Saturday, February 27, 2010

ராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்

ஒன்று
-------
அந்தப் பெண் ஆறாவது மாடிவரை வாசனையுடன் வந்தாள்.
காதோரத்தில் பாட்டரி இணைத்தாற்போல் மின் அதிர்வு ஏற்ப்பட்டது.
                    -ஆதலினால் காதல் செய்வீர்
இரண்டு
--------
"தடக் தடக்" என்று பாசஞ்சர் ரயில் வரும் சப்தம் தண்டவாளங்களில் கேட்க... நான் ஒரு நிமிஷ தயக்கத்தில் அங்கேயே இருப்பதா அல்லது பாலக்கரைக்கு போய்விடுவதா என்று தீர்மானிக்க இயலாமல் தண்டவாளங்களின் இடையில் நடக்க ஆரம்பித்தேன்...

இருப்பதா - நடப்பதா
இருப்பதா - நடப்பதா

மழை மேகம் போல் புகை கக்கிக் கொண்டு வந்த ரயில் என்மேல் செல்லும் போது எனக்கு பதிலாக அது அலறியது

'ஆ...!"
                    -ஆ
மூன்று
------
அந்தப் பெண் உடம்பில் சில்க் வழிந்தது. எடுப்பான மார்பு சற்று ஓவர் சைஸ் ஆக இருந்தது. உண்மையா உபயமா என்று வசந்த் யோசித்து பார்த்தான்.  தொட்டுப் பார்த்தால்தான் தெரியும் என்று தீர்மானித்தான்.

அவள் மிகவும் இளமையான பெண். பத்தொன்பதுக்கு அப்பால் இருக்காது என்று சொல்லலாம். பதினாறு என்று சொன்னாலும் நம்பலாம். மெல்லிய உதடுகள். மெலிதாக்கப்பட்ட புருவங்கள். மிகையில்லாமல் மேக்கப் செய்துகொள்வது எப்படி என்று புத்தகமே எழுதக்கூடியவள் போல் இருந்தாள்.

வாழ்க்கையில் என் முன்னேற்றத்தில் ஒரே ஒரு படிப்பினை, நீதி: "பணக்காரியை கல்யாணம் செய்".
                    -நில்லுங்கள் ராஜாவே
நான்கு
------
உடல் எத்தகைய கலைப்  பொருள்.  அதன் இயக்கத்தில், மென்மையில் , வளைவுகளில், உயிரில் எத்தனை அழகு  இருக்கிறது.  செதுக்கப்படாத பளிங்குபோல அந்த உடலை ஒரு மைக்கேல் அஞ்சலோவின் ஆர்வத்துடந்தான் பார்த்தான். எந்த நூற்றாண்டிர்க்கும் செல்லுபடியாகும் காட்சி அது. ஒரு மரம், ஒரு நிழல், ஒரு பொய்கை, ஒரு பெண்ணின் உடல்.
                    -கொலையுதிர் காலம்
ஐந்து
-----
பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்பவர்களுக்கு சில குறிப்புகள்.

1. அதிகாலையில் செல்லுங்கள்.

2. தடிமனான புத்தகத்தை எடுத்து சென்றால் படித்து முடித்து விடலாம்

3. நடுவில், "நீங்கள் ரெங்கநாதனா?" என்று ஒரு தலை களைந்த இளைஞர் வந்து கேட்பார். "இல்லைப்பா நான் அப்துல் காதர்" என்றால் "உங்களைதான் இட்டாரச் சொன்னார் ஏபிஒ" என்று அழைத்தால் அவர் நிச்சயம் பிற்பாடு நூறு ரூ கேட்பார் என்று அர்த்தம்.
            -அறுபது அமெரிக்க நாட்கள்

மேலே இருக்கும் ஐந்தும் 'வாத்தியாரின்' சில இலக்கியங்கள். இன்னும் எவ்வளவோ. இன்று அவருடைய நினைவுதினம். மிகவும் தாமதமாகத்தான் சுஜாதாவின் படைப்புக்களை படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் அது ஒரு கோகைன் போன்றது. தாளில் எழுதியது எப்படி இவ்வளவு போதையாக இருக்கிறது என்பது சொல்லவொண்ணா அதிசயம்.

எல்லோரும் கதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் மட்டும் தான் பேப்பரில் கதை சொல்லாது 'காட்சியை' பார்க்க வைத்தவர். எண்ணற்ற புதிய முறைகளையும் வார்த்தைகளையும் எழுத்தில் வடித்தார். கிரிக்கெட் சூதாட்டம் சூடு பிடிக்காததர்க்கு முன்னமே அவர் எழுதிய 'கருப்பு குதிரை' என்ற சிறுகதை கிரிக்கெட் பெட்டிங்கை மையமாக கொண்டது. "ஆ" நாவலில் Auditory Hallucination ஐ கருவாக் கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்தையும் "ஆ" என்று முடித்தார். அவ்வாறு முடித்த ஒரு அத்தியாயம் தான் மேலே நீங்கள் படித்தது.

லிப்டில் ஒரு பெண் அந்த கதையின் ஹீரோவுடன் சென்றதை விளக்குவது அந்த 'ஒன்று' என்ற ஐட்டம். நில்லுங்கள் ராஜாவேயில் ஒரு மர்மமான பெண்ணை வர்ணிக்கும்போது எழுதியது  லிஸ்டில் உள்ள "மூன்று". ஒரு ஓவியன் பார்ப்பது போன்ற பார்வை என்று சொல்லி வார்த்தைகளை வடிவமாக்கி எழுதியது "கொலையுதிர் காலம்" என்ற நாவலில். அமெரிக்கா செல்வது பற்றி முதலில் தமிழன் எக்ஸ்பிரஸ்ஸில் தொடராக எழுதியது பட்டியலில் உள்ள "ஐந்து". விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பில் உள்ள தர்மு மாமா என்ற கதையில் எமதர்மராஜனை செல்லமாக தர்மு மாமாவாக்கினார் . பதிமூன்றாம் நம்பர் கதையில், பதிமூனாவது கதை சொன்னால் யார் தலை வெடிக்கும், சொல்பவனுக்கா, கேட்பவனுக்கா என்று கடைசி வரை சுவாரஸ்யமாக சுஜாத்தாதனமாக சொன்னார்.

சுஜாதாவைப் பற்றி எழுதும் போது நாம் என்ன எழுதுவது என்று யோசித்து அந்த எழுத்தாளனுக்கு மரியாதை செய்ய வேண்டுமானால் நாம் எழுதாமல் அவர் எழுதியதை எழுதிப் பார்க்கலாம் என்றதால்தான் இப்படி ஒரு பதிவு.

5 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஆர்விஎஸ்

இதுதான் நாம் எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை - அவரின் எழுத்துகளில் நமக்குப் பிடித்ததை அப்படியே எழுதுவது நன்று

நல்வாழ்த்துகள் ஆர்விஎஸ்
நட்புடன் சீனா

பத்மநாபன் said...

எவ்வளவு தாமதமாக பார்த்தாலும்...பார்த்தவுடன் பாராட்ட தோன்றியது.
ஐந்தும் அருமை... அற்புதமாக எடுத்து வைத்துள்ளீர்கள்.

வாத்தியார் வாத்தியார் தான்

RVS said...

அவர் இருந்த இடம் இப்போது வெற்றிடம். அல்பாயிசுல போயிட்டாரு..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

cheena (சீனா) said...

அன்பின் ஆர் வி எஸ் - எனக்குப் பிடித்த எழுத்து கீழே

ஜ்யோவின் உடல் 5.4 ---
5.4 என்பது ஒரு எண்.
என்னெதிரே நின்றது 5.4 பெண்.
அவள் உடுத்தி இருந்தது என்னைப் படுத்தியது.
உடுத்தாமல் இருந்தது என்னை அவளருகில் போய் தொட்டுப்பார்த்து
நிஜமானவள் என்று தெரிந்ததும் மறுபடி மறுபடி தெரிந்து கொள்ளத் தூண்டியது.
அவள் ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.
இடையில் பெல்ட் அணிந்திருந்தாள்.
அந்தப் பெல்ட்டின் கொக்கி - ஆள்காட்டி விரல்களைக் கோர்த்துக்
கொள்ளவும் - அது போல் இருந்தது.
மார்பில் அவள் அணிந்திருந்த சட்டை - அது பம்பாயில் தைக்கப்படும்
போதே தபஸ் பன்ணி இருக்க வேண்டும்.
அந்தச் சட்டையின் பித்தான்கள் எனக்காகக் காத்திருந்ததன.
அவள் இளமை எவ்வளவோ சாதனங்களைத் தேவை இல்லாததாகச்
செய்திருந்தது.
அவள் செய்திருந்த அலங்காரத்தின் அரைகுறை அவள் தன்னம்பிக்கையையும் ஆணவத்தையும் காட்டியது.
இந்த நிலைக்கு வர, இங்கிலீஷ் படிப்பு, சினிமா, குடும்பத்தில் வளர்ந்த சூழ்நிலை, தரப்பட்ட சுதந்திரங்கள், சோதித்துப் பார்த்த ஆசைகள்....
எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்.

நல்வாழ்த்துகள் ஆர் வி எஸ் - நட்புடன் சீனா

RVS said...

நன்றி சீனா சார்! அற்புதம்.. தேவாமிர்தம்.. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails