Sunday, April 18, 2010

4056830968

முன்குறிப்பு: இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்த நாளில் நான் எழுதிய ஒரு சிறுகதை. நிறைய பேர் வந்து போகாத காலத்தில் எழுதியதால் இந்த மீள்பதிவு.


"4056830968" என்ன நம்பர் இது. காலையில் இருந்து நூற்றி தொண்ணூற்று ஒன்றாவது முறையாக என்னுடைய இடது, வலது மூளைகளை கசக்கி பிழிந்து பயன்படுத்தி பார்க்கிறேன். கொஞ்சமும் விளங்கவில்லை. துண்டுச் சீட்டில் வரைந்து என்னிடம் விசிறிவிட்டு சென்றுவிட்டாள்.  சுடோகுக்குக்  கூட இவ்வளவு நான் பிரயத்தனப்பட்டதில்லை. இது மொபைல் நம்பரும் இல்லை. "மஞ்சள் பக்கங்களை" புரட்டி புரட்டிப் பார்த்து  கை சோர்ந்து போனது. ஓரிரண்டு மெத்த படித்த முதல் பெஞ்சு புத்திசாலிகளுக்கு SMS அனுப்பி கூட கேட்டாயிற்று. "என்னடா மாமா இது " என்று என்னிடமே திருப்பி போன் போட்டுக் கேட்டார்கள். விஷமக்காரன் ஒருவன் "எவடா மடங்கினா. கோடு வேர்ட்ல பேசறா" என்றான் சற்று புரிந்தது போல.
நான்கு மணிக்குக்  St.Joseph's ஸ்கூல் மணியடித்து பள்ளிச் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காலையில் கல்லூரி செல்லும்முன் குனிந்த தலையை 25 டிகிரி திருப்பி விழி சாய்த்து தாக்கிய ஷைலஜா விட்ட அம்புப் பார்வை இன்னமும் என்னை விடாமல் தாக்கிக்கொண்டிருந்தது. 'கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓட வில்லை' என்று எனக்காகவே காலையில் பாடிய என் வீட்டு எஃப் எம்  என்னை பித்தம் கொள்ள வைத்தது.

பூமா தேவி அவளுடைய உயிர்த்தோழி.  சூரியன் காணாத சூரியகாந்திப் பூவாக நிலம் நோக்கிய அவளது பார்வை வேறுங்கும் படாது  பொதுவாக. அழகை ரசிக்கத் தெரியாத ஒரு ஆட்டோரிக்ஷா  அறிவிலி ஒருநாள் அவளிடம் "ஊட்ல சொல்லிட்டு வன்டியா' என்று வைத போது, "மலரிடம் இருந்து சொல்லிக்கொண்டா வாசனை புறப்படுகிறது?" என்று நினைத்துக்கொண்டேன். அன்றிரவு பி. ஜெயச்சந்திரன் எனக்காக முழு நிலாக் காயும் என் வீட்டு மொட்டை மாடியில் பாடிய "மல்லிகை நடந்தது மண்ணில் அதன் வாசனை மிதந்தது விண்ணில்" செவியை நனைத்து உள்ளத்தில் இனித்தது. நிலா சிரித்த அந்த இரவு விடியவே கூடாது என்று என் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டேன்.  ஒரு கண நேரம் லேசர் போல பாய்ந்த அந்தப் பார்வை பட்டதில் என்  உடம்பு குளிர்ஜுரம் கண்டுவிட்டது.

அம்மாவிடம் பாட்டு கற்றுக்கொள்ள வரும் இவள் எப்போது புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சமையல் கற்றுக்கொள்ள மருமகளாக வருவாள் என்று தினம்தினம் மனம் ஏங்கியது. அவள் "தாயே யசோதா உந்தன் ஆயர் குல... " என்று பாடும் போது இந்த கண்ணனைப் பற்றி அவன் அம்மாவிடம் முறையிடுவது போலிருக்கும் எனக்கு. "குழலினிது யாழினிது என்பர் ஷைலஜா சொல் கேளாதோர்" என்று மனதிற்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டேன். அந்தப் பாடலை மட்டும் அவளை விட அழகாக சுதா ரகுநாதனால் கூட பாட முடியாது எனப்பட்டது  எனக்கு. அவளுடைய பேச்சும் பாட்டும் ஒன்றுபோல் இருந்தன. சங்கீதம் பேசினாள் அவள். ஞாயிற்றுக்கிழமைகளை  என்னோடு சேர்ந்து என் வீட்டு சுவர்களும்  வெறுக்க ஆரம்பித்தன. அன்று சங்கீத வகுப்புக்கு  விடுமுறை."ஷைலூ வாசல்ல நிக்காதே" என்ற அம்மாவின் குரலுக்கு உடனே கட்டுப்படும் வீட்டிற்கு அடங்கிய அடக்கமான பெண். எப்படி இந்த சீட்டை எழுதினாள்? என்று இடைவிடாது ஒரு கேள்வி என்னுள் கேட்டுக்கொண்டிருந்தது.

எப்போது வருவாள் என்று வழியெங்கும் விழிபரப்பி சென்ற இரண்டு பாரா ஞாபகங்களுடன் காத்திருந்தேன். தூரத்தில் தேர் அசைவது தெரிந்தது. நிச்சயம் அவள் தான். அவள் கணக்கில் பெண் புலி என்று கேள்வி. ஒரு அழகுச் சேனையை  தனியனாக எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் நெருங்கிக் கேட்டேன் " எனக்கும் கணக்குக்கும் நூறு மைல். துண்டிச் சீட்டில் காலையில நீ  என்ன எழுதின?. அது என்ன நம்பர்?".
அந்தப் பேசா மடந்தையிடம் இருந்து பதிலுக்கு ஒரு SMS வந்தது ஆங்கிலத்தில் 
"Please type those nos in yr mob by creating new msg with T9 dictionary ON". 

பின் குறிப்பு.
நீங்களும் உங்கள் மொபைலில் அந்த நம்பர்களை அடித்துப் பார்த்து இந்தக் கதை நாயகன் கண்ணனுக்கு முன் தெரிந்து கொள்ளுங்களேன் ஷைலஜாவின் எண்ணத்தை.

3 comments:

radhu said...

ethana per kilambi irukenka boss?

radhu said...

ethana per kilambi irukenka boss?

Madhavan Srinivasagopalan said...

ஆ.. அப்பா.. அப்பப்பா.. தாங்கலையே..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails