Tuesday, September 15, 2020

மத்யமா செகண்ட் க்ளாஸ்

"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி.." என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் தெரியவில்லை. "ஈ...." என்று முப்பத்திரெண்டும் தெரிய 'மய்யமாக' இளித்துவைத்தேன். வாயைத் திறந்தால் பொறிக்குள் எலியாகச் சிக்கிக்கொள்வோம் என்று தெரியும். ஒன்றிரண்டு நாள்கள் சென்ற பிறகு காலையில் கல்லூரி முடிந்து வந்து மத்தியான்ன போஜனம் ஆகிக்கொண்டிருக்கும் போது சாதத்துக்குக் கெட்டித் தயிர் இரண்டு கரண்டி ஊற்றிய பாட்டி முகத்தருகே குனிந்து கேட்டாள்.


"தம்பி.. தெக்குத் தெருவில ஒரு வாத்யார் ஹிந்தி கத்துத்தரார்... அவரண்ட  வாசியேண்டா... நாளைக்கு வடக்கே போனா பிரயோஜனமா இருக்குமோல்யோ?"

இந்த வேதாளத்தைப் பன்மொழி வித்தகனாக்கும் முயற்சியில் சற்றும் தளராமல் விக்கிரமாதித்த கிழவியாய்க் கேட்டாள். பல்லிடுக்கில் சிரிப்பு தொங்கியது. தலையைத் தூக்காமல் தட்டைப் பார்த்துச் சாப்பிட்டேன். கை அலம்ப எழுந்திருக்கும் போது.....

"பாட்டீ!  காலேஜ் போயிட்டு ரெண்டு மணி மூணு மணிக்குதான் வரேன்.. இதுக்கும் மேலே எங்கே போயி படிக்கிறது? நேரமேயில்லையே..."

"வடகரை மணி டீக்கடை வாசல்ல இறங்குடா.. அப்டியே காலாற நடந்து போனின்னா தெக்குத் தெரு ஹிந்தி வாத்யார் ஆத்துக்குப் போயிடலாமே... ஒரு மணி வாசிச்சுட்டு வந்தியாக்க... சூடா தோசை வார்த்துப் போடறேன்... அப்புறமா நீ ஒன் மட்டையைத் தூக்கிண்டு ஆடக் கிளம்பலாம்..."

என்னுடைய நாளின் முழு ப்ரோக்ராமும் பாட்டி தன் உள்ளங்கையில் வைத்திருந்தாள்.

"ப்ராக்டிகல்ஸ் வரும்... செமஸ்டர் வரும்... அப்போல்லாம் படிக்க முடியாதே... அரைகுறையாயிடுமே..."

மனசுக்குள் பச்சைத் தமிழனாய் ஹிந்தி எதிர்ப்பு அலைமோதியது. அது ஹிந்திக்காக அல்ல. எதை அதிகப்படியாக படிக்கச் சொன்னாலும் பருவ வயது களியாட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்பதால் வரும் நொண்டிச் சாக்கு. ஹிந்திக்குள் தலையை விட்டுவிட்டால் ஊர் சுற்ற முடியாது. ஏக் தோ தீன் நினைவுக்குள் வந்து படுத்தி தகிடதகிமி என்று ஆடியது.

"போடா பைத்தாரா... (பயித்தியக்காராவின் பாட்டி பாஷை மரூஉ).. இப்ப மட்டும் எப்பப் பார்த்தாலும் பாட பொஸ்தகம் வாசிச்சிண்டு இருக்கியாக்கும்... எப்போப்பார்த்தாலும் வடக்குத் தெரு மதில்கட்டை... இல்லே மட்டையாடக் கிளம்பிடுவே.. இல்லேன்னா ஸ்நேகிதாளோட ஊர் மேய வேண்டியது... இராப்பகலா பொஸ்தகத்தை கீழே வைக்காம படிக்கிறியாக்கும்... உருப்படியான வேலை பாருடான்னா... சாக்குபோக்கு சொல்லிண்டு திரியறே... வர்ற அமாவாசைலேர்ந்து போ.. நல்ல நாள்.. வெத்தலை பழம் பாக்கு வாங்கிண்டு போய் அவருக்கு வச்சுக்கொடுத்து நமஸ்காரம் பண்ணிட்டு ஹிந்தி வாசிக்கிற வழியைப் பாரு..."

அவ்ளோதான். தீர்ப்பு எழுதிவிட்டாள். வீட்டுக்குள்ளேயே ஹிந்தித் திணிப்பு. பாட்டியைப் பகைத்துக்கொண்டு ஹரித்ராநதியில் காலம் தள்ள முடியாது. அவளது உத்தரவுக்கு கீழ்ப்படியும்வரை தொணதொணவென்று வார்த்தைகளாலேயே சுள்சுள்ளென்று அடிப்பாள். எல்லை தாண்டும் சீனாவே சாரதா பாட்டியின் வாய்க்குப் பயப்படுமளவிற்கு ரேஸர் நாக்கு. கன்னாபின்னாவென்று கண்டிப்பு கறார் பேர்வழி.

தெற்குத் தெரு ரவி வீட்டிற்கு நாலைந்து வீடு தாண்டி ஜைனன் மல்லிகார்ஜுன் இருந்தான். தெற்கு தெருவில் கிரிக்கெட் விளையாடும் நான்கு பேரில் அவனும் ஒருத்தன். "மல்லி... அடுத்த ஓவர் போடு" என்றால், கை வைத்த பனியனோடு வேகப் பந்து வீசுவான். இல்லை. எறிவான். ஏதோ கை கழன்று போவது போல சுழற்றி எறிவான். அவன் வீட்டிலிருந்து ஒரு படித்துறை தாண்டி ஹிந்தி வாத்யார் வீடு.

"ஹிந்தி சார் எத்தனை மணிக்கு இருப்பாரு?" என்று எங்கள் கிழக்குத் தெருவில் படிக்கும் ஏழாம் வகுப்புச் சிறுமியிடம் கேட்டேன்.

"ஹிந்தி சார்னு சொல்லக்கூடாது. அவரை அத்யாபக்னு" கூப்பிடணும் என்று சொல்லிச் சிரித்தது. ஐயகோ! அடிப்படையே தெரியவில்லையே என்று எனக்குப் பக்கென்று இருந்தது. கண்ணாமுழி பிதுங்கி வெளியே விழ ஒரு வழிசல் சிரிப்பை உதிர்த்தேன்.

"காலம்பரலேர்ந்து வீட்லதான் இருப்பாரு... சாயந்திரமா கடைத்தெருவுக்குப் போவாரு" என்று அவரது தினப்படி செயல்திட்டத்தைத் தெரிவித்தது அந்தப் பொடிசு.

வெற்றிலைப் பாக்கு பழம் தட்சிணையுடன் அத்யாபக்கை அவர் வீட்டு திண்ணையில் சந்தித்தேன். நமஸ்காரம் செய்தேன்.  நறுநெய் தடவி மீசை வளர்த்திருப்பார். ஹிந்தி பாரதியார். ஒரு கோணத்தில் ஐயனார் கோயில் வாசலில் இருக்கும் மதுரை வீரன் சிலை மாதிரியே அச்சு அசல் இருப்பார். அதே உயரம். அவருக்கு கண்கள் இரண்டும்  இரண்டு பக்கமும் பார்க்கும் வசதியிருந்தது.

"ம்... அந்த பொஸ்தகத்தை பிரிங்கோ" என்று அவர் சொல்லும்போது வாயிலிருந்து பிரிபிரியாய் வெற்றிலைச் சக்கை சிதறும். திண்ணையில்தான் வகுப்பு. ஏக் காம் மே... ஏக் கிஸான் சொல்லி தலையில் குட்டு வைக்கல்லாம் மாட்டார் என்ற தைரியம் எனக்கிருந்தது. கதரில் V கழுத்து ஜிப்பாவும் அரைக்கு வேஷ்டியும் கட்டியிருப்பார். அவருக்கு திருமணமாகாத ஒரு மகள் இருக்கிறார் என்பது தெருப் பசங்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிலைவாசல் மரக்கதவு எப்போதும் உள்ளே தாளிடப்பட்டிருக்கும். வகுப்புக்கு கொஞ்சம் முன்னால் போனால் கூட கதவைத் தட்டி திண்ணையில் காத்திருந்தால் வெற்றிலை மென்றுகொண்டே அவர் உருவம் நுழையுமளவிற்கு மட்டும்... அவ்ளோதான்.. தம்மாத்தூண்டு.... கதவைத் திறந்துகொண்டு வந்து ஒரு ஈ கொசு உள்ளே போவதற்குள் பட்டென்று சார்த்திவிடுவார். அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு ஜாகை இருக்கிறதென்ற நினைவே உங்களுக்கு எழாது! :-)

ஒருநாள் கல்லூரியிலிருந்து வரும்பொழுதே தாகமாக இருந்தது. ஹிந்தி வகுப்புக்குச் சென்றுவிட்டேன். பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். விக்கல் வருமளவிற்கு தொண்டை வறட்சி. கமறுகிறது. வார்த்தைகள் பிசிறடிக்கின்றன.

"சார்! குடிக்க தண்ணீ வேணும்... தாகமா இருக்கு" என்றேன் தயக்கத்துடன்.

தலையை உள்பக்கம் திருப்பி "நீலு...." என்று ஏதோ தெலுங்கில் சொன்னார். நிமிஷத்திற்குள் ஒரு எவர்சில்வர் சொம்பு மட்டும் கதவிடுக்கில் தெரிந்தது. அந்தரத்தில் தெரிந்த சொம்பை அலேக்காக வாங்கி என்னிடம் கொடுத்து என் தாகம் தணித்தார் ஆசிரியர்பிரான். "ம்... அடுத்த பக்கம்..." என்று பாடம் நடத்துவதற்குள் நுழைந்துவிட்டார்.

இதற்குள் நான் அங்கே ஹிந்தி பயிலச் செல்வது தெப்பக்குளத்தின் நான்கு கரைக்கும் சில விஷமிகளால் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் மல்லியின் கை இருக்கும் என்று எனக்கொரு சம்சயம். ஏதோ ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வி படிப்பது போல ஸ்நேகிதச் செல்லங்கள் என்னிடம் விஜாரிப்பதற்கு ஆர்வமாக மொய்த்தார்கள்.

"வெங்குட்டு... அங்கே அவர் வீட்ல ஒரு பொண்ணு இருக்குமேடா" என்று சகஜமாய் தோளில் கைப்போடு ஒருவன் ஆரம்பிக்க மூன்று பேர் சூழ்ந்துகொண்டார்கள். திண்ணை என்ற எல்லை தாண்டாமல் இருக்கும் சௌஜன்யமான பயங்கரவாதி நான் என்னும் விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் ஹிந்தி படிக்கச் செல்வதை விட ஏதோ கணக்குப் பண்ண செல்கிறேன் என்று நினைத்துக்கொண்டார்கள். நான் தண்ணீர் கேட்க ஒரு எவர்சில்வர் சொம்பு அந்தரத்தில் பறந்து வந்த கதையை எப்படி நான் விவரிப்பேன்!? அழுகையை அடக்க வாய்க்குள் தோள் துண்டைத் திணித்து அழும் கருப்பு வெள்ளை படம் சிவாஜி போல திக்பிரமையுடன் நின்றிருந்தேன். தினமும் நான் எழுதிக்கொண்டு வரும் எனது ஹிந்தி நோட்டிலிருந்து அப்போதே ஐம்பதை எட்டியிருந்த என் பவானி சித்திப் படியெடுத்துப் படிப்பாள்.

"படிக்கறத்துக்கு வயசெல்லாம் இடைஞ்சல் கிடையாது... பார்த்தியா... பவானி உங்கிட்டேயிருந்து வாங்கி படிக்கிறா" என்று ஒரு நாள் பாட்டி தனது விசேட குறிப்பை என் தலையில் குட்டுவதைப் போன்று வெளிப்படுத்தினாள். அடுத்தது பாட்டியும் ஹிந்தி படிக்கக் கிளம்பிவிடுவாளோ என்று எனக்குள் உதறல் எடுத்தது.

முதலில் வந்த ப்ராத்மிக் பரீக்ஷை மிகவும் சுலபமாக இருந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தால் கேள்வியில் வந்திருக்கும் வார்த்தைகளை இடம் வலமாகவும் வலம் இடமாகவும் மாற்றிப்போட்டு எழுதினால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று யுக்தி சொல்லிக்கொடுத்தார்கள். என்னால் இயன்ற அளவு கந்தர்கோலமாக jumbled sentence ஆக எழுதினேன். இந்தப் பரீக்ஷையில் தோற்று விட்டால் "கடங்காரனுக்கு அவன் படிப்புதான் வரலேன்னு பார்த்தா ஹிந்தியும் வரலையேடி" என்று பாட்டி ஆற்றாமையில் ஒரு டோஸ் விட்டுவிட்டு "இனிமே இந்த பிரஹஸ்பதிக்காகக் காசை வீணடிக்கவேண்டாம்... இது பேசாம ஊர் சுத்தவே போகட்டும்" என்று ஹிந்தியை நிறுத்திவிடுவாள் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் தெய்வம் வேறுவிதமாக முடிவெடுத்தது. பிராத்மிக் பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்று ஹிந்தி வாத்யார் என் தோளில் தட்டாத குறையாக பெருமையாகச் சொன்னார். நான் அப்போதே ஹிந்தி பண்டிட் ஆகிவிட்டது போல பாட்டிக்குப் பரம சந்தோஷம்.

மத்யமா என்ற ஹிந்தியின் ரென்டாம் வகுப்பு தொடங்கியது. அரை மணி ஒரு மணி பாடம் நடக்கும். ப்ராத்மிக்கை விட கொஞ்சம் கஷ்டம். வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஜாலமெல்லாம் காட்டமுடியாது. வாசிக்கும் போதே திணறி... தெருவில் எனக்கு ஹிந்தியில் சீனியர் சிறுமியிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். எல்லாம் பாட்டி கழுத்தைப் பிடித்துத் தெருவில் தள்ளியதால் நடந்த விபரீதங்கள். மத்யமாவில் இரண்டாம் இடமே கிடைத்தது. ஆனால் ஹிந்தியில் என்ன எழுதியிருந்தாலும் எழுத்துக்கூட்டிப் படிக்கும் பேராற்றல் வந்துவிட்டது. அலுவலக விஷயமாக புதுடில்லிக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஒரு முகவரி தேவடுவதற்காக அலைந்த போது நான் எழுத்துக்கூட்டிப் படித்துச் சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். நண்பர் அசந்துவிட்டார்.

"உங்களுக்கு ஹிந்தி சுத்தமா தெரியாதா?" என்று முதலில் அவரிடம் கேட்டறிந்துகொண்டேன். கழுத்து சுளுக்கும்வரை தெரியாது என்று ஆட்டினார். எனக்கு மொழிச் சுதந்திரம் கிடைத்தது போல ஆகிவிட்டது. பின்னர் டில்லியில் இருந்த இரண்டு நாள்களும் தைரியமாக எல்லா பில்போர்டுகள், துண்டுச் சீட்டுகள், லோக்சத்தா தலைப்புச் செய்திகள் என்று ஹிந்தியில் வாசித்துக்காட்டி பிரமாதப்படுத்திவிட்டேன். அங்கேயே ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆஃபீஸ் நண்பர்கள் எதிரே "ஆர்விஎஸ்... ஹிந்தி அபாரமாகப் படிப்பான்" என்று என் தோளைத் தட்டி அந்த நண்பர் ஒரு செய்தித்தாளைக் கொடுத்து படிக்கச் சொன்னபோது என் கண்களில் "தெய்வாதீனமாக" தூசி விழுந்து மறைத்துவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டே அமுக்கமாக அறையை விட்டு வெளியேறி விட்டேன். படித்திருந்தால் அந்த அறையில் இருந்தவர்கள் கண்களைக் கசக்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்திருக்கும்.

ரொம்ப வருஷமாக என்னிடம் யாராவது "உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?" என்று கேட்டால் "ஹிந்தி தெரியாது போடா" என்று அதிகப்பிரசங்கித்தனமாக பதில் சொல்லாமல் "மத்யமா செகன்ட் க்ளாஸ்" என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வேன். சங்கீதாவும் என் அக்காள் கீர்த்திகாவும் அத்யாபிகாக்கள் என்பதை இந்தச் சமூகத்திற்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்! :-)


#மன்னார்குடி_டேஸ்
#ஹிந்தி_ட்யூஷன்
#புது_எபிஸோட்

Sunday, January 5, 2020

கர்மயோகி சாரதா

"தல ஒரேடியா வலிக்கறதுடா..." என்றாள் பவானி சித்தி .
டாக்டர் க்ளினிக்கில் அடியெடுத்து வைத்ததும் கண்களைச் சாய்த்து "இப்போ பரவால்லே போல்ருக்கு...." என்றாள்.
"முன்னாடி அவர் கொடுத்த மாத்திரையெல்லாம் சாப்டியோ"
"ம்.... இப்ப சரியாயிடுத்து.. இனிமே மாத்திரை வேண்டாம்..."
"குணத்துலே அப்படியே பாட்டியை உரிச்சு வச்சுருக்கே...." என்ற எனக்கு என்னுடைய அரைடிராயர் மன்னார்குடி நாட்களும் சாரதா பாட்டியும் கண்ணுக்குள் காட்சிகளாக ஓட ஆரம்பித்தார்கள். பவானி சித்தியை டாக்டர் பரிசோதிப்பதற்குள் எம்பளதுகளின் மன்னையை எட்டிப் பார்ப்போம் வாருங்கள்! 
******* இப்போது sepia modeல் மன்னை **********
"சாயரக்ஷை ஆறரைக்கெல்லாம் வெங்கடாஜலம் வண்டிக்குச் சொல்லுடா.." என்று கோபாலன் திருவிழா இல்லாத காலத்தில் சாரதா பாட்டி என்னிடம் சொன்னால் ஒரு வாரமாகத் தேகத்தோடு மல்லுக்கட்டி பின்னர் இந்த முடிவு எடுத்திருக்கிறாள் என்று அர்த்தம். "சந்திரசேகர் டாக்டராத்துக்குப் போயிட்டு வருவோம்". காலையிலேயே இந்த முடிவு எடுக்கப்படும்.
"வெங்கடாஜலம் ராங்கி பண்ணிக்கிறானே... வேற வண்டி எதாவது வச்சுக்கலாமே" என்று ஒரு முறை பவானி சித்தி சொன்னாள்.
"ச்சே...ச்சே...அவன் அப்பாவிடி...... புள்ளைக்குட்டி கூட கிடையாது... போனாப் போறான்.." என்பாள் பாட்டி இரக்கசுபாவத்தோடு...
ஹரித்ராநதி மேல்கரையின் பின்னால் உள்ள சந்தில் வெங்கடாஜலம் வீடு. நாலாபுறமும் முள்வேலிக்குள் ஒரு அழகான குடிசை வீடு. வாசலில் கறுப்பு நிறத்தில் வயிற்றில் வெள்ளைக் கலரில் திட்டுத் திட்டாய்த் தீவு படங்களோடு காளை புல் மேய்ந்துகொண்டிருக்க பச்சைக் கூண்டு வண்டியின் நுகத்தடி புல்தரையை முத்தமிட்டபடி முன்னால் சாய்ந்திருக்கும்.
"வெங்கடாஜலம்... வெங்கடாஜலம்..." என்று ஒன்றிரண்டு முறைக் கூப்பிட்டால் தலையில் முண்டாசுடன் சுருங்கிய மார்போடு குடிசையிலிருந்து எட்டிப்பார்ப்பார். வாமன ரூபம். அரையில் வேஷ்டிக்கு மேலே குண்டான பச்சை பெல்ட். வெற்றிலைக் குதப்பும் வாய். வலது கண்ணில் பூ விழுந்திருக்கும். உதட்டில் இருவிரல்களைப் பிரித்து வைத்து வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு..
"ம்... எங்க போவணூம்?"
"டாக்டராத்துக்கு... சாயங்காலம் ஆறரைக்கு..."
"ம்... சரி வரேன்..."
வண்டிக்கார வெங்கடாஜலம் வார்த்தைகளை அளந்து மணிரத்ன சுருக்கமாகப் பேசுவார்.
"என்னமோ வரவர உடம்பு சொன்னத்தைக் கேக்கமாட்டேங்கறதுக்கா... டாக்டராத்துக்குப் போயிட்டு வரேன்..." என்று பக்கத்தாத்து ரமா பாட்டியிடம் சொல்லிக்கொண்டு ஆறரைக்கு வண்டி ஏறுவாள். சாரதா பாட்டிக்கு ஆம்பிளைத் துணையாக நானும் பிடித்துக்கொள்ள பவானி சித்தியும் அந்த பியெம்டபிள்யு கணக்காக வந்து நிற்கும் வெங்கடாஜலம் ஒத்தை மாட்டுவண்டியில் ஏறுவோம்.
வெங்கடாஜலம் வண்டியோட்டும் அழகே தனி. வண்டிக்கு ஆக்ஸிலேட்டர் கொடுக்க வேண்டும் என்றால் கையிலிருக்கும் சாட்டையால் நுகத்தடியை இணைக்கும் ஏர்க்காலில் "சொளீர்...சொளீர்" என்று இரண்டு முறை சுழற்றி அடிப்பார். காளை வேகமெடுத்து ஜல்ஜல்லென்று தேரடி தாண்டும். வண்டிக்குள் வைக்கோல் போடப்பட்டு அதன் மேலே உரசாக்கில் தைத்த ஒரு மெத்தை போட்டிருக்கும். அதையெல்லாம் மீறி டிராயருக்குக் கீழே பரப்பியிருக்கும் வைக்கோல் சுருக் என்று தொடையில் குத்துவது அக்குபஞ்சரில் எந்த வியாதிக்கு என்று விவரிக்க இயலாத அனுபவம்.
"வெங்கடாஜலம்... மாட்டு வண்டி குதிர வண்டியாப் போறதே... மொள்ளமாவே போவேமே... டாக்டர் அங்கேயேதான் இருப்பார்...."
பாட்டியின் இந்த வார்த்தைக்கு வெங்கடாஜலத்தின் கட்டளைக்கு முன்னரே மாடு கட்டுப்படும். "ஹோ..ஹோ...ஹோய்..." என்று வெங்கடாஜலம் ராகமிழுத்து கயிற்றை இழுக்கும்போது மூன்றாம் தெருவில் சோமேஸ்வரய்யா வைத்தியசாலை என்ற பேருந்து நிறுத்தம் எதிரிலிருக்கும் சந்திரசேகர் டாக்டராத்துக்கு வந்திருப்போம். சோமேஸ்வரய்யா, டாக்டரின் அப்பா. மிகவும் பிரசித்தமான மருத்துவர்.
சீனு மாமாதான் கம்பௌன்டர். நெற்றியில் ஸ்ரீசூர்ணமும் அரைக்கை சட்டை வேஷ்டி. வெந்நீர் உலைகொதிப்பது போல தளபுளக்கும் பாத்திரத்தில் இஞ்செக்ஷன் சிரிஞ்சிகளை சுத்தப்படுத்த போட்டிருந்து உள்ளேயிருந்து "ட்ட்ரிரிரிங்க்" என்ற பஸ்ஸருக்கு ஒரு சிரிஞ்சை கிடுக்கியில் எடுத்துக்கொண்டு டாக்டர் அறைக்குள் செல்லும் சீனு மாமாவிடம்....
"சீனு.... நாங்க எப்போ?" என்று கேட்பாள் சாரதா பாட்டி. பக்கத்தில் கூத்தாநல்லூரிலிருந்து புர்க்கா அணிந்தவர்கள் சென்ட் வாசனைத் தூக்க அமர்ந்திருப்பார்கள்.
"பாட்டீ.... இப்போதானே வந்தேள்... உங்களை நாங்கெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சே.... பேசிண்டிருப்போமே..." என்பார்.
கதவு திறந்து மூடும் போது டாக்டர் பாட்டியைப் பார்த்துவிட்டால் பாட்டியின் தள்ளாத வயதினால் சீனு மாமாவிடம் பாட்டியை உடனே உள்ளே அனுப்பும்படி சொல்லிவிடுவார்.
"வாங்கோ... எப்படியிருக்கேள்?"
"உடம்பு சொன்ன பேச்ச கேட்கமாட்டேங்கிறது.. அதான் உங்களாண்ட காமிச்சுட்டுப்போகலாம்னு வந்தேன்"
"ஜுரம் இருந்தா குளிக்காதீங்கோம்பேன்.... நீங்க போய் ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணுவேள்.... ரசம் சாதமா சாப்பிடுங்கோம்பேன்... நீங்க மோரூத்தி சாப்பிடுவேள்"
பாட்டியின் சொல்பேச்சுக் கேளாமையை வரிசையாக டாக்டர் அடுக்குவார். டாக்டரின் பெரிய பையன் பாலாஜியும் நானும் வகுப்புத் தோழர்கள். சின்னவன் ராம்ஜி எங்களுக்கு ஒரு க்ளாஸ் குறைச்சல்.
"டாக்டர், ஹரித்ராநதியில ஸ்நானம் பண்ணலைன்னா எனக்கென்னமோ பண்றது... அதுக்கு ஜுரம் பரவாயில்லை போல்ருக்கே"
"நீங்க நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேள். இருந்தாலும் இப்படி வந்து என்னைப் பார்த்துட்டுப் போறேள்" என்று நமுட்டாகச் சிரிப்பார் டாக்டர். சந்திரசேகர்.
"வைத்தியனுக்குன்னு இவ்ளோ கொடுக்கணும். அப்போதான் உடம்பு சரியாகும்...." என்பாள் பாட்டி பதிலுக்கு.
அரைமணியில் வெளியே வந்தால் மாட்டைக் கட்டிப்போட்டுவிட்டு வெங்கடாஜலம் பக்கத்தில் நாலாம் தெரு போகும் முனையில் உட்கார்ந்திருப்பார். பெரியாஸ்பத்திரி பக்கத்தில் சீனிவாசா மெடிக்கலில்தான் சீட்டுக்கு மருந்து வாங்குவோம்.
"தம்பீ! டாக்டர் ரெண்டு எழுதினா ஒண்ணு வாங்கு... ஒண்ணு எழுதினா அரை வாங்கு..."
"டாக்டர் கேட்கறது சரிதான்.. அப்புறம் ஏன் டாக்டராத்துக்கு வரே" என்பாள் பவானி சித்தி.
"நாளைக்கு ஒரு சொம்புப் பாலை ஹரித்ராநதி தாயாருக்கு வுட்டுட்டு ஸ்நானம் பண்ணிட்டேன்னா.... எல்லாம் சரியாயியிடும்... விருந்தும் மருந்தும் மூணு நாள்டா"
ஓடிப்போய் மருந்துவாங்கிக்கொண்டு வண்டியில் தாவி ஏறிக்கொள்வேன். சவாரி முடியும் வேளை வந்துவிட்டதால் மாடு துள்ளியோடும். அன்னவாசல் தெரு தாண்டி கற்பகம் ஸ்டோர்ஸ் தாண்டி கிழக்குத் தெரு மூலையில் மாட்டுவண்டி நுழையும் போதே பாட்டி.....
"பவானீ.... வண்டிச்சத்தம் கொடுத்துடுடீ..." என்பாள்.
எட்டு எட்டரைக்கே ஊர் அடங்கிவிடும். ஹரித்ராநதியும் சலனமேயில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும். சோழன் போக்குவரத்துக்கழக பஸ் அரசு பஸ் என்பதின் அனைத்து இலக்கணங்களையும் ஒத்து டகடகடக என்று மொத்த பாடியும் கழன்று விழும் அபாயத்தில் கடகடக்க... அழுது வடியும் விளக்குகள் உள்ளே எரிய ஒன்றிரண்டு பயணிகள் ஜன்னலில் தலைசாய்த்து தூங்கியபடி பஸ்ஸ்டாண்ட் செல்வார்கள்.
வெங்கடாஜலம் வண்டியிலிருந்து இறங்கியவுடன் எதிரே தெரியும் ஹரித்ராநதிக்கு இருகைக்கூப்பி வணக்கம் சொல்வாள்.
"வெங்கடாஜலம்... பார்த்துப் போப்பா..." என்று அவருக்கு அவள் பாணியில் ஒரு பை சொல்லிவிட்டு கூன் விழுந்த முதுகோடு படியேறி கைகால் அலம்பிவிட்டு வழக்கமான பாய் போட்டுக்கொள்ளாமல் காலையில் துவைக்க வைத்திருக்கும் எதாவது விழுப்பு புடைவையை கீழே போட்டுத் தரையில் படுத்துக்கொள்வாள்.
டாக்டர் சொன்னது போல காலையில் எழுந்து ஹரித்ராநதியை பிரதக்ஷிணம் செய்துவிட்டு கீழ்கரை மங்கம்மா படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு ஈரப்புடவையை சுற்றிக்கொண்டு ராத்திரி தரையில் போட்டுப் படுத்த புடவையை துவைத்துத் தோளில் போட்டுக்கொண்டுக் கரையேறிக்கொண்டிருப்பாள்.
"பிரதக்ஷிணம் வர்றச்சே மேல்கரையில பார்த்துட்டு... திரும்ப எப்போ பாட்டீ போகலாம்ன்னு வெங்கடாஜலம் கேட்கறாண்டா...." என்று பொக்கை வாய் தெரிய சிரிக்கும் சாரதா பாட்டியை நான் கர்மயோகியாகத்தான் பார்த்திருக்கிறேன்.

Monday, December 30, 2019

தாவணி போட்ட தீபாவளி

சின்னப் பசங்களாக இருக்கும் வரையில் வெடி கொளுத்தி குஜாலான மனசு வாலிபம் தலைப்பட புத்தாடையில் குஜிலிகளைக் காணும் ஆசை அரும்புமீசையோடு சேர்த்துத் துளிர்விட்டது. கன்னியரின் மனசைத் தெரிந்துகொள்ளாத கபோதிகள் சிலர் வெங்காய வெடியைக் கையில் கொண்டு போய் சாலையில் மெல்ல நடந்து செல்லும் பாவாடைத் தாவணிகளின் காலருகே அடிப்பார்கள். தீவிரவாதிகள். அப்போது திடுக்கிட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மான் போல மிரளும் குட்டிகளைக் கண்டு சிரித்துக்கொண்டே சைக்கிளில் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரிலிருந்து எடுத்து அகலவிரித்து ஹீரோயிஸம் காட்டி மகிழ்வார்கள். அது உண்மையில் வில்லத்தனம் என்று அந்த அறிவிலிகளுக்குத் தெரியாது. இந்தப் பூர்வ பீடிகையின் பின்னே சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. சொல்கிறேன்.
மன்னை ஹரித்ராநதியின் கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்று பிரதக்ஷிணமாக வரும் தெருக்களில் சக ஸ்நேகிதர்கள் யாரையெல்லாம் சைட் அடித்துச் சுற்றுகிறார்களோ அந்த மங்கல பெண்டிர் தீபாவளிக்கு என்ன கலர் ட்ரெஸ் போடுவார்கள் (தாவணியோ பாவாடையோ) என்பதை முட்டை மந்திரிக்காமல் தெரிந்து கொண்டு அதே கலருக்கு மேட்ச்சிங்காக சட்டை பேண்டு போட்டு அன்று அவள் முன்னால் உலாத்துபவன், நேரம் கனிந்து வரும்போது அப்பெண்ணின் மணவாளனாகிவிடுவான் என்ற கிறுக்குத்தனம் கலந்த மூட நம்பிக்கை ஒரு தீபாவளியில் உதயமானது.
அந்த தீபாவளியில் டெய்லர்கள் எல்லாம் படு பிசி. ஸ்டைலோ மணி உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் ஆஸ்தானம். என் அப்பா ஒரு பண்டில் கதர் துணி வாங்கிக்கொடுத்தால்... பத்து பதினைந்து சட்டைகளாக தைத்துக் கொடுப்பார் மணி. குரலில் கொஞ்சம் நளினமாக பெண்கள் சாயலில் இருந்தாலும் ஆண்களுக்கான முதல்தர டெய்லர். அடுத்ததாக சூப்பர்ஃபைன் டைலர் என்னுடன் பள்ளியில் படித்த ஸ்நேகிதனின் அப்பா. பந்தலடியில் இந்தப் பக்கம் கலா ஒயின்ஸ் எதிர்புறம் ஸ்டைலோ. அந்தப் பக்கம் உடுப்பி கிருஷ்ணபவன் எதிரில் சூப்பர்ஃபைன். இளைஞர்களின் அந்தக்கால விருப்பமாக சூப்பர்ஃபைனும் சாந்தி தியேட்டர் எதிர்புறம் இருக்கும் மாரீஸ் டைலர்ஸும் ஆடைப்புரட்சி நடத்தி கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
மாரீஸ் டைலர்ஸ் அண்ணன் தம்பி மூன்று பேர். 2 அண்ணன் ஒரு தம்பி. ஒரு அண்ணனுக்கு இரண்டு தம்பி. சரி இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். அங்கே சட்டை பேண்ட் தைத்த கதைக்கு வருவோம். அந்த வருஷம் சத்தியராஜ் "பூ விழி வாசலிலே" படத்தில் கொசுவலை போல உள்ள துணியை சும்மா கை வைத்துத் தைத்து ஃப்ரீ சைஸில் சட்டை மாட்டிக்கொண்டு "அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?" என்ற பாடலுக்கு திரையில் ஆடியாடி நடந்து வந்ததைப் பார்த்து இளைஞர் உலகமே அதே சட்டையை (சத்யராஜ் கொடுப்பாரா? கொடுத்தால் எவ்வளவு பேருக்குக் கொடுப்பார்?  ) ..ச்சே... அந்த சட்டை மாதிரியே போட்டுக்கொண்டு கன்னியரை அசத்தத் துடித்தார்கள். அதே போல துணியை வாங்கும் முயற்சியில் அனைவரும் இறங்க ஆபத்பாந்தவனாக வந்தவன் புவனேந்திரன். "நண்பேன்டா" புவனேந்திரன் கம்மாளத் தெரு நாகோடா டெக்ஸ்டைல்ஸில் பகுதிநேர ஊழியன். தானுண்டு கடையுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஒரு உத்தமன்.
அவரவருக்கு என்ன கலரில் அந்த கொசுவலைத் துணி வேண்டும் என்பதில்தான் இந்த வியாசத்தின் இரண்டாம் பாரா சங்கதி அடங்கியிருக்கிறது. தெற்குத் தெருவில் அழகான அக்கா தங்கை இருந்தார்கள். ஆமாம். இருவருமே அழகிகள். சிலசமயம் அக்கா நன்றாக இருந்தால் தங்கை இராவணனின் தங்கை போலவும்; தங்கை பார்க்க லக்ஷணமாக இருந்தால் அக்கா ஜ்யேஷ்டாதேவி போலவும் இருப்பது பொது மரபு. இங்கே இருவருமே அற்புதமான சைட். அப்படி "சைட்" என்றுத்தான் சைத்தான்கள் பேசிக்கொள்வார்கள். அக்காவைச் சிலரும் தங்கையைச் சிலரும் பின்தொடர்ந்தார்கள். இந்த ஃபேஸ்புக் போன்று ஃபாலோயர்களைக் கணக்கிடும் காலமாக இருந்தால் மன்னை மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவும் அவர்கள் பின்னாடிதான். சரி. இதற்கு மேல் டீட்டெயிலிங் தேவையில்லை. நிறுத்துவோம். இவ்வியாசத்தில் இங்கிருந்து அக்கா என்றால் மேற்படி 'அழகிய' அக்காவும் தங்கை என்றால் மேற்கண்ட 'லவ்லி' தங்கையுமாக வாசகர்கள் படித்துக்கொள்ளவும்.
அந்த அக்காவின் உடை என்ன கலராக இருக்கும் என்ற யூகத்தில் சிலரும் தங்கையைப் பின்பற்றுபவர்கள் வேறு யூகத்திலும் துணியெடுக்கப் படையெடுத்தார்கள். அக்கா கலருக்குப் போட்டியிட்டவர்கள் சிகப்பு மஞ்சள் பச்சையென்று வண்ணமயமான கற்பனையில் துணியெடுத்துக்கொண்டார்கள். தங்கையின் அபிமானியாக இருந்தவன் ஆப்தன் ஸ்ரீராம். ஸ்ரீராமுக்கு தங்கையின் தாவணி நிச்சயம் நீலம்தான் என்று ஏதோ ஒரு பட்சி சொல்லியது. நீலக்கலரில் சொக்காயும் அதற்கேறவாறு அன்ட்ராயரும் தைத்துக்கொள்ளமுடிவு செய்தான்.
மாரீஸுக்கு தீபாவளி ஆர்டர்கள் மலைபோலக் குவிந்தது. மாரீஸில் அண்ணன் வெட்டித் தர ஒரு தம்பி மூட்டிக்கொடுக்க இன்னொருத்தர் காஜா. அசுரத்தனமாக அனைவரும் ஒரு மாதகாலமாக வேலைப்பார்த்ததில் கைவேறு காலர்வேறாக தைத்துவிடுவார்களோ என்றஞ்சி துணி கொடுத்தவனே அருகில் இருந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. அடியேனின் கொசுவலை தீபாவளிக்கு ஒரு நாள் முன்னரே தயாராகியது அடியேன் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியம். தீபாவளி அதிகாலையில் "ஒரு பொதை வெய்யேன்டா தம்பி" என்று பாட்டிச் சொல்லைத் தட்டாமல் புஸ்வானம் வெடிக்கும் போது சரவணன் மாரீஸிடமிருந்து புதுச்சட்டை பேண்ட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.
கங்கா ஸ்நானம் ஆனபின் எல்லோரும் புதுத்துணி அணிந்துகொண்டாயிற்று. இப்போது துணி தைத்துக்கொண்டதின் புண்ணிய பலனாக அக்கா-தங்கைகளின் ஆடை நிறம் பார்க்க ரோமியோக்கள் தயாரானார்கள். சைக்கிள்தான் அப்போது எங்கள் ஹார்லே டேவிட்சன். ஐயனார் கோயில் திருவிழாவில் இரவு முழுவதும் பல்பு கட்டி இறங்காமல் சுற்றும் சாகசக்காரன் போல அதிகாலையிலிருந்து நாலுவீதியையும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஏழு மணி போல ஒருவழியாக அழகிகள் தரிசனம் ஆனது. அக்காக்காரர்கள் எல்லோருக்கும் ஏமாற்றம். பச்சை மஞ்சள் சிகப்பு என்று தெலுங்கு ஹீரோக்கள் போல கண்ணைப்பறிக்கும் கலரில் ஸ்டைலாக துணிபோட்டிருந்தவர்கள் முகத்தில் ப்ரௌனைப் பூசி விட்டாள் அக்கா. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். இதுபோன்ற 'லவ்'கீக சமாசாரங்களில் ஸ்ரீராமின் குறிகள் என்றுமே தப்பியதில்லை. அத்தங்கையும் நீலம். ஸ்ரீராமும் நீலம். அன்று வானமும் நீலம். வானத்தின் வண்ணத்தை வாங்கிக்கொண்ட ஹரித்ராநதியும் நீலமாக இருந்தது. Blue Everywhere!
ஸ்ரீராமுக்கு ஒரே குதூகலம். அவன் நோட்டமிட்டவளும் அவனும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்ட சந்தோஷத்தை விட அந்த அக்காக்காரியை பின்தொடரும் பிரகஸ்பதிகள் அசடுவழிய ஏமாற்றம் அடைந்ததில் அலாதியான ஆனந்தம் அடைந்தான். தாவணி போட்ட தீபாவளிகள் என்றுமே அழகு என்ற கிளிஷேவுடன் இதை முடித்துக்கொள்கிறேன். 
~~~~~~
எல்லோருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
~~~~~~~
பொறுப்புத் துறப்பு: நான் இந்த செயலில் ஈடுபடவில்லை எனவும் வெகுகாலத்திற்குப் பின்னர் இப்படியெல்லாம் கலரில் விளையாட்டு நடந்தது எனவும் ஸ்ரீராம் சொன்னதை கிளுகிளுப்பாக இருக்கட்டும் என்று சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இங்கே இவ்வியாசம் எழுதப்பட்டது. நன்றி.

பாட்டிகளின் காதலன்


"அச்சச்சோ... கடந்துவிட வேண்டுமே" என்று பதட்டப்பட்டேன். இங்கே நான் எழுதியதை நீங்கள் படிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசத்தை விட அவசரமாக மனது அடித்துக்கொண்டது. வாகனங்கள் விரையும் மெயின் ரோடு. இரண்டு பக்கமும் சோழாவரம் பந்தயத்தில் முதலிடம் பெற போட்டியிடுவது போல வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இடுப்பில் தண்ணீர் தளும்பத் தளும்ப பெரிய பித்தளைக் குடம். நல்ல வெயிட். கச்சலான தேகம். தலை முழுக்க வெண்பஞ்சு கேசம். எண்பது வயதுக்கு மேல் இருக்கலாம். வைரம் பாய்ந்த கட்டையாய் ஒரு பாட்டி. விருட் விருட்டென்று தண்ணீர் குடத்தோடு ரோடைக் கிராஸ் செய்தார். தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டே வீறுநடை போட்டார்.
சிறுசுகள் இல்லாத வீடா? அல்லது இப்பாட்டி யார் வீட்டிலாவது வேலை பார்க்கிறார்களா? எதாகிலும் சதாபிஷேகப் பாட்டி தண்ணீர்க்குடம் தூக்குவது பிசகு என்றெண்ணும் அதே வேளையில் இக்காலத்து பெண்கள் யாரேணும் அந்த பித்தளைக் குடத்தை வெற்றுக்குடமாகவாவது தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம். பெற்ற குழந்தையையே தள்ளுவண்டியில் படுக்கப் போட்டு மொபைலை நிரடிக்கொண்டு செல்லும் சோஷியல் நெட்வொர்க்கிங் சமூகமாக மாறிவிட்ட பிறகு அவர்கள் குடம் தூக்க வேண்டும் என்று எண்ணுவது கொடூரமான ஆணாதிக்க சிந்தனையல்லவோ?
எப்பவோ 90களில் பார்த்த "வைகாசி பொறந்தாச்சு"வில் தோளில் தோல்பையுடன் மார்டன் ட்ரெஸ்ஸில் குதிரை போல நடந்து வரும் ஹீரோயினையைப் பார்த்து பிரசாந்த் "தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது... மனசு தவிக்குது..." என்று கிண்டலடித்துப் பாடும் காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால், ரியல் ஹீரோயினி இந்த பாட்டிதானே!
பாட்டியிடம் வளர்ந்ததால் எப்போதும் பாட்டிகளின் மேல் ஒரு காதல் பிறந்துவிடுகிறது! 

Monday, October 23, 2017

தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...

ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷிணம் செல்லலாம் என்று சன்னிதி வாசலில் முதல் ஆளாய் நின்றுகொண்டிருந்தேன். இடதும் வலதுமாய் ஜெய விஜயர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும்வரை குருவாயூரப்பனை ஐந்து நிமிடமாவது மனதில் சிறைப்பிடிக்க எண்ணினேன். பாரதத்தில் சகாதேவன் க்ருஷ்ணனின் காலைக் கட்டிவிடுவேன் என்று சொன்னது போல் கண் மூடி மனசுக்குள் நிறுத்திப்பார்த்தேன். ஊஹும். அரைவிநாடி நேரமாவது கலையாமல் நிற்பேனா என்கிறது. குரங்கு மனம் அங்காடி நாயாக திரிந்து எதையெதையோ மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பட்டென்று கண்ணைத் திறந்துவிட்டேன். ஜெயவிஜயர்களைப் பார்க்கும் போது இவர்கள்தானே ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபுவாக ராக்ஷச அவதாரம் செய்து... ஸ்ரீமன் நாராயணன் நரசிம்மாவதாரம் எடுத்து வதம் செய்தார் என்று பகவத் சிந்தனை கிடைத்தது. கண்ணை மூடி மனதை ஒருமுகப்படுத்துவதை விட இப்படி சிலா ரூபமாகப் பார்த்துக்கொண்டே நற்சிந்தனை மலர்வது மகிழ்ச்சியாக இருந்தது.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் தனது ஸ்ரீமத்பாகவத சப்தாகத்தில்... “இங்க இருக்கானா... அங்க இருக்கானா... இந்த தூண்ல இருக்கானான்னு ஹிரண்யகசிபு ஆடியாடி ராஜ்யசபைலே கேட்டப்போ... எந்த தூண பிரஹ்லாத ஸ்வாமி காட்டுவார்னு நினைச்சு... காமிக்கற தூண்ல இல்லாட்டா பக்தனை ஏமாத்தினா மாதிரி ஆயிடுமேனு பயந்து.... எல்லாத் தூண்லயும் வந்து அணுப் பிரவேசம் பண்ணி உக்காண்டுண்டு .... இந்த தூணாடான்னு அஹம்பாவமா உதைச்ச ஹிரண்யகசிபுவை.. படீர்னு தூணைப் பிளந்து வெளில வந்து... ஆகாசம் தொடற மாதிரி விஸ்வரூபத்தோட.. தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்.. விரல்களெல்லாம் நீள நீள நகமாம்...சிம்ம முமகாம்... மனுஷ்ய உடம்பாம்.. உர்ர்...உர்ர்ர்ருன்னு கர்ஜிச்சிண்டு.. வந்து அவனோட துவந்த யுத்தம் போட்டாளாம் பெருமாள்..”
கண் திறந்த சிந்தனை. இன்னும் தீக்ஷிதர் தொடர்கிறார்
”நரசிம்மனுக்கு ஹிரண்யகசிபுவை உடனே வதம் பண்ணத் தெரியாதா? ஏன் துவந்த யுத்தம் பண்ணினார்?.. பிரஹ்லாத ஸ்வாமி ஹிரண்யகசிபு பண்ணின களேபரத்துல பயந்து போய் அவசரத்துல சாயரட்சை நாலு மணிக்கே ஸ்வாமியை பிரார்த்தனை பண்ணி கூப்டாளாம்.. பிரதோஷ வேளை வரட்டும்னு சித்த நாழி சண்டை போடற மாதிரி விளையாடினாளாம் ஸ்வாமி... அவனும் ஒருகாலத்துல இவருக்கு வைகுண்டத்துல காவல் காத்த பிரகிருதிதானே... பிரதோஷ வேளைல... மனுஷனும் இல்லாத மிருகமும் இல்லாத சரீரத்தோட..உக்கிர நரசிம்மனாய்... பகலும் இல்லாத இரவும் இல்லாத நேரத்தில.. உள்ளேயும் இல்லாத வெளியேயும் இல்லாத வாசற்படியில...உசிர் இருந்தும் இல்லாம இருக்கிற நகத்தை வச்சு... வயித்தைப் பூரி....குடலை எடுத்து மாலையா போட்டுண்டு.. வதம் பண்ணினானாம் பகவான்....”
என்ற அவரது வார்த்தைகள் காதுகளில் கணீர் கணீரென்று ஒலித்துக்கொண்டேயிருந்த போது அருகில் சங்கு ஊதினார்கள். டாங் டாங்கென்று கண்டாமணி அடித்தார்கள். கதவு திறக்கப்போகிறார்கள்.. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.. குருவாயூரப்பா... கதவு படாரென்று திறந்து ஆரத்தி காண்பித்தார்கள்....
ஆ.... என்ன அது....
நரசிம்மர்.......... மா...... தி.....ரி.... இருக்கே.......
ஆஹா... குருவாயூரப்பனுக்கு நரசிம்ம அலங்காரம். திரிநூல்களைத் தாடியாயும் பிடறி மயிறாகவும் ஒட்ட வைத்து... வாயில் சிறிது கூடுதலாக இரத்தச் சிவப்பை சேர்த்து... .ரத்ன க்ரீடமும்.. முத்துமணி மாலைகளும்.. பச்சைப் பட்டு பளபளக்க பஞ்சகச்சமும்...கழுத்தில் சம்பங்கியும் சாமந்தியும் துளசி மாலைகளும்... காலுக்கடியில் ஏராளாமான மல்லி, அரளி உதிரி புஷ்பங்களும்.. பச்சைப் பசேலென்று தரைமுழுவதும் துளிசிதளமுயாய்... உச்சியிலிருந்து இரண்டு புறமும் மூன்று மூன்று சரவிளக்குகள் ஐந்து முகம் ஏற்றி தொங்க... தரையில் இரண்டு பக்கமும் தண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஆட...கண்ணாரக் கண்டு ரசித்தேன்.
இன்னமும் கண்ணை விட்டு அகலாமல்... நரசிம்மமாய்.. நாராயணாய்.. சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியாய்... குருவாயூரப்பனாய்... கோடி சூர்யப் பிரகாசனாய்... பக்தஜன ரட்சகனாய்... ஆதியுமாய்... அந்தமுமாய்....

முருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்

நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை. தென்றல் வீசும் இளம் மாலைப் பொழுது.

பரத்தையர்களின் காமவாசம் தொலைத்து பரம்பொருளான முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் விஸ்ராந்தியாக மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
திருப்புகழ் மனதில் ஊற கண்களில் ஞானச்சுடர் ஒளிர இருப்பவரை நோக்கி கல்யாண சீர் எடுத்துச் செல்வது போன்று விதம்விதமான தட்டுக்களில் பழங்களும் பல வகையான இனிப்புகளும் பொற்காசுகளும் பட்டாடைகளுமாக தோள்களில் தூக்கிக்கொண்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கூட்டமாகச் சிலர் வந்தார்கள்.
அருணகிரிநாதர் “எங்கு வந்தீர்கள்?” என்று இதழ்களில் புன்னகை ததும்ப வினவினார்.
ஊர்வலத்தை தலைமையேற்று வந்திருந்த தலைவர் தோரணையில் இருப்பவர் “ஐயா, நாங்கள் உங்களை நமஸ்கரிக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த கந்தன் கருணையையும் அவனின் திருவருளையும் நீங்கள் எங்களுக்கும் அருள வேண்டும். பணிந்து நிற்கிறோம்” என்றார் கைகூப்பியபடி.
“இதெல்லாம் என்ன?” என்று தன் முன்னால் பரப்பி வைக்கப்பட்ட தட்டுக்களைப் பார்த்துக் கேட்டார்.
“திருவருளைப் பெற குரு தட்சிணையாகக் கொண்டு வந்தோம்” என்று மரத்தடியில் நின்றவர்கள் கோரஸாகச் சொன்னார்கள்.
விண்ணைத் தொட்ட அருணாசலேஸ்வரரின் கோபுரத்தை அங்கிருந்தே நிமிர்ந்து பார்த்தார். முருகப்பெருமானை சிறிது நேரம் மனதில் நிறுத்தினார். அவர்களைக் கூர்ந்து நோக்கினார்.
“இவற்றையெல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். பின்னர் வாருங்கள், முருகன் அருள் பெரும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.
வள்ளிமணாளனின் அருள் கிடைக்கப்போகும் அவாவில் ஓடிப்போய் எல்லாவற்றையும் வீட்டில் வைத்துவிட்டு மீண்டும் உடனே மலையடிவாரத்திற்குத் திரும்பினார்கள். அடிவானம் தங்கமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அருணகிரி திருவாய் திறந்தார். உன்னத அனுபவத்திற்கு அங்கிருந்தவர்கள் தயாரானார்கள்.
“முதல் மந்திரம் சொல்கிறேன். தடுங்கோள் மனத்தை...”
புரிந்தவர் சிலர். புரியாதவர்கள் பலர். அலைபாயும் மனத்தை தடுக்கவேண்டும். பட்டினத்தடிகள் ”அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே” என்று அங்காடி நாயாக மனதை உருவகப்படுத்தி பாடினார். பலவகையான பொருட்கள் விற்கப்படும் அங்காடிகள் இருக்கும் வீதியில் செல்லும் நாய் எப்படி கடை கடையாய் ஏறி இறங்குமோ அதுபோன்றது மனம் என்பார் பட்டினத்தார்.
ஒரு வாரம் சென்றது.
“ஐயனே! எங்களால் முடியவில்லை. வேறு எதாவது சுலபமான வழி...” என்று இழுத்தார்கள்.
“விடுங்கோள் வெகுளியை.....”.
அனைவரும் கலைந்தனர்.
ஆசாபாசங்களை வென்ற ரிஷிகளே தோற்றுப்போகும் கோபத்தை அவ்வளவு எளிதில் வெல்லமுடியுமா? சட்டென்று விடமுடியுமா? முயற்சி செய்து பார்த்தார்கள். ஊஹும். ஒரு வாரத்தில் திரும்பவும் வந்தார்கள். அவர்களது முகங்களைப் பார்த்தே அருணகிரியார் அறிந்துகொண்டார். இவர்களால் இதையும் செய்யமுடியவில்லை.
“சரி.. மூன்றாவதாக ஒரு உபாயம் சொல்கிறேன். தானம் என்றும் இடுங்கோள்..”
பிறர்க்கு தர்மம் செய்வது சுலபமா? ஒரு வீடு இருப்பவர்கள் இரண்டாக்கவும் நூறு சவரன் இருப்பவர்கள் இருநூறு சவரனாக விருத்தி செய்யவும் விரும்பும் உலகில் தனது பொருளீட்டலில் இருபது சதம் தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? செய்வதற்கு மனசு வருமா?
“சம்பாதித்ததை தர்மமாக செலவழிப்பதற்கு மனது இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது ஐயனே! என் செய்வோம். எங்களால் இதுவும் இயலவில்லையே... முருகன் அருள் கிடைக்க மிகச் சுலபமான உபாயம் சொல்லுங்களேன்.” என்று பணிந்தார்கள்.
தொங்கு தாடியும் மீசையுமாக அமர்ந்திருந்த அருணகிரியார் வெடிச்சிரிப்பு சிரித்தார். சிறிது மௌனம் காத்தார்.
“இருந்தபடி இருங்கோள்...” என்று சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென்று கிரிவலப்பாதையில் கிளம்பிவிட்டார். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். அவர் கூறிய மூன்றையும் அனுசரிக்க முடியாததால் இப்படியே இருந்தபடி இருக்கோள் என்று கோபத்துடன் அருணகிரியார் செல்கிறார் என்று பின்னால் செல்லப் பயந்து புரியாமல் விழித்தார்கள். சாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று துரத்திச் சென்று கேட்டார்கள்.
”எதுவும் உபயோகமில்லாமல் பேசாமல் மௌனமாக இருந்தபடி இருப்பது யோக நிலை. அப்படி இருங்கோள். முருகன் அருள் வீடு தேடி வரும்”
முன்பு சொன்னதையெல்லாம் தொகுத்து ஒரு பாடலாகப் பாடினார். திரும்பிப்பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.
முருகப்பெருமானின் அருள் பெற...அவனுக்கு அர்ச்சனை செய் அபிஷேகம் பண்ணு.. காவடி எடு என்றெல்லாம் அருணகிரிநாதர் சொல்லவில்லை. மனசைத் தடு... கோபத்தை விடு.. தானம் செய்.. அமைதியாய் இரு.. என்று மானுடம் வளர்க்கும் பண்புகளை பின்வரும் கந்தரலங்காரப் பாடலில் பகர்ந்தார்.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் துளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.


பின்குறிப்பு: பேராசிரியர் திரு. இரா. செல்வகணபதி அவர்களின் பெரியபுராணச் சொற்பொழிவில் கேட்டதை எனது பாணியில் ஜோடித்து எழுதினேன்.

நாராயணன் என்னும் நாமம்

இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சாம்பு மாமாவும் கோபுவும் வெறிச்சோடிக்கிடந்த தெருவின் அமைதியைக் கிழித்துத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோபுவின் கையில் காது மடிக்கப்பட்ட மாத்ஸ் புத்தகம் இருந்தது. நாளைக்கு க்ளாஸ் டெஸ்டாம். சிறிது நேரத்தில் தெருமுனையில் நுழைந்த கடலை வண்டிக்காரன் இரும்பு சட்டியில் தோசைக் கரண்டியால் வாசிக்கும் "டட்டிட்டாங்.. டடாங்.." அவர்களது பேச்சுக்கு பின்னணி இசையாக அமைந்தது.

"உங்க க்ளாஸ்ல எவ்ளோ சரவணன் இருக்காங்க?"
"ரெண்டு பேர் மாமா..."
"ரெண்டு பேரும் உனக்கு முன்னாடி போய்க்கிட்டிருக்காங்க... நீ பின்னால நடக்கிற... சரவணா... அப்டீன்னு கூப்பிடறே... அப்ப யார் திரும்பி பார்ப்பா?"
"ரெண்டு பேரும்.."
"ஏன் ரெண்டு பேரும் பார்க்கணும்?"
"ரெண்டு பேரும் சரவணன்.."
"நான் சொன்ன கதையும் அந்த மாதிரிதான் கோபு.."
கோபு சமாதானம் ஆகாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.
"கோபு லேட்டாச்சே! ஆத்துக்கு கிளம்பலை.. " என்று உள்காரியமெல்லாம் முடித்துக்கொண்டு வந்த ஜானகி மாமி கேட்டாள்.
"மாமா ஒரு கதை சொன்னார். எனக்கு சாமாதானம் ஆகலை.. அதான்..."
"என்ன கதை?" கேட்டுக்கொண்டே ஜானு மாமி திண்ணையின் அடுத்த தூணில் வந்து அக்கடான்னு சாய்ந்துகொண்டாள். வாசல் மாடத்தில் ஏற்றி வைத்திருந்த அகல் தீபம் காற்றில் ஆடியது.
"ஜானு... சொல்றேன் கேளு..." கதைக்கு இரண்டாவது நேயர் சேர்ந்து கொண்ட சந்தோஷத்தில் சாம்பு மாமா சுறுசுறுப்பானார்.
"அவன் ஒரு பாபி. கல்யாணம் பண்ணிண்ட பொண்டாட்டியை விட்டுட்டு பல துஷ்ட ஸ்த்ரீகள்கூட அவனுக்கு சகவாசம். பத்து பிள்ளை பெற்றுப்போட்டுவிட்டு இன்னொருத்தனோட பொண்டாட்டியை அபகரிச்சுண்டு போனவன்...”
“ணா.. ரொம்ப விகாரமான கதையா இருக்கே.. இதுவா கொழந்தைக்கு சொன்னேள்..”
“இல்லே. இவ்ளோ விஸ்தாரமா சொல்லலே... கேளு.. இப்படி ஆயுசு பூரா அற்ப சுகங்கள்ல கழிச்சவன் ஒருத்தனுக்கு பத்து புள்ளைக்கு அப்புறமும் ஒரு ஆண் குழந்தை பொறந்தது.... சும்பன், நிசும்பன்னு, சண்டன், கிண்டன்னு எல்லாக் குழந்தைக்கும் பேர் வச்சவன் கடைசியா பொறந்த ஆண் பிள்ளைக்கு அவனை அறியாமலேயே நாராயணன்னு பெருமாளோட பேரை வச்சான். அந்த கொழந்தை மேலே இவனுக்கு கொள்ளைப் பிரியம். எப்பப் பார்த்தாலும் நாராயணா.. நாராயணான்னு அதை மடில வச்சுக் கொஞ்சிண்டிருப்பான்... சாதம் ஊட்டுவான்... முட்டிப்போட்டு குனிஞ்சு அதை முதுகுல ஏத்திண்டு ”யானேயானே.. யானேயானே” விளையாடுவான். இப்படி நாட்கள் சௌகரியமா ஓடறது..”
“சமர்த்தாயிட்டானோ?”
”அந்தக் கொழந்தை கூட விளையாடிண்டு இருந்தப்ப.. ஒரு நாள் மூனு நாலு எமதூதர்கள்... குண்டு குண்டா.. கறுப்பு வஸ்திரத்தோட இவனை தூக்கிண்டு போக வந்துட்டா... இவன் பயந்துபோயி.. என்ன செய்யறதுன்னு தெரியாம... நாராயணா...ன்னு வாசல்ல விளையாடிண்டு இருந்த பையனை கூப்பிட்டு அலறினான். ஆனா கூப்ட மாத்திரத்தில விஷ்ணு தூதர்கள் நாலஞ்சு பேர் வைகுண்டத்துலேர்ந்து நேரா வந்து இறங்கிட்டா...எமதூததர்கள் பயந்து போய் ஓரமா ஒடுங்கி.. நீங்கல்லாம் ஏன் வந்தீங்க.. இந்தப் பாபியை நாங்க அழைச்சுண்டு போகணும். தடுக்காதீங்க..ன்னாங்களாம்..”
“அதானே... வாழ்நாள் முழுக்க கெட்ட காரியம் பண்ணிட்டு கடேசில நாராயணா சொன்னா போறுமா?”
“நீ கேட்கிறது சரிதாம்மா... ஆனா இப்ப இவன் நாராயணான்னு கதறினானே.. இதுக்கப்புறம் இவன் பாபம் செய்யறத்துக்கு அவகாசமில்லே... இவந்தான் சாகப்போறானே! தப்பு பண்ணி.. நாராயணா சொல்லி.. பாவக்கணக்கைத் தீர்த்துட்டு.. திரும்பவும் பாபம் பண்றத்துக்கு இவன் உயிரோட இருக்கமாட்டான். சாகற நேரத்துல பகவான் பேர் நியாபகம் வர்றத்துக்கே இவன் புண்ணியம் பண்ணியிருக்கணும்..”
“சாகற டயத்துல சங்கராவோ நாராயணாவோ சொன்னாப் போறும். என்ன வேணா பண்ணலாமா?”
“ச்சே...ச்சே.. இதுக்கு அர்த்தம் அது கிடையாது.... சாகற நேரத்துல நாராயணா சொல்றத்துக்கு வராது... நெஞ்சு கிடந்து பல ஆசாபாசங்களுக்கு அடிச்சுக்குமே தவிர தெய்வத்தோட நினைப்பே வராதாம். அது வந்துட்டதாலே விஷ்ணு தூதர்கள் வந்து காப்பாத்திட்டாளாம்.. நாராயணீயம் எழுதின பட்டத்திரி நாராயணனோட நாமத்தைச் சொல்லும்போது சகஸ்ரகோடி ஜென்மமா பண்ணின பாபமெல்லாம் கரைஞ்சுடும்ங்கிறார்...”
“கோபு கேட்டதையே நானும் கேட்கிறேன். நாராயணான்னு சொன்னதும் ஓடி வர்றானே பெருமாள்.. இவனோ பாபி.. இவன் கூப்பிட்ட உடனே ஏன் ஓடி வரணும்?”
தனக்கு சப்போர்ட்டாக மாமி பேசுவதைக் கேட்டதும் திண்ணை தூணுக்கு முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்த கோபுவிற்கு உற்சாகம் பிறந்தது. நிமிர்ந்து கொண்டான்.
“கோபுவும.. நீயும் லாஜிக் திலகங்கள். நல்ல கேள்வி.. பகவானோட நாமாவை பழிக்கற மாதிரி சொன்னாலும் சரி... பஜனையா சொன்னாலும் சரி... ரெண்டுமே அவனுக்கு ஒண்ணுதானாம்.. . எப்டீன்னா... இப்போ கொல்லேல வைக்கப்போர் பத்திண்டு திகுதிகுன்னு கொழுந்து விட்டு எரியறது.. நான் தெரியாம அதுகிட்டக்கே போயி கையை நீட்டிட்டேன்... சுட்டுடுத்து.. ஸப்பா.. நெருப்பு என்னை சுட்டுடுத்துன்னு அதும் பேர்ல யாராவது கம்ப்ளெயிண்ட் பண்ணுவோமா? மாட்டோம். ஏன்னா சுடறது அக்னியோட ஸ்வபாவமான குணம். அதுமாதிரி நாராயணான்னு கூப்பிட்டுட்டோம்னா காப்பாத்தறது அவனோட ஸ்வபாவம். நாம கூப்பிட்ட கணத்துலேர்ந்து அவன் ஓடி வந்து காப்பாத்துவானாம்.”
கோபுவும் மாமியும் சிரித்துக்கொண்டார்கள்.
“ம்..இப்போ கொஞ்சம் தெளிவா புரியறது.. அப்ப அந்த பாபி சாகவேயில்லையா?”
”அடுத்த பத்து நாள் கழிச்சு.. அதே விஷ்ணு தூதாள் கீழே வந்தா.. இந்த சரீரத்தை கங்கையில விட்டுட்டு.. நீ மட்டும் இந்த திவ்ய விமானத்துல ஏறி ஸ்வர்க்கத்துக்கு வந்துடுன்னு...அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்... ”
“அவன்..பாபின்னு சொல்றேளே தவிர.. அவன் யாருன்னு சொல்லலையே...”
“அவன் தான் அஜாமிளன். இது ஸ்ரீமத் பாகவத கதை....”
“மாமி.. நீங்க வந்து புரியவச்சேள்.. ரொம்ப தேங்க்ஸ்” என்று வீட்டுக்கு கிளம்பினான் கோபு.
திண்ணையிலிருந்து திருப்தியாக எழுந்து... சோம்பல் முறித்து... ”ஹே நாராயணா..” என்று கையிரண்டையும் வானத்தைப் பார்த்துத் தூக்கிச் சத்தமாகக் கூப்பிட்டார். நாலு வீடு தாண்டி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த கோபு நாராயணன் நாமம் கேட்டுத் திரும்பியவுடன் “குட் நைட்” என்று சிரித்தார் சாம்பு மாமா!

குத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே!

பட்டினத்துப்பிள்ளை ஒரு மண்டலம் மத்தியார்ஜுனம் என்று அழைக்கக்கூடிய திருவிடைமருதூரில் தங்கி.. சிவநாமா சொல்லி... தபஸ் பண்ணினார். தினமும் மனதை ஒருமுகமாகக் குவித்து மகாலிங்கத்தைத் துதிப்பார். அப்புறம் கொஞ்ச நாழில அப்படியே சமாதி நிலைக்குப் போய்விடுவார். இப்படி தினமும் நடக்கும். அப்போதைய ராஜா ஒருத்தன் நித்யமும் பட்டினத்துப்பிள்ளையிடம் ஆசீர்வாதம் வாங்க ஆவலா வருவான். முக்கால்வாசி நேரம் அவர் சமாதி நிலையிலே இருப்பார். பக்கத்துலேயே பொறுமையா நின்னு பார்த்துட்டு அரண்மனைக்கு போய்டுவான்.

ஒரு நாள் அவன் வர்ற வேளையில இவர் கண்ணைத் தொறந்துண்டு தேமேன்னு உட்கார்ந்திருந்தார். ராஜாவும் வந்து பக்கத்துலேயே நின்னுண்டிருந்தார். திரும்பி நம்பளைப் பார்த்து ஆசீர்வாதம் பண்ணுவார்னு நிக்கறான்..நிக்கறான்... அவர் கண் பார்வை எங்கேயோ நிலைகுத்தி இருக்கு. இவனைக் கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராஜாவுக்கு தான்னு அகங்காரம். மூக்கு மேலே கோபம் வந்தது. “இந்த தேசத்து ராஜா நா... இவ்ளோ நேரம் நிக்கறேன்.. என்னைத் திரும்பி பார்க்கலை. நீரும் உருப்படியா எதுவும் செய்யறா மாதிரி தெரியலை..இப்படி என்னையும் பார்க்காமே.. ஆசீர்வாதமும் பண்ணாமே.. என்னத்தை நீர் கண்டீர்?”ன்னு சுள்ளுன்னுக் கேட்டான். பட்டினத்துப்பிள்ளை “நான் உட்கார நீ நிற்கக் கண்டேன்”ன்னு மந்தகாசமாச் சிரிச்சாரம்.
இப்படி பல நாள் தபஸ்ல ஒரு நாள் அர்த்தஜாமத்துல சமாதிலேர்ந்து விழிப்பு வந்தது. சரீரத்துக்கு பலம் வேண்டி... சாப்பிடணும்னு தோணித்தாம். பிக்ஷை எடுத்து சாப்பிடலாம்னு வீதிக்கு போனார். அமாவாசை மாதிரி தெருவே இருண்டு கிடக்க... ஒரே ஒரு வீட்ல மட்டும் வெளக்கு எரிஞ்சது. கடகடன்னு குத்துக்கல் ஏறி படிதாண்டி ரேழி வரைக்கும் போயிட்டார். அங்கே தூண்ல சாஞ்சிண்டு கையை ஏந்திண்டு பிக்ஷைக்கு நின்னார். திடீர்னு அப்படியே சமாதிக்கு போயிட்டார். அந்த வீட்ல அப்பதான் திருடன் கொள்ளையடிக்க கன்னம் வச்சுட்டானு கொல்லைப்பக்கமா அஞ்சாறு பேர் துரத்திண்டு ஓடியிருக்கான். வாசல் திண்ணையில தூக்கம் வராம படுத்திண்டிருந்த பசங்களும் கிளம்பி கிழக்கு மேற்கா ஓடினான்கள்.
அப்படி ஓடிண்டிருந்த பசங்கல்ல ஒருத்தன் ரேழியைப் பார்க்கும் போது பட்டினத்துப்பிள்ளையைப் பார்த்துட்டான்கள். கையை நீட்டிண்டு சமாதில நின்னவரைப் பார்த்ததும் “டேய் எல்லோரும் ஓடிவாங்கோ... திருடன் ஆம்புட்டுனுட்டான்.. வந்து அடிங்கோடா...”ன்னு கூப்பாடு போட்டான். எல்லாருமா சேர்ந்து அடிச்சான்கள். அவர் வாயே பேசலை. எல்லாத்தையும் வாங்கிண்டார். கை ஓஞ்சு போனப்புறம் நிறுத்தலாம்னு சுத்தி நின்னு அடிச்சிண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்துல விவேகி ஒருத்தன் “டே.. இவ்ளொ அடி அடிக்கிறோம்.. அப்படியே நிக்கறானே.. யோகியா இருப்பானோ...”ன்னு சந்தேகம் கிளப்பினான். எல்லோரும் பயந்து போயி உடனே நிறுத்தினான்கள்.
தலையைக் குனிஞ்சுண்டே “எல்லாரும் அடிச்சு முடிஞ்சாச்சா?”ன்னு கேட்டார். ஒரு பயலும் வாயைத் திறக்கலை.
தனது வலதுகையால இடது முதுகுல பொளேர் பொளேர்னு அஞ்சாறு தடவை அறைஞ்சுண்டார். எல்லோரும் வச்ச கண் வாங்காம அவரையே பார்த்துண்டிருந்தான்கள்.
“இவ்ளோ வருஷத்துக்குப்புறமும்.. இந்த அர்த்தராத்திரிலே... மகாலிங்கம் எனக்கு என்ன பாடம் சொல்லிக்கொடுக்கறான்னா.. இனிமே குத்துக்கல் ஏறி பிச்சைக்கேக்காதேடா பாபின்னு....”ன்னு சொல்லிண்டே வீதியில இறங்கி விடுவிடுன்னு நடந்து போயிட்டாராம்.
பின்னால ஒரு நாள் அதே மகாராஜா அவரைத் தேர் கொண்டு வந்து அரண்மனைக்கு அழைச்சானாம். “நா இனிமே குத்துக்கல் ஏற மாட்டேன். வேணும்னா என் காலைக் கேட்டுக்கோ”ன்னு திரும்பி தபஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாராம்.
உள்ளுக்குள்ள சத் வஸ்துவைப் பார்க்கணும்னு வைராக்கியம் வந்தவனோட சரீரத்துக்கு சாப்பாடுன்னு ஒண்ணு வேணுமா?ன்னு ஆத்ம கேள்வியை எழுப்பிக் கொண்டு.... விடை தேடும்முன் சமாதி நிலையில் சிலையானார்.

அடிக்குறிப்பு: Inspired by Sri Anantharama Deekshithar's Discourse on Bhagavatha Sapthaagam!

ஓம் நமோ வாசுதேவாய:

”நீர்க்க ஒரு டம்பளர் குடும்மா” என்று இரவு டிஃபனுக்குப் பிறகு சாம்பு மாமா தன் தாயாரிடம் கேட்டு வாங்கி மோர் குடித்தார். “இன்னுமா கோபு வரலே...” என்று கேட்டுக்கொண்டே சமையல் உள்ளிருந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. தூங்கி வழிந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர்களோடு அரசுப் பேருந்து கடமுடாவென்று கடந்து போனது.

”மாமா.. சாப்டாச்சா?” சரக்கென்று சைக்கிளிலிருந்து ப்ரேக் போட்டு நேரடியாக திண்ணையில் இறங்கினான் கோபு.
“வெத்தலை வாங்கிண்டு வந்தியாடா?”
“இதோ....” ந்யூஸ்பேப்பர் சுற்றிய பாக்கெட்டை நீட்டினான்.
ஈர வெற்றிலையை வேஷ்டியில் துடைத்து காம்புகளைக் கிள்ளி எறிந்துவிட்டு உள்ளங்கையில் வைத்துச் செல்லமாகப் புரட்டினார். ஆட்காட்டி விரலில் கொஞ்சமாக வாசனைச் சுண்ணாம்பு எடுத்து மை போல பாங்காகத் தடவினார். ஸ்பெஷல் சீவலையும் கொஞ்சம் பாக்கையும் அள்ளிப் போட்டு மடித்து வாய்க்குள் தள்ளிய பின்னர் அவர் கண்களில் சொர்க்கம் தெரிந்தது.
“மாமா.. இன்னிக்கி எதாவது கத இருக்கா?”
“ம்...நீ ஓடிப்போயி வெத்தலை வாங்கிண்டு வர்றத்துக்கு கூலியே கதைதானேடா... சொல்றேன்..”
“இண்ட்ரெஸ்ட்டிங்கா ஒண்ணு சொல்லுங்கோ”
“உத்தானபாதன் சுநீதின்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு தடவை கல்யாணம் ஆகியும் பொட்டிப் பாம்பா அடங்காம சுருசின்னு இன்னொருத்தியையும் இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்...”
“உத்தானபாதன் யாரு மாமா?”
“அவன் ஒரு ராஜா. ஸ்வாயாம்பு மனுவோட பையன்... சுநீதி கர்ப்பமானாள். பின்னாலயே சுருசியும் கர்ப்பம் தரித்தாள்... உத்தானபாதனுக்கு இளையாள் மேலே பிரியம் ஜாஸ்தி... அவளோட அந்தப்புரத்திலேயே கிடந்தான். அப்படி கிடக்கும்போது ஒரு நாள் சுருசி கேட்டா... ராஜா.. இப்போ சுநீதியும் புள்ளையாண்டிருக்கா.. அவளுக்கு பிள்ளை பொறந்துதுன்னா அவ பையனைக்குதானே ராஜ்ஜியம்?”
“பொறக்கறது ஆம்பிளையா பொம்பளையான்னு அந்தக்காலத்துலேயே முன்னாடியே தெரியுமா மாமா?”
“இல்லடா... அதெல்லாம் தெரியாது.. சுருசி வம்பா கேட்டப்புறம்.. ராஜா என்ன பண்ணினான்... பொறக்கறத்துக்கு முன்னாடியே ஏன் நாம்ப அதைப் பத்திக் கவலைப்படுவானேன்னு... சுநீதிக்கு ஆம்பிளையாப் பொறந்தா காட்டுக்கு விரட்டி அடிச்சுடலாம்ன்னு சுருசிக்கு சமாதானம் சொன்னான்...”
“ஆம்பிளையே பொறந்திருக்குமே?”
“ஆமாம். சுநீதிக்கு துருவன் பொறந்தான்... பச்சக்கொழந்தைன்னும் பார்க்காமே.. உத்தானபாதன் ரெண்டு பேரையும் நாட்டி விட்டு அடிச்சுத் துரத்திட்டான். ரெண்டு பேரும் அழுதுண்டே காட்டுக்கு வந்து சில வருஷங்கள் இருந்தாங்க...”
“துருவன்னா? நட்சத்திரமா இருக்கான்னு சொல்லுவாளே.. அவனா?”
“ஆமாம். மேலே கேளு. துருவன் வளர்ந்து அஞ்சு வயசாச்சு. காட்டுல பசங்க கூட விளையாடிக்கிட்டே இருந்தான். தீபாவளி வந்தது. பசங்களெல்லாம் பட்டுக் கட்டிண்டு பட்டாசு வெடிச்சுது...”
“அப்பவே தீபாவளியெல்லாம் உண்டா?”
“ஒரு விசேஷம் வந்தது. தீபாவளின்னு வச்சுப்போமே..கதைக்கு இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்..”
“சரி சொல்லுங்கோ..”
“அப்போ... துருவன் அம்மாக்கிட்டே ஒடிப்போயி.. எல்லோரும் பட்டு கட்டிக்கறா எனக்கும் வேணும்னு கேட்டான். உடனே சுநீதி.. அப்பா எங்கிட்டே பட்டு வஸ்திரம் வாங்க காசு இல்லேடா.. ஆனா உன்னோட அப்பாதாண்டா இந்த நாட்டுக்கு ராஜா.. அவர் கிட்டே போனா கிடைக்கும்னு சொன்னாளாம்..”
“பையன் நாட்டுக்கு ஓடினானா?
“ஆமாம். ஆனா அரண்மனைக்குள்ளே விடமாட்டேன்னு காவலாளியெல்லாம் தடுத்தானுகள். ராஜ சிசுன்னு அதோட முகக்களை சொல்லித்து. ஒரு வயசான காவலாளி.. டேய் இதைப் பார்த்தா ராஜகளையோட இருக்கு. இதுவே நாளைக்கு நமக்கு ராஜாவானாலும் ஆகும். உள்ளே அனுப்பிடுவோம். பின்னால பார்த்துக்கலாம்னு எல்லார்ட்டேயும் நைச்சியமாப் பேசி அரண்மனையோட சபா மண்டபத்துக்குள்ளே துருவனை அனுப்பிட்டான் ...”
“துருவன் போய் அப்பா ராஜாவைப் பார்த்தானா?”
“பிரம்மாண்டமான மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சான். உத்தானபாதன் பக்கத்துல சுருசி. ரெண்டு பேரும் பட்டு பீதாம்பரம் கட்டிண்டு பிரமாதமா உட்கார்ந்துருக்கா.. நடுவுல சோமாஸ்கந்தர் மாதிரி அவா பையன் உத்தமன் உட்காண்டிருந்தான். துருவன் இதைப் பார்த்துட்டு இருபது முப்பது படியேறி ராஜா பக்கத்துல உட்கார்ந்துக்க ஓடினான். உடனே சுருசி அவனைப் பிடிச்சு கீழே தள்ளினா... டமடமன்னு பதினைஞ்சு படி உருண்டு கீழே விழுந்தான் துருவன். எழுந்து நின்னுண்டு அப்பா பக்கத்துல நா உட்காந்துக்கணும்னு அதிகாரமா கேட்டான்...”
“பாவம் மாமா! சின்னப் பையன்..ச்சே... அவளும் ஒரு அம்மாதானே!”
“கேளு... துருவன் கேட்டத்துக்கு சுருசி.. காட்டுக்கு போயி நாராயணனை ஸ்தோத்ரம் பண்ணு. அவன் காட்சி கொடுத்தா.. என்னோட வயத்துல நீ புள்ளையா பொறக்கணும்னு வேண்டிக்கோ.. அப்ப பார்க்கலாம்னு விரட்டினாள்”
“கொழந்தை காட்டுக்கு வந்து அம்மாட்ட அழுதான். நாம என்ன தப்பு பண்ணினோம். என்னை ஏன் அரண்மனையிலிருந்து விரட்டினா?ன்னு விக்கி விக்கி அழுதான். அதுக்கு சுநீதி அழாதேப்பா.. நீ என் வயத்துல பொறந்து என் பாலைக் குடிச்சியோன்னா.. அந்தப் பாபம்டா இது.. நான் எந்த ஜென்மத்துல எந்த குடும்பத்தை பிரிச்சோனோ.. அது தொடர்ந்து வருதுடான்னு சொல்லிட்டு மூஞ்சில அறைஞ்சுண்டு அழுதா...”
“ரொம்ப வருத்தமா இருக்கு.. மாமா..”
“நான் என்ன பண்ணனும் இப்போ.. அந்த நாராயணன் எப்ப வருவார்னு கேட்டான் துருவான்.. அதுக்கு சுநீதி.. கொழந்தே நீ நிர்ஜனமானக் காட்டுக்குப் போயி தபஸ் பண்ணினா நாராயணன் வருவார்னு சொன்னா.. உடனே விறுவிறுன்னு நிர்ஜனமான காட்டுக்குள்ளே புகுந்து இப்ப எப்படி நாராயணனைக் கூப்பிடறதுன்னு யோசிச்சுண்டு நின்ன துருவனுக்கு நாரதர் காட்சிகொடுத்தார். அவர்கிட்டே துருவன் நாராயணனை எப்படிப் பார்க்கலாம்னு கேட்டார்... நாரதர்.. ஓம் நமோ வாசுதேவாய:ன்னு மூல மந்திரத்தை உபதேசம் பண்ணினார். அடுத்த கணமே தபஸை ஆரம்பிச்சானாம் துருவன்”
“அவ்ளோ குட்டிக் கொழந்தையா இருந்தாலும் பயமில்லையா துருவனுக்கு?”
“ஊஹும்.. அவம்மா பயப்பட்டாளாம். அவள்ட்ட நாராயணன் நாமம் சொல்லும் போது புலி சிங்கம் கரடியெல்லாம் என்னை நெருங்கிக் கடிக்குமான்னு தைரியம் சொல்லிட்டு தபஸை ஆரம்பிச்சார்... நாலு மாசமா பண்ணினார். அஞ்சாவது மாசத்துலேர்ந்து தபாக்கினி மேல் லோகத்தை சுட்டுப் பொசுக்க ஆரம்பிச்சது. எல்லோரும் நாராயணன் கிட்டே ஓடினாங்க.. யாரும் பயப்பட வேண்டாம். துருவனோட தபம்தான் இப்படி சுடறதுன்னு விஷ்ணு அபயம் அளிச்சார்..”
“தவம் பண்ணினா மேல்லோகம் பத்திக்குமா மாமா?”
“ஊஹும். வீரியம் அவ்ளோ பெரிசு. கால் அமுக்கி விட்டிண்டிருந்த லக்ஷ்மி விஷ்ணுவை ஏன் சுடறத்துன்னு கேட்டா. அதுக்கு நாராயணன் என்னோட பக்தன் ஒருத்தன் தபஸ் பண்றான். அதுதான் இவ்ளோ சூடா இருக்குன்னார். உங்க பக்தன் அங்கே பூஜை பண்ணும்போது உங்களுக்கு இங்கே என்ன வேலைன்னு கேட்டாள் லக்ஷ்மி. திருமால் விழிச்சார். தேவி மேலும் அவனுக்கு எவ்ளொ வயசாகறதுன்னு கேட்டாள். நாராயணன் சிரிச்சுண்டே அஞ்சு வயசுன்னார். லக்ஷ்மிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து அஞ்சு வயசேயான உம்ம பக்தன் அங்கே தபஸ் பண்றான்.. நீர் இங்க வந்து ஒய்யாரமாப் படுத்துண்டு பொழுதைக் கழிக்கிறேள்னு... திட்டினாள். “
“தாயார் தாயார் மாதிரிக் கேட்ருக்கா...”
“ஆமாம். அதுக்கு நாராயணன் அங்கே தபஸ் பண்றவன் ராஜாவோட பையன். நான் உடனே ஓடிப்போயி கவனிச்சா ஸ்வாமி கூட பணக்காரனா இருந்தா உடனே வரார்னு ஊர்மக்கள் நினைக்குமே...”
“கெட்டுது.”
“தாயார் சிரிச்சாளாம். புறப்படுங்கோன்னு பெருமாளை விரட்டினாள். அவர் வந்து துருவனுக்கு நெடுநாள் பூமியை ஆளும் வரம் கொடுத்தார்.”
“கதை முடிஞ்சுதா?”
“இப்பதான் சுவாரஸ்யமே இருக்கு.. தவத்தை முடிச்சிண்டு காட்டுலேர்ந்து வர்ற புத்ரனை வரவேற்க உத்தானபாதனும் சுருசியும் கூட எல்லையிலே காத்திருந்தாளாம். அவம்மா சுநீதியும் இருந்தாளாம். தவம் முடிஞ்சு வர்ற பையனைக் கட்டிக்கணும்னு வந்த சுநீதியை உதறினானாம் துருவன். தூக்க வந்த அப்பா உத்தானபாதனையும் தள்ளிவிட்டு..நேரே சுருசியின் கால்ல போயி விழுந்தானாம். அம்மா நீ என்னை பிடிச்சுத் தள்ளாட்டா.. எனக்கு நாராயணன் தரிச்னம் கிடைச்சிருக்குமான்னு அழுதானாம் துருவன்...”
“இப்படி சோதிச்சு ராஜாங்கம் குடுக்கறத்துக்கு பதிலா அப்பவே கொடுத்துருக்கலாமே”
”பக்தி எந்த வயசுலையும் வரலாம்.. அப்படி வந்து ஸ்வாமியை வேண்டினா... தாயார் குச்சிப் போட்டு அவரை நம்மகிட்டே அனுப்பி அருள்பாலிப்பாள். ”
கடைசி பஸ் அமைதியாக பஸ்டாண்ட் சென்றது. கோபுவிற்கு கண்ணில் லேசாகத் தூக்கம் எட்டிப்பார்த்தது. மாமா மொத்தமாக வெற்றிலையை வெளியே துப்பிவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த சொம்பிலிருந்து ஜலமெடுத்து வாய் கொப்பளித்தார்.
“குட் நைட் கோபு. நாளைக்கு வேற கதை.. சரியா?”
“தாங்க்ஸ் மாமா!”
பின் குறிப்பு: இன்னும் விஸ்தாரமாகச் சொல்லலாம். நேரமில்லை. மன்னிக்கவும்.

பாதி குடிச்ச சுருட்டு

ஒரு ஓட்டு வீடு பத்திக்கிச்சாம். வீடு பூரா எரிஞ்சு சாம்பலாயிடிச்சு. வீட்டோட ஓனர் வாசல்ல நின்னு ஓன்னு அழுதுக்கிட்டிருந்தானாம். அவனோட குடும்பமும் சேர்ந்து அழுதுச்சாம். சம்பந்தமே இல்லாம ஒருத்தன் அங்க வந்து நின்னு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சானாம். நீ ஏம்பா அழுவுற? இது உன்னோட வீடுமில்ல... அழறவங்க உன்னோட ரிலேடிவ்ஸ்ஸும் இல்ல.. ஸோ நீயும் சேர்ந்து ஏன் அழுவுற...ன்னு கேட்டாங்களாம்... அதுக்கு அவன் சொன்னான்..
இல்லே... அந்த வடக்குக் கூரை ஓடோட கடைசி வரிசைல என்னோட பாதி குடிச்ச சுருட்டு ஒண்ணு சொருகி வச்சிருந்தேன்.. அதுவும் சேர்ந்து மொத்தமா எரிஞ்சு போச்சேன்னு துக்கத்துல அழுவறேன்னு சொன்னானாம்...
அடி செருப்பால..ன்னு துரத்திக்கிட்டு போய் எல்லோரும் போட்டுச் சாத்துணாங்களாம்....
”அச்சச்சோ பெரிய ப்ராப்ளமா இருக்கே”ன்னு நினைச்சு நாம வருத்தப்பட்டுக்கிட்டிருக்கும் போது பக்கத்தில் வந்து நின்று கொண்டு பிசாத்து ப்ராப்ளத்துக்கெல்லாம் நொந்து போயி பினாத்துபவர்களைக் கண்டதும் மேற்கண்டவைகள் நியாபகம் வந்தது. என்னுடைய நண்பர் சுரேஷ் இதை ஒரு தெலுங்கு பழமொழியாக அறிமுகம் செய்தார்.

ஊட்டி விடும் ஆப்

ஈக்காட்டுதாங்கல் அருகே வந்துகொண்டிருந்தேன். மை டியர் சேப்பாயியை உரசுவதுபோல இருவீலர் ஒன்று புயலாய்க் கடந்தது. படுத்து எழுந்து கழைக்கூத்தாடி வித்தைக் காட்டி முன்னால் சென்றவர் ஸ்விக்கி என்கிற ”வீட்டுக்கு வீடு உணவு விநியோகம்” செய்யும் ஆப்காரர்.
வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் சாப்பிடுவது சோம்பேறித்தனம் என்றால் அந்த ஹோட்டலுக்கு கூட செல்லாமல் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வீட்டு.. டிவியை அணைக்காமல்... சோஃபாவை விட்டிறங்காமல்... வயிற்றை நிரப்புவது கனிந்த வாழைப்பழ சோம்பேறித்தனம். WFH, பிக்பாஸ்கெட்டில் மளிகை சாமான், ஸ்விக்கியில் உணவு, நெட்ஃப்ளிக்ஸில் சினிமா என்று படிதாண்டா பத்தினிகளாகவும் பத்தினர்களாகவும் வாழ ஆரம்பித்துவிட்டால்.... எப்பவாவது யாராவது அவசரமாகத் தெருமுனையில் இறக்கிவிட்டால்கூட வீட்டுக்கு வழிதெரியாமல் தொலைந்து போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஜாக்கிரதை!
வாழைப்பழம், ஸ்விக்கி, திண்ணையில் பல் குத்திக்கொண்டு வாங்கியாரச் சொல்லி சாப்பிடுவது போன்ற தொடர் சிந்தனையில் இருந்தபோது...
“தம்பி ரெண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வா...” கேட்ட கவுண்டமணியிடம் ஒன்றைத் தின்றுவிட்டு மற்றொன்றைக் கொடுத்து.... பேய் முழி முழித்து.... “இன்னோன்னு எங்கடா?” என்று அவரைக் கதற வைத்து.... “அதாண்ணே இது...” என்று விழி பிதுங்க அசால்ட்டாய்ச் சொன்ன டகால்டி செந்தில்கள் இல்லாத ஸ்விக்கிதானே... என்று நண்பருக்கு டெலிவரி செய்த ஸ்விக்கியாள் ஒருவரிடம் கேட்டது ந்யூரான்களில் நீந்தி நினைவுக்கு வந்தது.
”எங்களிடம் பிரியமான உணவை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வாங்கி வந்து ஊட்டி விடுவோம்” என்ற தாரக மந்திரத்திடன் இன்னொரு ஆப் வரும்வரை இந்த ஸ்விக்கியை வாயாரவும் வயிறாரவும் ஆதரிப்போம்! 

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails