Friday, October 7, 2011

ஒருக்கால்.....

சாமியார் படித்துறை ஆலமரத்தடியை தாண்டி திவா வெளியே வரும் போது மணி ராத்திரி சுமார் பத்து பத்தரையிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கு பழக வெகுநேரம் அடம்பிடிக்கும் கனமான கும்மிருட்டு. நாலாபுறத்திலிருந்தும் சுவர்க்கோழிகளின் இடையறாத க்ரீச்சுகள். தூரத்தில் ஆற்றோர புதர்களில் மின்மினிகள் விளக்கடித்து ஒவ்வொரு புதர் மேலும் விளையாண்டு கொண்டிருந்தது. வீட்டிலிருந்து நீர் வறண்ட ஆற்றில் இறங்கி ஏறி மெயின்ரோட்டுக்கு வரும் பழகின பாதை.

படித்துறையிலிருந்து கரையில் இறங்குவதற்கு கடைசிப் படியை தாண்டிக் குதிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பான். சிகரெட் வாய் வெற்றிலைப் பாக்கு போட்டிருக்கும். கழக்கூத்தாடிப் போல கையிரண்டையும் காற்றில் கிழித்து பறவை நடனமாடி எஸ்கேப்பினான். திவாவிற்கு புரை ஏறியது. நமக்காக காத்திருப்பாள். இன்றிந்த நல்ல நேரத்திற்காக எவ்வளவு நாள் தவம் கிடந்தேன் என்று அவனுக்குள் சந்தோஷ மின்சாரம் ஹை வோல்டேஜில் உடம்பெங்கும் தாறுமாறாக ஓடியது.

ரோட்டுக்கு அந்தப்புறம் மரங்களைத் தாண்டி சன்னமாக குண்டு பல்பு வெளிச்சம் கசிந்தது. வாலைத் தூக்கிக் கொண்டு வெறியோடு இலக்கு நோக்கிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகளைப் போல பஸ்களும் லாரிகளும் வேன்களும் கார்களும் இருபுறமும் நொடிக்கு பத்தாய் டர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டிருந்தன. மரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் டென்னிஸ் ஆட்டத்தை ஜொள்ளொழுக ரசிப்பதைப் போல இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாக எதிர்சாரிக்கு காலை விசுக்விசுக்கென்று இழுத்துக்கொண்டு பாய்ந்தான் திவா. கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போது கோதுமை நிற பஞ்சாப் மாநில கோல்டன் பெண்ணொருத்தி லஜ்ஜையில்லாமல் டி.ஷர்ட்டை விலக்கி “ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...” என்று ஹஸ்கி வாய்சில் கெஞ்சி நெஞ்சில் கையெழுத்து கேட்கும் அளவிற்கு திவாவொரு அசகாய டென்னிஸ் வீரன். ”..ம்மா..” கால் வலித்தது திவாவிற்கு.

திருப்பத்திலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அசுர வேகமாய் வந்த ஸுமோ க்ரீச்சிட்டு கட்டடித்து தீய்ந்த டயர் நாற்றத்துடன் “டேய்.. த்தா...” என்று வசைமாரி பொழிந்து எச்சில் துப்பித் திட்டிச் சென்றது. அதையெல்லாம் கண்டு கொள்ளும் மன நிலையில் திவா இன்றைக்கு இல்லை. எப்பவுமே அதீத சந்தோஷம் இல்லை அதீத துக்கம் ஒரு ஆளை நிமிர விடாமல் அடித்துப்போட்டுவிடும். இன்றைக்கு அதீத சந்தோஷத்தில் மூழ்கித் திளைத்தான் திவா. கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்ல வேண்டுமென்றால் இறகு முளைத்துக் காற்றில் பறந்து மேகங்களுக்கிடையே ஆனந்த சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான். தனக்குத்தானே  பேசிக்கொண்டும் பல்லைக் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். இதைவிட என்ன வேண்டும். அவனுக்கு இந்த பூலோகமே சந்தோஷத்தில் தள்ளாடுவது போல இருந்தது.

முதுகில் பதினொன்று என்று நம்பர் போட்டு அரைகுறையாய் வெள்ளை வட்டம் போட்ட ரோட்டோர அரசாங்கக் கைதி புளியமரத்தடியில் இருந்த கீற்றுக்கொட்டாய் டீக்கடை மழையில் நனைந்து முன்னங்கீற்றால் சொட்டிக்கொண்டு இருந்தது. உத்தரக்கம்பில் மாட்டி விடப்பட்ட இலவச டிவியின் சன் ம்யூசிக்கில் ”மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே..” என்று கே.ஜே யேசுதாஸ் காதலாய்க் கரைந்துகொண்டிருந்தார். டர்ர்ரென்றும் சர்ரென்றும் புர்ரென்றும் காற்றைக் கிழித்து இங்குமங்குமாக ரோட்டை கடக்கும் லாரிகள் யானைப் பிளிறல் ஹாரனுடன் பின்பக்கம் சிகப்புக் காட்டிப் பறந்தன.

“ரெண்டு பாக்கிட்டு குடு...”

பச்சை ரவிக்கையும் தொப்புள் தெரியும் கசங்கிய புடவையுமாக மல்லிப்பூ மணக்க சிரித்துக்கொண்டிருந்த இரவு சந்தோஷம் விற்கும் பெண்கள் இரண்டு பேர் பான் பராக் பாக்கெட் கேட்டார்கள். கண்ணாடி வளையல் கிலுகிலுத்தது. மல்லிப்பூ இன்னும் உதிரவில்லை. உதட்டுச்சாயம் களையவில்லை. முகத்தில் அசதியில்லை. உடம்பில் அயர்ச்சியில்லை. கஸ்டமர் இன்னும் சிக்கவில்லை.

”ஒரு கிங்ஸ் குடு”

திவா ஒரு ஃபில்டர் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்தான்.

புகை சுருள் சுருளாக மேலோக்கி எழும்பியபோது அவனும் இதுவரை நடந்ததை ரீவைண்ட் செய்து ஓட்டிப் பார்த்தான்.

அடேங்கப்பா!! ஒரு மாதத்துக்கு மேல் ஆஸ்பத்திரி வாசம். ஒரே ஃபினாயில் நாற்றம். ஒரு முறை உள்ளே இழுத்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் மூக்கை விட்டகலாத நறுமணம். டாக்டர் நர்சுங்களுக்கு இதுக்காகவே கை நிறைய காசு கொடுக்கனும். ப்ளாஸ்டிக் கப்பில் ஃப்ளாஸ்க் டீ ஊற்றிக் கொடுத்து பத்திரமாக கவனித்துக்கொண்டாள் பார்வதி. கல்யாணம் கட்டியதிலிருந்து இன்றுவரை அவனுடைய எந்த செயலுக்கும் “ஏன்” என்று எதிர் கேள்வி கேட்டதில்லை பார்வதி. பதிவிரதா தர்மத்தை எள்ளளவும் பிசகாமல் அனுஷ்டிக்கும் பார்வதிக்கு நவயுக சாவித்திரி என்று பெயர் வைத்திருக்கலாம்.

வாரத்திற்கு இரண்டொருமுறை ஆஸ்பத்திரிக்கு வருவோரின் ஆஸ்தான ஒயர் கூடையில் ஆனந்தவிகடன் குமுதம் எடுத்துக்கொண்டு அவளும் வந்து சங்கோஜத்துடன் எட்டிப் பார்த்தாள். “வாங்க” என்று கூப்பிட்டு இன்னொரு கப் டீ அவளுக்கும் கொடுத்து ஆஸ்பத்திரியிலும் விருந்துபசரித்தாள் பார்வதி. இந்த நேரத்தில் கட்டாயம் ‘அவளை’ப் பற்றி சொல்லவேண்டும். சுருளுக்குள் ஒரு சுருள்.

ஊரில் ஐந்தாறு படகுக் கார்களுடனும் ஆள் அம்பு சேனைகளுடனும் பத்து விரலிலும் ஜெயண்ட் மோதிரத்துடனும் தாம்புக்கயிறு போன்ற செயின் சகிதம் பகட்டாக பவனி வரும் ஒரு பெரிய காண்ட்ராக்டரின் செல்ல மகள் கார்த்தியாயினி. பிறந்தவுடனேயே பீடிங் பாட்டிலில் பாலைக் குடிக்கவிட்டு டெலிவெரியில் அம்மா மரித்துப் போனாள். அவளுடைய இம்மிற்கும் உம்மிற்கும் கைக்கட்டி சேவகம் புரிய வீட்டில் ஒரு பட்டாளமே இருந்தது. பல் தேய்த்து குளித்து உடை மாற்ற மட்டும் வீட்டுக் சென்று மற்ற நேரங்களில் வேறு ஞாபகமே இல்லாமல் இரண்டு வணிக வளாக ப்ராஜ்ட்டுகள் செய்து கொடுக்கும் சமயத்தில் ஒரு சனிக்கிழமை லேபர் பேமெண்ட்டுக்கு பழனிவேல் காண்ட்ராக்டரை அவரது பங்களாவில் சந்திக்கச் சென்றபோது ஜீன்ஸ்-டி-ஷர்ட்டில் ஐபாடும் கையுமாக கார்த்தியைப் பார்த்தான்.

“அப்பா இல்லீங்களா?”

“வருவாரு. உட்காருங்க” என்று சொல்லி விழியால் சீட் காண்பிக்கும் போது உட்காராதவன் குருடு என்று அர்த்தம். அவள் கண்ணசைவிற்கு மந்திரத்திற்கு கட்டுண்ட குட்டிச்சாத்தானாக மனம் மாறிவிடும். அடுத்த சனிக்கிழமை ரெண்டு எம்.எம். வாயை திறந்து புன்னகைத்து “அப்பா இருக்காருங்களா”ன்னு கேட்டான். அதற்கு அடுத்த சனிக்கிழமை “அப்பா இப்ப வரேன்னாரு”ன்னு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து ஹால் சோஃபாவில் உட்கார்ந்து கையில் ‘தி ஆர்க்கிடெக்ட்’ புரள கண்ணை அவள் மீது மேயவிட்டான். மூன்று நான்கு சனிக்கிழமைகளுக்கு அப்புறம் “அப்பா இப்ப வீட்ல இல்லையே?” என்ற சந்தேகக் கேள்வியோடு தைரியமாக உள்ளே வந்தான்.

அப்புறம் அவளைப் பார்க்கும் ஒவ்வொரு சனியும் அவனுக்கு மன்மதச் சனியாகியது. அவர்களது சந்திப்பு வாராந்திரியிலிருந்து தினசரியானபோது வழக்கமாக எல்லாக் காதலிலும் வரும் ஏழரைச் சனி பிடித்தது. திவாவின் அசுர வளர்ச்சி பிடிக்காத அல்பம் ஒருவன் காண்ட்ராக்டரிடம் போட்டுக்கொடுத்தான். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் ஒரு புரட்டாசி சனிக்கிழமை “நீ நாளையிலேர்ந்து வேலைக்கு வரவேணாம்” என்று ஜெண்ட்டிலாக சீட்டைக் கிழித்து நாமம் போட்டு அனுப்பிவிட்டார்.

மெய்வருத்தி ராப்பகலாக வேலை செய்த்ததால் கட்டிடக்கலை அவனுக்கு கைவசமாகியது. கார்த்தி அப்பாவின் தொழில் போட்டியாளர்கள் வெற்றிலை பாக்கு வைத்து வருந்தி வருந்தி அழைத்தாலும் போகாமல் பஜார் ரோட்டில் தனியாளாய் நின்று பத்துக்கு பன்னிரெண்ட்டில் சிறிய மொபைல் கடை ஒன்று கட்டி இண்ட்டீரியர் செய்து கொடுத்தான். அவன் அதிர்ஷ்டமா இல்லை அந்தக் கடையாள் ராசியா என்று தெரியாமல் அந்தக் கடைக்கு லாபம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. மக்கள் க்யூ கட்டி நின்று வியாபாரம் செய்தார்கள். அந்த வெற்றிக்குப் பிறகு நீ நான் என்று ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு அவனுக்கு பிசினஸ் கொடுத்ததில் “திவா ப்ராப்பர்ட்டீஸ்” ஆரம்பித்தான்.

கார்த்தியாயினிக்கு காதல் பித்து தலைக்கு மேல் ஏறி ஒரு நாள் நள்ளிரவு ஆட்டோ பிடித்து கட்டிய துணியோடு திவா வீட்டு வாசலில் இறங்கி ”நூத்தம்பது ரூபா குடு” என்று கேட்டு ஆட்டோக்கு கொடுத்தனுப்பினாள். பார்க்கும் படங்களில் எல்லாம் வில்லனாக வரும் அப்பாக்களுக்கு வரும் கோபம் கார்த்தியின் அப்பாவிற்கும் வந்தது. ஆள் பலம் மிக்கவர். ஊரில் செல்வாக்கான ஆள். கேட்கவா வேண்டும். துரத்த ஆரம்பித்தார். “ப்ளீஸ் தாலி கட்டிடேன்” என்று தாலிபிச்சை கேட்டாள் கார்த்தி. “எனக்கு அப்பா கிடையாது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு படிக்கவச்சது என் அம்மாதான். அவங்க இல்லின்னா நா இல்லை.. கொஞ்சம் பொறு” என்று கிராமத்திலிருக்கும் அம்மாவிடம் கேட்காமல் கட்டமாட்டேன் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டான் திவா.

இதற்கு மேலும் அவனை விட்டுவைக்கக் கூடாது என்று அடியாட்களுடன் அவர் விரட்டியபோது ஆட்டோவில் ஏறி பஸ்ஸ்டாண்டிற்கு பறந்து கொண்டிருந்தான் திவா. கார்த்தியுடன் வாழ்வா அல்லது அடியாட்கள் கையில் சிக்கி சாவா என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியதில் பஸ்ஸ்டாண்ட் அண்ணா சிலையருகில் மடக்கிப் பிடித்தார்கள். கார்த்தி கையை இருகப் பிடித்துக்கொண்டான் திவா. கட்டையை எடுத்து மடேர் என்று திவா கையில் போட்டான் ஒரு ரவுடி. உசிலைமணியை படுக்க வைத்து இரண்டே இழுப்பில் இரண்டு பத்தையாக போடும் அளவிற்கு கிராமத்து ஐயனார் சிலை கையிலிருக்கும் அருவாளோடு வந்தவன் காலில் ஒரே போடு போட்டான். ச்சத்த்த்..........

எப்போது கார்த்தியின் கையை விட்டான். யார் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் என்றெல்லாம் தெரியாது. கார்த்திக்கு என்னவாயிற்று என்ற எந்த விவரமும் தெரியாமல் மூத்திர நாற்றத்துடன் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கிடந்தான்.

டெட்டாலால் கழுவி பேண்டேஜ் மட்டுமே சிகிச்சையாக அவனது காலுக்கு அங்கே அவர்களால் அளிக்கமுடிந்தது. மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு இட்டுச்சென்றார்கள். அவனுக்கு காலை விட இதயம் வலித்தது. கார்த்தி என்ன ஆனாள்? அவள் கதி என்ன? என்று மனம் வருந்தினான். இரண்டு மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து காலை ஒருவாறாக சரி செய்து கொண்டு வெளியே வரும் வேளையில் கார்த்தியை சிங்கப்பூருக்கு நாடு கடத்தியிருந்தார்கள்.

கிராமத்திலிருந்து அம்மா, கொடுவா மீசை மாமா, அகரம் சித்தப்பா என்று ஒரு கும்பலாக வந்து ஊருக்கு அழைத்துப்போய் பார்வதி என்ற தாவணி பெண்ணிற்கு அரக்குக் கலர் புடவைக் கட்டி ஷோ காண்பித்தார்கள். விருப்பமே இல்லாமல் அம்மாவிற்காக ஒத்துக்கொண்டான் திவா. மாரியம்மன் கோவில் ப்ரகாரத்தில் நெருங்கிய சொந்தமாக ஒரு ஐம்பது பேர் முன்னிலையில் சிம்ப்பிளாக தாலி கட்டி வீட்டிற்கு கூட்டிவந்துவிட்டான். அவள் வந்து பத்தாவது மாதம் அவனது தாயார் மரணமடைந்தார். இன்னும் ஒரு மாதம் இருந்தால் பேரப்பிள்ளையைப் பார்த்து செத்துப்போயிருக்கலாம். பாட்டிக்கு கொடுப்பினை இல்லை.

இதனிடையே சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரும் வழியில் விமான விபத்தில் பலியானார் கார்த்தியின் அப்பா. அவள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அப்பாவின் நல்லிதயம் படைத்த உறவினர் சொத்தனைத்தையும் பிடிங்கிக்கொண்டு நடுரோட்டில் அனாதையாக விட்டுவிட்டனர். ஊன்றுகோல் இல்லாமல் தவித்தவளை லோக்கலாக ஓரிடத்தில் குடியமர்த்தினான் திவா. முதலில் உதவியாக பலசரக்கும், காய்கறியும் வாங்கிப் போட்டுச் செய்தவனை உரிமையாக பல காரியங்கள் செய்யும்படி வைத்துவிட்டாள் கார்த்தி. அவன் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பன் என்று தெரிந்தும் கையால் கல்யாணமுருகன் சன்னிதியில் தழையத்தழைய தாலி கட்டிகொண்டாள். கண்ணீர் சொட்டசொட்ட நமஸ்கரித்தாள்.

இப்படியாக இந்தக் கதை ஒரு சாதாரண இரண்டு பொண்டாட்டி கதையாக போய்க்கொண்டிருந்த போது.....

காலில் ஏற்பட்ட அந்த அடிதடி விபத்திற்கு அப்புறம் முன்பு போல ஓடியாடி வேலை செய்யமுடியாவிட்டாலும் ஆட்களை வைத்து திறமையாக வேலை வாங்கி வந்தான் திவா. ஒரு நன்பகலில் மாரடைத்து “ஆ....அம்மா” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஆபீஸ் சேரில் சரிந்தவனை ஆம்புலன்ஸில் ஹார்ட் கேர் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து ஐ.ஸி.யூவில் சேர்த்தார்கள். யமனோடு பழி சண்டையிட்டுப் போராடியவனை உயிரோடு மீட்டார்கள்.

அந்த சமயத்தில் தான் ஒயர் கூடையும் பத்திரிகைகள் சகிதமாக அவனை வந்து ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தாள் கார்த்தி. அரசல் புரசலாக ஊரில் இதைப் பற்றிப் பலர் பேசினாலும் பார்வதி தனது கடமை தவறாமல் திவாவை போற்றிப் புகழ்ந்து அவனோடு சீரும் சிறப்புமாகக் குடும்பம் நடத்தினாள். திவாவின் பெண் பெரியவளாகி பத்தாவது படிக்கும்போது “என்னங்க.. அட்லீஸ்ட் அவங்களை உங்க ஊர்ல இருக்கிற வீட்லயாவது கொண்டு போய் ஜாகை வச்சுடுங்களேன். நம்ம பாப்பாவை நிறைய பேர் கிண்டல் பண்றாங்களாம்” என்று ஒரு நாள் ராச்சாப்பாட்டின் போது முதன் முறையாக கார்த்தியைப் பற்றி திவாவிடம் வாயைத் திறந்தாள் பார்வதி.

அவளது வேண்டுகோளின் படியும் தனது விருப்பத்தின்படியும்தான் இன்று ஊரில் கொண்டு வந்து கார்த்தியை ஜாகை வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறான். கால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு அவளோடு டெம்போவில் ஏறி குடிமாற்றிவிட்டு திரும்பவும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறான் திவா. இதோ இங்கே பஸ்ஸுக்காக காத்திருக்கிறான்.

சங்கிலியாக மூன்று நான்கு சிகரெட் பிடித்திருப்பான். ஒரு அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு வந்து பஸ்ஸில் உட்கார்ந்திருப்போர் முன்சீட்டு கம்பியில் மோதி பல் உடைய ப்ரேக் அடித்து நிறுத்தினார்கள். முதலில் நின்ற அரசுப்பேருந்தில் மூச்சடைக்கும் கூட்டம். கடைசிப் படியில் கால் வைக்கும் சமயத்தில் “ரை..ரைட்..” என்று இரண்டு விசில் அடித்து நகர்த்திவிட்டான்.

பின்னால் நின்ற தனியார் பேருந்தில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. காலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓடி ஏறும் போது கிளப்பிவிட்டான். அவசரம் அவச்ரமாக முன் படியில் தொத்துவதற்கு கையை வைத்தான் திவா. மழை பெய்திருந்ததால் கைப்பிடி வழுக்கியது. இருந்தாலும் பிடியை நழுவ விடாமல் காலை தூக்கி மேலே வைத்துவிடலாம் என்ற நப்பாசையில் விடாமல் முயன்றான்.

முன்னால் சென்ற அரசுப் பேருந்தை பிடிக்கும் உத்வேகத்துடன் படியைப் பார்க்காமல் இரண்டாவது கியருக்கு மாற்றி வேகம் பிடித்தான் தனியார் பஸ் ட்ரைவர். கை முற்றிலும் வழுக்க முன் டயருக்குள் சென்று விட்டான் திவா. முன் டயர் ஏறி இறங்கியபின் பின் டயரும் ஏறி இறங்கியது. பஸ் உள்ளே இருந்தவர்கள் அலறினார்கள். வண்டியை நிறுத்திவிட்டு ட்ரைவர் இறங்கி ஓடிவிட, பயணிகள் இறங்கி என்ன ஆயிற்றோ என்று திவாவைப் பார்க்க ஓடிவந்தார்கள்.

அவனது பாக்கெட்டிலிருந்து பத்தடிக்கு சிதறியிருந்த மொபைலை எடுத்து “Wife" என்று போட்டிருந்த காண்டாக்ட்டிற்கு அலை பேசினான் ஒரு வாலிபன்.

“ஹலோ”

“சொலுங்க எங்க இருக்கீங்க?”

“ஹலோ. நீங்க யாரு பேசறது?”

“நீங்க யாரு. நான் அவரோட வைஃப் பேசறேன்”

“அம்மா. பதட்டப்படாதீங்க....”

“என்னாச்சு... “

“உங்க புருஷன் ஒரு பஸ்ல அடிபட்டுட்டாரு...”

“ஐயோ... திவ்யா...............” எதிர்முனை அலறியது.

”என்னாச்சி... எந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கீங்க..” என்றது விசும்பலுடன்.


”ஒன்னும் இல்ல வலது கால்ல பஸ்ஸோட சக்கரம் ஏறி இறங்கிறிச்சு. இப்ப எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. பக்கத்தில ஃபோன் கிடந்தது. அதான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்லிடலாம்னு...” பதற்றத்துடன் பேசினான் அந்த வாலிபன்.

“அப்பாடி! நா கும்பிடற சாமி என்னைக் கைவிடாது” என்று எதிர்முனை மகிழ்ச்சியாக பேசியதும் அதிர்ச்சியுற்றான் அந்த இளைஞன்.

“ஹலோ! ஃபோனை எங்கிட்ட குடுங்க” என்று பின்னாலிருந்து தோளைத் தட்டும் ஆளைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டான்.

பயணி ஒருவர் தோள் கொடுக்க அதில் சாய்ந்துகொண்டு நின்றான் திவா.

“சார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொண்டியடித்தான் அந்த வீட்டுக்கு போன் செய்த உபகாரர்.

”அது பொய்க்கால். முன்னாடியே ஒரு காதல் அசம்பாவிதத்தில என்னோட வலது காலை மொத்தமா எடுத்துட்டாங்க ப்ரதர். அது ஆர்ட்டிஃபிஷியல் லெக். நல்ல வேளையா பஸ்ஸும் அதே கால்ல ஏறி இறங்கிடிச்சு. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்று சொல்லிச் சிரித்தான் திவா.

திவாவின் மொபைல் ஃபோனில் "Wife" என்று பதிந்திருந்தது பார்வதியா கார்த்தியா?

பின் குறிப்பு: ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது ஏற்கனவே காதல் கணினி ஞாபகத்துக்கு வந்தது. ஆதலால், இத்தோடு நிறுத்திக்கொண்டேன்!

பட உதவி: http://5magazine.wordpress.com


-

32 comments:

Unknown said...

மைய்னர் வாள்
என்ன ஒரே முக்கோண கதைகள போய்க்கிட்டு இருக்கு
இருந்தாலும் நீங்க அந்த முன் பின் சுருளை

சூப்பரா கொண்டுவந்து முடித்து விடறீங்க
வாழ்த்த வயதில்லை இருந்தாலும்
வாழ்க வளமுடன்

இருமுறை ரசித்து படித்தேன்
நீங்க வருங்கால டைரக்டர்

Unknown said...

லேட்டா வந்தாலும் சூப்பரான கதையோட வந்து இருக்கீங்க
:)

துபாய் ராஜா said...
This comment has been removed by the author.
RVS said...

@siva
முக்கோணக் கதைகள்... ஹா..ஹா....

அமைஞ்சிடிச்சு... பாராட்டுக்கு நன்றி... :-))

துபாய் ராஜா said...

அடுக்கடுக்கான திருப்பங்களுடன் அழகான கதை.

வாழ்த்துக்கள். வணக்கம்.

RVS said...

@துபாய் ராஜா

ரொம்ப நன்றிங்க... மீண்டும் மீண்டும் வருக!! :-))

RVS said...

@துபாய் ராஜா

ரொம்ப நன்றிங்க... மீண்டும் மீண்டும் வருக!! :-))

பத்மநாபன் said...

சனிக்கு சனி யை ஏழரை யில் உட்காரவைத்ததும் , சுருளுக்குள் சுருள் என கதை நிறுத்தாமல் படிக்க வைத்தது . கடைசி சஸ்பென்ஸ் நல்லாருக்கு .. யாரு கார்த்தியா பார்வதியா ...

ஸ்ரீராம். said...

"நீர் வறண்ட ஆற்றில் இறங்கி...."

சிறு வயதில் சக்குடி என்ற ஊருக்குக் கோடை விடுமுறைக்குப் போகும்போது ஆற்றைச் சுழித்து தண்ணீர் ஓடியது. பதினைந்து நாளிலா ஒரு மாதத்திலா, நினைவில்லை, சொந்த ஊர் திரும்பும்போது காலியான ஆறு! ஆனாலும் கால் வைத்து இறங்கி நடக்க பயமாயிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது!

ரெண்டு பொண்டாட்டி வச்சதுக்கு தண்டனைன்னு பார்த்தா அங்க ஒரு சின்ன ட்விஸ்ட்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இந்தக் கதையில் வழக்கமான உங்க க்ராஃப்ட் தென்படலை ஆர்.வி.எஸ்.

வர்ணிப்பில் ஒரு ஆயாசம் தெரிகிறது.அதேபோல ஒரு ரிப்பீட்டெட்னெஸ்.

எஸ்கேப்பினான் டர்ர்ரிக்கொண்டிருந்தன இதையெல்லாம் நீங்கள் எப்போவோ கடந்துவிட்டீர்கள் ஆர்.வி.எஸ்.(பல கதைகளில் கவனித்துவிட்டேன் அந்த ”விளையாண்டு” மேல் உமக்கு ஒரு தனிப் பாசம்.இல்லையாங்காணும்?)

//பச்சை ரவிக்கையும் தொப்புள் தெரியும் கசங்கிய புடவையுமாக மல்லிப்பூ மணக்க சிரித்துக்கொண்டிருந்த இரவு சந்தோஷம் விற்கும் பெண்கள் இரண்டு பேர் பான் பராக் பாக்கெட் கேட்டார்கள். கண்ணாடி வளையல் கிலுகிலுத்தது. மல்லிப்பூ இன்னும் உதிரவில்லை.// இதுவரைக்கும் சொன்னாலேயே ஆர்.வி.எஸ்.சின் ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.

ரெண்டுபெண்டாட்டிக் கதை ஸ்வாரஸ்யம்.சொன்ன விதம் அடுத்த கதைக்காகக் காத்திருக்க வைக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

என்ன மைனர்வாள்... ஒரே முக்கோணக் காதலா போயிண்டு இருக்கு!

கடைசி பொடி.... கார்த்தியா,பார்வதியா? என்னா ஒரு விஷமம்....

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

இராஜராஜேஸ்வரி said...

சார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொண்டியடித்தான் அந்த வீட்டுக்கு போன் செய்த உபகாரர்.

”அது பொய்க்கால். முன்னாடியே ஒரு காதல் அசம்பாவிதத்தில என்னோட வலது காலை மொத்தமா எடுத்துட்டாங்க ப்ரதர். அது ஆர்ட்டிஃபிஷியல் லெக். நல்ல வேளையா பஸ்ஸும் அதே கால்ல ஏறி இறங்கிடிச்சு. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்று சொல்லிச் சிரித்தான் திவா./

அப்பாடி. ஒருக்கால அது நிஜக்கால் இல்லாமல் பொய்க்காலாக ஆறுதல் அளித்தீர்களே.
பலகாலும் பாராட்டுக்கள்.!

இராஜராஜேஸ்வரி said...

மரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் டென்னிஸ் ஆட்டத்தை ஜொள்ளொழுக ரசிப்பதைப் போல இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாக எதிர்சாரிக்கு காலை விசுக்விசுக்கென்று இழுத்துக்கொண்டு பாய்ந்தான் திவா. கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போது கோதுமை நிற பஞ்சாப் மாநில கோல்டன் பெண்ணொருத்தி லஜ்ஜையில்லாமல் டி.ஷர்ட்டை விலக்கி “ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...” என்று ஹஸ்கி வாய்சில் கெஞ்சி நெஞ்சில் கையெழுத்து கேட்கும் அளவிற்கு திவாவொரு அசகாய டென்னிஸ் வீரன். ”..ம்மா..” கால் வலித்தது திவாவிற்கு./

எத்தனை ரசிப்புடன் வர்ணித்திருக்கிறீர்கள்!

வலித்தது ஒரே கால நிஜக்கால்மட்டும்தானே!!??

RAMA RAVI (RAMVI) said...

கதை பிரமாதம்.
முடிவு சூப்பர்.

//திவாவின் மொபைல் ஃபோனில் "Wife" என்று பதிந்திருந்தது பார்வதியா கார்த்தியா?//

யார் என்று சொல்லாம விட்டது நன்றாக இருக்கு.

RVS said...

@பத்மநாபன்

பாராட்டுக்கு நன்றி பத்துஜி! இதுவும் கொஞ்சம் வித்தியாசமா இழுத்துப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ஷேப் அப் பண்ணியிருக்கலாம். முன்பு போல எழுதுவதற்கு நேரம் ரொம்ப ரொம்ப கம்மி. இருக்கிற நேரத்தில ஜல்லியடிக்கிறேன்.

பார்வதி பொண்ணு பெரியவளாயிட்டான்னு சொன்னதால அது பார்வதின்னு வச்சுக்கலாம்... உங்களை மாதிரி கார்த்தியாயினி கேரக்டர் பிடிச்சவங்க அவங்களோட பொண்ணுன்னும் வச்சுக்கலாம்..

வாசகர் விருப்பத்திற்கு விட்டுட்டேன்.. உங்களுக்கு யாரைப் பிடிக்குமோ... பிடிக்காதோ.. அந்த விருப்பத்திற்கு முடிவை வச்சுக்கலாம் பத்துஜி!! மீண்டும் ஒரு நன்றி. :-))

RVS said...

@ஸ்ரீராம்.
இப்போ தமிழ்நாட்ல முக்காவாசி ஆறுகள் வீடு கட்ட மணல் தருபவையாக மட்டும் தான் இருக்கிறது. ட்விஸ்ட் ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம். :-)

RVS said...

@சுந்தர்ஜி
ஜி! நான் நிறைய புதிது புதிதாக முயற்சிக்கிறேன்..

வர்ணனைகள் அந்தந்த கதைக்கு தகுந்தார்ப்போல எழுதுகிறேன்.

சமீபத்திய இரண்டு கதைகள் ஒரே மாதிரியான கருப்பொருளை கொண்டு வந்தது. அதனால் இருக்கலாம்.

சிவா மற்றும் வெ.நா இருவரின் கமெண்ட்டும் இதையேதான் சொல்கிறது.

பகிரங்கமான கருத்துக்களுக்கு ஒரு நன்றி!! இன்னும் நன்கு எழுத முயல்கிறேன். நன்றி.. :-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்

கருத்துக்கு நன்றி! பத்துஜிக்கும் சுந்தர்ஜிக்கும் இட்ட கருத்துக்களைப் பார்க்கவும். :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா! கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா? :-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ரசித்துப் படித்ததற்கு நன்றி மேடம். :-)

RVS said...

@RAMVI

தொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இருவரில் யாரை வேண்டுமானாலும் அந்த காலுக்கு பாத்திரதாரராக எடுத்துக் கொள்ளலாம். பத்துஜிக்கு போட்ட கமெண்ட்டை பார்க்கவும். நன்றி :-)

அப்பாதுரை said...

கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், பொய்க்கால் சர்ப்ரைஸ்.

அப்பாதுரை said...

ஸ்ரீராம் சரியாக யூகித்திருப்பார்.

Coupon Blogger Jay said...

post romba perusu... tough to read this much long post.... minimize length sir.Thanks from a Goundamani fan

தக்குடு said...

//ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது // அது சரி! அப்போ இதுதான் மன்னார்குடி சைடுல சிறுகதையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!:) wife = பார்வதி & கார்த்தினு வச்சுக்கலாமா?? :))

Madhavan Srinivasagopalan said...

உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்

RVS said...

@அப்பாதுரை
அப்படித்தான் எழுதினேன். இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். நேரமில்லை.
கருத்துக்கு நன்றி சார்! :-)

RVS said...

@jai
நான் கொஞ்சம் வளவளா.. என்னிடம் பேசியவர்களுக்கு அது தெரியும். சுருக்கி எழுத முயல்கிறேன் நண்பரே! கருத்துக்கு நன்றி! :-)

RVS said...

@தக்குடு
நீங்க யாரை வேணும்னாலும் வச்சுக்கலாம். :-)))))))))

RVS said...

@Madhavan Srinivasagopalan

மாதவா! ரொம்ப விஷமம் பண்றே!! :-))

மாதேவி said...

ம்..ம் பொய்க்கால் நன்றாக முடித்துள்ளீர்கள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails