Sunday, August 2, 2015

PCயப்பன்

நாற்பது வயசுக்குப் போனால் நாற்பத்தைந்து வயசுக்கு வீடு திரும்புவது போல ஆஃபீஸிலிருந்து ரொம்ப லேட். தெருவுக்குள் நுழையும் போதே பைரவர்கள் தீவிர எல்லைக்காவல் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். சேப்பாயியை ஷெட்டிற்குள் ஏற்றி ஜோஜோ தட்டி தூங்கவைத்துவிட்டு நான் பெற்ற செல்லங்களைப் பார்க்க பரபரப்பாக மாடியேறினேன். தூங்கியிருப்பார்களோ? அறை விளக்கு வெள்ளி வாள் போல கதவின் இடுக்கு வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சின்னது இந்நேரம் ரெண்டாம் ஜாமம் போயிருக்கும். பெரியவ முழுச்சிண்டிருப்பா.
“குட்டீ. நீ இன்னும் தூங்கலையா?” அறை மூலையில் மும்முரமாகத் தலை தூக்கமால் வேலை செய்துகொண்டிருந்த சின்னவளிடம் கேட்டேன்.
“ம்.. இல்லப்பா... “ பதிலில் தீப்பொறி தெறித்தது. என் கேள்வி இம்சை செய்திருக்கவேண்டும்.
"என்னடி இது... தயிருஞ்சாம் மாதிரி Gumம்மெல்லாம் கை பூரா ஈஷிண்டு.... ”
“க்ராஃப்ட் வொர்க்.. நாளைக்கு சப்மிட் பண்ணனும்... போதுமா?” ஜீனோ போல வார்த்தைகள் விழுந்தன.
“இல்லே... நெறையா பேப்பரெல்லாம் வேறே தரை பூரா பரப்பி வச்சுருக்கே.... இப்பவே மணி பத்துக்கு மேலே..... இதுக்கப்புறம் கிராஃப்ட் ஒர்க் பண்ணிட்டு எப்போ படுத்துப்பே... கார்த்தால எப்போ எழுந்துப்பே...”
அரைநொடி திரும்பினாள். அலட்சியமாக அரைப் பார்வையை அள்ளி என் மீது வீசினாள். பெயிண்ட் ப்ரஷ்ஷை பாலெட்டில் தோய்த்து வெட்டி வைத்திருந்த ஒரு பேப்பருக்கு வர்ணம் பூசப் போய்விட்டாள். வயிறு ”பசிக்குதுடா.. சோம்பேறி...” என்று ஓலமிட கைகால் முகம் அலம்பிவிட்டு சாப்பிட ஓடினேன். சித்தநேரம்கூட நின்று பிள்ளையின் ஆட்டத்தை ரசிக்க முடியாத பிஸியப்பன். PCயப்பன்.
டின்னர் முடித்துக்கொண்டு மேலே வந்தேன். ஏஸி சப்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஸிஎஃப்ஃபெல் பளீரென்று ஒளிர்ந்தது. ஓசையில்லாமல் கதவைத் திறந்தால் படுக்கையில் சின்னவள் ஒருக்களித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். எழுப்பாமல் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அலங்காரமேஜைக்குக் கீழேயிருந்த லேப்டாப்பை இலக்கியப் பணிக்காகத் தூக்கினேன். தலையை நிமிர்த்தும்போது இத்தோடு இணைத்திருக்கும் வஸ்து கண்ணில் பட்டது. இவ்வையகம் முழுவதும் எப்போதுமே இன்பம் மட்டுமே பெருகட்டும்!! இதைப் பார்த்ததும் இரவு இனித்தது.


பௌர்ணமி நிலா

கிணற்று மதகில் விஸ்ராந்தியாக அமர்ந்திருக்கிறேன். ஆகாயத்தில் பௌர்ணமி நிலா காய்கிறது. மின்சார விளக்கு பாயாத இடங்களில் ஊர்வன தெரியுமளவிற்கு சன்னமான வெளிச்சம். தென்னை மட்டைகள் சரசரக்க மிதமான காற்று வீசுகிறது. நாள் பூராவும் உழைத்துக் களைத்த மேனி மெதுவாய்க் குளிர்கிறது. "கல்யாணத் தேன் நிலா..... காய்ச்சாத பால் நிலா....." பாடல் எங்கிருந்தோ கசிவது கேட்கிறது. இந்த நாள் மெல்ல மெல்ல விடைபெற்று விடியலை நோக்கி நகர்கிறது. கண்கள் சொருக..... சொரு....க...

அன்பே நீயும்.. அன்பே நானும்..

இதற்கு மேல் அன்பை யார் சொல்லிவிட முடியும்? பிரபஞ்சமே அன்பின் அரவணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது. அன்பின் வழியது உயிர்நிலை. சாந்தானந்த ஸ்வாமிகள் பக்தியாய் அன்பில் உருகி எழுதிய, தமிழ் வீடுகளில் பல காலைகளை பக்திமயமாக்கிய சூலமங்கலம் சகோதரிகளின் (ராஜலெக்ஷ்மி) குரலில் கந்த குரு கவசம் கேட்பது சுகானுபவம்.
கண்ணை மூடிக்கொண்டு கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது அன்பினால் நெஞ்சம் உருகி இரண்டு சொட்டு நீர் வழிகிறது. இப்படியெல்லாம் கேட்டபிறகு யாரைவது திட்டத் தோன்றுமா? யாரிடமாவது ”ச்சீ..தூரப்போ..” என்று வெறுப்பைக் கக்குவோமா? ”போடா” என்று துப்புவோமா? மீண்டும் மீண்டும் தன் மீது எச்சில் துப்பி சலைவா வற்றிப் போய் “சாமி... இவ்ளோ தடவை உங்க மேல துப்பியும் என் கிட்டே கோவிச்சுக்காம திரும்பத் திரும்ப குளிச்சீங்களே....” என்று காலில் விழுந்துக் கேட்டவனிடம் “இத்தனை முறை என்னை கங்கையில் குளிக்க வைத்ததற்கு உனக்கு நானல்லவா நன்றி சொல்லவேண்டும்...” போன்ற பரந்த அன்பு பிறந்துவிடாதோ?
அன்பே ஆன்மிகம்! 
அன்பே தெய்வம்!
அன்பே குருஸ்தானம்!
அன்பே வழிபாடு! 
அன்பே ஆன்மஜோதி!
அன்பே அழகு!
அன்பே அனைத்துமன்றோ!!

"அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்...” என்று முருகனிடம் கெஞ்சுகிறார் சாந்தானந்த ஸ்வாமிகள். இதுதானே அனைவரது பிரார்த்தனையாக இருக்கவேண்டும். நாலு வரி சாஃப்ட்வேர் code எழுதி அது ப்ரொடெக்‌ஷனில் வெற்றிகரமாக ஓடும் போது “நானெழுதிய ப்ரோக்ராம்” என்று நெஞ்சு நிமிர்த்தாமல் இதுபோன்ற வரிகளல்லவா நினைவுக்கு வரவேண்டும். அன்பிருக்கும் இடத்தில் ”நான் யார் தெரியுமா?” என்று மார் தட்டும் அகந்தை வருமா? அன்பெனும் ஊற்று நம்முள்ளே பொங்கிவிட்டால் யாரையாவது சபிக்கத் தோன்றுமா?
யாவர்க்கும் வலியனாயும் எளியனாயும் இனியனாவும் இருக்கின்ற முருகனைப் பற்றிப் பாடும் போது அன்பைக் குழைத்து எழுதிய வரிகள் கசிந்துருக வைக்கின்றன. முழு பாடலையும் உள்ளுக்குள் வாங்கி கேட்கும் போது எழும் உடம்பு உதறும் ஒரு பரவச நிலை உங்களுக்கும் வாய்த்திருக்கிறதா? சாயங்கால வேளையில் வானம் பார்க்க உட்கார்ந்து ”எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ” வரிகளில் கண்ணைத் திறக்க மழைமேகமே அன்பாய்ச் சிரிக்கும் பால முருகனாய் தோன்றியது.
மன்னை காளவாய்க்கரை முருகன் கோயில். தொன்னூறுகளின் சில ஞாயிறு மாலைகளில் நானும் பூசாரியும் மட்டும் விபூதி வாசனையில் தனியாய் அமர்ந்திருப்போம். அலங்கார முருகனைக் காட்டி “நம்மள பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கும் பாருங்க...” என்று சொல்லிக்கொண்டே தீபாராதனைக் காட்டும் போது ”அன்பே நீயும்.. அன்பே நானும்...” எனும் வரிகள் என் காதுகளில் மட்டும் ஒலிப்பது போன்ற பிரமையில் அசந்திருக்கிறேன். தரிசனம் முடிந்து சலனமின்றி கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது சலசலவென்று வேப்பமரக் காற்று வீசும். ”அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா..” உருவேறினாற்போல ஓடிக்கொண்டிருக்கும்.

பாலசுப்ரமண்ய குருக்கள் படியில் உட்கார்ந்து கொண்டு சாயாவனேஸ்வரர் கோயில் வில்லேந்திய வேலவரைத் தரிசிக்கக் காட்டிய போது கூட ”படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்.. அன்பே சிவம்.. அன்பே சக்தியும்....” என்று ஆனந்தமடைந்திருக்கிறேன்.
வேத ஆரண்யம் தாண்டி கோடியக்கரை சென்றால் அங்குள்ள அமுதகடேஸ்வரர் திருக்கோயிலில் மூலவர் சந்திதிக்குப் பின்புறம் சட்டென்று திரும்பிவிடாதீர்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும். புல்லட்டில் அமர்ந்திருப்பது போன்ற திருக்கோலத்தில் மயிலின் இருபுறமும் கால்களைப் போட்டுக்கொண்டு ஆஜானுபாகுவாய் ஆறுமுகன் அமர்ந்திருப்பார். கையில் ஏழடிக்கு ஒரு வெள்ளி வேல். மற்றொரு கையில் அமுதகலசம். மேனியெங்கும் விபூதியலங்காரம் செய்திருந்தார்கள். பிரதக்ஷிணம் செய்து வரும் போது என்ன சன்னிதி என்று எட்டிப்பார்த்த எனக்குத் ’பக்’கென்று தூக்கிவாரிப் போட்டது. யாரோ நிஜமாகவே சந்திதிக்குள் நடமாடுவது போலிருந்தது.
ஒரு முறை கண்களைக் கசிக்கொண்டு திருவுருவின் முகத்தை உற்றுப்பார்த்தேன். அழகாய் அன்பாய் புன்னகைத்தான் முருகன்.
அன்பே நீயும்.. அன்பே நானும்..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails