Wednesday, February 22, 2012

கிண்டில்

கிண்டில் என்பது 3000 புத்தகங்கள் அடங்கிய அடுக்கி வைக்கப்பட்ட ஒரு அலமாரி நம்முடைய பாண்ட் பாக்கெட்டில் எப்போதும் இருப்பது போல. புத்தகப் புழுக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அமேசான் இணையதளத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தங்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது. இதில் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி (இவரது பெயரை உச்சரிக்கும்போது விஸ்கி ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை), சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், மஹாத்மா காந்தி என்று பல அமர காவியங்கள் படைத்த நாயகர்கள் எழுதிய புத்தகங்களும் அடக்கம். கிண்டிலுக்கென்று சல்லிசாக நேற்று அச்சேறிய புத்தகங்களும் நேற்றைக்கே கிடைக்கின்றன. 

டவுன்லோட் செய்துவைத்துக்கொண்டு காலையில் பாத்ரூம் கம்மோடில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம். இல்லையேல் நெரிசலான பஸ்ஸில் இடிபாடுகளுக்கு இடையே ஜன்னலோர யுவதியை லுக் விட்டுக்கொண்டேயும் படிக்கலாம். கையில் பிடித்திருப்பது சுலபம். சுமையில்லை. மணிக்கட்டு வலிக்காது. இதில் அமுக்குவதற்கு ரெண்டே பட்டன் தான். அடியில் பவருக்கு ஒன்று நடுவில் மெயின் மெனுவுக்கு இன்னொன்று. பைலட் கேபின் போல ஆயிரம் பட்டன்கள் கொடுத்து ஆங்காங்கே அழுத்தச் சொல்லாததால் குழப்பமேயில்லை. திரையில் தோன்றும் மற்றதெற்கெல்லாம் அதன் மேலேயே டச்சிங் டச்சிங்தான். 

கிண்டிலின் முழு முதல் அட்வாண்டேஜ் அதன் ஈ-இங்க் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டத் திரை மற்றும் இளவம் பஞ்சு போல இருக்கும் அதன் எடை. ஈ-இங்க் பற்றிய விசேட அறிவியல் அறிவு இங்கு தேவையில்லை எனினும் தெரிந்தால் அது நமக்கு மேலும் சுவாரஸ்யமளிக்கும்.

மொபைல், லாப்டாப் மற்றும் கணினித் திரைகள் எல்.சி.டி என்ற தொழில்நுட்பத்தில் தயாரானவை. இவைகளுக்கு சுயமாகவே வெளிச்சமிடும் தன்மை உண்டு. மின்சாரத்தின் உபயத்தில் ஒளிர்ந்து முன்னால் படங்களையும், எழுத்துக்களையும் நம் பார்வைக்கு விடும். இதனால் பன்னிரெண்டு மணி வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்க நடுரோட்டில் சென்றுகொண்டிருக்கும் போது யாராவது மொபைலில் அழைத்தால் மர நிழலுக்கு ஒதுங்கி சிகரெட் பற்ற வைப்பது போல ஸ்கிரீனை கையால் பொத்தி கண்களை இடுக்கி சிரமப்பட்டு யாரென்று பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் யாராவது கடன்காரனது காலை எடுக்கவேண்டியதாகிவிடும். எப்போதும் திரை ஒளிர்வதற்காக உறிஞ்சும் மின்சாரத்தால்தான் பாட்டரி கற்பூரம் போல கரைகிறது. சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது.

பல லட்சம் நுண்ணிய குழல்களுக்குள் கருப்பு மற்றும் வெள்ளை மசியினால் ஆன பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக்கூடிய குட்டியோண்டு மைக்ரோ சைஸ் மாத்திரைகளை போட்டு மிதக்கவிட்டிருக்கிறார்கள். ஒரு வாசகத்தின் முடிவில் ஃபுல் ஸ்டாப் உருவாக்குவதற்கு மிதக்கும் கருப்பு மாத்திரைகளை திரையின் முன்னுக்கு கொண்டுவந்தால் அந்த இடத்தில் ஃபுல் ஸ்டாப் ரெடி. இப்படியாக திரையில் “A" போடுவதற்கு அதன் கோடுகளின் பாதையில் கருப்பு மை மாத்திரைகள் திரையின் மேல் எழும்பி வரும். ஏனைய இடங்களில் வெள்ளை மசி மாத்திரைகள் மிதந்து கொண்டிருக்கும். இதன் காரணத்தால் ஒரு முறை திரையில் ஒளிர்வது அப்படியே அதில் ஸ்டிக்கர் போல ஒட்டவைத்ததாகிவிடும். 

எல்.சி.டி போலல்லாமல் காண்பித்துக்கொண்டே இருப்பதற்கு மின்சாரம் தேவையில்லை. மீண்டும் அடுத்த பக்கம் திருப்பினால் அந்த பக்கத்து வாசகங்களை திரையில் பொருத்திவிட்டு சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும். இதனால் விடியவிடியப் படித்தாலும் தூக்கம் கெட்டதால் கண் எரியுமேயன்றி கிண்டிலினால் கண்கள் சிரமப்படுவதில்லை. அந்தப் பிரச்சனைக்கு அது ஜவாப்தாரி ஆகாது. ஒரு முறை முழு சார்ஜ் சாப்பாடு போடுவது ஒரு மாதம் வரை நாம் படிக்க ஏதுவாக கிண்டிலை போஷாக்காக ஓட வைத்திருக்கிறது. இது தான் ஈ-இங்க் டிஸ்ப்ளேயின் வெற்றி ரகசியம்.

பின்னால் ஒளிரும் தன்மையில்லாததால் பெட்ரூமில் விளக்கணைத்த பின்னர் புள்ளைக்குட்டிகள் தூங்கியவுடன் தலைமாட்டுக்கருகில் வைத்துக்கொண்டு நடுநிசி வரைக்கும் படிக்கமுடியாது. ஒரு மெட்ராஸ் கொசு சைஸ் எல்.ஈ.டி லைட்டாவது அதன் கொண்டையில் சொருகிக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்டக் காகித புஸ்தகம் போலத்தான். வெளிச்சம் ஏற ஏற படிப்பது சுகம். அரைகுறை வெளிச்சத்தில் படித்தால் சீக்கிரம் சங்கரநேத்ராலயாவில் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்ய வேண்டிவரும். ஏற்கனவே சாளேஸ்வரம் வந்தவர்கள் கண்ணின் ஃபோகல் லெங்த்துக்கு தக்கவாறு எழுத்துக்களை குண்டாகவோ சன்னமாகவோ வைத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அப்படியே திரையில் அழுத்திப் பிடித்தால் அமெரிக்கன் டிக்‌ஷனரி திரையில் தோன்றி “இந்தா பிடி” என்று விளக்கத்தை அள்ளித் தெளிக்கிறது.

இன்னும் தமிழ்ப் புத்தகங்களுக்கு கிண்டில் இடம் தரவில்லை. தமிழை ஆட்கொள்வதற்கு தொழில்நுட்பம் வளரவேண்டும். காதாரக் கேட்க வேண்டும் என்று விரும்பினால் புத்தகத்தை படித்துக் காண்பிக்கும் “Text-to-Speech" வசதியும் இருக்கிறது. பெண் குரலில் கேட்டால்தான் உங்கள் மனதுக்குப் பதியும் என்றால் அதையும் மாற்றிக்கொள்ளலாம். வாயில் வாழைப்பழம் வைத்துக்கொண்டு பேசும் அமெரிக்க ஆக்செண்டில் இருப்பதால் புரியுமா என்று பார்க்கவேண்டும். புரியவில்லை என்றால் ஒரு டச்சில் நிதானமாக படிக்கவைக்கலாம். இல்லையில்லை நான் பீட்டர், ஷெல்லி பைரன் ஷேக்கு போன்றோர் என் உறவினர் என்று நீங்கள் சொன்னால் மூச்சு விடாமல் படிக்கச்சொல்லியும் கேட்கலாம். 

ஒரு புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தால் அப்படியே மூடிவைப்பது போல பொசுக்கென்று அணைத்துவிடலாம். அடுத்தமுறை மெனுவில் அந்த புஸ்தகத்துக்கு போனால் நேற்றைக்கு ராத்திரி விட்ட இடத்தில் மறுபடியும் திறக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் பத்து புஸ்தகத்தை தஸாவதானித்தனமாக ஒரே நேரத்தில் படிப்பது எளிது. இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் இரண்டு ஆவணங்களில் கையெழுத்திடும் கலை போல இரண்டு கண்களால் இரண்டு புஸ்தகம் படிக்க முடிந்தால் அதிசீக்கிரமே ஞானியாகிவிடலாம் என்பது திண்ணம்.

வைஃபை என்கிற கம்பியில்லா இணைய இணைப்பு மூலமாக புத்தகங்களை சில நொடிகளில் இறக்கிவிடலாம். சயிண்டிஃபிக் அமெரிக்கன் இணையதளம் சிபாரிசு செய்த மூளையைக் கூராக்கும் பத்து நாவல்கள் அமேசானில் இலவசமாக கிடைக்கிறது. அதன் சுட்டி இங்கே: http://www.scientificamerican.com/article.cfm?id=fiction-stories-that-sharpen-your-mind நான் இறக்கிய முதல் புத்தகம் எது தெரியுமா? ஷேக்ஸ்பியரின் மெக்பத். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air என்று படித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த ஈ-இங்க் டெக்னாலஜி கோலோச்சும் என்பதில் திசுவளவும் ஐயமில்லை!

#கிண்டிலில் பல மாடல்கள் உள்ளன. 1500 புத்தகம் சேர்த்து வைத்துக்கொள்ளும் அளவிலிருந்து கிடைக்கிறது. 3G தொலைத்தொடர்பு வசதியுடனும் உள்ளது. கிண்டில் ஃப்யர் என்ற புத்தும்புது மாடல் கலர்த்திரையோடு மார்க்கெட்டில் உலவுகிறது.

##இப்பதிவின் முகப்புப் படம் அமேசான் கம்பெனியார் அவர்களது வலையில் இழுத்துப் போட்டிருந்தது!! 

### தொழில்நுட்பப் பதிவெழுதி ரொம்ப நாளாச்சு!

30 comments:

BalajiVenkat said...

///ஜன்னலோர யுவதியை லுக் விட்டுக்கொண்டேயும் படிக்கலாம். /// i like it... :P

கௌதமன் said...

பி டி எஃப் வடிவில் புத்தகம் இருந்தால், தமிழும் படிக்க முடியுமே! என்னுடைய அமேசான் கிண்டிலில் நான் கணையாழி கடைசி பக்கங்கள் படிக்கின்றேன்.

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் கிண்டில் ஒன்று வாங்க யோசித்திருக்கிறேன். ஆனால் Sony Reader உம் நல்லது என பேச்சு அடிபடுகிறது. தெளிவுபடுத்துவீர்களா?

ஹாலிவுட்ரசிகன் said...

ஏற்கனவே என்னிடம் Sony Reader PRS 505 மாடல் ஒன்று இருக்கிறது. பழைய மாடல் என்பதால் பக்கத்திற்கு பக்கம் மாறும்போது திரை கறுப்பாகி எழுத்துக்கள் மீண்டும் தோன்றுவது எரிச்சலூட்டுகிறது.

புது மாடல் எப்படி? ஒவ்வொரு பக்கம் திருப்பும்போதும் திரை கறுப்பாக மாறி பழைய நிலைக்கு வருகிறதா? அல்லது எழுத்துக்கள் மட்டும் மாறுகின்றனவா?

RVS said...

@BalajiVenkat
Thanks! :-)

RVS said...

@kg gouthaman
சார்! எனக்கும் கொஞ்சம் ஷேர் பண்றீங்களா? :-)

RVS said...

@ஹாலிவுட்ரசிகன்
என்னிடம் உள்ளது கிண்டில் டச். புத்தகத்தை புரட்டுவதுபோல அருமையாக இருக்கிறது. எழுத்துக்கள் மட்டுமே மாறுகிறது.

கிண்டில் ஃப்யர் இன்னும் கிராண்டாக இருப்பதாக சொல்கிறார்கள். Kindle!! Definitely worth for money! :-)

bandhu said...

எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், கருப்பு வெள்ளை , பிரௌசர் இல்லை போன்ற காரணங்களால் இந்த இ-ரீடர்கள் ஐ-பாட் முன் தோற்று விட்டன என்று தோன்றுகிறது.. அதனால் தான், அமேசான் புதிய கின்டல் ஃப்யர் டேபிலேட் தொழில் நுட்பத்தில் கொடுத்திருக்கிறது..

துரைடேனியல் said...

இந்த பதிவைப் படித்ததும் நானும் ஒரு கிண்டில் வாங்க முடிவு செய்துவிட்டேன் சார். பகிர்வுக்கு நன்றி.

துரைடேனியல் said...

tamilmanam 2.

raji said...

புத்தக வடிவில் படிக்கும் திருப்தி கிண்டிலில் கிடைக்கிறது என்கிறீர்களா?

துளசி கோபால் said...

கிண்டிலை வாசிக்கும்போது அங்கங்கே கிண்டல்!!!!!

வெகுவாக ரசித்தேன் உங்கள் 'நடை'யை:-)))

RAMA RAVI (RAMVI) said...

நல்ல தகவல் பதிவு.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஏற்கெனவே தமிழில் எழுதும் எழுத்தாளனுக்கு- பெயர் புகழ் ஒரு புறம் இருக்கட்டும்- எழுத்தை நம்பி வாழ முடியாத அகௌரவமான சூழல். ராயல்டி கிடையாது. முதல் ப்ரிண்ட்க்கு அச்சிட்ட 1200 புத்தகங்கள் விற்பதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. இந்த கிண்டில் போன்ற சமாச்சாரங்கள் பாலோ கோய்லோ,நைபால்,ருஷ்டி போல கொழுத்த ராயல்டியில் வாழும் ஆசாமிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாயிருக்கலாம். நமக்கு முன்னால் நிழலாடுவது பாரதியும் புதுமைப் பித்தனும் ஜி.நாகராஜனும் விக்ரமாதித்யனும்தான்.

தக்குடு said...

எங்களுக்கு கிண்டில் கெட்டில் எதுவும் வாங்க வேண்டாம். லோகத்துல உள்ள எல்லா புஸ்தகத்தையும் படிச்சு முடிச்சு எப்பிடியும் நீங்க உங்களோட மன்னார் குடி சொந்தசரக்கையும் கலந்துகட்டி போஸ்ட் எழுதத்தான் போறேள். அப்புறம் என்ன கவலை எங்களுக்கு! :)

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
Kindle பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி.

ADHI VENKAT said...

கிண்டில் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.....

Anonymous said...

Thank you boss..wonderful informations..Your Sujtha style writing is superb..pls continue this type of useful informations..

RVS said...

@bandhu
இந்த தொழில்நுட்பம் நிச்சயம் வளரும். அப்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். :-)

RVS said...

@துரைடேனியல்
நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள். :-)

RVS said...

@raji
புஸ்தகத்தைத் தொட்டுப் புரட்டிப் படிக்கும் சந்தோஷம் இல்லைதான். இருந்தாலும் ஒரே நேரத்தில் ஆயிரம் புத்தகங்களை திருப்பிப் பார்க்கும் வசதியிருப்பதால் இதைப் போற்றலாம். வருடங்கள் ஓட ஓட இது போன்ற தொழில்நுட்பப் புரட்சிகளை ஆதரிப்பது நல்லது. :-)

RVS said...

@துளசி கோபால்
நன்றி மேடம். :-)

RVS said...

@RAMVI
நன்றி மேடம். :-)

RVS said...

@சுந்தர்ஜி
ஜி! இதிலையும் புஸ்தகங்களை காசுக்குத்தான் விற்கிறார்கள். இது புஸ்தகங்கள் படிப்பதில் அடுத்த பரிணாமமாக இருக்கலாம். காடுகளை அழிக்காதீர்கள் என்ற கோஷம் வலுத்துக்கொண்டு வரும்வேளையில் யாராகயிருந்தாலும் இந்த ஃப்ரேமுக்குள் இன்னும் கொஞ்ச காலத்தில் அடங்கவேண்டிவரும் என்று நினைக்கிறேன்.

:-)

RVS said...

@தக்குடு
அன்புக்கு நன்றி தக்குடு! :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றிங்க சகோ! :-)

RVS said...

@Anonymous

Thank you! சுஜாதா மலை. நான் மடுங்க... :-)

அப்பாதுரை said...

ஒரே நேரத்தில் பத்து (கபால்னு ஆயிரத்துக்குப் பூட்டீங்க..?) புத்தகங்கள் படிக்க முடியாதுங்க.. திறந்து வச்சுக்கலாம்.. அதைக் கிந்டில் இல்லாமலே செய்யலாம்.

போகப் போகத் தெரியும் கிந்டில் சிரமம் புரியும் :) இருந்தாலும் கிந்டில் மாதிரி தொநுட்பங்கள் தான் இனி என்பது சரியே.

சுந்தர்ஜியின் பின்னூட்டம் வலிக்கிறது.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.in/2012/02/blog-post_26.html

விருது பெற அழைக்கிறேன்

சிவகுமாரன் said...

எங்கேயோ போயிட்டீங்க . நான் இன்னும் மதுரையில புத்தகக் கண்காட்சிக்காக வெயிட்டிங்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails