Tuesday, May 11, 2010

ரப்பர் மேன்

தற்காலத்து நவீன சுந்தரிகள் காதுகளில் அணியும் அளவிற்கு ஒரு சிறிய வளையத்துக்குள் தலையை உள்ளே நுழைந்து வெளியே வந்துகொண்டிருந்தது அந்த சிறுமி. பக்கத்தில் மேளம் அடித்து,  தவழ்ந்து தரை மண்ணை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும் ஒரு பாலகனை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த சிரிக்காமலே கன்னங்களில் குழி விழுந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி. மக்களுக்காக சிரித்து, பவுடர் பூசி, பச்சை ஃபிரேம் போட்ட கருப்பு கண்ணாடி அணிந்து அந்த கூண்டு வண்டி கூம்பு ஸ்பீக்கர் பாடிய "கரிகாலன் காலைப் போல..."வுக்கு ஆடிக் கொண்டிருந்தான் அந்த சிகப்பு அரைக்கை சட்டை, கருப்பு பேன்ட் போட்ட குடும்ப தலைவன். இதுபோல் பாட்டுக்கு ஆடி, வளையத்துக்குள் நுழைந்து, கம்பி மேல் நடந்து வேடிக்கை காட்டுவோருக்கு ஐந்து, பத்து என்று தட்டுகளில் சில்லரை விழும். இப்போதெல்லாம் இவர்கள் யார் கண்ணிலாவது தென்படுகிறார்களா என்று தெரியவில்லை.


மக்கள் ஒரு குழுவாக, கூடாரமிட்டு சிங்கம், புலி, யானையுடன் சேர்ந்து கொண்டு இதைவிட கொஞ்சம் பெரிய கூட்டம் சேர்த்துக் கொண்டு உயரத்திலிருந்து குதித்து, சுற்றும் கட்டையை வாயில் கவ்வி சுற்றிக் கொண்டே மேலேறி சென்று,  சிங்கத்தின் வாயில் தலையை விட்டு எடுத்து, பெரிய யானையை ஒரு சிறிய முக்காலியில் உட்காரவைத்துக் காட்டினால் அதற்க்கு சர்க்கஸ் என்று பெயரிட்டு, கட்டணம் கட்டி, சீட்டு வாங்கி, பெஞ்சுகளில் அமர்ந்து கைதட்டி ரசிக்கிறோம். இந்த இரண்டு கலைகளுமே இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்ட நிலையில் இருக்கிறது. மேலே இருக்கும் படத்தில் அச்சு அசல் கஜமுகனே உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. ஆனால் அந்த காதருகில் தொங்கும் கவர்ச்சிக்கன்னி தான் லாஜிக்கை கொஞ்சம் இடிக்கிறாள்.

இது போல் ஒரு குரூப் ஆக இல்லாமல், தனி ஒருவராக கொஞ்சம் குதித்தும், அக்கம் பக்கம் இருக்கும் சுவர்களில், கதவுகளில், கட்டிடங்களில், கூரைகளில் ஏறியும் காண்பிக்கும் வித்தைக்கு பார்கூர்  (Parkour) என்று பெயர். இது கிட்டத்தட்ட குற்றாலம், வண்டலூர் மற்றும் "ஆட்ரா ராமா... ஆட்ரா ராமா..." என்று தெருத் தெருவாக குச்சி ஆட்டி காட்டப்படும் நமது மூதாதையர்கள் போல நிறைய செயல்கள் செய்யவேண்டும். வெளிநாடுகளில் அநேகம் பேர் இதை ஒரு கலையாக பயிற்சி பெறுகிறார்கள்.  மேலும் இதை பல நாடுகளில் இராணுவத்தில் ஒரு பயிற்சிமுறையாக கூட பின்பற்றுகிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் போது நடு நடுவே ஏற்படும் தடைகளை நம்ம கேப்டன் விஜயகாந்த் செய்வது போல பக்கச் சுவர்களில் காலை வைத்து ஏறி, குதித்து மீண்டும் ஓட வேண்டும். காலை பின்னால் தூக்கி பத்து பேரை அடிக்கெல்லாம் கூடாது. நாக்கை தொங்கப் போட்டு ஒரு அரை கிலோ கறி நம்மிடம் எடுக்க ஒரு நாய் துரத்தினால் நாமும் பார்கூர் 'உடுக்கை இழந்தவன் கைபோல' செய்வோம். தொடர்ந்து ஓடிக்கொண்டே தாண்டியும், ஏறியும் முன்னோக்கியும் சென்றுகொண்டே இருக்கவேண்டும். 

'சிவாஜி' ரஜினி கூட ஒரு காட்சியில் இதுபோல் ஓடிக்கொண்டே தன்னை துரத்துபவர்களை அடிப்பார். விஜய், அஜித், சரத், விஜயகாந்த், ரஜினிகாந்த் என்று பாகுபாடு இல்லாமல் நம்முடைய பல கோலிவுட் ஆதர்ஷங்கள் இந்த சாகச விளையாட்டுகளை/வித்தைகளை டூப் போட்டு நமக்கு வெள்ளித்திரையில் காட்டுகிறார்கள். இன்னும் சில 'நிஞ்சா' படங்களில் இந்த மாதிரி மரத்துக்கு மரம், கோபுரத்துக்கு கோபுரம் ஏறி "நரி ஊளையிட்டு' சண்டைபோடும் காட்சிகள் நிறைய பார்த்திருக்கிறோம். நம்ம 'மெகா பட்ஜெட்' ஷங்கர் கூட அந்நியனில் வரும் அந்த கராத்தே சண்டைக் காட்சியை இதுபோல் படம் பிடித்திருப்பார்.

இந்த பார்கூரை மிக அநாயாசமாக செய்யும் டேமியன் வால்டேர்ஸ்ன் ஒரு வீடியோ காட்சி கீழே உங்கள் பார்வைக்கு. இவர் சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் போல ரப்பர் மேன். உங்கள் பார்வைக்குன்னு சொன்னா அது உங்கள் பார்வைக்கு மட்டும் தான்  ஏன்னா, இந்த வீடியோவில் ஒரு இடத்தில் ஒரு எம்பு எம்பிக்  குதித்து கார் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக காரினுள் உட்காருவார் பாருங்கள் அத்தனை அதி அற்புதமான சீன். நம்ம கோடம்பாக்கம் ஆசாமிகள் யார் கண்ணிலாவது பட்டுவிட்டது என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். அடுத்த எறா, நகல், ராமண்ணா, ஜிலேபி போன்ற படங்களில் அதைப் பார்த்து புண்பட்டு போவீர்கள். அதோடு மட்டுமல்லாமல் "சூரிய" தொலைக்காட்சி அதை விற்க எடுத்தால் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை நிமிடதிற்க்கொருதரம் திரும்ப திரும்ப போட்டு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள். ஜாக்கிரதை.


2 comments:

Madhavan Srinivasagopalan said...

Your style of writing is really good.

eg..
"மேலே இருக்கும் படத்தில் அச்சு அசல் கஜமுகனே உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. ஆனால் அந்த காதருகில் தொங்கும் கவர்ச்சிக்கன்னி தான் லாஜிக்கை கொஞ்சம் இடிக்கிறாள்.//

//தற்காலத்து நவீன சுந்தரிகள் காதுகளில் அணியும் அளவிற்கு ஒரு சிறிய வளையத்துக்குள் தலையை உள்ளே நுழைந்து வெளியே வந்துகொண்டிருந்தது அந்த சி....//

RVS said...

Thanks Madhava!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails