Thursday, May 27, 2010

அ.க-யிலிருந்து வனிதாவிற்கு....

"ஷ்ஷ்ஷ்.... டும்.. .ஷ்ஷ்ஷ்.... டும். டும் ..." என்று வானவேடிக்கை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  பொதுவாக பத்து மணிக்கு ஊரையே இருளாக்கி வேறு ஃபேஸ் மாற்றி வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போதுதான் வெடிச் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று ஒன்பதரை "கணேசா ரோடுவேஸ்" பஸ் ஸ்டாண்ட் போகும்போதே  வேட்டுப் போடத் துவங்கிவிட்டார்கள். காய்ந்துகொண்டிருந்த முழு  நிலவை மூடி வானம் கருத்திருந்தது காரணமாயிருக்கலாம். வெங்காயத்துடன் தயிர் சாதம் சாப்பிட்டு வீட்டு வாசல் படியில் தேமேன்னு உட்கார்ந்து உள்ளே ஐந்து ஆறு பேர் பயணிக்கும் மங்கிய மஞ்சள் வெளிச்சம் உள்ள அரசு பஸ்களையும், தார்ப்பாலின் போர்த்தி நிறை மாதமாக சென்ற லாரிகளையும், காலையிலிருந்து மாலை வரை மேய்ந்ததை அசைப் போட்டு மெதுவாக ஒற்றையாகச் செல்லும் தங்கராசுக் கோனார் வீட்டு "லெட்சிமி"யையும் பார்த்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். ஒரு உற்சாகபானம் அருந்திய பெருசு உடல் அலுப்பு நீங்க முழு "தாக"சாந்தி செய்துவிட்டு "டாய்... --------ஓளி உன்ன தூக்கி போட்டு மிதிக்காம விடமாட்டேன்டா. அம்மணமாக்கி அந்த இடத்தில மிதிக்கலை... வச்சுக்கரண்டா உன்ன... -------மவனே" என்று எதிரியின் அம்மாவை சகட்டுமேனிக்கு வம்பிகிழுத்து திட்டி, காற்றில் ஆள்காட்டி விரலை "கொன்னுடுவேன்" காட்டி ஆட்டி, வேஷ்டி கொண்டு ரோடு பெருக்கி தெருவின் நிசப்தத்தை கிழித்தபடி சென்றது. காலையில் பேசும்போதே "டேய்.. ராத்திரி திருவிழாவுக்கு நாம போறோம்.. ரெடியாறு.." என்று கண்ணடித்து சொன்னான் சிவா.
 
"யே. ரெடியாடி..." என்று உரக்க பக்கத்து வீட்டு ஈஸ்வரியை கூப்பிட்ட அங்கயர்க்கரசி பச்சைப் பாவாடையும், சிகப்பு தாவணியுமாய் கோயிலுக்கு போக ரெடியான போதுதான் தெரிந்தது போன பாராவின் சிவாவின் திட்டம். கொஞ்ச நாட்களாக அ.க வீட்டிற்கு முன்னால் சிவாவின் சைக்கிள் தானாக மணியடித்து வளைந்து சென்றதன் மர்மம் கார்த்திக்கு இப்போது விளங்கியது. ஒரு ஐந்தாண்டு திட்டம் போல நேரம் காலம் வகுத்து கடமை தவறாமல் காலை மாலை இருவேளையும் கருத்தாக கார்த்தியை பார்க்க வருவான் சிவா. அ.க வீட்டிலிருந்து வலது கைபக்கம் ஈஸ்வரி, டீ கடை பாபு, ஆர்டிஸ்ட் இளங்கோ, ராஜி டீச்சர் வீட்டிற்கு அடுத்தது கார்த்திக்கின் வீடு. சிவா கார்த்திக்கை பார்க்க வரும்போதெல்லாம் வாசலில் நின்று தெருவின் இடது கோடியை கர்ம சிரத்தையாக கவனிக்கும் அ.க வை அப்போதெல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை கார்த்திக்கால்.

"யானை... மணி.." பழமொழிபோல "ட்ரிங்..ட்ரிங்..." ஒலிக்க வந்தான் சிவா. தெருக்கோடி செல்லும் வரையில் கழுத்து வலிக்க திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள் அ.க. "டேய் ஏறுடா.. லேட் ஆயிடிச்சி..." என்று கால் ஊன்றி அரை வட்டம் அடித்து சைக்கிளை திருப்பி நிறுத்தினான். முன் பாரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு வண்டிக்கும் மற்றொரு வண்டிக்கும் கடைபிடிக்க வேண்டிய பத்து மீட்டர் தூரத்தை அ.க விற்கும் மிதிவண்டிக்கும் இடையில் விட்டு நூல் பிடித்தாற்போல் தொடர்ந்தான். கோயில் திருவிழா நடக்கும் இடத்தை அடைவதற்குள் திரும்பி பார்ப்பதில் செஞ்சுரி போட்டது அ.க.

தேரடி சமீபத்தில் குறவன் குறத்தி டான்ஸ் நடந்து கொண்டிருந்தது. வளையமாக குழுமியிருந்த கும்பலில் விட்டத்தின் இரு ஓரங்களிலும் இருவரும் நின்று பார்வைகளை பரிமாறிக்கொண்டனர். கார்த்திக் சிவா குறவன் அ.க குறத்தி டான்ஸ் சிறப்பு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தான். திருவிழா கடைகளை ஒரு அலசல் அலசி பார்க்கும் போது கூடவே ஜிம்மி நாய் போல தொடர்ந்தான். கொஞ்ச நேரத்திர்க்கப்புறம் அலுத்த கார்த்திக் கடலை கடை முத்துவேல் தேவருடன் பேசிக்கொண்டே கொறிக்க ஆரம்பித்தான். திருவிழாவில் நிறைய சிவாக்களையும், அங்கயர்க்கரசிகளையும் உலவினார்கள். இன்னும் இவர்கள் பார்ப்பதற்கு ராட்சத சக்கரம், குடை ராட்டினம், மாயலோகம், மரணக் கிணறு என்று நிறைய இருந்தது.

பதினொன்னரை மணியளவில் தன் பேருலாக்களை முடித்துக் கொண்டு வந்தான் சிவா. சற்று தூரத்தில் ஒரு புடைசூழ மேற்படி முழு ரோடை அளந்து கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை, சிவா சோகத்தில் இருந்தான். இதற்க்கப்புறம் வாயை கிளறி எதையும் புண்ணாக்கி கொள்ள விருப்பம் இல்லாமல் மௌனமே உருவாக வந்தான் கார்த்திக். 

மறுநாள் சாயந்திரம் ஒரு வெள்ளை டெம்போ ட்ராவலர் கொள்ளாமல் ஒரு கும்பல் அ.க வீட்டிற்கு வந்திறங்கியது. நிலைமையின் தீவிரம் அறிந்து நிலை கொள்ளாமல் தவித்த கார்த்திக் சிவாவை பார்க்க சைக்கிளை விரட்டினான். வீட்டில் அமைதியாக உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருந்த சிவாவை வாசலுக்கு தனியாக அழைத்து "பொண்ணு பார்க்கறாங்க போலிருக்கு...." என்றான் கார்த்திக். "அதான் நேத்து ராத்திரியே தெரியுமே... ஆமாம், வடக்கு தெரு வனிதா எப்படிடா.." என்றான் சிவா எந்தவித சலமுமின்றி.
Image Courtesy: http://genevaetc.files.wordpress.com

1 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails