Wednesday, February 10, 2010

கேமரா 'மேன்'

 வைட்டமின் டி (vitamin D) என்ற நிறுவனம் இந்த மாதம் ஒரு புதிய வலைக்காமரா மென்பொருள் ஒன்றை தயாரித்துள்ளது. இனிமேல் உள்ளே சென்றது ஆடா, மாடா, புலியா, பூனையா அல்லது டி.கல்லுப்பட்டி கணேசனா என்று இவர்கள் தயாரித்துள்ள கேமரா மூலம் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். பல மாடி கட்டிட கடைகளில் மூலைக்கு மூலை சுவற்றில் பல்லி போல ஓட்ட வைத்து தொந்தி பெருத்த முதலாளி கல்லாவில் உட்கார்ந்து பார்த்த வண்ணம் இருப்பார், ஏதோ இந்தியா பாகிஸ்தான் மாட்ச் போல.இந்த புதுவரவின் பயன்பாடு இது போன்ற காரணங்களுக்கு அவசியம் இல்லை என்றாலும், சில முக்கியமான, விசேஷ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை திருப்திபடுத்தும்.

இந்த வலைகேமரா முதலில் இணையத்தில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்டது. ஒரு காலத்தில் காமெரா என்பதே கல்யாணம், சீமந்தம், ஆயுட்ஷேமேம், காது குத்து, குச்சி கட்டும் ருது சாந்தி போன்றவற்றிக்கு அசோக் போட்டோ ஸ்டுடியோ குமார் வந்து, கும்பலாக எல்லோரையும் நிறுத்தி, பல் எடுப்பாக இருப்பவர்கள் குறைவாக மோனலிசா புன்னகை புரிவதை புரிந்து கொள்ளாமல், "நல்லா சிரிங்க" என்று படுத்தி, "ரெடி .. ஸ்மைல் ப்ளீஸ்" சொல்லி, கோயில் சிலை போல கொஞ்ச நேரம் நிறுத்தி, "ஓகே" என்று எடுத்து கொடுப்பதற்காக இருந்தது. ஒரு பொறியில் படிப்பு காலவரம்பிற்கு உட்பட்ட நேரத்தில் இந்த கேமரா தொழில்நுட்பம், கைபேசி, மடிக்கணினி, டிஜிட்டல் கேமரா, ஹாண்டி கேமரா என்று சகலரும் சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம் கணக்காக 'கிளிக்' பண்ணுவதற்கு எதுவாக முதிர்ச்சி அடைந்தது.

நாளடைவில் இந்த தொழில்நுட்பம்,  நாம் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது வீட்டின் மீது ஒரு கண் வைப்பதற்கும், ஓட்டலில் சமையல்காரர் சங்கர ஐயர் முந்திரி, பாதாம் எடுத்து வாயில் போடுகிறாரா என்பதற்கும், நம்ம வீட்டு ப்ருனோ சுற்றி சுற்றி காவல் காக்கிறதா என்பதை நாம் கண்காணிப்பதற்கும், என்பது வயது என்.டி.திவாரியின் 'சரஸ லீலா'வை படம் பிடிக்கவும், பங்காரு லக்ஷ்மன் 'அன்பளிப்பு' வாங்குவதை தெஹெல்கா சுருட்டவும், கல்லூரி மாணவிகளை வைத்து சக மாணவர்கள் கொக்கோகம் சினிமா உருவாக்கவும், தேவனாதன்கள் கோயிலில் குவளையர்களை குலாவுவதை தனக்கு தானே எடுத்துக்கொள்ளவும் உபயோகப்படுவதாகிவிட்டது. நண்பரின் ஐந்து வயது மகள் அவருடைய நோக்கியா மூலம் தனக்கு தானே படமெடுத்து மகிழ்கிறது. பாம்பைத் தவிர எல்லோரும் இப்போது டிஜிட்டலில் படம் எடுக்கிறோம். கூகிள் சாட்டிலைட் மூலமாக நாசாவிலுருந்து நரசிங்கம்பேட்டை வரை உலகத்தையே படம் எடுத்து வைத்திருக்கிறது.

தற்சமயம் எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வாசலில் இருந்து கொல்லை வரை, கழிப்பறைகள் நீங்கலாக இந்த காமேராக்கள் மூலமாக தங்கள் ஊழியர்கள் மேல் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். அறையில் உட்கார்ந்தபடியே மேலாளர் சீனிவாசன் தமிழ்ச்செல்வி யாரை பார்த்து சிரிக்கிறாள், ரேகா எவ்வளவு நேரம் அலைபேசியில் கதைக்கிறாள், கோபாலன் சீட் எவ்வளவு நேரம் அவன் இல்லாமல் வெறுமையாக இருக்கிறது போன்ற இன்றியமையாத சமாச்சாரங்களை மிக எளிதாக அவர் வேறு வேலையே செய்யாமல் அறியமுடிகிறது. என்றாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அன்று இந்த வலைகாமேராக்கள் மூலம் கணினியில் பதிவு செய்ததை புலனாய்வு அதிகாரிகளுடன் அமர்ந்து ப்ரிவ்யூ தியேட்டரில் படம் பார்ப்பது போல எல்லா அசைவுகளையும் பார்த்து கள்வனை கண்டு பிடிப்பார்கள். அதற்க்கு வசதியாக இப்போது இவர்கள் தயாரித்துள்ள வலைகாமேரா மனிதர்களை மட்டும் தனியாக அடையாளம் கண்டு கொள்ளும் நுட்பத்தை பொதிந்திருக்கிரார்கள். இதனால் கணினியில் கள்வனை தேடும் பணி இலகுவாகிறது. 2007 ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 'செயற்கை நுண்ணறிவு' திறன் கொண்ட மென்பொருள் ஒன்றை தயாரித்து வெளியிட்டுயிருக்கிறது.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறைகள் தவிர, இந்த மென்பொருள் மூலம் பயனடையும் மற்றுமொரு பெரிய துறை கேளிக்கை. தற்போதைய யூட்யூப் போன்ற காட்சி தேடல் இணையங்களில் உதவி வார்த்தைகள் மூலமாக குறுப்பிட்ட நிகழ்படம் கிடைக்கிறது. இந்த புதிய மென்பொருள் மூலம் கமலஹாசனின் எந்த நிகழ்படத்தையும் வார்த்தைகள் இன்றி தேடி கண்டு மகிழலாம். மாரி, கபாலி, கண்ணாயிரம் போன்றோரின் மாதிரிகளை கணினியில் உள்ளிட்டு அவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்தலாம் அல்லது அலாரம் அடிக்கவைத்து காவலர்களை அழைக்கலாம். இது போன்று பல பயன்பாடுகளின் துவக்கம் இந்த அறிய முயற்சி.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails