Monday, October 22, 2012

இசையறியும் பறவை

அதீத திறம் படைத்தக் கவிஞர்களுக்கு கவிச் செருக்கு வழிய வழிய இருக்குமென்பார்கள். தானெழுதிய ஒரு சில வரிகள் பரவலாகப் பாராட்டப்பட்டால் தலை கால் புரியாமல் ஆடி மற்றவர்களை சொல் வம்புக்கிழுத்து லொள்ளு செய்பவர்கள் அநேகம் இருக்கிறார்கள். ”நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?” என்று திருவிளையாடல் ரேஞ்சிற்கு எகிறுவார்கள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அவையடக்கத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். போன பதிவிலேயே பாற்கடலை ந
க்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை போல எழுத வந்தேன் என்று சொன்னவன் அடுத்த பாடலில் ”நொய்தின் நொய்ய சொல்ல நூற்கலுற்றேன்” என்று எளிமையான சொற்களைக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கினேன் என்று பவ்யமாக எழுதுகிறான். வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.

அசுணம் என்கிற ஒரு பறவையைப் பற்றித் தெரிந்திருந்தால் நீங்கள் சங்க இலக்கியம் படித்த தமிழ் ஆள் என்று அர்த்தம். அது விலங்கா அல்லது பறவையா என்பதில் சிறு சந்தேகம் இருக்கிறது. மாசுணம் என்பது விலங்கு என்று ஒரு சிலர் போராடுகிறார்கள். அசுணத்தின் குண விசேஷம் என்னவென்றால் அது இசையறியும் பறவை. நல்ல இசையைக் கேட்டால் அது அதில் மகிழ்ந்து திளைத்து தன்னை மயங்கி இருக்கும். அப்பறவையைப் பிடிக்க வேண்டுமானால் நல்லிசை வழங்கினால் அது மயங்கியிருக்கும் நேரத்தில் பிடித்துவிடுவார்களாம்.

நல்லிசைக்கு மிகவும் பிரயர்த்தனப்படவேண்டும். எவர்க்கும் அபஸ்வரம் அசால்ட்டாக வரும். பறையொலி போன்ற அதிர்வொலி எழுப்பினால் மூர்ச்சையடைந்து விடுமாம். அவ்வேளையில் லபக்கென்று பிடித்துவிடுவார்களாம். ”ஒத்தை சொல்லால.. என் உசிரை”யும் “எவ அவ” என்று கேட்கும் பேட்டை ராப்பும் ஒலிக்கும் இக் கொட்டு காலத்தில் அசுணம் வாழ்ந்தால் அது உயிர் பிழைக்குமா? வகைவகையான விருத்தத் தொகை கவிதைகளைக் கேட்ட, யாழிசைப் போன்ற தேனிசை கேட்கும் அசுணத்தைப் போன்ற சான்றோர்களின் செவியில் என்னுடைய கவிதைகள் விழுந்தால் அது பறையொலி போன்று இருக்காதோ? அவர்களும் துன்புறுவார்களோ? என்ற கேள்வியின் மூலம் தான் எழுதவிருப்பது விருத்தத் தொகைக் கவிதை என்பதையும் இப்பாட்டினூடே சொல்கிறான் கம்பன். நல்லிசையை இரசிக்கத் தெரியாத மானுடர்கள் கொம்பும் வாலும் இல்லாத விலங்குகள் என்று பர்த்ரு ஹரி நக்கலடிப்பார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ

(துறை - வகை, நறை - தேன், உறை - இடம்)

அடுத்த பாடலில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும் என்று “பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?” என்கின்ற வரிகளில் “பைத்தியக்காரர்கள் சொல்வதையும், அறிவிலிகள் சொல்வதையும், பக்தர்கள் சொல்வதையும் யாரும் ஆராய மாட்டார்கள். அது போல இதையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று முத்தமிழறிஞர்களுக்கு குற்றம் பொருத்தருள வேண்டுகிறான். பைத்தியம் மற்றும் அறிவில்லாதவர்கள் லிஸ்டில் பக்தர்களை ஏன் வைத்தான்? பக்தியில் திளைப்பவர்கள் ”எல்லாம் என் தெய்வமே”யென்று ஒரு பித்தனைப் போன்ற உணர்வு நிலையில் இருப்பதாலோ? The lunatic, the lover, and the poet are of imagination all compact என்று ஷேக்ஸ்பியர் பைத்தியத்தையும் காதலர்களையும் கவிகளையும் ஒரே தராசில் வைத்தான்.

அவையடக்கத்தின் கடைசி பாடலாகத் தரையில் கோடு கிழித்து ஆடும் அரங்கம் வரைந்து விளையாடும் சிறுவர்களைப் பார்த்து சிற்பிகள் அவர்கள் வரைந்ததில் குற்றம் கண்டுபிடித்து ஏளனம் செய்யமால் பாராட்டவும் செய்வார்கள் அல்லவா அது போல சான்றோர்கள் நான் இயற்றியக் இக் காதையை இலக்கணப்படி அமையவில்லை என்று கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான் கம்பன்.

அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?

காப்பியத்தை ஆரம்பிக்கும் முன் தான் இயற்றிய நூலைப் பற்றிக் கூறுகையில்

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.

ஒழுக்கநெறியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றத்தைப் பற்றிய இராமாவதாரம் என்று பெயர் கொண்டு எதுகை மோனையுடன்(தொடை) செய்யுள்களைக் கொண்ட குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன். இதில் இடை நிகழ்ந்த என்பதற்கு பொருள் கொள்வதற்காக நடையில் நின்று உயர் நாயகனை திருமால் பெயருக்கு ஏற்றி பரசுராம அவதாரத்திற்கும் பலராம அவதாரத்திற்கும் இடையில் நிகழ்ந்த இராமாவதாரத்தைக் குறிக்கும் பொருட்டும் சிலர் உரை சொல்வர். தோம் என்றால் குற்றம். தோம் அறு. குற்றமற்ற. இப்பாடலை கூர்ந்து பார்க்கும் போது தான் எழுதியக் காப்பியத்திற்கு கம்பன் ”இராமாவதாரம்”என்று பெயரிட்டதாக அறியப்படுகிறது.

”அவதார புருஷ”னில் வாலி அவையடக்கமாக எழுதிய ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது.

“நான்கு அங்குலம் நகர்ந்ததையே, நகர் வலமாய் நினைக்கும் நத்தை;”

#நான் நத்தை கூட இல்லை. சொத்தை!!

##அடுத்த கம்பராமாயண அப்டேட்டிலிருந்து பாலகாண்டம்.

### கம்பராமாயணம் (2)

26 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்லிசையை இரசிக்கத் தெரியாத மானுடர்கள் கொம்பும் வாலும் இல்லாத விலங்குகள்

கம்பராமாயண அப்டேட் ரசிக்கவைக்கிறது .. பாராட்டுக்கள்..

Yaathoramani.blogspot.com said...

கம்ப இராமயணம் தாங்கள் படிக்கத் துவங்கியது
எங்களுக்கும் அதிகம் பயனுள்ளதாக உள்ளது
அறியாதனவற்றை எளிதாக அறிந்து கொள்கிறோம்
மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் பாணியில் விளக்கங்கள் அருமை... நல்ல கல...கல...

நன்றி...

Samy said...

Wonderful writing. I enjoyed. Samy

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான கட்டுரை நண்பரே..

அசுணம் தொடர்பான விரிவான எனது கட்டுரையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

http://www.gunathamizh.com/2008/05/blog-post_02.html

சேலம் தேவா said...

கம்பரின் பாடல்களை உங்கள் எழுத்துநடையில் படிக்க வெகு சுவாரஸ்யம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை மைனரே...

தொடரட்டும்....

அப்பாதுரை said...

புதுப் பரிமாணம் ஆர்வீஎஸ். சுகமான வாசிப்பு.

(ஹிஹி.. தன்னோட பாட்டுக்குத் தானே கம்பராமாயணம்னு பேர் வச்சிருப்பாருன்றீங்க?)

சாந்தி மாரியப்பன் said...

அருமை.

ADHI VENKAT said...

அருமை. தொடருங்கள். நாங்களும் வருகிறோம்.

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். :-)

RVS said...


@Ramani
நன்றி சார்! :-)

RVS said...


@திண்டுக்கல் தனபாலன்
தொடர் வாசிப்பிறகு நன்றி தனபாலன். :-)

RVS said...


@Samy
Thank you Samy. :-)

RVS said...


@முனைவர்.இரா.குணசீலன்

தங்களது கட்டுரையையும் படித்தேன். நன்றாக இருந்தது. நன்றி.

RVS said...


@சேலம் தேவா
நன்றி தேவாதி தேவா!:-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்

நன்றி தலைநகரமே.

RVS said...

@அப்பாதுரை

நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தட்டிக்கொண்டே வந்தது. இப்போதுதான் நேரம் வாய்த்தது. கம்பனை அவன் பெருமை அறிந்தவர்கள் ஏன் அப்படிப் புகழ்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல அப்பா சாரே! :-)

அவரோட பாட்டுக்கு நாம்ப வச்ச பேர்ணும் சொல்றாங்க.. :-)

RVS said...


@அமைதிச்சாரல்
நன்றிங்க மேடம்.

RVS said...


@கோவை2தில்லி
நன்றிங்க. தொடர்கிறேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

[[ வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.]]

இல்லை.
இராம காதை வால்மீகியால் எழுதப்பட்டு ஏற்கனவே புகழ் பெற்ற ஒன்று.

கம்பன் வாழ்ந்த காலத்திலேயே வால்மீகியின் இராமாயணம் நாடெங்கும் படிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஒன்று;ஒரு மாபெரும் காவியம் இயற்ற வேண்டும் என்ற எண்ணதில்தான் கம்பன் இராமாவதாரத்தை எழுதப் புகுந்தான்.

குலோத்துங்கள் உதவி செய்தாலும், ஒட்டக் கூத்தர் போன்ற அரன்மனைப் புலவர்களின் இடையூறு வேறு அவனைப் படுத்தியது.

இந்த நிலையில், பின் வரக் கூடிய பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காவியத்தை எழுதப் புகுந்த கம்பன் இராமனின் கதையை எடுத்துக் கொண்டதும், அதற்கு இராமாவதாரம் என்று பெயரிட்டதும் சிந்தனைக்குரியது.

அவையடக்கத்திற்காக கம்பன் மேற்கண்ட பாடல்களை எழுதியிருந்தாலும், கம்பனின் நோக்கம் வால்மீகி எழுதிய இராமனின் வாழ்க்கைக் கதையை எழுதுவது மட்டுமல்ல.

தமிழ்ச் சமூகத்திற்கு ஒப்பற்ற ஒரு வாழ்வியல் தத்துவத்தைக் காவியத்தின் ஊடாகத் தரும் ஒரு பெரும் பொறுப்பை ஏற்கொண்டே கம்பன் காவியத்தைத் துவங்கியிருக்க வேண்டும்.

சட்டம் பயில்பவர்களுக்கு எளிதில் புரியும் ஒரு தத்துவம் -இன்ப்ளிகேஷன் பிஹைன்ட் த லா- என்ற ஒன்று. ஒரு சட்ட விதியில் இரு சாரார் மல்லுக் கட்டும் போது, நீதி மன்றங்கள் சட்டம் சொல்லும் நேரடிப் பொருளைத் தாண்டி, சட்டம் இயற்றப்பட்ட நோக்கம்,தத்துவம் என்ற தளங்களுக்குள் செல்கிறது.

அதைப் போலவே கம்பனின் காவியத்திற்கும் ஒரு நோக்கம், ஹிட்டன் அஜன்டா இருக்கிறது.

தமிழர்களின் வாழ்வு நெறியைச் செம்மையாக்கும் பொருட்டு,கொல்லாமை,பிறன்மனை விழையாமை, தீயன பொறுக்காமை(தீயன பொறுத்தி நீ-வாலி வதைப் படலம்), இரு மாதரை சிந்தையாலும் தொடாமை( இந்த இப் பிறப்பில் இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன் என்று செப்பிய செவ்வறம் அவர் திருச்செவி சாற்றுவாய்-சுந்தர காண்டத்தின் சீதை, அனுமனிடம்), ஒரு அண்ணன், ஒரு மகன், ஒரு சீடன், ஒரு அரசன் என அனைத்து வாழ்வின் நியதிகளையும், ஒரு மனிதனாக இருந்து இராமன் மற்றும் பல பாத்திரங்கள் வாயிலாக விளக்கிச் செல்கிறான் கம்பன்.

கம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய!!!

(கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட்டு கம்பனைத் தொடருங்கள்)

:))

[[குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன்]]

இதிலும் அரசனான குலோத்துங்கள் உங்களைப் பாடாமல், சடையப்பனைப் பாடல்களிள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன் என்று அரசனிடமும், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறைதான் உங்களைச் சொல்லியிருக்கிறான் கம்பன்,நீங்கள் செய்த உதவிகளெத்தனை, அரசனை விட கம்பனுக்கு புரவலாக இருந்து அவனை ஆதரித்த உங்களை நூறு பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டிருக்க வேண்டாமா என்ற சடையப்பரிடமும் ஏற்றி விட்டதாகக் கூறும் செவிவழிக் கதைகள் உண்டு! கம்பனின் பதில்- சடையப்பர் நூற்றில் ஒருவரல்ல, ஆயிரத்தில் ஒருவர் ! என்றிருந்ததாம்.
:))

RVS said...

@அறிவன்

அ.சா.ஞா படித்தேன். கம்பன் கலையும் படித்தேன். ரொம்பவும் விஸ்தாரமாக எழுத முயலவில்லை. இதுவரை இரண்டு பதிவுதான் எழுதியிருக்கிறேன். கதை மாந்தர்கள் வரும் பகுதிகளில் எனக்குத் தெரிந்த பாணியில் எழுதலாம் என்று விருப்பம். நிறைய விஷயங்களைப் போட்டு அடைக்க விரும்பாமல் “கம்பராமாயணம் ஃபார் டம்மீஸ்” போல ட்ரை பண்ணுகிறேன். நிறைய சான்றோர்கள் ஆன்றோர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னைப் போன்ற ஒரு சாதாரணனின் எளிய முயற்சி. உங்களைப் போன்றோரின் கருத்துரைகள் இப்பதிவுகளைச் செறிவூட்டும். மிக்க நன்றி. :-)

RVS said...

@அறிவன்
அரசர்கள் ஆட்சியின் போது வளமாக இருந்த தமிழகத்தில் சிற்றின்பத்துக்கு முக்கியத்துவம் பெருகியது. அதனால் ஒழுக்கக்கேடுகள் நிறைந்து நற்பண்புகள் அருக ஆரம்பித்தது. ஆகையால் ஒழுக்க நடையில் நின்றுயுர்ந்தவனின் புகழைப் பாடி சீர்திருத்தம் செய்ய கம்பன் விழைந்தான் என்றும் கீரன் தனது சொற்பொழிவில் பொழிந்திருக்கிறார்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| கம்ப காதை ஒரு இலக்கியம் மட்டுமல்ல; ஒரு வாழ்வியல் நெறியாக அதன் பாத்திரங்கள் சொல்லும் சொல்லாத கதைகள் நிறைய!!!

(கம்பன் புதிய பார்வை - பேரா.அ.ச.ஞானசம்பந்தனின் நூலைப் படித்து விட்டு கம்பனைத் தொடருங்கள்)

:))
||

பின்னூட்டமிட்ட போது உங்களது கம்பனின் பதிவுகளை மேலும் சுவையாகவும், செறிவாகவும் எழுத உதவி செய்யும் என்ற நினைவே சிந்தனை முழுவதும் இருந்தது. பின்னூட்டத்தை எழுதிய பின் திரும்ப படிக்கவும் கூட இல்லை. பொங்கிய மகிழ்ச்சியின் விளைவு !

இப்போது உங்கள் பதில்களைப் படித்த பின் என்னுடைய பின்னூட்டத்தைப் படித்த பின்புதான், ' ஒய் ஆர்விஎஸ், அசஞா'வையெல்லாம் படித்து விட்டுப் பின்னர் வந்து எழுதும் ஓய்' என்ற ஒரு தொனியாகவும் என் பின்னூட்டத்தை அர்த்தப் படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பது புரிந்தது. :(

என்னுடைய நோக்கம் அதுவல்ல என்று தெளிவு படுத்தவே இது. புற உலகை மறந்ததன் நிலை..வருந்துகிறேன். :))

RVS said...

@அறிவன்
நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை. உண்மையிலேயே உங்களது கருத்து பதிவுக்கு மதிப்பு கூட்டியது. தொடர்ந்து இதுபோல கருத்துரைத்து ஊக்குவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னை முற்றிலும் தயார் படுத்திக்கொண்டு இன்னும் கொஞ்சம் நிதானமாக எழுதப் போகிறேன்.

மிக மிக நன்றி. :-)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

[[ஹிஹி.. தன்னோட பாட்டுக்குத் தானே கம்பராமாயணம்னு பேர் வச்சிருப்பாருன்றீங்க?]]

அப்பாதுரை சார், இல்லை கம்பன் வைத்த பெயர் இராமாவதாரம் என்பதே.

இராமாயணம் என்ற பொதுப்பெயரை இராமகாதைக்கு வழங்கிய மக்கள், இதை கம்ப இராமாயணம் என்றாக்கி விட்டார்கள் !

இராமநாடகம் என்றொரு நாடக வடிவ நூல் ஒன்றும் இருக்கிறது தெரியுமோ?!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails