Friday, September 21, 2012

....உன் கண்களைத் தழுவட்டுமே....

கடந்த சில நாட்களாகவே “இஜ் இட் மிஷ்டர் பெங்கட்?” என்று ஒரு பெங்காலி வாலிபன் கூப்பிட்டு “வரீங்களா?” என்று அழைக்கிறான். ”உங்களுக்கான சீட்டைப் பிடித்து வைக்கட்டுமா?” என்று அணுசரனையாகக் கேட்கிறான். தொழில்நுட்ப செமினார்கள் அட்டெண்ட் செய்து ரொம்ப நாளாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் லெ ராயல் மெரிடியனில் ஒரு செமினாருக்குப் போய் தூங்கிவிட்டு வந்த கையோடு எழுதியது இது.


இந்த பொட்டி தட்டி வயிறு நிரப்பும் வேலையில் இருப்பதால் அடிக்கடி இது ஃபீல்டுக்கு புதுசு என்றும், ரோடு ஷோ என்றும், மென்பொருள் உருவாக்குபவர்கள் சங்கமம் என்றும், திட்ட அதிகாரிகள், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியில் (CTO) ஆரம்பித்து முதன்மை எக்ஸ் அதிகாரி(CXO) வரை நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்றவற்றிற்கு ஃபோன் மேலே ஃபோன் போட்டும், ஈமெயில் அனுப்பியும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை கூப்பிடுவது மாதிரி வருந்தி வருந்தி அழைப்பார்கள். சமீபத்தில் இதுபோல் கூப்பிட்ட மரியாதைக்கு போய் எட்டிப்பார்க்கலாம் என்று போனதில் கிடைத்த திருவாசகம் தான் இது.

"அதே அலுத்துப்போன மேரி, சீதா, ராணி போன்ற கம்பனியின் கந்தர்வக் கன்னிகளை ஒருநாளேனும் கண்ணுறாமல் இருப்பதற்கும், கழனித்தண்ணி கேன்டீன் காப்பியை தவிர்ப்பதற்கும், துர்வாசம் வீசும் இயற்கைக்கு ஒதுங்கும் அறைகள் மேலும் வீசாமல் இருக்கவும், ஓயாமல் தொலைபேசி பிடுங்கும் உள்ளூர்/வெளியூர் ஆபிஸ் ராட்ஷசர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பொட்டி தட்டி கைகால்கள் மரத்து போகாமல் ஒரு உடற்பயிற்சி போல இருக்கவும், நம்போன்றோருக்கு அமையும் கபாலி கோயில் அருட்ப்ரசாதம்தான் ஸ்டார் ஹோட்டல் செமினார்கள்"

என்று இந்த தளத்தில் பத்து பதினைந்து வருடங்கள் பழம் தின்று கொட்டை போட்டு சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் போல் இயங்கிக்கொண்டிருக்கும் "செமினார் செல்வன்" ஒருவர் தெரிவித்தார். இவ்வகை செமினார்கள் பற்றியும் அதில் பக்குவமாக பார்வையாளனாக பங்குபெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்த விஷயங்களில் சில துளிகள் கீழே.

1. நாள்தோறும் கணினிப் பொட்டியை திறந்து மெயில் பார்க்கையில், முதலில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐ.பி.எம், இன்டெல் போன்ற உலக கம்பனிகளில் இருந்து மெயில் வந்திருந்தால், முதல் வேலையாக பார்த்தகையோடு நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்துக்கொண்டு "ஐயா/அம்மா நான் நிச்சயம் வருகிறேன், எனக்கு ஒரு சீட் போடுங்கள்" என்று ஒரு பதில் மெயில் அனுப்பி உடனே ஒரு இருக்கையை பிடிக்கவேண்டும். முக்கியமாக, இவ்வகை பிரசங்கங்கள் இலவசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிர்வாகத்தில் சுலபமாக ஓ.கே வாங்கி ஆபிசிலிருந்து தப்பிக்க முடியும்.

2. காலை 9.30 மணியளவில் பேசும் நிகழ்ச்சி ஆரம்பம் என்றால், ஒன்பது மணிக்கே போனால் வரவேற்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ் வெள்ளை சொக்காய் போட்ட பெண்களின் புன்னகை அழைப்போடு தலையில் வெள்ளை குல்லா போட்ட நட்சத்திர சர்வர் கொடுக்கும் டீ காஃபி பிஸ்கட் போன்ற பதார்த்தங்கள் கிடைக்கும். ஜீன்ஸ் வனப்பிற்கு. டீ வாயிற்கு. கையில் உங்கள் முகவரி அட்டை இருந்தால் ஒரு பெட்டியில் போட்டுத் தப்பித்து விடலாம். இல்லையென்றால் வாசலில் நிற்க வைத்து ரெண்டுல ராகு ஏழில் சனி என்று உங்கள் ஜாதகம் எழுதச் சொல்லிப் படுத்துவார்கள்.

3 . உள்ளே சென்றதும், எந்த சீட்டுக்கு மேல் குழாய் விளக்கு இல்லையோ அதுவே நமக்கு தோதான இடம். பாடசாலையில் படிக்கும் காலத்தில்தான் மாப்பிள்ளை பெஞ்சு அதிசேஃப். இதுபோன்ற செமினார்களில் முதல் வரிசையில் இடதோ, வலதோ கோடி இருக்கை மிக மிக சௌகர்யம். உட்கார்ந்தவுடன் தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் குறட்டை விடக் கூடாது. அப்புறம் பேசுபவர் மைக் வழியே அரங்கத்திற்கே உங்கள் குறட்டைச் சென்றடைந்து நீங்கள் தூங்குவதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

4. ரொம்பவும் தூக்கம் தூக்கமாகக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தால், அழைப்பே வராத அலைபேசியை காதுக்குள் சொருகி, வாயைக் கையால் பொத்தாமல் பொத்தி, ஏதோ தலைபோகிற அவசர அழைப்பு போல எழுந்து வெளியே ஒட்டமும் நடையுமாகச் சென்றுவிடவேண்டும். ஓய்வு அறை பக்கம் சென்று மூஞ்சி அலம்பி, கை காயவைக்கும் இயந்திரம் கீழே இரண்டு நிமிடம் ஏந்திக் காட்டிவிட்டு திரும்பினால் இன்னொரு ஒரு மணி நேரம் தாங்கும். அதுவும் சிலபேருக்கு தான் அந்த கொடுப்பினை. அப்படி வரம் இல்லாதவர்கள் அந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் கொடுத்த ஒருபக்க அஜெண்டாவை வெறித்துப் பார்த்து நெட்ரு பண்ணிக்கொண்டோ, அல்லது விழா எப்படி நடந்தது, உங்களை அதிகம் தூங்க வைத்தப் பேச்சாளர் யார், விழாக் கம்பனியார் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சௌகரியங்கள் பற்றி என்று நிகழ்ச்சி முடிவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

5. நாம் தூங்குகிறோம் என்று தெரியாத வண்ணம் அவ்வப்போது இரண்டு காலையும் ஆட்டுவது, தீடீரென்று யாரோ "டேய்.." சொல்லி கூப்பிட்டது போல பின்னால் திரும்பி பார்ப்பது, தலையை மையமாக வறுமையின் நிறம் சிகப்பு கமல் போல அசைப்பது, கொடுத்த கிறுக்கல் புத்தகத்தில் ஹார்டீன் போட்டு அம்பு விடுவது, பல தினுசுகளில் ஸ்டார் டிசைன் வரைவது, வீட்டில் உட்கார்ந்து சாவகாசமாக பார்க்கமுடியாத பால் கணக்கு போன்ற இத்யாதிகள் எழுதுவது, ரொம்ப மனசுக்குக் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தால் சஷ்டி கவசம் எழுதிப்பார்ப்பது போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபடலாம். போற வழிக்கு புண்ணியமாக போகும்.

6. ஒரு பதினொன்னரை மணி வாக்கில் லைட் போட்டு ஒரு இண்டர்வல் விடுவார்கள். எல்லோருக்கும் முன்பாக ஓடிப்போய் கையில் கப்பேந்தி ஒரு கட்டஞ்சாய் குடித்துவிட்டு, தட்டில் பரப்பி வைத்திருக்கும் பிஸ்கட்களில் நமக்கு பிடித்தவையாக ஐந்தாறு தேர்ந்தெடுத்து கையில் அடுக்கி வைத்து சாப்பிட்டுவிட்டு, யாராவது தெரிந்த முகம் போல இருந்தால் "எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...போனவாரம் கன்னிமாரா வந்தீங்களா.." என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்து பொழுதை போக்கிவிட்டு, எல்லோரும் போனவுடன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு ஆறஅமர மெதுவாக பன்னிரண்டு மணி வாக்கில் உள்ளே சென்று அமரவேண்டும்.

7 . பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடிப்பதுதான் இந்த உலகத்திலேயே பேரம் பேசாத சென்னை ஆட்டோ கிடைப்பது மாதிரி அவ்வளவு கஷ்டம். சர்வ நிச்சயமாக வெளியில் தட்டில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்த மின்ட் எடுத்து சாப்பிட்டே ஆகவேண்டும். சப்பி சாபிடாமல் மின்டை கடித்து தின்று அதையும் தீர்த்த பின்னர், கள் உண்ட மயக்கத்தில் கண்கள் மூடுவது போல ஸ்லோ மோஷனில் இமைகள் மூடித் திறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சகதூங்கியின் கால் தானாக நம் கால் மேல் இடிபட எழுந்துவிடவேண்டும்.

8. ஒருவாறாக ஒரு மணியளவில், பேச்சாளர் தனது உரையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு "யாருக்காவது டவுட்ன்னா கேள்வி கேளுங்கப்பா..." என்று ஒரு குரல் விடுவார். மிகவும் சமர்த்தாக உட்கார்ந்து பிரசங்கம் கேட்ட ஏதாவது அதிகப்ரசங்கி சாப்பாடு நேரம் என்பதை மறந்து உலகளாவிய டெக்னாலஜி பற்றி சிப், டேட்டா குவஸ்ட் போன்ற ஊரில் கிடைக்கும் சஞ்சிகைகளை உருப்போட்டு படித்துவிட்டு தாறுமாறாக கேள்வி கேட்டு பேசியவரை படுத்துதோ படுத்து என்று படுத்தி குஷியடையும்.

9. எல்லோரும் கேட்கும்போது சம்ப்ரதாயத்துக்கு நாமும் கேள்விகனை தொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், "மைக்ரோசாப்ட்டை பில் கேட்ஸ் தான் இப்ப பார்த்துக்கராரா?", "ஆரகிள் டேட்டாபேஸ் என்னோட இஸ்த்திரி டேட்டா வைக்க பயன்படுமா?", "500 ஜிபி ஹார்ட்டிஸ்க்கில் 501 ஜிபி ஸ்டோர் பண்ண நான் என்ன செய்யணும்?" என்று உலகே அதிசயிக்கும் வண்ணம் ஆச்சர்யமான சிலபல கேள்விகளை கேட்டு இரண்டு மணிநேரம் பேசியவரை இரண்டே நிமிடத்தில் திக்குமுக்காட செய்துவிடவேண்டும். இந்த வினாக்களால் கொஞ்சநேரத்தில் அரங்கமே கப்சிப்பாகி எல்லோரும் சாப்பாட்டை பார்க்க நடையை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தப்பித்தது டெக்னாலஜி.

10. பசியூட்டி என்று சூப் வைத்திருப்பார்கள். காணாததை கண்ட மாதிரி நிறைய ஊற்றி குடிக்காமல் கொஞ்சமாக அரை கப் வாங்கி குடித்துவிட்டு மெயின் ஐட்டத்திற்கு போய்விட வேண்டும். முழு கப் வழிய வழிய வாங்கி ஏக் கல்ப்பில் அடித்துவிட்டால் சாப்பாடு சாப்பிட முடியாது. பசியூட்டி பசியாற்றி ஆகிவிடும். சமைத்துப் பார் போல நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வெறித்துப் பார் என்றாகிவிடும். சைவ அசைவ ஐட்டங்களுக்கு பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். நமக்கு வெறும் சாம்பார் உருளை கறிதான் வேண்டும் என்றால் அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு தயிர்சாதம் டேபிளை அடைந்து கொஞ்சமாக உள்ளே தள்ளிவிட்டு, வன்னிலா ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று மேற்படிகள் சாப்பிடுவதற்கு கொஞ்சூண்டு மேல் வயிற்றில் இடம் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவையும் செமத்தியாக ஒரு கட்டு கட்டியபின், ஸ்வீட் சோம்பு ஒரு கை எடுத்து வாயில்போட்டுக் கொண்டு ஃபீட்பேக் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும்.

தேவரீர் இதில் கண்ட விஷயங்கள் ஒரு அரை நாள் செமினாருக்காக எழுதப்பட்டது. முழுநாள் செமினாருக்கு இதைவிட அதிகமான விஷயங்கள் இருப்பதாகவும் அதற்கு இன்னொரு அடையார் ஹோடேல்லிலோ, சோளா ஷேரடானிலோ, தி பார்க்கிலோ சந்திக்கும்போது விலாவாரியாக பாடம் எடுப்பதாக சொல்லிச்சென்றார் அந்த அன்பர். காத்திருங்கள் முழு செமினாருக்கு.

#செமினார் செல்வங்கள்

26 comments:

பத்மநாபன் said...

ரொம்ப நாளாச்சு .. இப்படி நீர் தழும்ப குலுங்கி சிரித்து... அரை நாளுக்கே இந்த ஆர்பாட்டம் ..முழு நாள் என்றால் கேட்கவே வேண்டாம்.....

Anonymous said...

"லீ ராயல் மெரிடியன்" அல்ல. ல ராயல் மெரிடியன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும். ||

Copy to GM..(நீங்க டிபுடியா இல்ல அசிஸ்டன்ட்'ஆ)

RVS said...

@பத்மநாபன்
தலைவரே! ரசிகமணியே! ரொம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் பக்கம் தலையைக் காண்பிக்கிறேன். உங்களோடது முதல் பின்னூட்டம். இன்னொரு சுற்றுக்கு தயாராகுங்க.. :-)

RVS said...

நன்றி அனானி! லீ ராயல் என்று ’பேச்சு’வழக்கில் லெ ராயலைச் சொல்லுவோம். இருந்தாலும் மாற்றிவிட்டேன். :-)

RVS said...

@ | * | அறிவன்#11802717200764379909 | * |

அஜிஸ்டெண்ட்!!!! :-)

அப்பாதுரை said...

இவ்வளவு சுருக்க எழுதிட்டீங்களே? welcome back.

அஞ்சும் ஒம்பதும் அட்டகாசம்.

இப்போதெல்லாம் இலவச செமினார்களில் சாப்பாட்டுக்குத் தனியாகக் காசு வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காபி மட்டுமே இலவசம். மற்றபடி வயிற்றுக்கு நாமே தான் ஈய வேண்டும். பனிரெண்டு டாலருக்கு சேந்ட்விச், சிப்ஸ், பழம் அல்லது சாக்லேட் உருண்டை, தண்ணீர் பாட்டில். வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டால் நமது பக்கத்து சீட்காரர் சிப்ஸ் மற்றும் சாக்லேட் உருண்டை பிரிப்பதை எரிச்சலுடன் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

அனானி டீச்சர் மெஹ்ர்தியனை மட்டும் மெரிடியன் என்று அப்பளம் நொறுக்குவானேன்?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஜோர் ஆர்.வி.எஸ்.

முன்னாடியே எழுதினதை சுட வெச்சுத் தாளிச்சிட்டீங்களோ?

இருந்தாலும் இப்படி எழுதினா எத்தனை தடவை வேணும்னாலும் வாசிக்கலாம்.

ரொம்ப நாளாச்சு.இப்பிடி எழுதும் ஓய்!

மாதேவி said...

முழுநாளையும் படித்தால் நமக்கு வயித்து வலி வந்துவிடாது:))))

ரசனையான பகிர்வு.

பால கணேஷ் said...

5ம் 7ம் 9ம் படிக்கும் போதே குபீர் என்று சிரிக்க வைத்தது. இப்படி ஒரு அங்கதத்தைப் படித்து எத்தனை நாளாயிற்று. அருமை ஐயா.

RVS said...

@அப்பாதுரை

இவ்ளோ சுருக்க எழுதிட்டீங்களேன்னா கொஞ்சமாவா இல்ல சீக்கிரமா எழுதிட்டேனா! படிக்கிறவங்க சுருக்கு மாட்டிக்கிறமாதிரி இல்லைன்னு கிடைத்த வரவேற்பில் தெரியுதுங்க...

மேலான கருத்துக்கு நன்றி அப்பாஜி! :-)

RVS said...

@சுந்தர்ஜி

யாருமே ஆர்.வி.எஸ்ஸை சீண்டாத காலத்தில் எழுதினது. அங்க இங்க கொஞ்சம் டச் பண்ணி பவுடர் போட்டு ஏத்திவிட்டேன் ஜி!

RVS said...

@மாதேவி

தொடர் வாசிப்பிற்கு நன்றி. முழு நாள் செமினாருக்கும் இதேதான் வரும். மத்தியான செஷன் ரொம்ப டஃப்ஃபா இருக்கும். பக்கத்துல இருந்த ஆள் தூங்கி என் தோள்ல சாஞ்ச நிகழ்ச்சியெல்லாம் நடந்திருக்கு. :-)

RVS said...

@பால கணேஷ்
ரசித்ததற்கும் கமெண்டியமைக்கும் மிக்க நன்றிங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி நிறைய எழுதிக்கிட்டிருந்தேன். கொஞ்சம் ஃபேஸ்புக் பக்கம் போயிருந்தேன். திரும்பவும் ரீஎண்ட்ரி கொடுத்துருக்கேன். :-)

திண்டுக்கல் தனபாலன் said...

அரை நாள் செமினாரே இப்படியா... ஹா... ஹா...

விரைவில் முழு நாள் செமினாருக்காக காத்திருக்கிறேன் சார்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இன்னும் கொடுமை என்னன்னா பார்டர்ல சமாளிச்சு ஜெகஜ்ஜாலம் பண்ணும் உத்தமர்களையும் பக்கத்தில் உட்கார்ந்து வாய் கிழியும் பெருங்கொட்டாவி விட்டு உசுப்பேத்துவார்கள்.

இன்னொரு முத்திரையும் உண்டு. இரு கண்களையும் மூடி இரு விரல்களைக் கிடுக்கி போல ரெண்டு கண்ணுக்கும் பிரிச்சுகொடுத்துட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பதாய் கால்களை வேகமாய் ஆட்டும் பாவம்.இதற்கு சர்வநிஷ்டா பயங்கர முத்ரான்னு பெயர்.

இதுவும் ட்ரை பண்ணீருக்கீங்களோ ஆர்விஎஸ்?

R. Gopi said...

:-))))

ரொம்ப நாளைக்குப் பிறகு வருகிறேன். கூகிள் பிளசிலேயே பொழுது ஓடி விடுகிறது.


ஸ்ரீராம். said...

நாலாவது பாய்ன்ட் செம! இல்லையில்லை அஞ்சாவது... நோ நோ ஏழாவது..... விடுங்க... எல்லாமே ஜோர். இந்த மாதிரி சமயங்களில்தான் நம் குறட்டைப் பழக்கம் எவ்வளவு பெரிய வில்லன் என்று தெரியவரும்!

சாந்தி மாரியப்பன் said...

அரை நாளுக்கே இப்படியா :-))))

ரொம்ப நாளு கழிச்சு வந்தாலும் சர வெடியைக் கொளுத்திப் போட்டிருக்கீங்க :-)

RVS said...

@திண்டுக்கல் தனபாலன்
ஃபுல் டே எழுதிடலாம் தனபாலன். :-)

RVS said...

@சுந்தர்ஜி
சர்வ நிஷ்ட பயங்கரா... பெயர்லயே மிரட்டுறீங்க ஜி!

கண்ணைத் தொறந்துகிட்டே தூங்கற ஜாதி ஒண்ணு இருக்கு! :-)

RVS said...

@Gopi Ramamoorthy
வெல்கம் பாஸ்! எப்படி இருக்கீங்க? கும்பகோணம் சௌக்கியமா? அரபு தேசத்துல கும்பகோணம் பத்தி நீங்க சொல்லிக்கிட்டிருந்ததைப் படித்தேன். :-)

RVS said...

@ஸ்ரீராம்
குறட்டை வில்லனை ஜெயித்துவிட்டால் நித்ராதேவியை அடைந்துவிடலாம். :-)

RVS said...

@அமைதிச்சாரல்

நன்றிங்க மேடம். நல்லா இருக்கீங்களா? இனிமே ஃபுல் ரவுண்டு வரலாம்ணு இருக்கேன். :-)

தக்குடு said...

ஆபிஸ்ல லீவு முடிஞ்சு ஜாயின் பண்ணி முதல் நாள் உங்க போஸ்டை படிச்சு பல்லைகாட்டினா நம்ப சீட்டு கிழிஞ்சுடும் போலருக்கே :))

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி சார்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails