Sunday, April 11, 2010

நம்ம வாத்தியார்

மிகவும் 'கஷ்டப்பட்டு' (பவர் கட், ஐ.பி.எல், ஆதர்ச ஹீரோவின்(அ)ஹீரோயினின்  புதுப்படம், உள்ளத்தை ஹிம்சை செய்யும் பக்கத்துவீட்டு பேரிளம் பெண், இத்யாதி இத்யாதிகள் இந்த 'கஷ்டப்பட்டு' வில் அடக்கம்) பலவருடங்கள் படித்து(வேறு வேறு வகுப்புகளில்!), பல்வகை  சிரமங்கள்( மார்க் கட்ஆப்க்கு (cut-off)  கம்மியாக வாங்கி அதற்காக அப்பாவிடம் சஹஸ்ரநாம அர்ச்சனை வாங்கி, கல்லூரி அப்பிளிகேஷேன் உரிய நேரத்தில் கொடுக்காமல், எண்ட்ரென்ஸ் சரியாக எழுதாமல் இதுபோன்ற  மேலும் பல 'மல்'கள் இந்த சிரமங்களில் அடங்கும்) அனுபவித்து  ஒரு கல்லூரியில் அங்கே இங்கே கதர் வேட்டி சட்டைகளிடம் "நம்ம பையன் கொஞ்சம் பார்த்து செய்யுங்க ஸார்" என்று சிபாரிசு வாங்கி சேர்ந்து, அந்தக் கல்லூரியின் முதல் நாளன்றே உங்கள் பேராசிரியர் "தம்பிகளா. உங்க எல்லோருக்கும் கூட கொறைச்சி மார்க் போட எனக்கு இஷ்டமில்லை. நீங்கெல்லாம் தங்கக் கம்பீங்க. அதனால நீ காலேஜுக்கு வந்தாலும் சரி இல்லைன்னா  'கட்' அடிச்சிட்டு உன் கேர்ள் பிரண்ட்டோட மெரீனா, காந்தி மண்டபம்ன்னு சுத்துனாலும் சரி நூத்துக்கு நூறு மார்க் தரேன். நீ லைப்ல ஜாலியா இரு. கொண்டாடு" அப்படின்னு  சொன்னா நீங்கள் என்ன செய்வீர்கள்?

"மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு நம்ம முன்னோர்கள் சரியாத்தான் சொல்லியிருக்காங்கடா" என்று நண்பர்களிடம் ஒப்புக் கொள்வீர்கள். கல்லூரி வாசலில் "நம்ம வாத்தியார்" என ஆளுயர வினையல் பதாகை வைத்து அவரை கொண்டாடி மகிழ்வீர்கள் இல்லையா? கனடாவில் ஒரு பேராசிரியர் இயற்பியல் நான்காம் ஆண்டு (நம்ம ஊர்ல மொத்தமே மூனு வருஷம் தானே!) மாணவர்களுக்கு தன்னுடைய முதல் வகுப்பிலேயே எல்லோருக்கும் 'முதல் வகுப்பு' மதிப்பெண்கள் வழங்கி  மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் நிர்வாகத்திற்கு நிஜ அதிர்ச்சியும் அளித்திருக்கிறார். அங்கெல்லாம் மார்க் நம்பர்ல இல்லை. A+ அப்படின்னு ஒரு கிரேடு வழங்கி சிறப்பித்திருக்கிறார். "முட்டை மார்க் வாங்கியிருக்கான்" என்று எந்த அப்பாவும் தன் பையனை அவமானப்படுத்த முடியாது. ஏதாவதொரு ஆங்கில எழுத்தை மதிப்பெண்ணாக வழங்கினால் நம்மூர்லயும் இந்த "வாத்து முட்டை" சமாச்சாரங்கள் ஒழியும்.  "இவுங்கெல்லாம் ஏம்ப்பா நம்ப ஊர்ல இல்லாம போய்ட்டாங்க" என்று நீங்கள் மனதிற்குள் கேட்பது எனக்கு காதில் கேட்கிறது.  
 
அந்தப் பேராசிரியர் பெயர் பேரா.ரன்குர்ட். ஒட்டாவா பல்கலைக்கழக நிர்வாகம் இப்போது அவரை தற்காலிக பணிஇடைநீக்கம் செய்திருக்கிறது. பேரா.ரன்குர்ட்டிடம் "ஏன் ஸார் இப்படி செஞ்சீங்க" என்று கேட்டதற்கு " மாணவர்களை வெறும் "செய்தி பரிமாற்றம் செய்யும் இயந்திரம்' ஆக உருவாக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. படித்ததை வாந்தி எடுத்து மார்க் வாங்கி இவர்களால் எவருக்குமே பிரயோஜனம் இல்லை. எல்லோருமே விஞ்ஞானிகள் ஆவதற்கு தகுதியானவர்கள்."  என்று ஒரு அமர்களமான பதிலளித்துள்ளார்.  இதற்கிடையில் நம்மூர் போல அங்குள்ள பேராசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி அறப்போராட்டம் அறிவித்துள்ளன. 'கல்வி சுதந்திரம்' பறிபோனதாக அலறுகின்றன. 

இந்த மார்க் விஷயத்தில் என் பள்ளி நாட்களில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்(?) போது என்னுடைய ரிப்போர்ட் கார்டில்  "Not Satisfied" என்று என் தகப்பனார் எழுதி கையொப்பமிட்டு விட்டார். என் தகப்பனாரின் 'அதிருப்தி' என் வகுப்பாசிரியரை மிகவும் ரணகளப்படுத்திவிட்டது.  'அதிருப்தி'யின் காரணம் என்னவென்று அறிய மிகவும் ஆவலாக இருந்தார். ஆகையால் "உங்க அப்பாவை அழைச்சுக்கிட்டு வா" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவருடைய சந்தேகம் என்னவென்றால் என் தந்தையின் 'அதிருப்தி',  அவர் பாடம் நடத்தியதிலா அல்லது நான் வாங்கிய மதிப்பெண்களிலா என்பதுதான். மிகவும் தூணுக்கும் கம்புக்கும் ஓடியாடி அலைந்து ( have to run from pillar to post ) அப்பாவை பள்ளிக்கு அழைத்துவந்து நிலைமையை சரிக்கட்டினேன்.

இவ்வளவு நடந்த பிறகும் பேரா.ரன்குர்ட் (Prof. Rancourt) "நாம் மாணவர்களை ஒழுக்கமாக கீழ்ப்படிந்து நம்முடைய மூளையை பின்பற்ற சொல்லித் தருகிறோம்.  இந்த மதிப்பெண் மற்றும் கிரேடு  முறைகள் நமது கல்வி முறைகளை விஷப்படுத்தி மாணவக் கண்மணிகளை எதையும் முழுமையாக கற்றுக்கொள்ள தடையாகவும் இருக்கின்றன." என்கிறார். 

நம்ம வாத்தியார்  சொல்லறது சரிதானோ? அப்புறம் எப்படி 'கோல்ட் மெடல்', கேம்பஸ் இன்டெர்வியூ, பெரிய கம்பெனி வேலை போன்ற விஷயங்கள் எல்லாம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails