Friday, May 25, 2012

வீடு வாங்கலையோ வீடு

”பெருமாட்டுநல்லூர் தெரியுமா?” இந்த ஒரே வினாவில் சென்ற ஞாயிற்றுக்கிழமை என்னை என் காரிலேயே நாடுகடத்தினார் நண்பர் பெருந்தகை ஒருவர்.

“இல்லீங்க.. எங்க இருக்கு?” என்று புருவம் சுருக்கினேன்.

“தெரியாதா?” என்று பிறந்த ஊரை மறந்தவன் போல என்னை ஏளனமாகப் பார்த்தார்.

“என்ன சார்! ஏதோ ஐஸ்வர்யாராயைத் தெரியாதுன்னு சொன்னா மாதிரிக் கேவலமாப் பாக்குறீங்க. பெருமாட்டு நல்லூரும் தெரியாது சிறுமாட்டு நல்லூரும் எனக்குத் தெல்லேது” என்றேன் அப்பாவியாய்.

“கூடுவாஞ்சேரி சிக்னலோட லெஃப்ட்ல கட் பண்ணினா கூப்பிடு தூரத்தில வரும்” என்று கொக்கி போட்டார்.

“கூ..ஊஊஊஊஊ.....டுவாஞ்சேரி பக்கத்துலையா?” என்று வாயாலேயே வண்டி ஓட்டிக் காண்பித்த என் கேள்விக்கு கூடுவாஞ்சேரி என்பது இந்த நந்தன வருஷத்திலிருந்து சென்னையின் சைதாப்பேட்டை, டி.நகர், மயிலாப்பூர் என்பது போன்ற ஷகரான ஏரியா என்றும் இந்த லோகத்தில் ஸகல ஸம்பத்துகளும் அங்கு கிடைக்கிறது என்றும் ஒரு முறை விஸிட் செய்தால் மோட்சம் கிட்டும் என்றும் என்னைத் தள்ளிக்கொண்டு போனார் அந்த (ஃ)ப்ளாட் விற்கும் நண்பர். ஒரு கணிசமான கமிஷன் அவருக்கு காத்திருக்கிறது என்பது அவரது தூண்டில் போடும் துடிப்பானப் பேச்சில் தெரிந்தது.

நம்மிடம் இன்னொரு வீடு வாங்கும் அளவிற்கு ஐவேஜு இல்லை என்றாலும் அவர் என் கையை விடுவதாக இல்லை. “ஒரு இன்வெஸ்ட்மெண்ட்க்காக வாங்குங்க” என்று வற்புறுத்தினார். “இன்வெஸ்ட்மெண்ட்டுக்கு இன்வெஸ்ட் பண்ண ஒரு இன்வெஸ்ட்மெண்ட் வேணுமில்ல” என்று சீரியஸாக விசு பாணியில் கேட்டாலும் அதை ஜோக்காக எடுத்துக்கொண்டு குலுங்கிச் சிரித்துவிட்டு “ஒரு தடவை பாருங்களேன்!” என்று அவரது விழிகளில் என்னுடைய வீடு வாங்கும் கனவோடு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தார். அன்புக்கு அடிமையான நான் அந்தச் சொற்களில் சரண்டர் ஆனேன்!

சூரியன் எனது காரின் ஏசியை சோதித்துப்பார்க்கட்டும் என்று இறுமாப்போடு சரியாக ஒரு மணிக்கு மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் புறப்பட்டோம். அனல் சுட்டெரித்துப் புழுங்கியது. ’அவன்’னில் இட்ட அரிசி போல வெந்துபோனோம். சென்னையின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல்கள் வெறும் பானையோடு குடிக்க ஆளின்றி தாகமாக நின்றிருந்தது. நம்மைப் போல கூண்டில் அடைபடாத மிருகங்கள் வண்டலூரில் அடைத்த மிருகங்களைப் பார்க்க மந்தை மந்தையாய் போய்க்கொண்டிருந்தார்கள். பச்சை விழுந்ததும் காதல் தோல்வியில் ப்ராணஹத்தி செய்துகொள்ளும் பவுடர் கலையாத சினிமா ஹீரோயின் போல ஓடி வந்த அந்த பேரிளம் பெண்ணிற்காக ஒரு சடன் ப்ரேக் போட்டேன். டிசையர் குலுங்கியது. ஜூ தாண்டியதும் ஆக்ஸிலேட்டரை ஒரு அழுத்து அழுத்தியதில் நடு ரோட்டில் நாலு கானல் நீர்க் குட்டைகளைக் கடந்ததும் அதிசீக்கிரத்தில் கூடுவாஞ்சேரி வந்துவிட்டது.

பின்னாலிருந்து ”லெஃப்ட் லெஃப்ட்” என்ற குரலுக்கு சிக்னலில் லெஃப்ட் எடுத்தோம். ”அந்த மளிகைக் கடை பக்கத்துல நிறுத்துங்க” என்றார் ஃப்ளாட் அன்பர். வாசலில் படுத்திருந்த நாய் மேல் ஏற்றாமல் லேசாக ஒதுங்கியதும் அமரியாதையாக  காரில் உட்கார்ந்துகொண்டே ஜன்னலைத் திறந்து அக்னியில் அவிந்து போய்க்கொண்டிருந்தவரிடம் “பெருமாட்டுநல்லூர் இப்படித்தானே போகணும்” என்ற குரல் விட்டார். அவர் அசிரத்தையாக “நேரா போங்க வரும்...” என்று வாயில் புண் இருந்துப் படுத்துவது போன்று சிக்கனமாகப் பேசிவிட்டு தனதுரையை நிறுத்திக்கொண்டார்.

“ஏங்க.. உங்களுக்கு இந்த ஏரியா நல்லாத் தெரியும்னு சொன்னீங்க” என்ற எனது க்ராஸ் கொஸ்டினுக்கு “இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு” என்று இரண்டு ’ஹிஹி’க்களுடன் வழிந்தார். கும்பலாக பெரிய மாடுகள் ஹார்ன் அடிக்க ஒதுங்க மறுத்து தர்ணா செய்தன. “இதுதான் பெருமாட்டு நல்லூரோ?” என்று நக்கலடித்தேன். “பெரிய போர்டு வச்சுருப்பாங்க..இன்னும் போங்க சார்” என்று பின்னின்று வழிநடத்தினார்.

நதியோர நாகரீகங்கள் வழக்கொழிந்து போய் பொட்டல் காடு நாகரீங்கள் முளைக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிந்தது. ஜிங்குச்சாங்..ஜிங்குச்சாங் என்று பச்சைக் கலரிலும் மஞ்சள் கலரிலும் ஏஷியன் பெயிண்ட்ஸ் எக்ஸ்டெர்னல் எமெல்ஷன் அடித்த வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பளீரென்று தென்பட்டன. மாநகர அவுட்டோரில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்த செமி அர்பன் வகையறா இடம் அது. வீடுகள் குறைந்திருந்தாலும் ரோடோரத்தில் “லேஸ்” ஸும் “குர்குரே”வும் “கோலா” பாட்டிலும் சிதறிக் கிடந்தன. “குறைந்த விலை. ரெஜிஸ்ட்ரேஷன் ஃப்ரீ” என்று யார்யாரோ சுயதம்பட்டம் அடித்து அம்புக்குறி போட்டு அவர்கள் சைட்டுக்கு அம்புக்குறி போர்டு வைத்திருந்தார்கள். ஒரு டெம்போ ட்ராவலர் முழுக்க சுயவீட்டார்வலர்களை ஏற்றி என்னை முந்திச் சென்ற வாகனத்தைப் பார்த்தபோது ”என்னைப் போல் ஒருவன்” அக்கூட்டத்திலும் மாட்டியிருக்கக் கூடும் என்று என் நெஞ்சு பரிதாபத்தால் அடித்துக்கொண்டது.
  
வழி காட்டுப்பாதை போல கணக்கேயில்லாமல் நீண்டது. நம்மாளும் பேந்தப் பேந்த பார்த்துக்கொண்டே வந்தார். தூரத்தில் கடலூர், பாண்டிச்சேரியெல்லாம் கண்ணுக்குத் தெரிந்தது. “இது பாண்டிக்கு ஷார்ட்கட்டா?” என்று கேட்டதில் “ஹா..ஹா.. உங்களுக்கு எல்லாமே ஜோக்கு” என்று அந்தக் கேள்வியின் உக்கிரத்தை மாற்றி நகைச்சுவையாக்கிவிட்டார் அந்த மனுஷன்.

அவர் சொன்ன இடம் வந்தபோது இடதுபுறம் திரும்பச்சொன்னார். அந்த திருப்பத்தில் இருந்த மாடி வீட்டில் இருந்து எட்டிப் பார்த்தவர்கள் ஏதோ ஏலியன்களைப் போல வைத்த கண் வாங்காமால் பார்த்தார்கள். எனக்கே கண்ணம் சிவந்தது!

“அதோ! அங்க தெரியுது பாருங்க” என்று என் வெட்கத்தைப் பின் சீட்டிலிருந்து கலைத்தார் ஃப்.நண்பர். அவரது குதூகலத்திற்கு இரண்டி விநாடிகளுக்குப் பின்னர் வண்டி குடைசாய்வது போல  இருந்தது. ஆறடிக்கு ஆறடி யானைப்பள்ளம் ஒன்று. ஏதோ பேராபத்தில் மாட்டிக்கொண்டோமோ என்று பயந்தேன். “அப்படியே கதிர் அறுத்த வயலில் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பிச்சுட்டாங்களோ?” என்று விசாரித்தேன். ”ச்சே..ச்சே.. இன்னும் ஒரு மாசத்தில இங்க சிமெண்ட் ரோடு போடப்போறாங்க” என்று பச்சையாய்ப் புளுகினார். பக்கத்திலிருந்த முட்புதர்களுக்குப் பின்னால் குத்த வைத்து உட்கார்ந்து நாலு பேர் கைலியுடன் சரக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். கார் ஜன்னலைத் திறந்தால் சாராய நெடியில் நமக்கும் நட்டுக்கும் என்று தோன்றியது.

சைட் நெருங்க நெருங்க ஓரு குட்டி பீஹார் இரும்பு டெண்ட்களில் ஜாகையிருப்பது தெரிந்தது. ஏதோ ஒரு வடக்கத்திய ”ஹை..ஹை” பாஷை பின்னணியில் ஒலித்தது. கூடவே சப்ஜி வாசனையும் சேர்ந்து மணத்தது. அம்மணமாக குழந்தைகள் மூக்கொழுக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அம்மணிகள் தலைக்கு முக்காடோடு சமைத்துக்கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீசையில்லாத ஆண்கள் சிலர் ரிலாக்ஸ்டாக தரையில் உட்கார்ந்து காய் நகர்த்தி ஏதோ கேம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

“வேலை செய்யறது எல்லாருமே நார்த் இண்டியன்ஸ் போலருக்கு?” என்றேன்.

“லேபர் சீப். அதிக நேரம் வேலை செய்யறாங்க. எல்லாத்தையும் விட முக்கியமா இவ்ளோ கொடு அவ்ளோ கொடுன்னு கொடி பிடிக்கறதில்லை.” என்றார்.

கலால் துறை செக்போஸ்ட் போல ஒரு நீண்ட கழிக்கு சிகப்பு வர்ணம் அடித்து வழிமறித்தார்கள். கையெழுத்திட்டு உள்ளே சென்று முக்கால்வாசி முடிந்த ஃப்ளாட்டுகளை பார்வையிட்டோம்.

“இது இன்னும் எவ்ளோ வருஷத்தில டெவலப் ஆகும்?”

எண்திசைகளை நோக்கி கையை ஆட்டி நீட்டி “இங்க ஹாஸ்பிடல் இருக்கு, இங்கேயிருந்து ரெண்டு கிலோ மீட்டர்ல பாரதிய வித்யா பவன் இருக்கு, ஒரு ஷாப்பிங் மால் ஒரு கிலோ மீட்டர்ல வருது..” என்று ஒரு பத்து நிமிஷம் வாயாலேயே அனைத்து வசதிகளையும் காற்றில் செய்து காண்பித்தார் அந்த சுற்றிக் காண்பித்த மஹானுபாவர்.

“சார்! இது கேட்டட் கம்யூனிட்டி. எல்லா அம்னிட்டீஸும் கேம்பஸ் உள்ளயே வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த விற்பனைப் பிரதிநிதியிடம் இருந்து என் சிந்தனை கழன்று வந்து ஆத்மா வைத்து சுஜாதா எழுதியிருந்த ”எல்லாம் கிடைக்கும் ஒரு பலமாடிக் கட்டிடம்” சஃபி கதைக்குத் தாவியது.

“சரி சார்! நா அப்புறமா சொல்றேன்” என்று கைகுலுக்கிப் விடைபெறும் போது தூரத்தில் இரண்டு வடக்கத்திய ஜோடி வாக்கிங் போக அவர்களது செல்வங்கள் மணலில் உருண்டு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தன.

“சார்! சீக்கிரம் சொல்லிடுங்க. இந்த ஃபேஸ்ல இன்னும் நாலு வீடு தான் பாக்கியிருக்கு” என்று பின்னாலிருந்து குரல் கொடுத்தார். எனக்கு இன்னொரு வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா என்று யாராவது காழியூரிடம் கேட்டுச்சொன்னால் சௌகரியமாக இருக்கும்!!

“திண்டிவனம் பக்கத்துல ஒரு லே அவுட் போட்ருக்காங்க. 3BHK, 2BHK எல்லாம் இருக்கு. அடுத்த வாரம் ஃப்ரீயா? வரீங்களா?” என்று கேட்டவரின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட எனக்குத் திராணியில்லை. ஜீவனற்றுப் போயிருந்தேன்.

படம்: நெட்டில் சுட்டது! :-)

-

38 comments:

வவ்வால் said...

ஹி...ஹி நீங்களும் ஷ்ரிராம் சங்கரி போய் பார்த்துட்டு வர்ரிங்களா. அது ரெண்டு வருஷமா அப்படியே தான் நவுந்துக்கிட்டு இருக்கு, பேஸ் ஒன் 2 வருஷம் முன்னப்பார்த்தேன் இன்னும் முடியலை ,அப்படியே முடிச்சுக்கொடுத்தாலும் குடியேற முடியாது,மத்த பேஸ்,வேலை முடியனும் இல்ல.

பெருமாட்டு நல்லூர் ரோட்டில் அப்படியே போனா திருப்போரூர் போகும்.

அங்கே போய் பார்த்ததுக்கு வண்டலூர்,ஊரப்பாக்கம் ஏரியா பார்க்கலாம்.

Seshadri said...

RVS I THOUGHT YOU ARE LOOKING FOR ONE CHINNA VEEDU, IS ANY CONNECTION...

Ravichandran Somu said...

RVS, The same brokers :)))

சிவகுமாரன் said...

வாங்கிப் போட்டீங்கின்னா பின்னாடி புள்ளைங்க படிப்பு, கல்யாணச் செலவுக்கு உதவும்.
நல்ல அனுபவம்.

A.R.ராஜகோபாலன் said...

“இது பாண்டிக்கு ஷார்ட்கட்டா?” என்று கேட்டதில் “ஹா..ஹா.. உங்களுக்கு எல்லாமே ஜோக்கு” என்று அந்தக் கேள்வியின் உக்கிரத்தை மாற்றி நகைச்சுவையாக்கிவிட்டார் அந்த மனுஷன்.

அற்புதமான அவசிய அவஸ்தை அனுபவம் அமர்க்களம்.

துளசி கோபால் said...

ஹாஹா

நம்ம வீடு(????) இங்கே:-))))

http://thulasidhalam.blogspot.com/2006/05/blog-post_11.html

ஸ்ரீராம். said...

அனுவத்தைச் சொன்ன விதம் சுவாரஸ்யம் கூட்டியது.வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள். "ஷகரான"....!

ஸ்ரீராம். said...

.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நீங்கள் சிரிப்பு பதிவராக மாறி எவ்வளவு நாள் ஆகிறது?

ஐவேஜு என்றால் என்ன ஐயா?
பல 60 களின் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் படித்திருக்கிறேன்;குன்ஸாச அர்த்தம் தெரிந்தாலும் சரியான பொருள் தெரிந்து கொள்ள ஆசை.

Anonymous said...

High wage is pronounced as ivage in tamil. It means the person is getting high salary.

siva said...

அண்ணே, அவ்ளோ தூரம் போயிட்டீங்க... அப்டியே மன்னார்குடிக்கும் போயிட்டு வந்திருக்களாம்லே?

ஆத்மா said...

உழைக்கிறது எல்லாம் எதுக்கு சார்..வாங்கிடுங்க..

வை.கோபாலகிருஷ்ணன் said...

பட்ட அனுபவத்தை நகைச்சுவையாகக் கூறியுள்ளது, படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

பாராட்டுக்கள்.

இதுபோல பல மனைகளை அடிக்கடி பார்வையிட்டுப் பகிர வாழ்த்துகள்.

அன்புடன் vgk

J.P Josephine Baba said...

வீட்டு புரோக்கர் ஊருக்கு ஊர் இப்படி தானா?

அனைவருக்கும் அன்பு  said...

அனுபவம் பழசு தான் ஆனால் சொல்லும் விதம் புதுசு ............விழிப்புணர்வு பதிவு

சாந்தி மாரியப்பன் said...

இங்கேயும் property கண்காட்சின்னு நடத்துவாங்க. ஒவ்வொரு பில்டர்களும் தனித்தனி ஸ்டால்கள்ல உக்காந்துக்கிட்டு அவங்களோட ப்ரொஜெக்டைப் பத்தி கொடுக்கற பில்டப்பைப் பார்க்கணுமே.

RVS said...

@வவ்வால்
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. திராபையான ஏரியா. கூவிக்கூவி விக்கறாங்க.. வொர்த்தா தெரியலை... கருத்துக்கு நன்றி.:-)

RVS said...

@Seshadri
ஏம்ப்பா...ஏன்...ஏன்..ஏன்... :-)

RVS said...

@ரவிச்சந்திரன்

இல்ல. இது வேற ரவி!! :-)

RVS said...

@சிவகுமாரன்

கரெக்ட்டுதான். டப்பு வேணுமே சிவா. :-)

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நண்பா! பாராட்டுக்கு நன்றி.

RVS said...

@துளசி கோபால்
உங்கவீடும் அமர்க்களம் மேடம்! :-)

RVS said...

@ஸ்ரீராம்.

பல இலக்கியங்களைப் படிக்கிறீங்க... இதையும் பாராட்டுவதற்கு நன்றி. :-)

RVS said...

@அறிவன்#11802717200764379909

சார்! சரக்கு ரொம்ப இருந்தாதான் சீரியஸா எழுத வரும். நமக்கு உள்ள அறிவுக்கு இப்படித்தான் ரொம்ப நாளா எழுதிகிட்டுவரேன். :-)

ஹையையும் வேஜஸ்ஸையும் சேர்த்து சொன்ன வார்த்தை அது. தி.ஜாவிடம் கற்றுக்கொண்டது.

RVS said...

@Anonymous
Thanks for the explanation anony!

RVS said...

@siva
டைம் இல்ல சிவா! இல்லைன்னா போயிருப்பேன். :-)

RVS said...

@சிட்டுக்குருவி

வாங்கலாம். துட்டு தான் பிரச்சனை. உங்க பேரு மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வாங்கனும்.

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
பாராட்டுக்கு நன்றி சார்! ஒன்னுக்கே நாக்கு தள்ளிப் போச்சுங்க.. :-)

RVS said...

@J.P Josephine Baba said...

அப்படித்தான் போலிருக்கு! ஒரு நாள் அலைந்ததற்கு செத்துப்போன எனக்கு தினமும் இதுபோல அலைபவர்களைப் பார்க்குபோது பரிதாபமாக இருந்தது.

RVS said...

@கோவை மு.சரளா

நன்றிங்க.. நம்ம அனுபவம் எல்லாமே பழசுதாங்கோ! :-)))

RVS said...

@அமைதிச்சாரல்
எவ்ளோ ப்ராப்பர்டி இப்படி வாங்கிப் போட்ருக்கீங்க... ரகசியமாவே சொல்லுங்க... :-)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||சார்! சரக்கு ரொம்ப இருந்தாதான் சீரியஸா எழுத வரும். நமக்கு உள்ள அறிவுக்கு இப்படித்தான் ரொம்ப நாளா எழுதிகிட்டுவரேன். :-)
||

உண்மையில் இப்படி எழுதுவது ரொம்பவும் கடினம். என்னைப் போன்றவர்கள் ரொம்பவும் முயற்சித்தால்தான் சிறிதாவது நகைச்சுவை வரும்.

உங்களுக்கு இயல்பாக வருகிறது..

அப்படியே ஷகரான'வுக்கும் பெயர்க்காரணம் சொல்லவும் !

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அப்படியெ த்ரெடெட் கமெண்ட்'க்கு செட்டிங்க்ஸ்'ஐ மாற்றவும்.

உங்களுக்கும் பதிலிடுவது எளிது;படிப்பவர்களுக்கும் சுவை கூடும்..

RVS said...

@அறிவன்#11802717200764379909
ஹிந்தியில சிட்டிக்கு ஷகர்னு பேருங்க.. :-)

ஸ்ரீராம். said...

//ஹிந்தியில சிட்டிக்கு ஷகர்னு பேருங்க.//

அது ஷெஹர். ( 'ஸாரே ஷெஹருமே ஆப் ஸா கோயி நஹி... கோயி நஹி...'பைராகி பட, முகம்மது ரஃபியின் அழகிய பாடல்!) ஷகரான என்ற வார்த்தைக்கு அயனான என்று பொருள் கொள்ளலாம். அதாவது 'சிறந்த'! இந்த வார்த்தையும் சுஜாதாவால் கையாளப் பட்டிருக்கிறது! மத்யமர் கதையில் நஞ்சுண்டராவ் வீடு வாங்கும் 'தர்ட்டி ஃபார்ட்டி' கதை!

RVS said...

@ஸ்ரீராம்
வாத்தியாருடைய சொல்லாடல்தான்.

அந்த ஷெஹர்தான் ஷகரா உபயோகப்படுத்தப்பட்டதுன்னு நினைக்கிறேன். :-)

தக்குடு said...

ஆக மொத்தம் மைனர்வாள் ஒரு அழகான 'சின்னவீடு' பாத்துண்டு இருக்கார்னு தெரியர்து. :P

வவ்வால் said...

ஆர்விஎஸ்,

//எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க. திராபையான ஏரியா. கூவிக்கூவி விக்கறாங்க.. வொர்த்தா தெரியலை... கருத்துக்கு நன்றி.:-)//

ஹி...ஹி அந்த இடத்தை போன வருஷமே போய் பார்த்துட்டேன் ,உங்களுக்கு ஒருத்தர் தூபம் போட்டாப்போல எனக்கும் போட்டார்.ஏரியா பத்தி நல்லா தெரியும் என்பதால் மி தி எஸ்கேப்பு!

அங்கே எல்லாம் மழை பேஞ்சா படகில் தான் போகணும், மழை பெய்யுமானு கேட்காதிங்க :-))

நீங்க சிக்னலில் லெஃப்ட் டர்ன் எடுத்தீங்களே அதுக்கு முன்னர் வரும் லெஃப்ட் டர்னில் உள்ளே போகனும் எனக்கு, ஒரு நாளுக்கே சலிச்சுக்கிறிங்க, தினம் போய் வரும் நான் எல்லாம் ...ஆர்ம்ஸ்ட்ராங்க விட ஸ்ட்ராங்கு தான் அப்போ :-))

ஆனால் சார் யார் வாங்குறாங்கன்னு தெரியலை விலை எல்லாம் 40 எல்லுக்கு மேல தான். புரோக்கரை (அப்படி சொன்னா மொறைப்பான்ங்க பிராப்பர்ட்டி கன்சல்டன்ட் ஆம்)கேட்டால் எல்லாம் ஐ.டி ஆளுங்க தான் புக்கிங் , இன்னும் 2 தான் இருக்கு போனால் வராதுனு புடிச்சுப்போடுறதுலவே குறியா அலையுறாங்க.

தோ போன ஞாயிற்றுக்கிழமை சங்கரவித்தியாலயா பின்னாடின்னு சொல்லிட்டு ஒரு யூகலிப்டஸ் காட்டுல வெறும் இடம் மட்டுமே 1200 ச.அடி இடம் 30 எல் சொல்லுறான் ஒருத்தன்.ஆனால் அங்கேயும் பல மக்கள் வீடுகட்டி இருக்காங்க.

அந்த பக்கம் காட்டுப்பாக்கத்தில பி&ஜி ஒரு பிராஜக்ட் போட்டு இருக்காங்க ,வரிங்களா பார்க்க போலாம் :-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails