Monday, January 21, 2013

புத்தக ஜுரம்

”36வது புத்தகக் காட்சின்னா 36 தடவை வொய்யெம்ஸியேவுக்குப் போய் விழுந்து சேவிப்பீங்களா?” என்ற கேள்விக் கணை என் மீது விழுந்து முள்ளாய்த் தைத்த போது வருஷம் 16 என்கிற காவியத்தை 16 தடவை கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து தியேட்டரில் கைகொட்டி ரசித்துச் சாதனை செய்த ஆதிகால நண்பனொருவன் ஞாபகத்துக்கு வந்து காதுகிழிய விசில் அடித்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது. புன்னகையே பதிலாக உதிர்த்துவிட்டு கொண்ட குறிக்கோளிலிருந்து விலகாமல் நந்தனம் நோக்கி சிங்கிலாகப் பயணப்பட்டேன்.

போன முறைக்கு இந்த முறை ”உள்ளே” “வெளியே”வை சௌகர்யமாக மாற்றியிருந்தார்கள். பல கார்கள் வீல் கடுக்க வரிசையில் காத்திருந்தது. உள்ளே அவசரகதியில் நுழைந்து கொண்டிருந்த கார்களை ஓரங்கட்டி எப்போதும் போல ஒன் வேயில் வெளியே வந்தார் சென்னையின் அதிகாரப்பூர்வ அடையாளமான ஒரு ஆட்டோக்கார். வழக்கம்போல ட்ராஃபிக் போலீஸ்கார் அவரிடம் அன்பைப் பொழிந்து வெளியே வர வழி ஏற்படுத்திக்கொடுத்தார். ஒலிம்பிக் போட்டியின் தடையோட்டத்தில் தங்க மெடல் கெலித்த சந்தோஷத்தில் திளைத்தார் அந்தத் திருவாளர் ஆட்டோ.

இரண்டு சக்கரங்கள், நான்கு சக்கரங்கள், ஜலம் சிந்தும் மெட்ரோ வாட்டர் லாரி இவற்றின் ஊடே புகுந்து வீரதீரத்துடன் நடைபோடும் இருகாலர்கள் என்று புழுதிப் புயலில் குருக்ஷேத்திரம் போல காட்சியளித்தது புத்தகக் காட்சி. ஒரு பெருமூச்சிக்கிடையே போர் வீரனாய் கொட்டகைக்குள் நுழைந்தேன். நண்பர் காசிநாதன் ஒரு பழுத்த அரசியல் எழுத்தாளர். தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு மூலையும் அவர் மூளைக்குள்ளே ஆழமாய்ப் படிந்திருக்கின்றன. அவரும் இந்த ஜோதியில் என்னுடன் கலந்துகொண்டார். போனதடவை விட்ட தலைப்புகளை இந்த முறை கவரலாம் என்று நுழைந்தால் ஒரே உஷ்ணம்.

ஒட்டுமொத்த சென்னையே புத்தக ஜுரத்தில் நடமாடுவது போலிருந்தது அந்தக் கூடாரம். எல்லாக் கடையிலும் கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் பிள்ளையார் படம் போல பொன்னியின் செல்வன் வைத்திருந்தார்கள். கம்பராமாயண இஸ்மாயிலையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியையும் குறிவைத்து என்னுடைய புத்தகத் தேடல் தொடர்ந்தது. ஏறும் கடையெங்கும் இஸ்மாயிலையும் ம.பொ.சியையும் விசாரித்தேன். காணவில்லை. பூங்கொடி பதிப்பகத்தில் ம.பொ.சி “சிலப்பதிகாரத் திறனாய்வு”ஆக கிடைத்தார். கடைசிவரை இஸ்மாயில் கிடைக்கவில்லை. மொபைல் தொலைத்த பெண்மணி, கிருபாகரனைத் தொலைத்த மல்லிகா என்று தொடர்ந்து ஸ்பீக்கர் அறிவிப்பு அலறியது. அவரிடம் மு.மு. இஸ்மாயிலைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லலாமா என்று நினைத்தேன்.

என்னுடைய தேடுதல் லிஸ்ட் விளம்பர காம்ப்ளான் பாய் போல காட்சிக்கு காட்சி புஷ்டியாக வளர்கிறது. எம்.வி.வெங்கட்ராமின் காதுகளை இரண்டு புத்தகக்காட்சிகளாக தேடுகிறேன். ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகளும் எங்கோ ஒளிந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது ம.பொ.சி, மு.மு.இஸ்மாயில்.

நற்றிணை பதிப்பகத்தார் சுத்தமாகக் கடை விரித்திருந்தனர். நேர்த்தியாக அச்சிட்ட புத்தகங்கள். முக்கால்வாசி புத்தங்களின் கற்பைக் காப்பாற்ற லாமினேட் செய்து வைத்திருந்தார்கள். பிரபஞ்சனின் “மயிலிறகு குட்டி போட்டது”வை அதே கற்போடு வாங்கினேன். ஐந்திணையார் தி.ஜாவை குத்தகைக்கு எடுத்தவர்கள். “அம்மா வந்தாள்” ஒன்று வாங்கிக்கொண்டேன். பை கூடக் கொடுக்க திராணியற்ற ஒரு பஞ்சம் விரித்தாடும் கடையில் திராவிடக் கருத்தியலை முன் வைப்பவர் என்று புகழாரம் சூட்டப்படும் தொ.பரமசிவனின் “விடுபூக்கள்” எடுத்துக்கொண்டேன். பாப்கார்னை வழியெங்கும் வாரியிறைத்துக்கொண்டே போன அந்த ஹிப்பிக்கு நோக்கம் புத்தகம் வாங்குவது என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிழக்கில் இரா.முருகனின் விஸ்வரூபத்தைக் கருநீலத்தில் கண்ணைப் பறிக்கக் கண்டேன். எடுத்தேன். இலக்கணச் சுத்தமாக எழுதுவதற்கும் ஈஸியாவும் ஜாலியாவும் படிப்பதற்கும் இலவசக் கொத்தனார் எழுதிய ”ஜாலியா தமிழ் இலக்கணம்” பைக்குள் நுழைந்துகொண்டது. கலைஞரின் தமிழுக்கு என்றும் தலைவணங்குவேன். அவருடைய “தொல்காப்பியப் பூங்கா”விற்குள் நுழையவேண்டுமென்பது நெடுநாளைய அவா. நுழைந்து அதையும் கொண்டேன்.

எனக்குப் பரிச்சயமில்லாத எஸ்.வி.வி, அல்லயன்ஸில் ”ஹாஸ்யச் சக்கரவர்த்தி” என்று ”வித்தின் டபுள் கோட்ஸு”க்கு கீழே எஸ்.வி.வி என்று எழுதி “புது மாட்டுப் பெண்”ணாகக் கிடைத்தார். எதிர் அலமாரியில் குன்ஸாகப் புரட்டிய ஒரு புத்தகத்தின் பக்கத்திலிருந்த “பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்குப் பிரயோஜனங்களைக் கொடுத்துத் தான் எட்ட நிற்கிறானாம் பகவான்” என்ற ஒற்றை வரியில் முன்னட்டையைப் புரட்டினால் அது பி.ஸ்ரீயின் ”திவ்யப் பிரபந்த ஸாரம்”. என் வசமானது. பில்போடுமிடத்தில் எனக்கு முன்னால் தலை வெளுத்த ஒருவர் ஒரு டஜன் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து ஸ்தூபியாய் அடுக்கி கல்லா பெண்ணிற்கு பில் போடும் இன்ப வேதனை அளித்தார். எல்லாம் ரா.கி மற்றும் அநுத்தமா எழுதிய கதைப் புத்தகங்கள். என் முறைக்குக் காத்திருந்து வாங்கி வந்தேன்.

மீண்டுமொருமுறை உயிர்மைக்கு ஒரு விஸிட். அந்தக் உள்ளங்கையில் அடங்கும் சுஜாதா புத்தகங்கள் என்னை வசீகரித்தன. “மனைவி கிடைத்தாள்” “கை” “விழுந்த நட்சத்திரம்” என்று மூன்று கதைகள் எடுத்துக்கொண்டேன். ”சுஜாதா புத்தகம் வாங்காமல் வெளியேறும் தமிழ் வாசகனும் இடையூறில்லாமல் ஓரத்தில் வண்டி பார்க் செய்யாத ஓட்டியும் புக்ஃபேர் மைதானத்தில் மன்னிக்கப்படுவதேயில்லை” என்று வாத்தியார் பக்தியில் பரவசமாக மனதிற்குள் சொல்லிக்கொண்டே இன்ச்சிங் செய்தேன்.

வரும் வழியில் தாகத்தில் தவித்தபோது நீல்கிரீஸிலிறங்கி டயட் கோக்கால் தொண்டையை நனைத்துக்கொண்டேன். பக்கத்து இருக்கையில் புத்தக தாகத்தில் நான் வாங்கிய நூல்கள் அனைத்தும் பைக்குள்ளிருந்து ஆவலாய் புத்தியை நிரப்ப எட்டிப் பார்ப்பதுபோலிருந்தது.


தொடர்புடைய சுட்டி: அன்பே வா..... அருகே வா.....

16 comments:

கார்த்திக் சரவணன் said...

படிச்சு விமர்சனம் எழுதுங்க...

R. Gopi said...

\\என்னுடைய தேடுதல் லிஸ்ட் விளம்பர காம்ப்ளான் பாய் போல காட்சிக்கு காட்சி புஷ்டியாக வளர்கிறது. எம்.வி.வெங்கட்ராமின் காதுகளை இரண்டு புத்தகக்காட்சிகளாக தேடுகிறேன். ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகளும் எங்கோ ஒளிந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது ம.பொ.சி, மு.மு.இஸ்மாயில். \\

சந்தியா அல்லது நிவேதிதா கடைகளில் இவை கிடைக்கலாம். ஏ.கே. செட்டியார் நான் அங்கே தான் வாங்கினேன். காதுகள் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

கோவை நேரம் said...

உங்களின் தேடல் படு சுவாராஸ்யம்...

துளசி கோபால் said...

வாவ்!!!!!!!!!!!

ADHI VENKAT said...

உங்க புத்தகத் தேடல் சுவாரசியமா இருக்கே....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கலெக்‌ஷன்.... :)

RAMA RAVI (RAMVI) said...

நல்ல புத்தகங்களை தேர்வு செய்து வாங்கியிருக்கீங்க.சீக்கிரமாக விமர்சனங்களை எதிர்பார்க்கலாம்.

சீனு said...

//இலவசக் கொத்தனார் எழுதிய ”ஜாலியா தமிழ் இலக்கணம்”// நானும் வாங்கினேன் சார்

RVS said...

@ஸ்கூல் பையன்
நிச்சயம் எழுதுகிறேன்.. :-)

RVS said...


@Gopi Ramamoorthy
தகவலுக்கு நன்றி கோபி! :-)


RVS said...

@கோவை நேரம்

நன்றிங்க... :-)

RVS said...


@துளசி கோபால்
வாவுக்கு நன்றி மேடம். :-)

RVS said...


@கோவை2தில்லி
நன்றிங்க சகோ! :-)

RVS said...


@வெங்கட் நாகராஜ்
நன்றி வெங்கட்.. :-)

RVS said...


@RAMVI

நிச்சயம் எழுதுகிறேன் மேடம். :-)

RVS said...


@சீனு
நல்லாயிருக்கு. பாட்டாலே இலக்கணம் நடத்தறார். சுவாரஸ்யமாக... :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails