Friday, March 4, 2011

அடிபட்ட தெரு

தேகம் அலுத்து பெண்டு கழண்டு போய் ஒன்பது மணிக்கு மேல் பசி வயிற்றைக் கிள்ள தெரு திரும்பினால் அங்கே ஒரு துன்ப அதிர்ச்சி ஜே.சி.பியோடு காத்திருந்தது. வீதிக்கு நடுவில் பெரிய வாய்க்கால் வெட்டி இயற்கை எய்திய வ.உ.சியை நேரே சொர்க்கத்திலிருந்து கூட்டி வந்து கப்பல் விடும் எண்ணத்தில் பள்ளம் வெட்டியிருந்தார்கள். "பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகிறது" என்று ரோடுக்கு நடுவில் பெயர்ப் பலகை வைத்திருந்தார்கள். சாலையின் இருமருங்கும் இருக்கும் வீடுகளுக்கு உள்ளே நடந்து செல்லக் கட்டைப் பலகை போட்டிருந்தார்கள். மதுரையில் "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி...." எழுதி சங்கப் பலகை பார்த்த ஈசனே இறங்கி வந்தாலும் உள்ளே போகமுடியாது.

drainage
வெட்டிய களைப்பு தீர ஓரமாக உட்கார்ந்து சிரமபரிகாரம் செய்துகொண்டிருந்த புஜபலம் மிக்க இரு இளைஞர்கள் கொரியன் செட்டு மொபைலில் "என் உச்சி மண்டையில சுர்ருங்குது...." பாட்டை மற்றவர் காது சுர்ருசுர்ருக்க கேட்கக்கூடாத டெசிபலில் சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். காதுக்குள் கடப்பாரை இறங்கிக்கொண்டிருந்தது.
அமிதாப்பச்சன் உயரத்தில் கருணாஸ் கலரில் வடிவேலு மூஞ்சியோடு பள்ளம் நோண்டி ஜானகி கிடைக்காத ஜனக மஹாராஜா போல கண்ணிரெண்டும் சொருகி அவர்களுக்கப்புறம் ரெண்டாம் நம்பர் வீட்டு வாசல் சுவற்றில் சாய்ந்திருந்தார் ஒரு இள முதியவர். சாலையின் இருபுறத்திலும் மணல் குன்றுகளை குவித்து ஒரு ஒத்தை வரப்பு இடம் கூட கொடுக்காமல் எல்லோர் வீட்டு வாசலையும் அடைத்து அனைவரையும் ஜீவசமாதி கட்டி விட்டார்கள். எனக்கு பார்பதற்கு அரண்மனைக்கு அரணாக அகழி கட்டியது போன்று இருந்தது அந்த பள்ளம். என்னே ஒரு பாசிடிவ் திங்கிங்!

மெதுவாக பாட்டுப் போதையில் இருந்த அந்த இளைஞரை பதவிசாக அணுகி "திரும்ப எப்போ மூடுவீங்க?" என்று கேட்டேன். அசிங்க வார்த்தையால் அவரை திட்டியது போன்று துணுக்குற்று விஜயகாந்த் விழிகளால் முறைத்தார். புரிந்தது. அந்தி சாய்ந்ததும் அயர்ச்சி தீர சாய்த்துக்கொண்டு வந்துவிட்டார். "இப்பத்தான் நோண்டியிருக்கோம்..." என்ற வார்த்தைகளை சாராய நெடியோடு உதிர்த்துவிட்டு  எழுந்து ஆடிக்கொண்டே போன தனது சேக்காளியுடன் குரூப் டான்ஸ் ஆட சேர்ந்துகொண்டார். தெருவை ஒரு பிரதக்ஷினமாக வலம் வந்து வண்டியை எங்காவது ஓரமாக நிறுத்தலாம் என்று அடுத்த தெருவில் நுழைந்தால் அங்கே கப்பல் கொண்டு வந்து நிறுத்தாத குறையாக வெட்டிய பள்ளத்தில் சாக்கடை நீர் காட்டாற்று வெள்ளமாய் நுழைந்து அம்மக்கள் நதி நீர்ப் பாசனம் செய்துகொண்டிருந்தார்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை நேரே பார்த்தேன்.

இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்றெண்ணி ரெண்டு தெரு ரவுண்டு அடித்து கார் நிறுத்த சைக்கிள் கேப் கூட கிடைக்காமல் மீண்டும் வட்டமடித்து புறப்பட்ட தெருமுனைக்கே வந்து லாம்ப் போஸ்டில் காலை தூக்கி அசிங்கம் பண்ணிக்கொண்டு நின்றிருந்த நாயை விரட்டிவிட்டு வண்டியை நிறுத்தி கதவை நாலு தரம் இழுத்துப் பார்த்துவிட்டு கழைக்கூத்தாடி கம்பு மேல் நடப்பது போல ஆடி அசைந்து லாவகமாக பள்ளத்தில் விழாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீடு போய் சேர்ந்தேன். பிழைத்தது புனர்ஜன்மம். வாழ்க்கை ஒரு பள்ளம். கொஞ்ச நாள் முன்னாடிதான் வெள்ள நீர் வடிகால் வெட்டினார்கள். வீட்டிற்குள் போவதற்கு எதிர்சாரியில் லாங் ஜம்பினார்கள். எங்கள் பக்கத்தில் பிரச்சனையில்லை. லாங் ஜம்பியதர்க்கு பிறகு வாசற்கதவை சார்த்தும் முன் எங்கள் பக்கம் பார்த்து "புஸ் புஸ்.." என்று விட்ட உஷ்ண மூச்சில் பச்சை மரம் பற்றிக்கொள்ளுமோ என்று பயந்தேன்.

எங்களது ரொம்ப வயசான தெரு. இரண்டு வெட்டுக்கு பிறகு ரொம்பவே ஆடிப் போய்விட்டது. ரெண்டே நாளில் ஒரு சொல்லவொண்ணா அதிசயம் நிகழ்ந்தது. பைப்பை போட்டு பரபரவென்று பள்ளத்தை மூடிவிட்டு போர்டை கையில் எடுத்துக்கொண்டு வேறு திசை நோக்கி கிளம்பிவிட்டார்கள். ஆபரேஷன் ஆன பேஷன்ட் போல தெரு அசௌகரியமாக படுத்திருந்தது. எவ்வளவு பொறுமையாக அகழ்வாரையும் தாங்கிற்று!! பள்ளத்தை மூடிய அன்று சோதனையாக வானம் வேறு பொழிந்தது. செம்மண் பூமி. அன்புடை நெஞ்சங்கள் கலந்த செம்புலப்பெயல் நீர் தேங்கி நின்றது. தண்ணீர் சேர்ந்ததும் பால்கனியில் இருந்து என் முகத்தை அந்தத் தேங்கியநீரில் பார்த்ததும் பல காலங்களாக பாட்டெழுதி வரும் கவிஞர்களின் 'தாட்' எனக்கும் வந்தது. என் பிள்ளைகள் 'டைட்' சோப்பு விளம்பர கண்ணைப் பறித்திடும் பளீர் வெள்ளை சீருடையில் சென்றவர்கள் ஸர்ஃப் விளம்பர "கறை நல்லது" போல வந்தார்கள். சுத்தமான சொக்க இந்தியர்களான என் தெருவாசிகள் சிகப்பிந்தியர்கள் ஆனார்கள். இரண்டு வீடு தள்ளி தெருவில் யாரைப் பார்த்தாலும் ஒரு அகால துக்கம் அனுஷ்டிக்கும் மாமாவை செஞ்சேற்றுடன் பார்க்கும் போது அச்சு அசல் வேற்றுக்கிரகவாசி போல இருந்தார். ரொம்பநாள் கழித்து பழுப்புப்பல் தெரிய சிரித்தார். செஞ்சேற்றுக் கடன்.

இப்படி இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட தெருவிற்கு மூன்றாம் நாள் காலையில் மற்றுமொரு சோதனை மலைப்பாம்பு போல சுற்றி தெருமுனையில் இறக்கப்பட்ட ராட்சத பி.வி.ஸி குழாய் ரூபத்தில் வந்தது. இந்த முறை இறக்கிய லாரிக்காரர் ரொம்பவும் நல்ல மனிதர். என்ன என்று கேட்பது போல பார்த்ததர்க்கே பதில் சொல்லிவிட்டார். "குடி நீர்க் குழாய் சார்!". வெள்ள நீர் வடிகால் எதிர்ப்புறத்தில் இருந்ததால் குடிநீர் நம்ம பக்கம்தான் என்று நினைத்தேன். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல அதற்கும் எதிர் சாரியில் தான் தோண்டினார்கள். இதுவும் ஓர் இரவு நடந்த கூத்துதான். "சார்! பாத்து ஓரமா போய்டுங்க.." என்று பெரியமனது பண்ணி என்னை இம்முறை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். யார் செய்த புண்ணியமோ பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்.

நம்ம வாய் சமர்த்தா இருக்காம ஜே.சி.பி இயந்திரம் கொண்டும் நோண்டும் பச்சை கைலியிடம் "எப்ப மூடுவீங்க?.." என்றதும் திரும்பி வந்த பதிலில் எனக்கு மூச்சு அடைத்தது. வேர்த்து விட்டது. "ராத்திரியே மூடிடுவோம்". காலையில் எழுந்து பார்த்தால் சவம் புதைத்ததர்க்கு பின்னால் அடையாளம் தெரிய ஒரு முட்டு மணல் கொடுத்து மூடியது போல பள்ளத்தை மூடியிருந்தார்கள். பால் வாங்கி வந்த முதியவர் ஒருவர் விழுந்து சிவபதவி அடைந்திருப்பார். "கல்யாண சாவு.. சிவராத்திரி அன்னிக்கு போய்ட்டார்.. நேரே கைலாயம் தான்..." என்று பேசியிருப்பார்கள். நல்லவேளை தெருவில் ஒரு வம்பு குறைந்தது.

அப்பாடி எல்லாரும் சேர்ந்து தெருவை ரணகளப் படுத்திட்டாங்க.. இனிமே ஒண்ணுத்துக்கும் நோண்ட மாட்டாங்க.. என்றதும் பின்னாடிலேர்ந்து என் அம்மா "ஈ.பி ஒயர்லாம் மாலை மாதிரி தொங்கிண்டு இருக்கோன்னோ.. எல்லாத்தையும் பூமியில குழி தோண்டி பொதைக்கப் போறாளாம். இந்த தடவை நம்மாத்து பக்கம் தான் அந்த குழி வரதான்...". எனக்கு இப்பவே அதல பாதாள பள்ளத்துக்குள் விழுவது போல இருந்தது. ஏற்கனவே பலமுறை ஆபரேஷன் கண்ட தெரு எதையும் தாங்கும் இதயம் கொண்டு சமர்த்தாக படுத்திருந்தது.


படக்குறிப்பு: ஏதோ ஒரு தெருவில் நோண்டப்படும் பள்ளம். எடுத்தது இங்கே.
http://myviews4life.wordpress.com/tag/chennai/

-

31 comments:

எல் கே said...

நல்லா நொண்டி விளையாடி இருப்பீங்க ஆர்வீஎஸ். ஒரு இலக்கியத் தரத்தோட இருக்கு இந்தப் பதிவு

RVS said...

@எல் கே
ஆமாமாம்.. ஆனா இங்க ப்ளோக்ல நான் இலக்கிய நொண்டிதான் எல்.கே. ரொம்ப உசரத்துக்கு தூக்கிட்டீங்க. நன்றி.. ;-)))

அப்பாதுரை said...

இலக்கியத் தரம்னா ரெண்டு வரி படிச்சுட்டு உடனே மூடி வச்சுடற மாதிரி இருக்கு - னு சொல்றார் எல்.கேனு நினைச்சீங்களா? இல்லிங்க. அப்படியெல்லாம் இருக்காது. (நான் / வரைக்கும் படிச்சேங்க.)

தெருவில தேங்காம பைப் போட்டு கடத்தறாங்களே - அந்த மட்டும் முன்னேற்றம் தான். அத்தனை குழி தோண்டி மூடும் அளவுக்கு தெருக்கள அகலமாக இருப்பது ஆச்சரியம்!

RVS said...

@அப்பாதுரை
/ வரைக்கும் படிச்சதுக்கு நன்றி அப்பாஜி. நமக்கு இலக்கிய ஜல்லி அடிக்கும் அளவிற்கு ஞானம் இல்லை ஜி!

சக்தி கல்வி மையம் said...

எங்க ஊரில் எல்லாத் தெருவிலும் இந்தப் பிரச்சனை...

சக்தி கல்வி மையம் said...

RVS said...

@அப்பாதுரை
/ வரைக்கும் படிச்சதுக்கு நன்றி அப்பாஜி. நமக்கு இலக்கிய ஜல்லி அடிக்கும் அளவிற்கு ஞானம் இல்லை ஜி!
-------- உங்கள் எழுத்து அப்படித்தான் இருக்கு நண்பரே...

Unknown said...

ஜன நாயக நாட்டில் பள்ளம் தோண்டக்கூட உரிமையில்லையா?

அப்படியே,

அதை எப்ப மூடுவீஙகன்னு கேக்கவும் உரிமையில்லையா?

RVS said...

@வேடந்தாங்கல் - கருன்
வேடந்தாங்கலிலா? ஆச்சர்யமா இருக்கு.. ;-))

RVS said...

@வேடந்தாங்கல் - கருன்
எப்டி சொல்றீங்கன்னு தெரியலை.. பாசிடிவா எடுத்துக்கறேன்... கருத்துக்கு மிக்க நன்றி.. ;-)))))

RVS said...

@கே.ஆர்.பி.செந்தில்
ஏதேது பெரியவங்க வந்துருக்கீங்க போலருக்கு.. வாங்க...வாங்க...
ஏகாதிபத்திய நாட்டில் எதற்குதான் உரிமை இருக்கு... ஹா.ஹா..... ;-)))))))))))))))))))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வரிக்கு வரி தமிழால் தோண்டியிருக்கிறீர்கள் ஆர்விஎஸ்.

தே.மூட மாட்டே-இந்த ஸ்லாங்கில் உங்கள் கேள்வியை விஜயகாந்த் கண்ணர் உள்வாங்கி வெறுப்பேற்றியிருப்பார் போல.

உங்கள் கஷ்டத்தை எங்கள் சுவாரஸ்யமாக்கிவிட்டீர்கள்.இது எல்லோருக்கும் வராது.

இளங்கோ said...

//பெரிய வாய்க்கால் வெட்டி இயற்கை எய்திய வ.உ.சியை நேரே சொர்க்கத்திலிருந்து கூட்டி வந்து கப்பல் விடும் எண்ணத்தில்//

//எழுதி சங்கப் பலகை பார்த்த ஈசனே இறங்கி வந்தாலும் உள்ளே போகமுடியாது.//

//ஜானகி கிடைக்காத ஜனக மஹாராஜா போல கண்ணிரெண்டும் சொருகி//

//அரண்மனைக்கு அரணாக அகழி கட்டியது போன்று//

//சிந்து சமவெளி நாகரீகத்தை நேரே பார்த்தேன்//

//கதவை நாலு தரம் இழுத்துப் பார்த்துவிட்டு கழைக்கூத்தாடி கம்பு மேல் நடப்பது போல ஆடி அசைந்து//

//ஆபரேஷன் ஆன பேஷன்ட் போல தெரு அசௌகரியமாக படுத்திருந்தது//

//செம்மண் பூமி. அன்புடை நெஞ்சங்கள் கலந்த செம்புலப்பெயல் நீர் தேங்கி நின்றது.//

//செஞ்சேற்றுக் கடன்//

//பலமுறை ஆபரேஷன் கண்ட தெரு எதையும் தாங்கும் இதயம் கொண்டு//

இந்த வரிகள் வரும் இடங்களிலெல்லாம் சிரித்தேன் அண்ணா.
ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

RVS said...

@சுந்தர்ஜி
தமிழ்த் தோண்டல்... உங்கள் வார்த்தை அமைக்கும் திறமை அபாரம் ஜி!
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி. ;-))))

RVS said...

@இளங்கோ
தம்பியை சிரிக்க வைத்த அண்ணனானேன், தன்யனானேன். நன்றி. ;-))))

Chitra said...

நம்ம வாய் சமர்த்தா இருக்காம ஜே.சி.பி இயந்திரம் கொண்டும் நோண்டும் பச்சை கைலியிடம் "எப்ப மூடுவீங்க?.." என்றதும் திரும்பி வந்த பதிலில் எனக்கு மூச்சு அடைத்தது. வேர்த்து விட்டது. "ராத்திரியே மூடிடுவோம்". காலையில் எழுந்து பார்த்தால் சவம் புதைத்ததர்க்கு பின்னால் அடையாளம் தெரிய ஒரு முட்டு மணல் கொடுத்து மூடியது போல பள்ளத்தை மூடியிருந்தார்கள். பால் வாங்கி வந்த முதியவர் ஒருவர் விழுந்து சிவபதவி அடைந்திருப்பார். "கல்யாண சாவு.. சிவராத்திரி அன்னிக்கு போய்ட்டார்.. நேரே கைலாயம் தான்..." என்று பேசியிருப்பார்கள். நல்லவேளை தெருவில் ஒரு வம்பு குறைந்தது.


......எல்லாத்தையும் மக்கள் எடுத்துக் கொள்ளும் விதம்தான் , இந்த நிலைமைக்கு காரணம் என்று சொல்லாமல் சொல்லிட்டீங்களே....
நகைச்சுவை டச் கொண்டு ஒரு அவல நிலையை .... என்னமா சொல்லிட்டீங்க!

Madhavan Srinivasagopalan said...

ம்ம்.. சான்சே இல்லை.. என்னாளலாம் இப்படி எழுத முடியாது..
அதான் எல்லாருக்கும் தெரியுமே நா கடி கடின்னு கடிக்கிறது..

இராஜராஜேஸ்வரி said...

கப்பல் விடும் எண்ணத்தில் பள்ளம் வெட்டியிருந்தார்கள். "/
விட்டாச்சா கப்பல்??

raji said...

இளங்கோ கூறிய அனைத்தையும் நானும் ரசித்தேன்

நீங்க @இளங்கோனு பதில் போட்டிருக்கற வரை படிச்சுட்டேன் நான்

பொறுத்தார் பூமி ஆள்வார் சார்

(என் பதிவுல நீங்க சொன்ன சைதைய்....தமிழரசி...க்கு பதில் போட்டேன்)

Vidhya Chandrasekaran said...

ஸ்பீட் ப்ரேக்கரே இல்லாத ஹைவேஸ்ல போற மாதிரி வழுக்கிண்டு போறது எழுத்து நடை:)

மோகன்ஜி said...

அன்பு ஆர்.வீ.எஸ்! சொல்ல நினச்சதேல்லாம் இளங்கோ சொல்லிட்டாரே! தெருவுல பராக்கு பாக்காம பாத்து போங்க மச்சினரே!

RVS said...

@Chitra
நன்றிங்க சித்ரா.. ஆனாலும் நோண்டியது நோண்டியபடி இருக்க பல தெருக்களை அம்போன்னு விட்டுட்டாங்க.. கடவுள் கருணை எங்கள் மேல் கொஞ்சம் இருக்கிறது.. தப்பித்தோம்.. ;-)))))))

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா... உன் ஸ்டைலே தனி... உன் வழி தனி வழி.. ;-))))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
;-)))) வ.உ.சி இன்னும் மேலேர்ந்து இறங்கி வரலை.... வைட்டிங் ஃபார் வ.உ.சி. ;-)))))))))))

RVS said...

@raji
நன்றிங்க ராஜி! உங்கள் பின்னூட்டம் படித்தேன்.. ஒரே மாதிரி யோசிச்சுருக்கோம்.. ஹி..ஹி.. ;-))

RVS said...

@வித்யா
ரொம்ப நன்றிங்க... பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா... அனுபவம் பேசுகிறது.. ஹா.ஹா.. ;-))))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா.... சிரம் வணங்கி செய்கிறேன்... அதாவது குனிந்த தலை நிமிராமல் தான் போறேன்னு...... ;-)))

Anonymous said...

அவ்வையார் பார்த்தால் , 'திரை கடலோடியும் திரவியம் தேடு' பிறகு 'சாக்கடை ஓடியும் வீட்டுக்குள் சேரு, என்று பாடியிருப்பார்.

ரொம்ப நாளாச்சு, பர தேசத்திலே, ஏதோ நட்சத்திர (ஸ்டார்) திருகாணியாம், அதனால் வெளியூர் வந்தேன்.

மத்த செய்தியெல்லாம் படித்தேன்.

நல்ல இருக்கு. தொடருங்கள்.

ரகு.

சிவகுமாரன் said...

யாம் பெற்ற துன்பத்தால் மகிழ்க இவ்வையகம்
உங்கள் புதிய பொன்மொழி.
சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.

RVS said...

@ரகு.
ரொம்ப நாளா ஆளைக் காணலை.. நினைச்சேன் திருகாணியாத்தான் இருக்கும்ன்னு.. ;-))))
நன்றி...;-))

RVS said...

@சிவகுமாரன்
நன்றிங்க.. டென்ஷனாயி ஒன்னும் நடக்கப் போறதில்லை.. அதான்.......... ;-))))

ரிஷபன் said...

இப்ப எங்க தெருவுலயும் பள்ளம் தோண்டி இருக்காங்க.. பாதாளச் சாக்கடைக்கு. ஒரே இடத்துல சலிக்காம ரெண்டு மாசத்துக்கு ஒருதரம் தோண்டறது மட்டும் ஏன்னு புரியல.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails