Wednesday, September 8, 2010

வயல் வெளி மனிதர்கள்

paddy fields
தீனு என்கிற தீனதயாளனுடைய நெருப்பு பொறி பறக்கும் பாலாஜி வெல்டிங் வொர்க் ஷாப் தாண்டி வரும் முடுக்கு திரும்பினால் அதுதான் ஊரின் எல்லை. அப்புறம் ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வீடு வாசல் எதுவும் வராது. "ஹோ..." என்று இரண்டு பக்கமும் வயக்காடு தான். 'ஜிலு ஜிலு' என்று பச்சை மற்றும் மஞ்சள் பாவாடைகளை நெர்ப்பயிர்கள் மூலம் கட்டிக்கொண்ட சாகுபடி நிலங்களில் இருந்து வரும் காற்று தான் வீசும். இடது பக்க 'வாழ்க..தலைவரே' என்ற கழக மா.செவின் போஸ்டர் ஒட்டியது போக மிச்சமிருக்கும் மஞ்சள் போர்டு ஊரிலிருந்து வெளி செல்வோருக்கு "வருகைக்கு நன்றி"யும் வலது பக்க பாதி இடங்களில் தாரும் கிறுக்கலும் நிறைந்த போர்டு உள்ளே வருவோருக்கு "வணக்கம்"மும் சொல்லி நின்று கொண்டிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வயல் வரப்புகளுக்கிடையில் நாலைந்து வாழை மரங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து தாரோடும் பூவோடும் கீழே விழாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று ஒற்றுமையின் வலிமையை ஊருக்கு போதிக்கும். காந்தி மகான் பார்த்த ஆணும் பெண்ணுமாய் அரையாடை மனிதர்கள் தூரத்தில் குனிந்து களை பறித்துக் கொண்டோ, வரப்பு வெட்டி நீர் பாய்ச்சிகொண்டோ இருப்பர். பயிர் விளையும் காலங்களில் பச்சை மண்ணுடன் நீர் சேர்ந்த வாசம் மூக்கை துளைத்து புத்தியில் நுழைந்து மனதுக்கு புத்துணர்ச்சியை அள்ளி வீசி பாய்ச்சிக் கொண்டிருக்கும்.

அந்த ஃபிரன்ட் பிரேக் ஒயர் அறுந்த டி.வி.எஸ் ஐம்பதை முப்பதில் ஓட்டிக்கொண்டே இவையனைத்தையும் அனுபவித்து, உச்சி முடி கலைய முகத்தில் காற்று அறைய ஓட்டிய காலங்கள் நினைவுகளில் பசுமை நிறைந்தவை. சாலையோர சுப்பையன் அண்ணன் கீற்றுக்கொட்டகை டீக்கடை அருகில் இருக்கும் மரப்படுகை கிராம ஸ்டாப்பிங்கில் ஏதோ ஒரு சாக்கு மூட்டையோடு ஐம்பது வயது கிழவியோ, முண்டாசு கட்டிய தாத்தாவோ எப்பவோ வரப்போகிற பஸ்சிற்கு அதன் மேல் உக்கார்ந்து ரோடு முனையையே பார்த்திருப்பார்கள். சுப்பையன் அண்ணன் எப்போதும் பத்து நாள் நரை முடி தாங்கிய தாடியோடு இருப்பார். அவர் சவரம் செய்து ஊரில் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். சாமி திரையரங்கின் "இன்று இப்படம் கடைசி" வலது மூலையில் கோணலாக சிகப்பில் ஒட்டப்பட்ட கத்தி நீட்டிய எம்.ஜி.யாரின் மன்னாதி மன்னன் போஸ்டர் டீக்கடை பாய்லர் முன் இருக்கும் மரத்தட்டியை அலங்கரிக்கும். "நீங்கள் இதுவரை கேட்டது உங்கள் விருப்பம். இன்னும் சில நொடிகளில் மாநிலச் செய்திகள் தொடரும்.. பீப்.. பீப்.. பீப்.." என்று கடையில் யாருமே இல்லையென்றாலும் விவிதபாரதி தன் கடமையை வடை, காராசேவு போன்றவை வைக்கும் கண்ணாடி ஸெல்ப் மேலிருந்து செவ்வனே செய்து கொண்டிருக்கும். மெயின் ரோடோரத்து வயல் பங்கு சோமுத் தேவருடையது. இருபது வருடம் முன்பு மனைவி அன்னம் இறந்த பிறகு வயலை காதலியாக்கி கலப்புத் திருமணம் செய்துகொண்டார். அறுபது வயதிலும் அயராது மண்வெட்டி கொண்டு நிலத்தோடு போராடுபவர்.

paddy fields 1


"என்ன சின்ன ஐயரே... இன்னிக்கு வயலுக்கு வந்திருக்காப்ல... காலேஜு போவலையா?" என்று முன்வரிசையில் உடைந்த பல்லாடு சிரித்தபடி கேட்பார்.

"சின்ன ஐயிரு வந்தா இன்னிக்கு நடவுக்கு எல்லோருக்கும் சேவு ரெண்டு பொட்டலம் தான்" இது பண்ணையாள் பொன்னுசாமி. காலையில் வயலில் இருந்து வரும் மண் வாசனை காற்று அவனை தாண்டும் போது கள் வாசனை அடிக்கும். வீட்டிலேயே ஃபாக்டரி ஏதும் வைத்துருக்கிரானா என்று தெரியாது.

"ஐயிரே.. இந்த ஓட்டை வண்டியே உருட்டிகிட்டு வரியே... பெரியவருட்ட சொன்னா புல்லட்டு வாங்கி தர மாட்டாரு..." என்று வெற்றிலை புகையிலை கலந்த தாம்பூலச் சாறு நிறைந்த வாயோடு சிரித்துக்கொண்டே கேட்பாள் பொன்னுசாமி பொண்டாட்டி.
"புது வண்டி வாங்கி கொடுத்தா.. நம்மள யாராவது அளச்சுகிட்டு சின்ன ஐயிரு ஊர விட்டு ஓடிப்போயிடுவாறுன்னு பெரியவருக்கு பயம் போல..." இது சுப்பையண்ணன் சம்சாரம்.

"போன போகத்துக்கு ஐயிரு பஞ்சு போட்டாங்க... நம்ம செலுவி பஞ்சு பறிக்க வந்துச்சு.. அன்னிக்கி சின்ன ஐயிரு தான் வயலுக்கு வந்தாரு.... என்னாச்சு தெரியுமா?" என்று சுப்பையன் அண்ணனின் சம்சாரம் வம்பிகிழுத்தது.. "என்னாச்சுக்கா...?" என்ற கோகிலத்தின் பதில்கேள்விக்கு
"அன்னிக்கி அந்த புள்ள குத்த வச்சி உக்காந்திடிச்சி.....அப்பயே சூடா ஐயிரு இளுத்துக்கிட்டு ஓடியிருந்தா இன்னைக்கு இந்நேரம் கையில புள்ளையோட இல்ல வந்திருக்கும்.." என்ற கிண்டல் பேச்சு சலசலக்கும் காற்றின் ஊடே பறந்து போய்கொண்டிருக்கும். வேலை அலுப்பு தெரியாமல் இருக்க எல்லாமே கிண்டல் தான்.

லேசாக வழுக்கும் வரப்புகளில் இரண்டு கையையும் இப்படியும் அப்படியும் ஆட்டி பாலன்ஸ் செய்து நடக்கும் போது  சோமுத்தேவர்.... "ஐயரே... ரெண்டு பெரிய நண்டு உங்க பங்குக்கு போற வரப்புல சரசமாடிகிட்டு இருக்கு... சாக்கரதையா போங்க..இப்ப உங்களை கடிக்காது.. ஆனா நீங்க அத தெரியாம தொந்தரவு பண்ணிடப்போறீங்க... பொறவு உங்களுக்கு கல்யாணம் பண்ணி சாந்தி நடக்கும் போது.... போது.... போது......" என்று கீறல் விழுந்த ரிகார்டு ராகத்துடன் இழுக்கும் போது நடவுஜனம் முழுக்க "கெகெகே.." என்று சிரிக்கும். இருபது அடியில் தண்ணீர் பீறிடும் பூமியில் பம்பு செட்டு மோட்டாரை போட்டவுடன் ஐந்து நிமிடத்தில் ஆறடி நீள தொட்டி நிரம்பி வயலுக்கு நீர் பாயும். பன்னிரண்டு மணி வாக்கில் ஒரு இரண்டு மா நட்ட பின்பு கொஞ்சம் வெய்யில் ஏறி வேர்த்து விருவிருக்குமானால் ஜட்டியுடன் தொட்டியில் படுத்து போர் விழும் குழாயில் அருவிக் குளியல் எடுக்கலாம். உடம்புக்கு சோப்பு காட்டாமல் சுத்தமாக்கிக் கொள்ளலாம். குளித்தவுடன் வயிற்றில் மணியடித்தால் சுப்பையன் டீக்கடையில் வெல்லப் பாகு போட்ட டீ ஒரு காராசேவு பொட்டலத்துடன் சாப்பிடலாம்.

"என்ன ஐயிரே.. இன்னிக்கு உங்க ஆத்து சமையல் தான்.. சைவம்.. கத்திரிக்கா சாம்பாரு.... பசிச்சா சாப்புடுறீங்களா...." என்று சுப்பையனின் அன்பு தோய்த்த கவனிப்பு வயிற்றை நிரப்பிவிடும். "வேண்டாம்னே.. இன்னொரு பொட்டலம் சேவு கொடுங்க..." என்று கேட்டு வாங்கி சாப்பிட்டால் "பளீரென்று" வேப்பங்குச்சி போட்டு விளக்கிய பல் தெரிய சிரித்துக்கொண்டே "எடுத்துக்கோங்க..." என்பார் முதுகை சொறிந்துகொண்டே. அந்த கடைவாசலில் உள்ள கால் ஆடும் மரப் பெஞ்சில் உட்கார்ந்து நடவைப் பார்த்துக்கொண்டே கரகர வென்று வாயால் அரைத்து அவ்வப்போது சொற்ப பயணிகளுடன் போகும் ஐந்து, ஏழு , பதினொன்றாம் நம்பர் டவுன் பஸ்சை வேடிக்கை பார்க்கலாம். பள்ளியில் ஏதோ ஒரு வகுப்பில் நம்முடன் படித்த டவுனுக்கு போய்வரும் மாரியம்மாவோ, தனலெட்சுமியோ ஜன்னலோரத்திலிருந்து நம்மை பார்த்து சிரிக்கும். பொத்தாம் போக்காக பதிலுக்கு சிரிக்கலாம் ஆனால் மாமன் மருதக்காளை பக்கத்தில் ஆண்கள் வரிசையில் உட்கார்ந்து எட்டிப்பார்த்து முறைக்கும் அபாயம் இருக்கிறது.

***************
இன்று மாலை "எங்க ஊர்லேல்லாம் இப்படி இல்லை தெரியுமா..." என்று ஏதோ ஒரு பேச்சுக்கு நுங்கம்பாக்கம் காஃபி ஷாப்பில் வைத்து அஞ்சலியிடம் சொன்னதுதான் பெருங் குற்றம். பதிலுக்கு அவள் "ஏய்.. ஜானி....  என்ன?... எப்பப்பார்த்தாலும் ஊரு... ஊரு... இன்னமும் உனக்குள்ள ஒரு அசல் கிராமத்தான் இருக்கான் ஐ ஸே..." என்று தேவர் மகன் கெளதமி கணக்காக சொல்லிவிட்டாள். சவுந்தரம் மாமி மெஸ்ஸில் நாலு இட்லியும், ஒரு தோசையும் சாப்பிட்டு ரூமிற்கு வந்து படுத்த ஜானகிராமனின் மனக்கண் நேரே போய் ஊரில் இறங்கியது. தான் பார்த்துப் பழகிய வயல் வெளி மனிதர்கள் வந்து ஒரு ரவுண்டு கட்டி அவனோடு பேசிப் பார்த்துவிட்டு போனார்கள். காலையில் எழுந்து பல் தேய்க்கும் போது நேற்றுதான் ஊரிலிருந்து வந்து இறங்கியது போலிருந்தது ஜானி என்கிற ஜானகிராமனுக்கு.

பட உதவி: http://www.sepiamutiny.com

18 comments:

மோகன்ஜி said...

ஒரு கிராமத்து நாளை, கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.வயல்வெளி மனிதர்களின் நையாண்டி, தனி இலக்கியம் அல்லவா. அவர்களுக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? "அட காடு வெளைஞ்ஜென்ன மச்சான் நமக்கு கையும் காலும்
தானே மிச்சம்" என்ற பட்டுக் கோட்டையாரின் வரிகள் தான் காதில் ரீங்காரமிடுகிறது

ஸ்ரீராம். said...

அழகிய நினைவுச் சுருள். அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான்தான். முப்பது கிலோமீட்டர் வேகத்துக்கு உச்சிமுடி பறக்குமா என்ன?

Chitra said...

"என்ன ஐயிரே.. இன்னிக்கு உங்க ஆத்து சமையல் தான்.. சைவம்.. கத்திரிக்கா சாம்பாரு.... பசிச்சா சாப்புடுறீங்களா...." என்று சுப்பையனின் அன்பு தோய்த்த கவனிப்பு வயிற்றை நிரப்பிவிடும். "வேண்டாம்னே.. இன்னொரு பொட்டலம் சேவு கொடுங்க..." என்று கேட்டு வாங்கி சாப்பிட்டால் "பளீரென்று" வேப்பங்குச்சி போட்டு விளக்கிய பல் தெரிய சிரித்துக்கொண்டே "எடுத்துக்கோங்க..." என்பார் முதுகை சொறிந்துகொண்டே.

.....அழகான கிராமத்தையும் வெள்ளந்தி அன்பையும் கதை மூலம் காட்டி விட்டீர்கள். :-)

RVS said...

சித்ரா... இந்தியா கிராமங்களில் வாழ்கிறது.........:):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

அது முப்பது கிலோ மீட்டர் வேகத்தினால் மட்டும் அல்ல... அந்த பரந்தவெளியிலிருந்து வரும் காற்றோடு சேர்ந்து போகும் போது.. இது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்ப்பட்டதில்லையா ஸ்ரீராம்? அது ஒரு சுகானுபவம். :):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

எழுதும் போது எனக்கு அந்த வயல்வாசனை அடித்தது மோகன்ஜி. பழகுவதற்கு இனிமையானவர்கள் அவர்கள். படித்த மேதாவிகளைப் போல் அல்லாமல் தங்களது அடிப்படை தேவை தீர்ந்துவிட்டால் போது அவர்களுக்கு. வானத்தையும் பூமியையும் பார்த்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிவிடுவார்கள். இவர்கள் வேலை நாம் பார்ப்பது போல இன்னொருவரிடம் கைகட்டி சேவகம் கிடையாது. ஹும்... சரி.. விடுங்க... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சைவகொத்துப்பரோட்டா said...

படிக்கும்போதே காட்சிகளை கொண்டு வந்து விட்டீர்கள்!!

RVS said...

நன்றி சைவ கொ. பரோட்டா :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பொன் மாலை பொழுது said...

அம்பி வயலுக்கு போயிட்டு வநத கத நண்னாத்தான் இருக்கு.
ஆனாக்க ஊரு பேர போட வேணாமோ கொழந்த !
எங்க ஊர்லேயும் மனுஷா எல்லாம் இப்படிதான் இருப்பா!
நன்னா வக்கனையா பேசி சிரிச்சிண்டு ........

RVS said...

கக்கு அம்பி... எல்லா ஊர்லயும் மனுஷா இப்படி தான் இருப்பான்னா.. ஊர் பேரெல்லாம் எதுக்கு..... ஹி....ஹி. :):):):)

suneel krishnan said...

ஒரு பத்து வருடங்களுக்கு முன் வரை இருந்த கிராமங்கள் இன்று இல்லை .பாதி குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு பட்டணம் வந்து விட்டனர் , மீதி இருக்கும் மக்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து காலம் செலவுடுகின்றனர் , rvs சார் இனிமே கிராமங்கள் எல்லாம் இந்த மாறி பதிவுல, படத்துல பாத்தா தான் உண்டு

பத்மநாபன் said...

எனக்கு பிடித்த, நான் அனுபவித்த கிராமத்தை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.
நாட்ராய , காளியப்ப கவுண்டர் களோடு கூடவே அன்னமக்கவாவும் , சின்னகண்ணாளும் ஞாபகம் வருகிறார்கள்.
அந்த வெள்ளந்தித்தனம், அறியாமையை ஒத்துக்கொள்ளும் பாங்கு என இருந்தவர்களோடு பழகிவிட்டு, நகரத்தில் நித்ய அலட்டல் பேர்வழிகளோடு பழகுவது நரகம் தான்.

RVS said...

உண்மை தான் டாக்டர். கெட்டும் பட்டணம் வந்து சேர்ந்துவிட்டார்கள். :))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

எனது கதையை விட உங்கள் பின்னூட்டம் அருமை பத்மநாபன். நன்றி.. :))))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்படி எல்லாம் கூட இன்னமும் கிராமங்கள் இருக்கிறதா, என்ன?

RVS said...

ஆர்.ஆர்.ஆர் சார். இப்படியெல்லாம் கிராமங்கள் இருந்தன... இருக்கிறதா என்று தெரியாது.....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

வெங்கட் நாகராஜ் said...

கிராமத்துக் காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்தியது இந்த கதை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

வெங்கட்.

RVS said...

நன்றி வெங்கட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails