Wednesday, October 26, 2011

யாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)

என் பெயர் கல்யாணராமன். ஆனால் இன்னமும் கல்யாணமாகாத ராமன். பராசக்தியில் பாதியாய் கைச்சட்டை மடித்த சிவாஜி போல் கூண்டேறிச் சொல்வதென்றால் ”மங்களகரமான பெயர்”. பிறந்த ஊர் அரியலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம். குக் என்று... என்ன மேலே சொல்லட்டுமா.. இல்லை இங்கேயே நிறுத்தட்டுமா.. நம் கதையே பெருங்கதை இவன் கதையை யார் படிப்பார் என்று தலையில் அடித்துக்கொள்பவரா நீங்கள்? ப்ளீஸ் இப்போதே எஸ்கேப் ஆகிவிடுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும். ”மாபாவி... சண்டாளா” என்று வாய்விட்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து காரித்துப்பி கொச்சையாக திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

படிக்க தெம்பிருப்பவர்கள் கொஞ்சம் காதைக் கொடுங்கள். ரகஸியமாக ஒன்று சொல்லவேண்டும். இப்போது நானிருக்கும் உயர்பதவியில் என்னை ஒரு உதாரண புருஷனாக கொண்டாடுகிறார்கள். அதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லோரையும் போல நானும் பால்ய வயது பருவதாகத்துக்கு பல “காலைக் காட்சி” சினிமாக்கள் பார்த்தேன். காற்றில் மாராப்பு விலகும் அனைத்து மாதரையும் பார்த்து ஜொள்ளொழுக இளித்திருக்கிறேன். இதற்கும் ஒரு படி மேலே ஒரு சம்பவம் நடந்தது.

கல்லூரியில் வழக்கம்போல ந்யூமரிக்கல் மெத்தாட்ஸ் அரிப்பிலிருந்து விடுபடுவதற்காக அந்த அத்துவானத்தில் காம்பௌண்ட் தாண்டி பொட்டிக்கடை விரித்திருந்த ராசுக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். போச்சுடா. இது வேறயா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பாரதியார் கஞ்சா புகைப்பாராம். எனக்கு தெரியும். நீ பாரதியா என்று கேட்காதீர்கள். சரி.. அனாவசியமாகப் பேச்செதெற்கு. மேலே சொல்கிறேன். 

ஒரு நிமிஷம். இது ஒரு ரௌடியின் வாழ்க்கைக் குறிப்பு என்று நீங்கள் இப்போது நினைத்தால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். பேசாமல் இத்தோடு இதைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். போன பாராவில் வரும் விடலைக் காட்சிகளை வைத்து ஒரு காமரசம் ததும்பும் வாழ்க்கையாகவும் இதை எடைபோட்டு விடாதீர்கள். அதுவும் தவறு. என்ன குழப்புகிறேனா? இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கு புரிந்து விடும். ம்... எங்கே விட்டேன். ஆங்... சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்போது... உடம்பெங்கும் அழகு ஆறாகப் பெருகி ஓடும் ஒருத்தி அருவியென நடந்து வந்து கொண்டிருந்தாள். நெற்றியில் ஒரு சந்தன தீற்றல். அதன் கீழே ரவையளவு குங்குமம். காதுகளில் கண்ணகியின் சிலம்பு போல இரு பெரு வளையங்கள். கண்களின் ஓரங்களுக்கு மையினால் கரைகட்டியிருந்ததால் அதன் அளவு தெரிந்தது. அடுத்தவரை மயக்கும் அகலக் கண்கள். மீதிக்கு நீங்கள் தடுமாறாமல் அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

அவளை பதுமை போல பாங்காக நிற்க வைத்து துணியால் மேனியைச் சுற்றி அந்த சுடிதார் தைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நகமும் சதையுமாக இருந்தது சுடிதாரும் தேகமும். இப்போது அவளைப் பற்றி திருஅங்கமாலை படிக்கப்போவதில்லை. உடம்பு இறுக்கும் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் அணிந்த வாளிப்பான பெண் எப்படியிருப்பாள் என்று உங்களுக்கே தெரியும். ஆளை மயக்கும் வாசனையுடன் மோகினாய் பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த ஆச்சர்யத்தில் தானாக வாய் திறந்து சிகரெட் புகை வழிந்தது. அந்தப் புகையின் ஊடே அவளைப் பார்த்தால் தேவலோக ”ரம்பை+ஊர்வசி+திலோத்தமை=அவளொருத்தி” போலிருந்தாள். அவள் பவள வாய் திறந்து ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று நாக்கை அழுத்தி உதடு சுழற்றிப் பேசும்போது என் கண்கள் என்கிற வ்யூபைண்டர் வழியாக அவளுடைய சிறுசிறு சுருக்கங்கள் நிறைந்த ஆரஞ்சு சுளை உதடுகள் மட்டும் ஜூமாகித் தெரிந்தது.

பக்கி என்று நினைத்துக்கொள்வாளோ என்றஞ்சி சுதாரித்துக்கொண்டு “என்னையா?” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா?” என்று கேட்டதற்கு அவன் என்னைப் பார்த்தால் தானே பதில் சொல்வான். வாய் மட்டும் மந்திரம் போல “ஆமா...மா..மா...மா...” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க அந்தப் பேரழகியை அசிங்கமான இடங்களில் கண்களால் அளந்துகொண்டிருந்தான்.

இதுவரைப் படித்ததில் “இது தான் நான்” என்று நீங்கள் நினைத்தால் ”ஐ அம் ஸாரி”. மேலே போவோம். “அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சங்கோஜமாக பதில் சொன்னேன். அழகு ராணிகளை தூரத்தில் ரசித்தாலும் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. அவளுக்கு பொதுப்பரீட்சையில் திரிகோணமிதி சொல்லிக்கொடுத்தது போல நன்றிகலந்த சிரிப்போடு “நீங்களும் என் கூட கொஞ்சம் வரமுடியுமா?” என்று சங்கீதமாகப் பேசினாள். அடித்தது யோகம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அங்குதான் வம்பே வந்தது. 

நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து மொத்தம் நானூறு அடியில் அவள் காட்டிய அலுவலகம் இருந்தது. சேர்ந்து நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒருதரம் அந்தத் துப்பட்டா என்னைத் தொடுகிறது. ஒரு துப்பட்டாவின் வருடல் கூட கிளுகிளுப்பூட்டும் என்று அன்று தான் நான் உணர்ந்தேன். ”யேய் இழுத்து பின்னால் முடிந்து கொள்” என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் வழக்காடிக் கொண்டிருக்கும்போதே அந்த கம்பெனி வந்துவிட்டது. ஊருக்குத் தெரியாமல் ஒவ்வாத காரியம் செய்பவர்கள் இடம் போல ஆளரவமற்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். வாசலில் நின்றிருந்த கூர்க்கா பேய்ப் படங்களில் வரும் தாடிவைத்த அச்சுறுத்தும் போஸில் முறைத்த படி நின்றிருந்தான். 

“இன்னிக்கி என்னை இண்டெர்வியூவுக்கு வரச்சொல்லியிருந்தாங்க” அவள்தான் பேசினாள். வீணைத் தந்தியை மீட்டியது போலிருந்தது. “உங்க பேரு?” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா?. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு?” மீண்டும் மிரட்டினான். செமஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட அச்சப்படாதவன் வெடவெடத்தேன். ”அண்ணா” என்ற கெட்டவார்த்தையைப் பயன்படுத்தாமல் “ஃப்ரெண்ட்” என்று சொல்லி எனக்கொரு வாய்ப்பளித்தாள். பி.ஈ கோட் அடித்தாலும் பரவாயில்லை என்று பரம திருப்தியடைந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் ஒரு காலியான வரவேற்பரை. நடந்தால் காலடியின் எதிரொலி கேட்டது. கண்கள் மிரள உள்ளே பார்த்தாள். யாரோ நிலம் அதிர நடந்து வருவது தெரிந்தது. குண்டாக வளர்ந்த அமுல் பேபி போன்ற தோற்றம். “ஹாய்! ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று என் பாழும் நெஞ்சு கிடந்து அடித்துக்கொண்டது. ரெண்டடி சென்றவன் திரும்பப் பார்த்து “சார்! நீங்க என் ரூம்ல வெயிட் பண்ணுங்க. மாகசீன்ஸ் எதாவது இருக்கும்” என்று முப்பத்திரண்டையும் காட்டி அவளை இடித்துதள்ளிவிடுவது போல உள்ளே தள்ளிக்கொண்டு போனான்.

ப்ரஸ்மேனின் சாஃப்ட்வேர் என்ஜினியரிங் தலகாணி புக் மேஜையின் ஓரத்தில் அழுக்காக இருந்தது. இது மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி போல இல்லையே என்று அந்த ஜொள்ளனின் அறையை நோட்டமிட்டால் பேரிங் மற்றும் ப்ரேக் லைனிங் தயாரிக்கும் ப்ராஸஸ் வரைபடங்கள் ஃப்ரேம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. வெளியே டிஸ்டிலரீஸ் என்ற போர்டு. இது ஏதோ அகாதுகா கம்பெனியாக இருக்குமோ என்றும் உள்ளே போன அரைமணிப் பழக்க கரும்புச் “சாரு” என்னவாளாளோ என்றும் கையளவு மனது துடியாய்த் துடித்தது. 

இங்கேயே இருப்பதா அல்லது உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று ஒரு நோட்டமிடலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அவனது மேசையில் இருந்த மொபைல் “ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?” என்று பாடித் துள்ளியது. என் ஆப்பிள் பெண் எங்கே? என்னதிது? என்று கையில் எடுத்துப் பார்த்தால்.... யாரோ விஷ்ணு இன்ஃபார்மர் என்று வந்தது. டேபிளில் சில துண்டு சீட்டுகள் கிடந்தன.


அறிமுகமற்றவர்களின் கைப்பேசியை தொடுவது நாகரீகமல்ல. சுயம் என்னைச் சுட்டவுடன் பட்டென்று கீழே வைத்துவிட்டேன்.  ஏதோ இன்பார்மரிடமிருந்து ஃபோன், குறியீடு, தவறானது, சரியானது, எதுவும் சரியாக இருப்பது போல இல்லை. அரை மணியாயிற்று ஒரு மணியாயிற்று. அவனுடன் சென்றவள் திரும்பவில்லை. டென்ஷனானால் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும். சுவடு தெரியாமல் உள்ளே செல்லலாம் என்று எழுந்து அரையிருட்டாய் இருக்கும் இடத்திற்கு அடிமேல் அடி வைத்து திருடன் போல நடந்தேன். ஒரு கல்லூரி மாணவன் கல்ப்ரிட் போல நடப்பதற்கு எனக்கே அசிங்கமாக இருந்தது.

அதிரடி செயல்களால் எனக்கு ஆபத்து என்றுணர்ந்தேன். விசாலமான காரிடாரில் இருமருங்கும் திறந்துகிடந்த அநேக அறைகளில் மூலை முடுக்கெல்லாம் எட்டுக்கால் பூச்சி வலைப்பின்னி அறுக்க ஆளில்லாமல் சந்தோஷமாகக் குடியிருந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் கால்தடம் பதியுமளவிற்கு தூசி. பேய்பங்களா போல மர்மமாக இருந்தது. என்னதான் ஆம்பிளை சிங்கமாக இருந்தாலும் நெஞ்சு ”படக்...படக்...” என்று அடித்துக்கொண்டது. திடீரென்று முதுகுக்குப் பின்னால் ”ச்சிலீர்..” என்று கண்ணாடி உடையும் சத்தம். பன்னெடுங்காலமாக ஓமன் போன்ற த்ரில்லர் படங்களில் வழக்கமாக வருவது போல கடுவன் பூனை கோலிக்குண்டு கண்களை மியாவி இடமிருந்து வலம் துள்ளி ஓடியது. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு முன்னேறினேன்.

எங்கிருந்தோ ஒரு ஆணும் பெண்ணும் குசுகுசுவென்று பேசுவது கேட்டது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒன்று சாருவின் குரல் போல இருந்தது. இன்னொன்று அட. அந்தத் தடியன் குணாளன்தான். என்ன பேசுகிறார்கள். ஒட்டுக் கேட்டேன். “அவன் சுத்தக் கேனையன். ஜஸ்ட் வான்னு சொன்னவுடனேயே வந்துட்டான். உன்னோட செக்யூரிட்டிதான் ரொம்ப விரட்டிட்டான்பா”. அட பாதகி. பதிலுக்கு அவன் “உம். சரி. இன்னும் எவ்வளவு ஐட்டங்கள் நாளைக்கு கிடைக்கும். ஜல்தி சீக்கிரம் சொல்லு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எழுந்து வந்துரப்போறான். ஆபிஸில் இருந்த ஒரேஆளும் இன்னிக்கி மத்தியானம் லீவு” என்று அவசரப்படுத்தினான்.

நேர்முகத்திற்கு அவள் வரவில்லை என்று என் களிமண் மூளைக்குக் கூட புரிந்துவிட்டது. “இவன் தேறுவானா?” என்றான் அந்தத் தடியன். “ம். பார்க்கலாம்” என்றாள் அந்த தடிச்சி. அழகி இப்போது எனக்கு தடிச்சியானாள். இன்னும் கொஞ்சம் குரல் வந்த திசையில் எட்டிப்பார்க்கலாம் என்ற போது சப்தமே இல்லை. கொஞ்சம் எக்கி வலது பக்கமிருந்த இன்னொரு காரிடாரை பார்த்தேன். கண்பார்வை போய் முட்டிய இடத்தில் ஒரு சிகப்பு விளக்கு உயிரை விடுவது போல எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பின்னாலிலிருந்து யாரோ தோளைத் தட்டினார்கள்.

ஆ!. அடிவயிற்றில் அட்ரிலின் சுரக்க வியர்த்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அந்த இருவரும் கொல்லென்று சிரித்தார்கள். யாரந்த இருவரா? சாருவும் குணாளனும்தான். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் கிடைக்கும் போலிருந்தது. நானும் முதலில் வெகுண்டுதான் போனேன். மூன்றாவதாக ஒருவனைத் தேடிக்கொண்டு ஓடிப்போன அம்மா, உதவாக்கரை அப்பன், சீரழிந்த தங்கை என்று தறிகெட்டுப் போயிருந்த என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்துக்கு இது ஒரு ஜீவனோபயாமாக அமைந்தது.

போன பாராவுடன் என்னுடைய கருப்பு-வெள்ளை ரீல்கள் முடிந்துவிட்டது. இப்போது கலர்ஃபுல்லான வாழ்வு. என்னைப்போல கல்லூரிப் பருவத்தில் தடம் மாறியவர்கள் இடம் மாறி உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இருந்தாலும் கடினமான வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட எனக்கு தனியாளாய் தெம்பில்லை. திராணியற்று நான் திரிந்த போது வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். அது மட்டுமா, இதன் மூலம் கிடைத்த சத்புத்திரர்களின் தொடர்பில் ஒரு நல்ல கம்பெனியில் கிளார்க் போல ஒரு அடிமட்ட வேலையில் சேர்ந்து இப்போது ஒரு உயர் பதவி வகிக்கிறேன். இருந்தாலும் விட்டகுறை தொட்டகுறைக்கு என்னை ஏணியாய் ஏற்றிவிட்ட எனதுயிர் நண்பர்களுக்காக இந்தத் தொழிலும் ஒழிந்த நேரங்களில் உதவியாகச் செய்கிறேன்.

ம்.. சரி.. என்னுடைய “அந்த”த் தொழில் என்னவென்று கேட்கிறீர்களா? இங்கிருந்து ஆட்களை, அதுவும் என் போன்ற அழகிய ஆண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பது. என்ன கேட்கிறீர்கள். அவர்களுக்கு என்ன வேலையா? கார்பெண்டர், கொத்தனார் வேலைக்கு அழகிய ஆண்கள் எதற்கு. எதிர் பாலினரைச் சந்தோஷப்படுத்துவது. சரீர சுகமளிப்பது. இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. காண்ட்ராக்ட் படி இன்னும் ஐந்து மாதம் பாக்கியிருக்கையில் அருப்புக்கோட்டை வாலிபன் ஒருவன் ஒபாமா தேசத்தில் ஓரினமணம் புரிந்துகொண்டான். சரி. விடுங்கள். என் கஷ்டம் என்னோடு. அப்புறம். இந்தக் கதையை இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதனால் நீங்களும் இரகசியம் காப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்போதுதான் ஒரு கோஷ்டியை ஏற்றிவிட்டு மீனம்பாக்கத்திலிருந்து வெளியே வருகிறேன்.

கடைசியாக ஒன்று. நீங்கள் கேட்கவில்லையென்றாலும் சொல்லவேண்டியது எனது முறையல்லவா. விஷ்ணு தான் இன்னமும் எங்களுக்கு இன்ஃபார்மர். முன்பு குணாளன் சாருக்கு மட்டும் இருந்தவன் அவரது அகால மரணத்திற்கு பின்பு என்னிடம் ரிப்போர்ட் செய்கிறான். போலீஸாருக்கு அவன் புல்லுருவி. எங்களுடைய சவுதி அரேபியா ஏற்றுமதிக்கான S A H2 6F என்கிற குறியீட்டை S W H2 6F என்று எஸ்.பி. கோகுலிடம் கொடுத்து குணாளனுக்கு விசுவாசமானான். அந்த டீலில்தான் இப்போது விஷ்ணு குடியிருக்கும் இரண்டு கோடி பொறுமானமுள்ள ராஜா அண்ணாமலைபுரம் 3BHK ஃபிளாட் கிடைத்தது.

ச்சே. ஏதோதோ பேசிக்கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. விஷ்ணு கன்னிமாராவில் காத்திருப்பான். இதோ என்னுடைய மொபைல் கீக்கீக்கென்கிறது. திறந்தால் விஷ்ணு இன்ஃபார்மர். ஹா..ஹா.. இவனுக்கு நூறாயுசு.

பின்குறிப்பு: சவால் சிறுகதைப் போட்டிக்காக நானெழுதும் இரண்டாவது சிறுகதை. போன கதையை நேர்மறையில் எழுதினேன். இந்தக் கதை எதிர்மறை. பிடிக்கிறதா?

-

31 comments:

ஸ்ரீராம். said...

பின்னிட்டீங்க ஆர் வி எஸ்...பரிசு நிச்சயம் என்று பட்சி சொல்கிறது! வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

அடடே.. வித்தியாசம். (துணிச்சலும் கூட?)

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாவது கதையும் நன்றாக இருக்கிறது நண்பரே....

வெற்றி பெற வாழ்த்துகள்....

Rathnavel Natarajan said...

அருமையான கதை.
சுஜாதாவின் பாதிப்பு எல்லோரிடமும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

//திருஅங்கமாலை //?? ஹா..ஹா..

இந்த கதை ரொம்ப நன்றாக இருக்கு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பெசொவி said...

Usual RVS Style!

All the Best!

ரிஷபன் said...

இரண்டாவது கதையும் அசத்தல்..

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரா இருக்குது இந்தக் கதை.. பரிசு கிடைக்கிறது உறுதி :-)

Porkodi (பொற்கொடி) said...

hahaha! edhirmarai is definitely better nermarai.. :D enaku pidichu irukku! ama.. oruthar oruthara vandhu indha kadhaiyum pidikkalainnu sollitta pudhusu pudhusa kadhai thaalichute irupingla? epdi ipdilam tak tak nu ezhudharinga! cha awesome! (2 kadhaiyume pottila add panunga!)

தி. ரா. ச.(T.R.C.) said...

hmmm good

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முதல் கதை இன்னமும் படிக்கவில்லை ஆர்.வி.எஸ்.இந்தக் கதை சொன்ன விதம் ஜோர்.புதிய புதிய கோணங்களில் பார்க்கிறீர்கள்.சபாஷ்.

middleclassmadhavi said...

சவாலுக்கு வித்தியாசமான அணுகுமுறை!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

SURYAJEEVA said...

super

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றிங்க... பார்ப்போம்! :-)

RVS said...

@அப்பாதுரை
துணிச்சல்.... ஹா..ஹா.. கொஞ்சம் ரிவர்ஸா எழுதிப்பார்த்தேன்.. நன்றி சார்!! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தலைவரே! :-)

RVS said...

@Rathnavel
சார்! அவரை நிறைய படிச்சவங்ககிட்ட பாதிப்பு இல்லாமல் இருக்குமா?

பாராட்டுக்கு நன்றிங்க... :-)

RVS said...

@RAMVI
நன்றி மேடம். நீங்களும் போட்டியில இருக்கீங்க போலருக்கு!!!
:-)

RVS said...

@பெசொவி
நன்றி பெசொவி... உங்களோடதையும் படிச்சேன். வாழ்த்துகள். :-)

RVS said...

@ரிஷபன்
பாராட்டுக்கு நன்றி சார்! :-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க மேடம்.. பார்க்கலாம் கிடைக்குதான்னு.. :-)

RVS said...

@Porkodi (பொற்கொடி)
பொம்பளை சுஜாதா உங்களுக்கு பிடிக்கலைன்ன உடனேயே இன்னொன்னு எழுதிட்டேன். :-))

தாளிச்சுக்கிட்டே இருப்பீங்களா... நிறைய ஐடியா வருது.. எழுத சில நேரங்கள்ல முடியரதுல்ல....

பாராட்டுக்கு நன்றி. :-)

RVS said...

@தி. ரா. ச.(T.R.C.)
Thanks mama! :-)

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! புத்தியில் இருக்கும் குறுக்கு எட்டிப் பார்த்துவிட்டது... ஹா.ஹா.. :-)

RVS said...

@middleclassmadhavi
நன்றிங்க.. வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும்.... :-)

RVS said...

@suryajeeva
Thank you! :-)

Unknown said...

கதை வித்தியாசமா இருக்கு.
என்னுடைய கதையும் படிங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

அப்பாதுரை said...

இரண்டாவது தடவை படிக்குறப்போ... சவாலை சரியாப் பயன்படுத்தலேனு தோணுதே? குறியீட்டை விட்டு ஒதுங்கி வேறே எங்கயோ போனாப்ல இருக்கே?
கதைக்கரு அதை சாமர்த்தியமா மறைச்சுடுச்சு..

RVS said...

@அப்பாதுரை
SAH26F என்பது முதல் இரண்டு நாட்டின் பெயரையும் அடுத்த இரண்டு குவாலிட்டியையும் அடுத்த இரண்டு குவாண்ட்டிட்டியையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

அதனால் முதலிரண்டின் குறிப்பைக் கொடுத்தேன் சார்!

H2 - ஹை குவாலிட்டி ஆர்டர் 2
6F - சிக்ஸ் ஃபேசஸ் - ஆறு பேர்
இப்படி பில்டப் கொடுத்துக்கொண்டே போகலாம். இருந்தாலும் கதையின் போக்கில் இதை சொருகியிருந்தால் எகிறிவிடும் என்று கொடுக்கவில்லை.

கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி சார்! :-)))

SW - South West நாடு எதையாவது எடுத்துக்கொள்ளட்டும் என்று கோகுலிடம் தவறாக கொடுத்ததாக எழுதியிருக்கிறேன்.

கடைசியில் தருமி கணக்காக...

எவ்வளவு பிழை இருக்கிறதோ.....

ஹா....ஹா... :-))

RVS said...

@வெண் புரவி
கருத்துக்கு நன்றி புரவி! :-))

RVS said...

@அப்பாதுரை

தலைவரே! நீங்க ரெண்டாவது தடவை படிச்சதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நன்றி! நன்றி! நன்றி! :-))))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails