Monday, June 7, 2010

பள்ளிக்கூடம் போகலாமா....


ஆறு மணிக்கு "செல்லம் எழுந்திரு....எழுந்திரு ..... ஸ்கூலுக்கு  லேட் ஆயிடிச்சு" என்று "கொக்கரக்கோ" கூவி அறிதுயிலெழுப்பி, கோல்கேட் பிதுக்கி சிபாகாவில் இட்டு, "பூச்சி வரும்" பயமுறித்தி ஒழுங்காக பல் விளக்கச் சொல்லி, அரை பக்கெட் தண்ணீர் ஊற்றி "ஆ ஜில்லா இருக்கு.."(நேற்று மழை உபயம்), கொஞ்சம் சுடுதண்ணீர் கலந்து, மீண்டும் மேலுக்கு ஊற்றி, டவ் தேய்த்து மீண்டும் ஒரு முழு பக்கெட் ஊற்றி சோப்பு அலம்பி, தேங்காய்ப்பு டவல் கொண்டு துவட்டி, உள்ளாடைகள் உடுத்தி, கொஞ்சம் கொஞ்சம் ஆவி ,பிசாசெல்லாம் பறந்த இட்லியை "சூ... சூ..." ஊதி அவசரம் அவசரமாக வாயில் திணித்து, தொண்டையில் அடைத்து இருமும் போது வாயில் தண்ணீரும் சேர்ந்தே கொடுத்து,  "ஊம் சீக்கரம் தின்னு... பஸ் வந்துடும்" அதட்டி, திரும்பவும் "இயற்கை" அழைக்கிறதா என்று கேட்டு அதற்க்கு விட்டு, பஜாஜ் அல்மான்ட் ட்ராப்ஸ் தலைக்கு இட்டு வாரி இரு பின்னல் போட்டு, வெள்ளை ரிப்பன் கொண்டு மடக்கி கட்டி, புது யூனிபாஃர்ம் மாட்டி, பெல்ட்டை ஒரு லூப்பில் மாட்டாமல் திரும்பி உருவி லூப்பில் நுழைத்து மாட்டி, வலது கால் இடது கால் மாற்றாமல் சரியாக சாக்ஸ்ஸும் வெள்ளை கான்வாஸ் ஷூவும் மாட்டி, தோளில் புது "பேக்பாக்" தொங்கவிட்டு.....

.................இவர்களுக்கு கொக்கரக்கோ கூவுவதற்கு முன்னரே எழுந்திருந்து டப்பர்வேர்  கட்டி, பள பள வாக்ஸ் தடவிய வாஷிங்டன் ஆப்பிள் தோல் சீவி நறுக்கி ஸ்நாக்ஸ் ஆக வைத்து, தண்ணீர் போத்தல்கள் நிரப்பி.....

மேற்கண்ட பாராக்கள் சமாச்சாரங்களை என்னுடைய இடதுபாகம் இருமுறை ரிபீட் (எனக்கு ரெண்டு பசங்க..)  செய்தபோது நானும் ஒரு கை கொடுத்து எல்லாம் செய்து பஸ் ஸ்டாப் சென்று, வராத பஸ்சிற்கு இருபது நிமிடங்கள் காத்திருந்து, பஸ் டிரைவருக்கு போன் அடித்து, "நாங்க அங்க வந்துட்டு போய்ட்டமே சார்" கேட்டு, அடித்து பிடித்துக் கொண்டு காரில் ஏற்றி ஐந்து கிலோமீட்டரில் பஸ்ஸை பிடித்து "என்னப்பா ஹரி?" கேட்டு அவர் "நின்னு பார்த்தேன் சார்" என்று சூடம் அணைக்காமல் சொல்லி, குலுக்கல் முறையில் ஹமாம் வீடு பரிசாக கிடைத்த வெற்றியுடன் பஸ் ஏற்றி விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது பக்கத்து வீட்டு மாமா "பசங்களுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு போலருக்கு.." என்று வழக்கமான சிரிப்போடு  கேட்டார்.

பட உதவி: http://all-free-download.com/graphic/vector-file/vector-clip-art/back_to_school_clip_art_22824.html

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails