்கள் பதிவின் கருவானதால் “ஹாரனீயம்” என்று தலைப்பிடப்பட்டது. உங்களது ஆலோசனையும் நன்றாகத்தான் உள்ளது. நன்றி.
:-)
கார்ல போறவுகளுக்கு பஸ்ஸு அப்படித்தேன் தோணும்..
என்னதான் காரிலேயே போனாலும் பஸ் பயணம் தனி சுகம்தான். இந்த noise pollution நினைச்சாதான் பயமாக இருக்கு.
ஹாரனீயம் பெயர் நன்றாக இருக்கு.
ஒரு நாள் பஸ்ல ஏறினதுக்கே 'ஹாரணியம்'னு ஆலாபணை பண்ணினா நித்தியம் வந்தா 'ப்ரேக்கியம்,கியரியம்' எல்லாம் எதிர்பாக்கலாம் போல :))
@அப்பாதுரை
ரொம்ப நாளாச்சு! இருந்தாலும் நாய்ஸ் பொல்யூஷன் ரொம்ப ஜாஸ்தி சார்! :-)
@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம்! :-)
@தக்குடு
ப்ரேக்கியமா? க்ரேக்கியம்னு படிச்சுட்டேன்... :-))
இது போன்ற சுவாரஸ்யங்களை அனுபவிப்பதற்காகவே சில சமயங்களிலாவது பஸ்ஸிலும் ட்ரெயினிலும் போகலாம்,.. எப்பவும் என்ன கார் வேண்டிக்கிடக்குன்னு தோணும்.. :-))
@அமைதிச்சாரல்
ஆமாங்க மேடம்!!! :-)
Post a Comment