Monday, February 8, 2010

பெங்களூரு பாட்டுக்காரன்

சமீபத்தில் அலுவல் காரணமாக பெங்களூரு சென்றிருந்தேன். மிக அற்புதமான சீதோஷ்ணம். நான்கு நாட்கள் சேர்ந்தார்ப்போல் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் களைப்படையாமல் வேலை செய்யலாம். என்ன இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பிறழாமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தோம். நல்ல போக்குவரத்து நெரிசல். உங்கள் இஷ்ட தெய்வமே எதிர் பக்கம் நின்றாலும் இரண்டு தெரு கிழக்கிலும் மேற்கிலும் சென்று வடக்கிருந்து எதிர்சாரிக்கு செல்லலாம். அவ்வளவு ஒரு வழிப்பாதைகள். 'வாழ்கையே ஒரு ஒருவழிப்பாதை' என்று எங்கோ எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது.

இன்பான்ட்ரி ரோடு சிக்னலில் காத்திருந்தோம். திடீரென்று நில அதிர்ச்சி வந்தது போல் எங்கள் வண்டி குலுங்க ஆரம்பித்தது. வெளியே 'டம் டம்' என்று ஒரு சப்தம். ஜீப்பின் கதவில் கை வைத்தால் நமது உடம்பு லேசாக நடுங்கியது. வெளியே எட்டி பார்த்தேன். ஒரு வெளிநாட்டு உயர்ரக காரின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து விட்டு, மார்கழி மாதம் மாரியம்மன் கோயிலில் கூம்பு
ஸ்பீக்கர் கட்டிய மாதிரி சப்தத்துடன் இசை பொழிந்து கொண்டிருந்தது. பாட்டு தனக்கு இல்லை என்பது போலவும், ஓமன் போன்ற படங்களில் பேய் படங்களில் சைத்தான் ஏறியவன் வெறித்து பார்ப்பது போல் ரோட்டை பார்த்த விழி பார்த்தபடி ஒரு யுவன் இருந்தான். கைகள் மட்டும் ஸ்டியரிங்-ல் தாளமிட்டபடி இருந்தது. அவன் ஒரு தேகப்பயிற்சியாளன் என்பதற்கான அடையாளங்களை கால் பாகம் கை வைத்த நீல கலர் டிஷர்ட் காட்டியது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல சிக்னல் விட்டவுடன் பறந்து போனான். நீண்ட நேரம் என் காதிற்குள் "டம் டம்" கேட்ட வண்ணம் இருந்தது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails