Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 9 : தேனூட்டிய புவனேஸ்வரியம்மன்

...அந்தக் கடிதத்தில் கணபதியை கண்கொட்டா வாய்மூடா ஆச்சரியத்தில் அடித்துப்போட்டவை இரண்டு. ஒன்று அவர் கடிதம் எழுதி கவருக்குள் மடித்து வைக்கும் போது மஞ்சமசேரென்று இருந்த காகிதம் இப்போது பளீர் வெள்ளையில் டாலடித்தது. இரண்டாவதாக இவர் படமிருந்தது கடிதத்தின் மேல் பகுதியில். அங்கே இவர் எழுதியிருந்த எழுத்துகள் எல்லாம் கீழே ஒதுக்கிவிடப்பட்டிருந்தது. கையெழுத்து சாட்சாத் இவருடையதுதான். கடிதத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் இவர் எழுதியதுதான். மனுஷ்ய சக்திக்கு இது எப்படி சாத்தியமாகும்? தந்தையும் மகனும் எங்கும் நிறை பரப்பிரம்மமான ஈஸ்வரனின் திருவிளையாடலை எண்ணியெண்ணி நெக்குருகிப் போனார்கள். பக்திப் பரவசம் ஊற்றெடுக்க பூஜையறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.

பௌர்ணமிகளும் அமாவாசைகளும் மாறி மாறி உருண்டன. விசாலாக்ஷி கர்ப்பம் தரித்தார்கள். பிறந்தகம் சென்றார்கள். கணபதிக்கு மீண்டும் தவ எண்ணம் தலை தூக்கியது. புனிதப் பயணம் மேற்கொண்டு தவமியற்ற உத்தேசித்தார். “தயை கூர்ந்து வெகுதூரம் சென்றுவிடாதீர்கள்... “ என்று பிறந்தகம் போக மாட்டு வண்டியில் ஏறும் போது விசாலாக்ஷி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓரிஸா மாநிலத்தின் புவனேஸ்வருக்குச் செல்லத் தீர்மானித்தார்.

இம்முறையும் இவரோடு இருவர் தபஸ் புரிவதற்கு தொற்றிக்கொண்டனர். ஒருவர் கணபதியின் தம்பியின் மச்சினர் ராமா சாஸ்திரி. இன்னொருவர் காசியிலிருக்கும் மாமா தாத்தா பவானி சங்கரத்தின் மகன் லக்ஷ்மிநாராயண சாஸ்திரி. இவ்விருவருக்கும் கணபதிதான் மந்திர தீக்ஷை அளித்திருந்தார். ராமா சாஸ்திரி வைராக்கியமில்லாமல் ஒரே நாளில் புவனேஸ்வரிலிருந்து கலுவராயிக்கு திரும்பிவிட்டார். லக்ஷ்மிநாராயண சாஸ்திரி சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர். தாக்குப்பிடிக்க முடியாமல் அவரும் பின்னாலேயே வீடு திரும்பினார். கணபதிக்கு இப்போது நிம்மதி. புவனேஸ்வரில் அனந்த வாஸுதேவா கோயிலுக்குள் சென்றார். பின்புறம் இருக்கும் பிரகாரத்தில் பிறர் இம்சையில்லா ஓரிடத்தில் அமர்ந்து தவத்தைத் தொடங்கினார்.

பாஸ்கரன் மறையும் வரை ஆடாது அசங்காது பத்மாசனத்தில் தவமியற்றுவார். விண்ணில் நிலவு தோன்றியதும் கணீரென்று லலிதா சகஸ்ரநாமம் ஜெபிக்கத் தொடங்குவார். ஒன்பது முறை விடாமல் ஜெபிப்பார். ஒன்பது வாரங்களுக்கு சகஸ்ரநாமமும் ஜபமும் மாறிமாறி உச்சாடனம் செய்தார். ஒன்பதாவது வார இறுதியில் ஒரு கல் மேடையில் வாஸுதேவா கோயிலின் பின்புறம் நிலவொளியில் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார். வட்ட நிலவிலிருந்து கோடி சூர்யப்ரகாசமாக நிலவைக் கோட்டைக் கட்டிய பேரொளி ஒன்று தோன்றியது.

ஜொலிக்கும் புல்லாக்கும், ரத்ன க்ரீடமும், காதில் டாலடிக்கும் வைர தாடகங்களுமாக சர்வாலங்கார பூஷிணியாகப் புவனேஸ்வரி மாதா அந்த ஒளி வட்டத்துக்குள் அபயஹஸ்தத்துடன் காட்சி தந்தார். ஒரு மந்தகாசப் புன்னகையோடு தோன்றிய புவனேஸ்வரி மாதா கையிலிருந்த ஸ்வர்ண கிண்ணத்தில் தேன் தளும்பியது. தெய்வீகப் பரவசத்தில் ‘ஆ’வென்று அமர்ந்திருந்த கணபதிக்கு அந்தத் தேனை துளித்துளியாக ஊட்டினாள். சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியது போல. சொற்ப நேரமே நீடித்த அந்தக் காட்சி புகையாய்க் கலைந்து மீண்டும் விண்ணில் நிலா சோபனமாகத் தெரிந்தது. தனக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவத்தை அகக்கண்ணில் ஓட்டிப் பார்த்தார். நாக்கில் அமிர்தம் போல தெவிட்டாத தித்திப்பு. உதட்டருகே பிசுபிசுவென்றிருந்தது. கையால் உதடுகளைத் துடைக்க ஆள்காட்டி விரலில் ஒரு துளி தேன்!

அந்த க்ஷணத்திலிருந்து கவிதை கட்டுரை ஸ்லோகங்கள் என்று அவரெழுதிய ஆக்கங்களெல்லாம் அதிமதுரமாக இனித்தன. அவரது புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டது. புவனேஸ்வரியின் புன்னகை எப்போழுதுமே நினைவில் தங்க அவரெழுதிய காவியங்களுக்கு பலவாறு உறுதுணையாக இருந்து தீட்சண்யம் மிக்கதாக ஆக்கியது.

அன்றிரவு புவனேஸ்வர் கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எழுபது வயது மூதாட்டி ஒருவருக்கு ஒரு கனா. அதில் அவரது கணவர் தோன்றி “இப்போது வாஸுதேவர் கோயிலுக்குப் பின்புறம் நான் அமர்ந்திருக்கிறேன்” என்று கை காட்டினார். அவரது பெயர் லம்போதர்தாஸ். சிறிய இடைவெளியில் பிள்ளையாரப்பன் (லம்போதரா) தோன்றி அதையே கூறினார். மறுநாள் காலையில் தனது மகன் பாஸ்கர் தாஸை அழைத்து தனது சொப்பனத்தைச் சொல்லி வாஸுதேவர் கோயிலின் பின்புறம் ஏதேனும் விநாயகர் விக்ரகம் புதிதாக ஸ்தாபித்துள்ளார்களா என்று பார்த்துவரச் சொன்னார். பாஸ்கர்தாஸ் அங்கே பார்த்தது “கணபதி” என்னும் தவசிரேஷ்டரை! அந்தப் பெண்மணி பாஸ்கர் தாஸை கணபதியிடம் கணபதி மந்திர தீக்ஷை வாங்கிக்கொண்டு அவருக்கு சேவை புரியச் சொன்னார். பாஸ்கர் தாஸ் அவ்விதமே செய்தார். கணபதி மேலும் நான்கு மாதங்களுக்கு புவனேஸ்வரில் கலையாத தவம் இயற்றினார்.

13-02-1899 அன்று இரவு பசு ஒன்று காளைக் கன்று ஈன்றதாகக் கனவு கண்டார். இரண்டு நாட்கள் கழித்து விசாலாக்ஷி பதினான்காம் தேதி ஆண் மகவு பெற்றதாக அவருக்கு லிகிதம் கிடைத்தது. கணபதிக்கு காசியில் மஹாதேவரின் காட்சி கிடைத்ததால் குழைந்தைக்கு மஹாதேவன் என்று பெயரிட்டார் நரசிம்ம சாஸ்திரி.

இல்லம் திரும்பிய கணபதி, விசாலாக்ஷியின் வேண்டுகோளுக்கு இணங்க வேலை தேடினார். கஞ்சம் ஜில்லாவின் கோதா அக்ரஹாரத்தில் ஸம்ஸ்கிருத பள்ளியில் பண்டிட் வேலை காலியிருந்தது. ஆனால், வேலையில் சேருவதற்கு படிப்புச் சான்றிதழ்கள் கேட்டார்கள். சான்றிதழ்கள் இல்லாமல் வேலைக்கு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து ”இது சரிப்படாது” என்று மீண்டும் தவத்துக்குக் கிளம்பினார். இம்முறை கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தவளேஸ்வரத்தில் தவம் புரிந்தார். கொஞ்ச நாட்களுக்கு வாழைப்பழம் மட்டுமே புசித்து தவமியற்றினார். அதுவும் கிடைக்காமல் போகவே அதன் வாழைப்பழ தோலில் இருக்கும் நாரை உரித்துத் தின்றார். அதில் அவருக்கு வயிற்றுப்போக்கு உண்டாகி கேசனகுர்ரு என்ற கிராமத்திற்கு மருத்துவத்திற்கு சென்றார். சொஸ்தமாவதற்குள் அந்தக் கிராமத்தின் பண்டிதர் ஒருவரிடம் தர்க்கமும் வேதாந்தமும் பயின்றார். இரண்டு வருடங்கள் கடின உழைப்பில் படிக்க வேண்டிய பாடங்களை இரண்டே மாதங்களில் உள்வாங்கிக்கொண்டார்.

கலுவராயியில் முன்றே மாதத்தில் பானினி (இலக்கணம்) பயின்றார். 1900 வருடம் யுகாதியின் போது மந்தஸாவிற்கு புறப்பட்டார். மந்தஸா ஆந்திர ஒரிய எல்லையில் இருக்கும் ஊர். அவ்வூரின் ராஜா கணபதி ப்ரியர். புதுவருடந்தோரும் நடக்கும் தர்பாரில், அவ்வருடம் கணபதியின் அஷ்டாவதனம் நடந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை காணாத அம்மன்னர் கணபதிக்கு பதவிகள் கொடுத்து அரண்மனையிலேயே போஷிக்க ஆசைப்பட்டார். அந்த ராஜாவின் மைந்தன் கணபதியை தனக்கு சிவ பஞ்சாட்சரம் ஓதுவிக்க வற்புறுத்தினான். “இந்த தீக்ஷைக்கு உனது தந்தையாரின் சம்மதம் மிகவும் முக்கியம்” என்று அவனை அறிவுறுத்தினார்.

ராஜா தங்களது பரம்பரை புரோகிதரை இவ்விஷயமாக அணுகினான். அவர் வைணவர். சிவபஞ்சாட்சரத்தில் அவருக்கு லவலேசம் ஈடுபாடில்லை. “நமது ராஜ குடும்பத்துக்கு அது ஒவ்வாது. அந்த மந்திரமும் புனிதமானது இல்லை” என்று விலக்கினார். சைவ சமய மார்க்கத்தில் அரசகுடும்பம் திரும்பிவிட்டால் தனக்கு தக்க மரியாதை கிடைக்காது என்று புரட்டு பேசினார். மன்னர் அவையைக் கூட்டி சிவபஞ்சாட்சரம் பற்றி விவாதித்தார். அவரால் நிரூபிக்க முடியவில்லை. இப்படியிருக்கையில் ”வாக்பந்தனா” என்ற மந்திரத்தால் கணபதியின் வாயைக் கட்டிவிட முயற்சித்தார். ஆனால் அது கணபதியை நெருங்கவில்லை. ”தூய மனத்துடனும் நற்சிந்தனையுடனும் ஜெபித்தால்தான் பலனிருக்கும்..” என்று கணபதி சிரித்தார். இறுதியில் ராஜகுமாரன் கணபதியின் சீடனானான்.

மந்தேஸா ராஜா கணபதியை நவத்வீப் பண்டித பரிஷத்திற்கு அனுப்பினார். காசிக்கு க்ஷேத்திராடனம் செல்லவிருந்த இருவரிடம் நவத்வீப்க்கிற்கு செல்லும் கணபதியுடன் சென்று அங்கே அவருக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுத்துவிட்டுக் காசிக்குச் செல்ல உத்தரவிட்டார். காசியில் அவருடன் ஸம்ஸ்கிருத விசாரணையில் ஈடுபட்ட சிவகுமார் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தை பத்திரமாக மடியில் சொருகியிருந்தார்.

நவத்வீப்பில்....

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_9‬
‪#‎கணபதி_முனி‬

ஹூய்...ஹூய்...

விடுமுறை நாட்களில் அவர் ரொம்ப பிஸி. வாரநாட்களில் ஐயப்பன் கோயில் காலை ஒன்பது மணிக்கே காற்று வாங்கும். அவரை ஃப்ரீயாக்கிப் பக்தர்கள் வேலைக்குப் பறந்திருப்பார்கள். பெரிய கூட்டமிராது. ரிட்டயர்ட் ஆன தாத்தாக்களும், பையன் மாட்டுப்பெண்ணை ஆஃபிஸுக்கும் பேரன் பேத்திகளை ஸ்கூலுக்கும் கல்லூரிக்கும் அனுப்பிய சில மாமியார்களும் சன்னிதிக்கு சன்னிதி நின்று ஸ்வாமியோடு மனசு விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

பொதுவாகப் பத்தரைக்கு உச்சிகாலம் மணி அடித்துவிடுவார்கள். அன்றைக்கு பத்தரை மணி. ஆஃபிஸுக்கு லேட். உச்சிகாலம் ஆகிக்கொண்டிருக்கிறது. சன்னிதி கதவு சார்த்தியிருந்தார்கள். கண்ணை மூடி “பூதநாத சதானந்த....” மனசுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். இடது பக்கத்திலிருந்து “ஹூய்..ஹூய்..” என்று மூச்சு இழுபட்டு இழுபட்டு ஒரு சிரிப்பொலி. தலையைத் திருப்பினேன். 

ஐயப்பனுக்கு நேரே ஓடு வேய்ந்த உத்தரத்தில் கட்டிய கண்டாமணியின் கயிற்றைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஒரு ஆறடி சிறுவன். கசங்கிய அழுக்கு பனியன். காலரில்லாதது. பனியனை டக்கின் செய்த அரக்கு பேண்ட். பதினெட்டு படிக்குக் கீழே இருக்கும் ஒரு அம்மணியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான். அம்மா போலிருக்கிறது. கவலையில் தோய்ந்த முகம். ”பகவானே காப்பாத்து...” தோரணையில் கையிரண்டையும் நீட்டி வேண்டிக்கொண்டிருந்தார். “உஷ்....” என்று வாயில் கைவைத்து மிரட்டிய கோயில் ஊழியருக்கும் அவனிடமிருந்து ஒரு “ஹூய்.. ஹூய்...” கிளம்பியது.

இன்னும் சன்னிதி திறக்கவில்லை. நானும் அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை ஊடுருவிப் பார்த்தான். உடனே எனக்கும் ஒரு “ஹூய்.. ஹூய்...”. ஸ்நேகமாய் பல்லைக் காட்டினேன். அவனுக்குள் குஷி பீறிட்டது. மீண்டும் உத்வேகமான “ஹூய்...ஹூய்..”. கோயில் ஊழியர் “ஏன்டா?” என்ற உக்கிரமானப் பார்வையை என் மீது வீசினார். நான் மெலிதான புன்னகையோடு ”சத்தம் போடாதே” என்று வாய்மீது விரல் வைத்து சைகை செய்தேன். அவனும் கண்ணாடி போல அதையே எனக்குச் செய்தான்.

திரும்பவும் தலையை இறக்கி பாவமாக அம்மாவைப் பார்த்தான். இம்முறை சப்தம் எழுப்பவில்லை. சன்னதிக் கதவு திறந்தது. சந்தன அலங்காரத்தில் சிரித்தான் ஐயப்பன். மணியின் நாக்கு அறுந்து கீழே விழும்படி அசுரத்தனமாக மணியடித்தான் அந்தப் பையன். விபூதி சந்தனம் வாங்கிக்கொள்ளும் போது நெருங்கி வந்து ஈஷிக்கொண்டான். செல்லமாக இடித்தான். ஒரு ”ஹூய்..ஹூய்..”. வாய் சிரித்தாலும் மனசு பாரமாக இருந்தது. பள்ளிக்குச் சென்றால் பத்தாவதில் இருப்பான்.

என் கூடவே ஒட்டிக்கொண்டு படியிறங்கினான். மஹிஷாசுரமர்த்தினியிடம் குங்குமம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். அம்மாவின் கைக்குள் கையை விட்டு ’L’ பெண்டாக்கி மடக்கியிருந்தான். குழந்தைத்தனமான சிரிப்பு. அந்த தாய்க்குதான் எவ்வளவு வலி. விதியென்று நினைத்து லேசில் விடமுடியுமா? கண்ணெதிரே அக்கம்பக்கம் சிட்டாய் பறக்கும் சிறுவர்களைப் பார்க்கும் போது எப்படியிருக்கும்?

“குடும்மா.... “ அம்மா கையிலிருந்து பொங்கல் பிரசாதத்தை பிடிங்கி வாயில் அடைத்துக்கொண்டான். வீதியில் கைகோர்த்து நடந்து போனார்கள். போன வாரத்தில் பார்த்தது. ஆறடியில் கச்சலான பசங்களை எங்கு பார்த்தாலும் அவன் நினைப்பு முட்டிக்கொண்டு வருகிறது. ஒரு நொடி மௌனமும் சோகமும் கூடவே கசிகிறது. ஐயப்பா காப்பாத்து!

கணபதி முனி - பாகம் 8 : நாஸிக் தபசு

....ஜடாமுடியுடன் ஒரு வயதான யாத்ரீகர் சொப்பனத்தில் நின்றார். ”கணபதி. இன்னும் ஏன் இங்கு நேரத்தை விரயம் செய்கிறாய்? ஸுகேது உன்னிடம் பேசியதை என்னிடமும் சொன்னார். நாஸிக்தான் பிரம்மகிரியின் நுழைவாயில். அங்கிருந்து திரியம்பகம் சென்று தவமியற்று” என்று ஆக்ஞையிட்டார்.

கனவு கலைந்தது. சட்டென்று தூக்கம் விடுபட்டது. கண் விழித்தார். அது பிரம்ம முஹூர்த்தம் முடிந்து அதிகாலைப் பொழுது. காசி விழித்திருந்தது. பவானி சங்கரத்திடம் யாத்ரீகர் சொப்பனத்தைப் பற்றிக்கூறினார். ”இது தெய்வசங்கல்பம். ஆண்டவன் கட்டளை. அப்படியே செய் கணபதி....” என்று ஆசீர்வதித்தார். தந்தை சொல் கேட்காமல் எதுவும் செய்ததில்லை கணபதி. நாஸிக் செல்ல ஒப்புதல் அளித்து நரசிம்ம சாஸ்திரியும் கணபதிக்கு எழுதியிருந்தார். பவானி சங்கரத்திடம் விடைபெற்றுக் காசியிலிருந்து மேற்கே நாஸிக்கிற்கு பயணப்பட்டார்.

நாஸிக்கை இன்னும் சிறிது அவகாசத்தில் அடைந்துவிடலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக தலைகள் தெரிந்தன. கும்பலாக நிற்கிறார்கள். ஏதோ விவகாரம் போலிருக்கிறது.

தசக்கிரீன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த இடம் நாஸிக். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை லக்ஷ்மணனின் கோபத்துக்கு ஆளான இடம் என்று நாஸிக்வாசிகள் சொல்வார்கள். நாஸிக்கின் விளிம்பில் இளையபெருமாள் லக்ஷ்மணன் கோயில் ஒன்றும் இதற்கு அடையாளமாக இருக்கிறது.

கணபதி நாஸிக்கை அடையும் போது நகரத்துக்குள் அன்னியர்கள் பிரவேசிக்க தடை விதித்திருந்தார்கள். நகரமெங்கும் பெரியம்மை தலைவிரித்தாடியது. நோயின் உக்கிரம் கருதியும் மேலும் பரவுவதைத் தடுக்கும் பொருட்டும் சுகாதரத்துறையினர் வெளியூர்க்காரர்களை நகர எல்லையில் தடுத்தார்கள். பெரிய அரசமரத்தின் கீழிருந்த கிராமக் கோயிலில் பகற்பொழுதைக் கழித்தார்.

இரவு வந்தது. நிர்மலமான வானத்தில் நட்சத்திரங்கள் ரத்தினங்களாக இறைந்திருந்தன. மினுமினுப்பு காண்போரைச் சொக்கியது. நடுவில் பால் நிலா பொழிந்தது. இதமான குளிர். இதில் கணபதியின் உள்ளம் குதூகலமடைந்தது. உற்சாகத்தில் காளிதாசனின் ரகுவம்சக் காவியத்திலிருந்து சில ஸ்லோகங்களைப் பிரவாகமாகப் பாடினார். பக்கத்தில் காவலிருந்த ஒரு சுகாதாரத்துறை அதிகாரி.. “ஆஹா... அற்புதமாகப் பாடுகிறாய். இந்த ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அர்த்தம் சொல்வாயா?” என்று ரசிகனாய்ப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார்.

சக்கரவர்த்தி ரகுவின் புத்திரன் அஜன் ஒரு ஸ்வயம்வரத்தில் பங்கு கொள்ள குதிரையில் பறந்து கொண்டிருந்தான். ஸ்வயம்வர நகரம் நெடுந்தொலைவு இருந்ததால் தனது பரிவாரங்களுடன் அன்றிரவு ஒரு மலையடிவாரத்தில் கூடாரமடித்துத் தங்கினான். பொழுது புலர்வதற்கு முன்னர் அஜனைத் துயிலெழுப்ப இந்த ஸ்லோகத்தை அவரது ஆஸ்தான பாடகர்கள் பூபாளமாகப் பாடினார்கள்.

“ராஜன்னு.. நீங்கள் துயிலும் போது லக்ஷ்மி சந்திரனோடு ஸ்நேகமாயிருந்தாள். நீங்கள் நித்திரை கலைந்து எழுந்ததால் உங்கள் முகத்தாமரையோடு போட்டி போட முடியாத சந்திரன் அஸ்தமிக்கிறான்.”

மன்னனின் முகமும் சந்திரனும் தாமரையாகப் பாடப்படுகிறது. லக்ஷ்மி பத்மாசினி.
சுகாதார அதிகாரிக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. கணபதியை நெருங்கி....

“இந்தப் பாட்டில் ஏதோ பிழை இருக்கிறது போலிருக்கிறதே... ” என்றார்.

“என்ன பிழை?”

“அஜ ராஜா சந்திரனோடு இரவைக் கழித்த லக்ஷ்மியை பகலில் தான் ஏற்றுக்கொண்டார் என்று பாடுவது கலாசாரமாகத் தெரியவில்லையே...நெருடுகிறதே....” என்று இழுத்தார்.

கணபதி வெடித்துச் சிரித்தார். விவரம் கேட்டவருக்கு சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. “தயை கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியுமா?”. கற்கும் ஆர்வம் கண்களில் பொங்கியது.

”லக்ஷ்மியோடு சந்திரனும் பாற்கடலில் பிறந்ததால் சகோதரன் ஆகிறான். ஆகையால் இது தவறாகாது..” பளிச்சென்று சூட்டிகையான விளக்கமளித்தார் கணபதி.

கணபதியின் இந்தப் பதில் சுகாதார அதிகாரிக்கு ரொம்பவும் திருப்தியளித்தது. தனது வாக்சாதூர்யத்தால் மறுநாள் அங்கிருந்து சிறப்பு அனுமதியில் நாஸிக்கிற்குள் நுழைந்தார்.

நாஸிக்கில் கச்சாமுச்சாவென்று இரைச்சல். சந்தைகள். கடை வீதிகள். ஜனநெருக்கடி. தவமியற்றயிலாத சூழ்நிலை நிலவியது. விடுவிடுவென்று பதினெட்டு மைல்கள் நடந்து த்ரயம்பக க்ஷேத்திரத்திற்குள் நுழைந்தார். அங்கு மஹாதேவரைத் தொழுதார். கதிரவன் மறையும் பின் மாலை பொழுதில் குசவர்த்தாவை அடைந்தார். அங்கிருந்து பிரம்மகிரிக்கு பொடிநடை தூரம்தான். பிரம்மகிரியில்தான் கோதாவரி நதி பிறக்கிறாள். ப்ரம்மகிரியை ப்ரம்மராந்த்ரா என்பார்கள். அதாவது தெய்வீக சக்திகளை உச்சி சிரசில் உள்வாங்கி உடம்புக்குள் செலுத்தும் இடம். குசவர்த்தாவை சக்தியின் பீடமாக சிரசிலிருக்கும் ஆயிரம் இதழுள்ள தாமரை. த்ரயம்பகாதான் ஹிருதயம். அங்கேதான் சிவன் சிம்மாசனமிட்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

குசவர்த்தாவில் ஒரு ஏழை அந்தணர் வீட்டில் அன்றிரவு ஓய்வெடுத்தார். மறுநாள் காலையில் ஒரு டாக்டரிடம் அந்த அந்தணர் அழைத்துச்சென்றார். அவர் தனவந்தர். ஸம்ஸ்கிருதம் பயில்வதில் ஆர்வமும் துடிப்பும் உள்ளவர். விருந்தினரை ”அதிதி தேவோ பவ:” என்று உபசரிப்பவர். அவரின் ஒத்தாசையோடு நீலாம்பிகா கோயிலில் ஒரு தனியிடத்தை தவத்துக்குத் தேர்ந்தெடுத்தார். பதினான்கு நாட்கள் இடைவிடாமல் தொடர் தவம் புரிந்தார். டாக்டர் தனது நண்பர்களிடம் கணபதியின் ஸம்ஸ்கிருத இலக்கிய ஆளுமையை பிரஸ்தாபித்தார். அன்றிலிருந்து தினமும் இரவு டாக்டர் தனது நண்பர்களுடன் நீலாம்பிகா கோயில் மண்டபத்தில் கணபதியின் இலக்கிய சொற்பொழிவுகளை ரசித்தார்கள்.

அப்போது நாஸிக்கிலிருந்து பிரவசனம் கேட்க வந்த ராம் பாவு என்ற நண்பர் “நீங்கள் இன்று அஷ்டாவதனம் செய்ய வேண்டுகிறேன்..” என்று கை கூப்பினார். மஹாவிரதத்தோடு தவமியிற்றிக் கொண்டிருந்ததால் போதிய தேகபலம் இல்லாதிருந்தார். ஆனாலும் ஆர்வலர்களுக்காக அதைச் செய்தார். ராம் பாவு அதிசயத்தில் ஆழ்ந்தார். கணபதியை நாஸிக்கிற்கு வரும்படி நச்சரித்தார். ”நான் அங்கே உங்களது தவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்” என்று உறுதியளித்தார்.

நாஸிக்கில் அனுதினமும் ராம் பாவு கணபதியுடன் இலக்கியவிசாரத்தில் ஈடுபட்டாரே தவிர தவமியற்ற ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. அதிருப்தியடைந்த கணபதி நகரெங்கும் சுற்றித் திரிந்து ஒரு தனியிடம் தேடினார். அப்போது லக்ஷ்மணன் கோயில் கண்ணுக்கு அகப்பட்டது. கோயில் மண்டபத்தில் காலெடுத்து வைத்ததும் கதவு மறைவிலிருந்து மின்னலென முன்னால் வந்த அர்ச்சகர் “வாடா... திருட்டுப் பயலே... அகப்பட்டாயா...” என்று திட்டி கையைப் பிடித்துத் தரதரவென்று கோயிலுக்கு வெளியே இழுத்துப்போனார். “நானா திருடன்? ஏனிப்படி.. “ என்று கணபதி சொல்லவந்ததையும் அவர் காதுகொடுத்துக் கேட்கவில்லை. “உன்னை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு போய் நிறுத்துகிறேன் பார்.. உன்னை ஜெயிலில் போடுவார்கள்.... அப்போதுதான் புத்தி வரும்...” என்று குதியாய்க் குதித்தார்.

அப்போது அக்கோயிலைக் கடந்த ராம் பாவுவின் ஸ்நேகிதர் கூச்சலைக் கேட்டுக் கோயிலுக்குள் எட்டிப் பார்த்தார். கணபதியைப் பிடித்து வைத்திருந்த அர்ச்சகரைப் பார்த்தார். கணபதியின் அசௌகரியமான முகத்தைப் பார்த்தார். அவர் கணபதியின் ப்ரவசனங்களை கேட்டு இன்புற்றவர். “நிறுத்துங்கள்.. இவரைப் பிடித்துத் தள்ளாதீர்கள்...” என்று லக்ஷ்மணன் கோயில் அர்ச்சகரைப் பாய்ந்து தடுத்தார். அர்ச்சகர் கோபமாக முறைத்தார். முகம் சிவந்தது. “எதற்காக இவரைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று ராம் பாவுவின் நண்பர் கேட்டார். ”ராம லெக்ஷ்மண சீதாவுக்கும் ஆஞ்சநேயருக்கும் ஆபரணங்களை எடுத்து வந்தேன். இங்கே மண்டபத்தில் வைத்துவிட்டு பிரகாரக் கிணற்றில் ஜலம் எடுக்க சென்றேன். அப்போது சில ஆபரணங்களை யாரோ திருடிவிட்டார்கள். மிச்சமிருப்பவைகளை திருட வருவான் என்று நினைத்தேன். அதே போல் வந்தான். பிடித்துவிட்டேன்” என்றார்.

“இல்லை.. இவர் ஸம்ஸ்கிருத பண்டிட். தவமியிற்றும் உத்தமர்.. அருட்கலைகள் வாய்க்கப் பெற்றவர்..”

“திருடனுக்கு வக்காலத்து வாங்குகிறீரா? உம்மையும் மாஜிஸ்ட்ரேட்டிடம் பிடித்து ஒப்படைக்க வேண்டியதுதான்...” என்று அவரையும் திட்டினார்.

அதுவரை பொறுமையாக நின்ற கணபதி முனிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே முகம் சிவக்க ”இந்த நாஸிக் நகரமே அழியட்டும்...” என்று கோபாக்னியில் ஒரு ஸ்லோகம் சொன்னார்.

அந்த ஸ்லோகத்திலிருந்த மொழியும் அதை ஜபித்த தோரணையும் அர்ச்சகரை கிடுகிடுக்க வைத்தது. ”திருடன் என்று தவறாக எண்ணிவிட்டோமே” என்று மனம் வருந்தினார். ஆனால் சாபமிட்டது இட்டதுதான். கணபதியும் வருந்தினார். ஒருவர் செய்த தவற்றுக்கு ஊரைச் சபித்துவிட்டோமே என்று நொந்துகொண்டார். இச்சாபத்திலிருந்து நாஸிக் நகர மக்களைக் காக்க வேண்டி கடவுளிடம் வேண்டினார். மீண்டும் ராம் பாவு வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் தவத்துக்குத் தனியிடம் தேடினார்.

ஒரு பாழடைந்த கோயில் தென்பட்டது. நவசூட்டி என்று பெயர். அங்கு தவமியற்ற ஆரம்பித்தார். லக்ஷ்மணன் கோயிலில் நடந்த துர்சம்பவத்திற்கு தானே காரணம் என்று ராம் பாவு மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த பாழடைந்த கோயிலில் கணபதி தொடர்ந்து எழுபது நாட்கள் தவமியற்றினார். நித்யமும் ஒரு தம்ப்ளர் பால் மட்டும் அருந்தினார். ராம் பாவு தான் செய்த தவற்றுக்கு பரிகாரமாக தினமும் நவசூட்டி கோயிலுக்கு கணபதிக்காகப் பால் கொண்டு செல்வார். எழுபதாவது நாள் சிவபெருமான் கணபதியின் கனவில் தோன்றி “நீ திரும்பி ஊருக்குச் செல்..” என்று கட்டளையிட்டார். மறுநாள் காலையில் ஜபதபங்களை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப ஆயத்தமான கணபதியிடம் ராம் பாவு “நாஸிக்கில் பெரியம்மை நிறைய பேரை தீர்த்துவிட்டது. உங்களைத் திட்டிய அர்ச்சகரின் குடும்பமும் பூண்டோடு அழிந்தது. பெரும்புயல் வீசியது. மரங்களை வேரோடு பிடிங்கி கட்டிடங்களில் சாய்த்து பலர் மாண்டனர். ஊரில் இரண்டு கோயில் கூட இடிந்துவிழுந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நாஸிக்கிற்கு வெளியே பொட்டு காற்று மழை இல்லை.”

கனத்த இதயத்துடன் கணபதி அங்கிருந்து விடைபெற்றார். செகந்திராபாத்தில் இறங்கி தந்தை நரசிம்ம சாஸ்திரியைச் சந்தித்து நமஸ்கரித்தார். ”வீட்டிற்கு போகலாம்ப்பா...” என்றார் நரசிம்ம சாஸ்திரி.

“பத்ராசலம் ராமரை தரிசித்துவிட்டு வருகிறேன்...”

“குடும்பத்தை கொஞ்சம் நினைத்துப்பாரப்பா.. நீ இப்போது கிரஹஸ்தன்.. தபஸிற்குச் சென்று ஆறு மாதங்கள் ஆகின்றன... ” என்று சுனங்கினார்.

சரியென்று அவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டு தந்தையுடனேயே கலுவராயிக்கு சென்றார். வீட்டில் தன்னுடைய காசி நாஸிக் த்ரியம்பக தபோ அனுபவங்களைத் தந்தையிடம் பகிர்ந்துகொண்டார். பவானி சங்கரத்தின் காசி அகத்தில் சந்திந்த துர்க்காமந்திர் யோகி தபால்பெட்டியில் சேர்த்தக் கடிதத்தை கையில் எடுத்தார் நரசிம்ம சாஸ்திரி.

“யாரப்பா உனது படத்தை இந்தக் கடிதத்தில் அழகாக வரைந்தது?” என்ற தந்தையின் கேள்விக்கு கண்பதியின் கண்கள் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. கடிதத்தின் மேல் பாதியில் கணபதியின் படம் மிக அழகாக வரையப்பட்டிருந்தது. இதைக் கண்டவுடன் விர்ர்ர்ர்ர்ரென்று ஒருவித மின்சாரம் அவர் சரீரத்தில் பாய்ந்தது போல உணர்ந்தார். இது எப்படி? மூடிய உறையைப் பிரித்து அந்த கடிதத்தில் யோகி படம் வரைந்திருக்கலாம். பரவாயில்லை. ஆனால்.. ஆனால்.. இது எப்படி?

இது எப்படி சாத்தியமாகும்? மேனி அதிர்ந்தது. ஒரு பரவச நிலையில் இருந்தார்.. இது கடவுளின் திருவிளையாடலோ?... மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தார்... இது எப்படி சாத்தியமாகும்.. நரசிம்ம சாஸ்திரி “என்னப்பா?” என்று வினோதமாகப் பார்த்தார்... கணபதிக்கு மீண்டும் காசி க்ஷேத்திரத்தில் நடந்தவைகள் காட்சிகளாக மனக்கண்ணில் ஓடின... இது எப்படி?.. இதே கேள்வி மூச்சு விடும் போதும் இழுக்கும் போதும் தோன்றித் தோன்றி மறைந்தது....

கணபதி முனியையே ஆச்சரியத்தில் தலைசுற்ற வைத்த அது என்ன?... ஒன்பதாம் அத்தியாயத்தில்...

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_8‬
‪#‎கணபதி_முனி‬

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails