Monday, May 24, 2010

காதலர்களின் குடை

எப்போது பார்த்தாலும் கோயில் குளங்களுக்கே அழைத்துச் சென்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பாஷாண்டியாக்கி விட்டேன் என்ற ஒரு மாபெரும் மன்னிக்கமுடியாத(?) குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற இம்முறை கோடை விடுமுறைக்கு ஒரு குளு குளு இடத்திற்கு அழைத்துப் போவது என்று தீர்மானித்து ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுதான் கொடைக்கானல். ஒரு தசாப்தத்திற்கு முன்னால் எனக்கு கால்கட்டுப் போட்டப் பின் 'தேன்'நிலவிற்காக சென்ற இடம். சென்ற முறை இருவர் இம்முறை குடும்ப 'இஸ்திரி' ஆகையால் நால்வர். கொடைக்கானல் கிளம்புகிறேன் என்று சொன்னதும், "அங்கே தண்ணியே இல்லையாம்.. கூடவே ஒரு 15 அல்லது 20 லிட்டர் தண்ணீர் கொண்டு போங்க" என்ற அட்வைஸ். ஆற்றிலிருந்து மணல் கொண்டு போக பெர்மிட் போல சென்னையிலிருந்து தண்ணீர் கொண்டுபோக இன்னும் கொஞ்ச நாளில் பெர்மிட் தேவைப்படலாம். "விண்ணின் கொடையே மழை, வீணாக்கலாமா இதை" என்று மஞ்சள் லாரியில் பச்சையில் எழுதி ரோடு முழுக்க கோலம் போட தண்ணீர் தெளித்து போகும் மெட்ரோ வாட்டர் சாமியையும், கங்கா காவிரி போன்ற புண்ணிய நதிகளை வேண்டிக்கொண்டும், வருணனிடம் சொல்லிக்கொண்டும் கொடைக்கு புறப்பட்டதில் சென்னைக்கு லைலாவை அனுப்பி வைத்தான். 

மலை ஏறும் போதே "எலி வால்" அருவி என்ற ஒன்றை காண்பித்தார்கள். சாளேஸ்வரம் போன்ற குறைபாடு இல்லாத கண்ணால் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அந்த இடத்தில் சீசன் இல்லாத குற்றாலத்தில் விழுவது போல தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து ரசிக்கும்(?) போது வயிற்றில் மணியடித்ததால் கட்டிக்கொண்டு போன இட்லியை சாப்பிட்டோம்.
monkey,kodai
அருகே மரத்தில் தம்பதி சமேதராக உட்கார்ந்திருந்த நம்முடைய முன்னோருக்கும் கொஞ்சம் ஈந்தோம். வீட்டு இட்டிலியின் சுவை மிகுதியால்(?) அந்த டப்பாவை கூர்ந்து நோக்கி கையை விட்டு விட்டு துலாவி தின்றது. தின்ற மகிழ்ச்சியில் இரண்டும் கொஞ்சி குலாவி மரம் விட்டு மரம் தாவி சென்று மறைந்தது. போனது போனபோ வகை குரங்கு போலும்.

அடுத்த ஸ்பாட் சில்வர் cascade. அதற்க்கு முன்னால் கம்பு காட்டி கப்பம் கட்ட சொன்னார்கள். கார், ஜீப், லாரி, பஸ் என்று ரக வாரியாக வித விதமான கட்டணங்கள். கட்டி வண்டியை ஓரமாக விட்டு cascade சென்றால் அதன் முன் ஒரே கூட்டம். படம் பிடிப்பதற்கு. தண்ணீர் மேலிருந்து விழுவதைப் பார்க்க ஆசைப்படும் நாம் இன்னும் கொஞ்ச வருடங்களில் தண்ணீரைப் பார்ப்பதற்கே ஆச்சர்யப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

silver
தோளில் மாட்டிய பையுடன் நிறைய புகைப்படக்காரர்கள் ஐம்பது கொடுத்தால் நம்மை பிடித்து பேப்பரில் அடைத்து தருகிறார்கள்.  அனேக சுற்றுலாவாசிகள் கையில் டிஜிட்டல் கேமரா விளையாடியதால் பு.காரர்கள் தொழில் கொஞ்சம் டல்லடிக்கிறது.

மேலேறி சென்று 'தி கொடை இன்டர்நேஷனல்' ஹோடேலில் செக்கின் செய்தோம்.  காலை ஒன்பது மணி செக்அவுட் டைம் என்றார்கள். சீசன், ஆஃப் சீசன் என்று ரூம்களுக்கு இரட்டை விலை முறை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு நாள் தங்கவேண்டிய மூட்டை முடிச்சுகளை தங்கும் அறையில் வைத்துவிட்டு கொடை சுற்றக் கிளம்பினோம். முதலில் சென்றது 1889 ம் ஆண்டு ஆரம்பித்து  நூறாண்டுகளுக்கு மேல் பழம் பெருமை வாய்ந்த "சோலார் அப்செர்வேடரி". வெளியே வருகைப்பதிவு கையேட்டில் கையெழுத்திட்டு உள் சென்றோம். வானியல் சம்பந்தமான அனைத்துவித புகைப்படங்களும் கண்காட்சி போல வைத்திருந்தார்கள். ஆதி காலத்து 'ரூம் சைஸ்' டெலெஸ்கோப் ஒரு 12x14 ரூமில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இரண்டு பேர் சிரமப்பட்டு அடியில் குனிந்து லென்ஸ் வழியாக எதிரில் வெள்ளை சுவற்றைப் பார்த்து "ஒன்னும் தெரியலை..." என்றார்கள். ரொம்ப கும்பல் இல்லை. 'உயிரியல்' ஆர்வத்தில் வரும் ஜோடிகளுக்கு வான் அறிவியலில் அவ்வளவு ஆர்வம் ஏற்பட வாய்ப்பு இல்லை தான்.

பைன் காடு வாசலில் குதிரைச் சவாரிக்கு இரண்டு கோவேறு போல இருந்ததை காட்டி கூப்பிட்டார்கள். சிறுவயதில் வேளாங்கன்னியில் ஏற்ப்பட்ட குதிரை 'சவாரி' அனுபவத்தால் 'உடுக்கை இழந்தவன் கைபோல' உடனே வேண்டாம் என்றேன். அதன் பின்னர் கலைஞானி உபயோகித்த 'குணா குகை'. குகை பார்ப்பதற்கு ஒருவருக்கு மூன்று ருபாய். பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு ஆறுபேரை உள்ளே போகச் சொன்னது அங்கே கல்லாவில் உட்கார்ந்திருந்த ஒரு குண்டு அம்மணி. நான் "ஆறு" என்றேன். "தெரியும் போங்க போங்க... " என்றது. சென்றமுறை விசிட் செய்தபோது தடுப்புக் கம்பிகள் எல்லாம் இல்லை. ஒரு பத்து பதினைந்து பசங்கள் அங்கே உட்கார்ந்துகொண்டு "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...." பாட்டு கோரஸ்ஸாக பாடினார்கள். யாரைப் பார்த்து என்றுதான் தெரியவில்லை. ஒரு குரங்கு குடும்பம் குட்டிகளுடன் அமர்ந்திருந்தது குகையை விட பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது.
monkey,monkey,kodai,kodai
தீடீரென்று காமனுக்கு ஆசை வந்து காதலர்க்கு வசதியாக தேவலோகம் போல மூடுபனியால் நிறைத்து அந்த இடத்தை காதல் லோகமாக மாற்றினான். உடனடி குளிர் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் கையோடு கை கோர்த்த இளஞ்ஜோடிகள் தோளோடு தோள் சேர்ந்தார்கள்.

mist

தூண் பாறை வாசலில் விற்ற தொப்பி வாங்கி மகள்களுக்கு மாட்டி அடுத்த மிக முக்கிய வேலையான மதிய உணவுக்கு தயாரானோம். உணவு உண்டு முடித்து படகு சவாரி செய்வதற்கு லேக் சென்றோம். பகல் வேளையாதலால் "ஆகா இன்ப நிலாவினிலே...." பாடாத குறையாக சவாரி செய்தோம். ஒரு கூரை உள்ள இருபுறம் திறந்த படகில் இரு ஹனிமூன் கப்பில்ஸ் கால் நீட்டி அமர்ந்து, காதலன் தோளில் காதலி தலை சாய்ந்து பயணம் செய்தார்கள். அவன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது சற்று வித்தியாசமாக இருந்தது. ஒருக்கால் சம்சார சாகரத்தில் மாட்டிகொண்டது ஏரியில் வந்துதான் தெரிந்ததோ என்னமோ.  படகுக்கு பின்னர் பிரையன் பார்க். இரண்டு மூன்று ருபாய் இருந்தது பத்து பதினைந்தாக மாறியிருந்தது. எல்லா இடத்திலும் கேமரா/மொபைல் தனி சார்ஜ். பாட்டுக்கு ஆடும் நீர் வீழ்ச்சி என்று கண்ட மேனிக்கு அது இஷ்டத்திற்கு ஆடும் ஒரு செயற்கை தண்ணீர் உற்றுக்கு பாட்டு போட்டு விட்டிருந்தார்கள். ஒன்றும் ரசிக்கும்படியாக இல்லை.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து குறிஞ்சி ஆண்டவரைப் பார்த்துவிட்டு, செட்டியார் பார்க் சென்றோம். புலியுடன் உட்கார்ந்திருந்த பையன் அதோடு போட்டோ எடுக்க பத்து ருபாய் கேட்டான். புலி மேல் போட்ட இன்வெஸ்ட்மென்ட்-ஐ  எப்பவோ எடுத்திருப்பான் போல இருந்தது அந்த எப்போதும் பசிக்காத நிறம் வெளிறிப்போன பொம்மை புலி. மலர் மயில் ஒன்று பக்கத்தில் பார்க் ஆசாமிகளால் செயதுவைக்கப்படிருந்தது. அதோடு படம் பிடித்துக் கொண்டோம். பின்னர் 'கொகர்ஸ் வாக்' சென்று வாக்கினோம். ஐம்பது ரூபாய்க்கு ஐந்து நிமிடத்தில் நம்மை வரைந்து தரும் ஆர்டிஸ்ட் ஆள் இல்லாமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். போட்டோ பிடித்து பீங்கான் கோப்பையில் பிரிண்ட் செய்து இருநூறு ரூபாய்க்கு ஹோட்டலில் வந்து தருகிறோம் என்றார்கள். நிறைய பிசினஸ்கள். அப்புறம் நேரே 'செத்த காலேஜ்' பார்த்து விட்டு கீழே இறங்கினோம்.

கொடையில் நம்மை இடித்த சில விஷயங்கள்.
  1. ஸ்ப்ரைட், கோக் போன்ற பானங்கள் M.R.P யை விட அதிக விலைக்கு விற்கப்பட்டன. தண்ணீர் பாட்டில்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
  2. கூட்டம் அதிகமாக இருப்பதால் உணவு விடுதிக்களில் ஒரு சரியான உபசரணை இல்லை.
  3. திடீரென்று விழித்துக்கொண்ட போக்குவரத்து போலீசார் நிறைய ஒன்வே செய்து அரை கிலோ மீட்டர் போக வேண்டிய தூரத்தை ஐந்து மைல் ஆக்கிவிட்டார்கள்
மலை இறங்க இறங்க தமிழகத்தின் ஒரே சீரான வெப்பமான 35 டிகிரி கொளுத்த ஆரம்பித்தது. ஜன்னல்களை ஏற்றி ஏஸி போட்டுக்கொண்டு மதுரை வந்து ஏஸி ரயிலேறி ஊர் வந்து சேர்ந்தோம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails