Friday, September 17, 2010

யானை மீது சத்தியம்

“புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே? தறுதல.. தறுதல...”
அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது.

“நம்ம பிள்ளையை கரிச்சு கொட்டறதே உங்க வேலையாப் போச்சு.. அப்படி என்ன தப்புத்தான் என் மகன் பண்ணிட்டான்?”
அம்மா யானை சலித்துக் கொண்டது.

"உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ. வெளிய தல காட்ட
முடியல.".

“பின்னே உங்க பிள்ளை உங்களை மாதிரிதானே இருப்பான்?. உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டே’நான் தான் குருவாயூர் கேசவன்’னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்க?வயசு பையன் அப்படித் தான் இருப்பான்.விடுங்க”
இது மோகன்ஜி அவரோட ப்ளோக்ல போட்ட யானை ஜோக். அவரது தளத்தில் அதற்க்கு பின்னூட்டமிடப்போய்  நானும் பத்மநாபனும் அந்தக் கரும்பு தின்னும் குறும்பு யானையிடம் வசமாக மாட்டிக்கொண்டோம். இதனால் என்னோட ப்ளாக்கில்  சரிவர தொடர்ந்து எழுதமுடியவில்லை. ஒரே யானைத் தொல்லைப்பா... மோகன்ஜி மற்றும் பத்மநாபன் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற அஸாத்திய  தைரியத்தோடு.... அந்த யானைப் பதிவின் கமெண்ட்டுகளே ஒரு பதிவாக..  இங்க... படிங்க மேல...

பத்மநாபன் சொன்னது… 
ஜி.. பாம்பே போன மாதிரி தெரியலையே..கேரளா போய்ட்டு வந்தமாதிரியல்ல தெரியுது ... எந்தானு குருவாயூர் கேசவன் வல்லிய யான்யதனோ ? ( மனிதன்...மன்மதன்... ஸோ ).
ஆண்குட்டி யானை வட்டம் போடறதிலே கில்லாடி போலிருக்கிறதே...  
15 செப்டெம்ப்ர், 2010 9:20 am

மோகன்ஜி சொன்னது… 
பத்மநாபன்ஜி.உங்க "யான்யதன்" அட்டகாசம் போங்க. ரகுவம்சத்துல திலீப மகாராஜா, தன் காதல் மனைவி சுதக்ஷினையுடன் தனியா இருந்தானாம். ராணியுடைய கூந்தலிலிருந்து எழும் மணத்தை முகர்ந்தபடி சொக்கி நின்றானாம். 
 
இங்க காளிதாசன் போடுற பிட்டைப் பாருங்க. மழைத் தூறலின் துவக்கத்தில் எழும் மண் வாசனையை யானை ஜோடிகள் தன்னிலை மறந்து துதிக்கையைத் தூக்கி,முகர்ந்து கொண்டே திக்குமுக்காடுவதுபோல் திலீபனின் நிலையும் இருந்ததாம். காதல் யானை வருகுது ரெமோ தான்!  
15 செப்டெம்ப்ர், 2010 10:08 am
 
RVS சொன்னது…
அதெல்லாம் சரி... பையனுக்கு கரெக்ட் ஆச்சா? இல்லையா? அதச் சொல்லுங்க... ஒழுங்கு மரியாதையா அப்பா யானையை அவன் பார்த்ததையே கல்யாணம் பண்ணி வச்சுரச் சொல்லுங்க. இல்லைனா ஒரு நல்ல ஆப்ரிக்க ஃபாரினரா பார்த்து இழுத்துக்கிட்டு வந்துறப்போறான். பொல்லாதவனா இருப்பான் போலிருக்கு. ;-) ;-)
 
முடிவு தெரிந்துகொள்ளும் ஆவலில் ஆர்.வி.எஸ்.
மோகன்ஜி சொன்னது…
ஆஹா RVS..நீங்க குடுக்குற பரபரப்புல எனக்கு இப்போ பொறுப்பு ஜாஸ்தியாயிட்ட மாதிரி இருக்கு. நம்ம ஏதோ சிறுசுகளை சேத்து வைக்கலாம்னு அந்த கோயில் பெண் யானை கிட்ட பேசி பாக்கப் போனேன். அதென்னவோ கைல வச்சிருந்த சில்லறைய வாங்கி பாகன்கிட்ட குடுத்துட்டு தும்பிக்கையால தலையில தட்டிட்டு அடுத்தாளை பாக்க திரும்பிருச்சு . நம்ம பையனுக்கு நீங்க சொன்னாமாதிரி ஆப்ரிகா தான் தகையும் போலருக்கு.ரெஜிஸ்தர் ஆபீஸ்லே சிம்பிளா முடிச்சிட்டு தேன் நிலவுக்கு அதுங்களை தேக்கடிக்கு அனுப்பிட வேண்டியது தான்!
பத்மநாபன் சொன்னது…
மோகன்ஜி ஆர்.வி.ஸ்... நீங்க ரெண்டு பேரும் செய்யற யானை அலப்பற சிரிப்ப அடக்க முடியல போங்க .... காதல் யானை ரெமோ, ஆப்ரிக்கயானை, ரிஜிஸ்டர் திருமணம், தேக்கடி தேனிலவு ......ஜோர்,
மோகன்ஜி சொன்னது… 
பத்மநாபன் சார்! என்னங்க இது? மோகன்ஜி,RVS அலப்பறைன்னு நீங்க தனியா கழண்டுக்குறீங்க? நம்ம செல்லம் ரெண்டும் தேன்நிலவு முடிஞ்ச கையோட முதல் விருந்துக்கு உங்க வீட்டுக்கு வர்றதா தான் பேச்சு.விருந்து தடபுடலா இருக்கணும் தலைவரே சொல்லிட்டேன்! நம்ம பிள்ளையாண்டானுக்கு ஈச்சம் தழை எல்லாம் ஒத்துக்காது.தென்ன மட்டையா ஏற்பாடு பண்ணுங்க.சரி தானே!
RVS சொன்னது… 
 
பத்மநாபன் வீட்டு மாப்பிள்ளை விருந்து முடிந்ததா... மோகன்ஜி உங்கள் 'குட்டிகளை' எப்போது மறுவீடு அழைப்பீர்கள்? அவனுக்கு கொடுக்கும் தயிர்சாத உருண்டையை பசி என்று நீங்கள் உள்ளே தள்ளி விடாதீர்கள். அப்புறம் யான்யதன் கொடியாக இளைத்து விடப் போகிறான். அவன் புதுப் பொண்டாட்டி உங்களை தூக்கி போட்டு மிதித்து விடப் போகிறாள். ஜாக்கிரதை. யானையிடம் பாரதியை இழந்த நாங்கள் உங்களையும் இழந்து விடப்போகிறோம் அப்புறம் நவீன இலக்கியத்துக்கு பேரிழப்பு ஏற்ப்பட்டுவிடும். தயவு செய்து இந்த கஜேந்திரர்களை முதுமலை முகாமுக்கு அனுப்பவும். நன்றி. ;-);-);-)
 
பத்மாநாபன் வீட்டிலிருந்து ஏதும் சேதி வந்தாதா?
 
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பத்மநாபன் சொன்னது…
 
அடடா .....இங்க பேரீச்சந்தழைக்கே வழி இல்லாத இடத்துல மாட்டிகிட்டேனே ....தென்னமட்டைக்கு எங்க போவேன் ...சரி சரி முகூர்த்ததை நல்ல படியா முடிங்க ....ஊருக்கு வந்தவுடனே வசமான கரும்பு காட்டுக்கு கூட்டிட்டு போய் நாலு நாள் விட்ர்றேன். உல்லாசாம இருக்கட்டும்..
மோகன்ஜி சொன்னது…
 
நீங்க ஒண்ணு RVS.. பத்மநாபன் ஒட்டக தம்பதிகளுக்கு தான் தற்சமயம் விருந்து வைக்க இயலுமாம். ஊர் பக்கம் வந்தப்புறம் கரும்பு தோட்டத்துக்கு அனுப்பறாராம்ல? அதுக்குள்ள யான்யதன் குட்டியும் பெத்துக்கிட்டு அத "என் செல்ல கெஜக்கூ"ன்னு கொஞ்சிகிட்டில்ல இருப்பான்?! தற்சமயம் தயிர் சாதம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கு..எங்க வீட்டம்மாவோ யானை,"குரங்கு"க்குல்லாம் சமைக்க வேண்டியிருக்குன்னு அலுத்துக்குவாங்களோன்னு யோசனையா இருக்கு. நீங்க சொன்ன மாதிரி முதுமலை முகாமுக்கு தற்சமயம் அனுப்பிவைக்க வேண்டியது தான் . டென்ஷனா இருக்கு RVS
மோகன்ஜி சொன்னது…
 
பத்மநாபன்.. அங்க உக்காந்துகிட்டு ஓமர்கய்யாம் மாதிரி பேரிச்சம் பழமே.. பேரீச்சம்தழயேன்னு ஹூக்காவ புடிச்சிகிட்டு பாட்டா படிக்கிறீங்க? உங்களைப் பத்தி ஆப்பிரிக்க மருமக "எலிபண்டோ யானயானோ" என்ன நினைப்பா? ஞொய்யாஞ்ஜிக்கு ஒரு நியாயம், யான்யதனுக்கு ஒரு நியாயமா? கப்பல்லயாவது தென்னமட்டஎல்லாம் வரவழைக்க வேண்டாமா? ஊர்பக்கம் வந்தீங்கன்னா ஜோடி ரெண்டும் உங்கள உருட்டி "யான யான அழகர் யானை"ன்னு விளயாடதாம் போறாங்க! கும்மி களை கட்டிருச்சு பத்மநாபன்!
பத்மநாபன் சொன்னது… 
அட பதிவ விட பின்னூட்டம் கலக்கலால்ல இருக்கு... நம்ம ஆர்.வி எஸ்.. மறுவிடு மறு தாலின்னு விட்டா சீமந்தம் வளைகாப்பு வரைக்கும் போயிட்டே இருக்காரு.....தும்பிக்கைக்கு வளையல் ஆர்டர்ல்ல கொடுத்து செய்யனும்....
 
சின்ன யானை நடையை தந்தது ....சூப்பர் பாட்டை நினக்கவச்சிட்டிங்க..
கெஜக்கூ....நல்ல கொஞ்சல் பெயரை அறிமுக படுத்தி புண்ணியம் தேடிட்டிங்க.....
 
சிவனேன்னு மார்க் போட்டுட்டிருந்த இளைய தளபதி கஜபதிய வசமா மாட்ட விட்டுட்டிங்க்ளே....
 
இனி ஜில்,ஜில் கஜமணி சும்மாவா இருக்கும்.... கருப்பு கரும்பு கொண்டா, மூழாம்பழம் கொண்டா, தேக்கிலை கொண்டான்னு தும்பிக்கையில இடிச்சுட்டேல்ல இருக்கும்....
 
முதுமலை , தெப்பக்காட்டுல விடற வரைக்கும் ஒரே டென்ஜன் தான்
RVS சொன்னது… 
 
யப்பா.. மோகன்ஜி.... பத்மநாபன்... ஏதோ மதநீர் பிடிக்கிற யானைக்கு மன்மத நீர் பிடிச்சு இத மாதிரி தப்பு காரியம் பண்ணிட்டுது. விடுங்கப்பா கஜேந்திரனுக்கு மோட்சமாப் போகட்டும். யானை கட்டி போரடித்தார்கள் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான எங்க தஞ்சாவூர் பக்கம். ஆனா மோகன்ஜி ப்ளோகில் யானையை கட்டி நாம லூட்டி அடிக்கறது ரொம்ப டூ மச். நாம இப்படி அவங்கள வச்சு அராத்தா ஜோக் அடிக்கறது வெளியில கசிஞ்சு யானைக் காதுக்கு எட்டிடிச்சுன்னா...
 
அடுத்த தடவை கோயிலுக்கு போய் தும்பிக்கையில காச வச்சு தலையை குனிஞ்சு ஆசிர்வாதத்துக்கு மோகன்ஜி நிக்கும்போது..
 
அப்படியே அலேக்கா தூக்கிட்டு போய் கிட்னாப் பண்ணி வச்சுட்டு... இந்த 36000 = 28000=36000 சமாசாரத்தை எல்லாம் ரப்பர் வச்சு சுத்தமா அழிச்சாதான் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிடப்போவுது. ரொம்ப பயமா இருக்கு.
 
இப்பவே "இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" அப்படின்னு பத்து பதினைந்து தோழர் யானைகள் கேரளாவுல ஓணக் குடை பிடிக்கறா மாதிரி கொடி பிடித்து துரத்துற மாதிரி இருக்கே.
 
சென்னையில யானைகவுனி அப்படின்னு இருக்குற இடத்துக்கு என்னால இனிமே தலை காட்ட முடியுமா? யானை வரும் பின்னே.. அப்படின்னு யாரோ பழமொழி சொல்ல ஆரம்பிச்சாலே நாலு கால் பாய்ச்சல்ல ஓடிடுவேன் போலருக்கே...
 
ஐயோ.. துரத்தி உதைக்குற மாதிரியே.. ச்சே.ச்சே.. தும்பிக்கையால் தூக்குற மாதிரி இருக்கே... சொக்கா.... காப்பாத்துறா..
 
இப்படி யானை இனத்தை அதகளப் படுத்துவது தெரிந்து இந்திரலோகத்தில் இருந்து ஐராவாதம் ஐந்து நாள் இந்திரனிடம் லீவு கேட்டு வந்து பூலோகத்தில் கேம்ப் அடிக்கப் போவதாக த்ரிலோக சஞ்சாரி நாரதர் தெரிவிக்கிறார். இது எனக்கு எஃப்.எம் ரேடியோ டியூன் பண்ணும்போது இப்போது கேட்டது. எல்லோரும் பத்திரமான இடத்துக்கு ஓடிடுங்க... ப்ளீஸ்.... எஸ்கேப்....
 
ஓவர் டு பத்து அண்ட் மோகன்ஜி என்று சொல்லிக்கொண்டு......
 
யானை பயத்துடன் ஆர்.வி.எஸ்.
மோகன்ஜி சொன்னது… 
அடடா! எத்தனை விதமா யானை மேட்டரை வச்சு பின்னியிருக்கீங்க R.V.S!
ரொம்பவே ரசித்தேன்! அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்று ஒரு புலவர், யானையின் பல பெயர்களை வைத்து விளையாடி இருக்கிறார்.. பள்ளி நாட்களில் செய்யுள் பகுதியில் படித்தது. ஒரு பாணன் ராஜாவிடம் போய், பாடல்கள் பாடினான்.
 
மகிழ்ந்துபோன ராஜா அவனுக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து விட்டார்.வீடு திரும்பிய பாணனிடம், அவன் மனைவி பாணி என்ன கொண்டு வந்தாய் எனக் கேட்டாள். அவன் யானையின் பல்வேறு பெயர்களில் கொண்டு வந்ததைக் கூற, பாணியோ, அந்தப் பெயர்களின் வேறு அர்த்தங்களை பாவித்துக் கொண்டு பதிலளிக்கிறாள். பாட்டைத் தான் பாருங்களேன் !
 
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி 
என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள் 
பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள் 
பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை 
கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள் 
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே!" 
 
மேற்சொன்ன பாடலில் பாணன் கூறும் பல்வேறு யானையின் பெயர்களும்,பாணி பொருள்கொண்ட வேறு அர்த்தமும்..
களபம் = சந்தனம்
மாதங்கம் = நிறைய தங்கம் 
வேழம் =கரும்பு 
பகடு= எருது 
கம்பமா= கம்பு தானிய மாவு 
கைம்மா = கைம்பெண் 
பாணன் சொன்ன அனைத்துக்கும் வம்படியாய் பதில் சொன்னவள் கைம்மா என்றவுடன் கலங்கி விட்டாளாம்! எப்படி? 
“சும்மா கலங்கினாளே ” என்ன சொல்லாட்சி? மிக ஆச்சர்யமான பாடல்.
 
இந்தப் பாடலை நினைவு கூர வைத்து,எழுதவும் உந்திய R.V.S புலவரே! உம் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அதை மெச்சி நானும் உமக்கு ஒரு யானையை பரிசாக அளிக்கிறேன்! ஏய்! யாரங்கே?!
பத்மநாபன் சொன்னது… 
 
வந்தேன் அரசே...யானை இருக்கிறது ..சங்கிலிக்கு நிதியில்லையாம்..நிதியமைச்சர் புலம்புகிறார்....
 
மன்னா , நம் அரசவை வெள்ளையானையாக நிதியை முழுங்குகிறது... வட்டமடிக்கும் யானையை முடிந்தால் ஆர்.வி.எஸ் சங்கிலியின்றி ஓட்டிச்செல்லட்டும்...வழியில் மதிப்பெண்..பெண்..விவகாரங்களுக்கு நாம் பொறுப்பல்ல....
RVS சொன்னது… 
 
ச்சே..ச்சே.. என்ன காட்டு தர்பார்...
 
பரிசளிக்கும் யானைக்கு சங்கிலி இல்லையா.. கேவலம் ஒரு இரும்புச் சங்கிலிக்கு இவ்வரசு ஏங்குகிறதா....பட்டத்து யானை பட்டினி கிடக்கிறதா... என்ன ஒரு அநியாயம்...(புலவர் முகத்தில் சிகப்பு விளக்கு அடித்து அவரது கோபத்தை பெரிதாக காட்டுகிறது)
 
அந்தப்புரத்தில் மோகனமன்னனின் ராணிகள் வடம் வடமாக மாதங்கத்தில் மாலை போட்டிருக்கிறார்களே... அந்தப் பெரிய ராணி கழுத்தில் கிடப்பதை கொடுத்தால் கூட யானை காலைச் சுற்றி கட்டி விடலாமே.. ம்.... சரி... சரி.. பரவாயில்லை.. தானம் கொடுத்த யானைக்கு சங்கிலி இருக்கா என்று கேட்கக்கூடாது. உங்கள் ராஜ தர்மம் எப்படியோ என்னக்கு தெரியாது ஆனால் யானை தர்மத்தில் இது கிடையாது.
 
இப்போதைக்கு என்னிடம் அரையடி அங்குசமும் என் உள்ளன்பினால் தயாரித்த அன்புச் சங்கிலியும் இருக்கிறது. இதை வைத்து சமாளிக்கிறேன். ஆனால் மோகனமன்னா! உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒரு ரகசியமான விஷயம்..... உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நிதி இல்லை என்று சொன்னாரே அந்த பாண பத்மநாபர் (பாணபத்திரர் ஸ்டைலில் படிக்கவும்)... அவர் ரொம்ப மோசம். அரசனின் யானைப்படைக்கு தேவையான யானைச் சங்கிலிகளை கூட தவணை முறையில் சுற்றிலும் இருக்கும் குறுநில மன்னர்களுக்கு சலுகை விலையில் ஒரு தொகை பேசி விற்றுவிட்டார். கேட்டால் யானை விற்ற காசு பிளிறிடுமா..என்று விஷயமறிந்தவர்களிடம் கூறி வருகிறாராம். அடுத்த நிதியாண்டில் அவர் மன்னருக்கே ஊதிய உயர்வு கொடுக்கும் அளவுக்கு மலை போல் சொத்துக் குவித்து விட்டாராம். அரபு நாடுகளிலிருந்து ஒட்டகம் வரவழைத்து ஒட்டகப்படை கொண்டு உங்களையே தாக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம். கொஞ்சம் அவரை கவனியும். நீங்கள் ஏதாவது கேட்டால் வாய்ஜாலத்தால் உங்களை ஏமாற்றிவிடுவார். எத்தன். வார்த்தைகளில் ஜித்தன். ஜாக்கிரதை! யானை தடவும் குருடன் போலாகிவிடப்போகிறீர்கள்.
 
அடுத்த முறை(ஆட்சிக்கான என்று இருந்திருக்க வேண்டும்) மன்னனை தீர்மானிக்கும் திறன் இந்த ராஜ யானைக்கு உண்டு. கூட்டத்தில் எங்கு ஒளிந்திருந்தாலும் என்னை தேடி வந்து மாலையிடும்படி இவனை பழக்கி.. நானே அடுத்த முறை அரசனாவேன்.... சங்கிலி முருகனை இந்நாட்டின் அமைச்சராக்குவேன். இது இந்தத் தான யானை மீது சத்தியம்.
 
[ஏழைப் புலவன் யானைக்கட்டி தீனி போட வக்கில்லாததால் வீதிக்கு தக்கவாறு நாமமும், பட்டையும் மாற்றி மாற்றி சார்த்தி அந்த யானையை வீடு வீடாக ஆசிர்வாதம் செய்து பிச்சை எடுக்கவிட்டு ராச்சாப்பாட்டுக்கு கலெக்ஷன் பார்க்கிறான்...புலவனின் இந்த அபார(!?) சாமர்த்தியத்தை பார்த்து இளவரசி தெய்வானை (தேவயானை) போட்ட நகையுடன் (அவள் எடை ஐம்பது கிலோ.. அணிந்திருந்த நகைச் சுமை நூறு கிலோ) அவன் காலடியை பின் தொடர்கிறாள்....ராஜாவாகி ராஜ்யபரிபாலனம் செய்யும் வண்ணக் கனவுகளுடன் வீதியில் மிதந்து செல்கிறான் வரகவி....]
 
இப்படிக்கு தருமியான ஆர்.வி.எஸ். (சொக்கன் புலவராக வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்......)
 
அப்பாடி ட்ராக் மாத்தி கொண்டு போயாச்சு.. யானைக் காதலை... மனிதக் காதலுக்கு கொண்டு வந்தாச்சு...இனிமேல் இது ரொமாண்டிக் காதல் யானை இல்லை, பிச்சை எடுக்கும் பட்டத்து யானை.. அடடா.. மாலை போட்டு ராஜாவாகிறது கான்செப்ட் எங்கே இங்க வந்தது... சரஸ்வதி சபதம் இவ்வளவு ஆழமா பாதிச்சிருக்கா... இப்படி ரவுசு காட்டறாங்களே... இப்பவே கன்னக் கட்டுதே.... அடுத்தது யாருப்பா... வாங்கப்பா... பாண பத்மனாபரா.. மோகன(ஜி)மன்னனா..... வந்து ரவுண்டு கட்டுங்க... பிள்ளையாரப்பா ப்ளாக்ஐ காப்பாத்து.... யானைக்கு மதம் பிடிச்சுடும் போல இருக்கு....  
16 செப்டெம்ப்ர், 2010 11:03 pm  
 
இப்படியே... யானைக் கதை போய்க்கொண்டு இருக்கிறது... 
 
முதல் பாகம் இதோடு முற்றும்.

22 comments:

ரிஷபன் said...

இப்படியே... யானைக் கதை போய்க்கொண்டு இருக்கிறது...

முதல் பாகம் இதோடு முற்றும்.

இப்பவே கண்ணைக் கட்டுதே.. யானை சும்மா பூந்து விளையாடுது..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா... முடியலங்க...
உண்மையில் ரசித்து சிரித்தேன்.. :-)))

RVS said...

ரிஷபன்... ரெண்டாம் பாகம் தொடருமான்னு பார்ப்போம். வெண்கல ப்ளாக்குள்ள யானை பூந்தா மாதிரி இருக்கா? மோகன்ஜியும் பத்மநாபனும் ரசிகமணிகள். பிச்சு உதருவாங்க. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

ஒரு சிரிப்பு யானையோடு இந்த ப்ளாக்கிற்கு முதன் முதலாக வந்துருக்கீங்க ஆனந்தி.. சந்தோஷம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

கலக்கல் "கும்மி"

இளங்கோ said...

முதல் பாகம் இதோடு முற்றும்.
அப்படின்னா இன்னும் இருக்கா.? ஒரே சிரிப்பா வருகிறது.

RVS said...

நன்றி சித்ரா.. இது "சிரிப்பு கும்மி"

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

இளங்கோ எங்காவது ஊரை விட்டு ஓடி விடாதீர்கள்.. யானை மிரட்டல் இன்னும் இருக்கும் போல் தெரிகிறது...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சௌந்தர் said...

முதல் பாகம் இதோடு முற்றும்.///

என்னது அப்போ இன்னொரு பாகம் இருக்கா

ஹேமா said...

முதல் பாகமே இவ்ளோ...இப்பிடி இருக்கே !

அப்பாதுரை said...

அருமையான பின்னோட்டத் தொடர்... ரசித்து மாளவில்லை. பதம் நாபன், மோகன்ஜி, எல்லோருக்கும் யானை சைஸ் நன்றிகள்.

மோகன்ஜி, 36k/28k/36k - funny joke in recent times!

அப்பாதுரை said...

மூழாம்பழம்?
என்னங்க இப்படி ஒரு பழம் நிஜமாவே இருக்கா? என் தாத்தா நிமிட்டாம்பழம் தரேன்னு ஆசைகாட்டி கடைசியில் மோசம் போன கதை நினைவுக்கு வருதே?

RVS said...

நோ எஸ்கேப் சௌந்தர். ரெண்டாவது பாகம் சுடச்சுட ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது. ப்ளீஸ் வெயிட்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

முதல் பாகமே இவ்வளோ. அப்படின்னு யானை மாதிரி வாயை பிளந்தா எப்படி ஹேமா? இன்னும் கூத்து இருக்கே.. ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி said...

சாமியோவ்! என் ப்ளாக்ல தான் யானை ரவுசா இருக்கே.. உங்க ப்ளாக்ல வந்தாவது வேற சீன் பாக்கலாமேன்னு வந்தா.. நம்ம கும்மியே இங்கயும் ஷகீலா படமாட்டம் இல்ல ஓடிக்கிட்டிருக்கு?! இன்னும் ஒரு பதிவுக்கு மேல இன்னும் என் ப்ளாக்ல மேட்டர் சேர்ந்திடிச்சே..கொஞ்சமாவா கரகம் ஆடியிருக்கோம்?அடுத்ததையும் போட்டுடுங்க . தூங்கலாமான்னு பார்த்தேன்.சைக்கிள் கேப்புல எனக்கு " யானை மேல் (துஞ்சிய )தூங்கிய மோகனசோழன்"னு ஸ்லைட் போட்டுராதீங்க பிரதர்

பத்மநாபன் said...

புள்ளிவெச்சா, கோடு இழுத்து , அந்த கோட்டுல ரோட்டை போட்டு , கோட்டையை பிடிக்கறரவரு ஆர்.வி.எஸ் ன்னு...நானும் என் மச்சான் மோகன்ஜியும் இப்பத்தான் பேசீட்டு இருந்தோம்....சரியாத்தான் இருக்கு ...வசமா வத்தி வச்சிருக்கேன் போய் பாருங்க....

( ரொம்ப மகிழ்ச்சி ...பதிவே கும்மியாக , கும்மியே பதிவாக )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஒரு சிரிப்பு யானையோடு இந்த ப்ளாக்கிற்கு முதன் முதலாக வந்துருக்கீங்க ஆனந்தி.. சந்தோஷம்.///

மீண்டும் வருகிறேன் :-))))

RVS said...

அப்பாதுரை சார் பாராட்டுக்கு நன்றி.. இந்தப் பழம் மேட்டர் பத்மநாபன் தான் விளக்கனும். நானு அதுல பழம். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

நீங்கள் என்ன ராஜ ராஜ சோழன் வம்சமா. மோகன சோழன் என்று நீங்களே உங்களுக்கு பெயர் வைத்துக் கொள்கிறீர்கள். சாரி.. இந்த மாதிரி உங்க பதிவுலதான் பின்னூட்டம் இடனும் மோகன்ஜி. அடுத்த கட்டத்துக்கு கதையை நகர்த்தி கொண்டு வந்துருக்கேன். உங்க யானை லிஸ்ட் பதிவை பாருங்கள். ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

வத்திக்கு எதிர் வத்தி இருக்கு மாமோய். மோகன்ஜி யானைப் பதிவுல போய் இப்புடு சூடுங்க... நா வர்ட்டா பத்மநாபன்... ;-) ;-)

எல்லோரும் கும்மி அடிப்போம்... பின்னூட்டக் கும்மி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இப்படி ஒரு யானை கதை வாழ்க்கைல படிக்கல போங்க

RVS said...

பார்ட் டூ இருக்கு. அவசியம் வாங்க அ.தங்கமணி. ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails