Monday, June 14, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part 1

காலங்கார்த்தால கண்ணன் மாஸ்டரிடம் ஏ பிளஸ் பி ஹோல் ஸ்கொயர் ஈகுவல் டு ஏ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் பிளஸ் டூ ஏ பி (மேற்கண்ட வாக்கியம் (a+b)2 = a2+b2+2ab என்ற கணித சமன்பாட்டை தமிழில் எழுதும் முயற்சி) படிக்க வரும் போது தான் கார்த்திக்கின் கண்கள் அவளை கிளிக்கி அவனுடைய பலவீனமான ந்யூரான்களின் அழியாத பாகத்தில் பலவந்தமாக சேமித்து வைத்தது. யாரோ அரசுக் கல்லூரி ப்ரொஃபசர் பொண்ணாம். ப்ரொஃபசருக்கு பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கேட்ன்னு ஊர்ல நிறைய பிசினெஸாம். ஏகப்பட்ட துட்டாம், பெரிய கையாம். ரெண்டு காரோட, குரோட்டன்ஸ், வைலெட்,சிகப்பு, மஞ்சள் என்று பல வண்ண வண்ண பூக்கள்  பூக்கும் ஒரு குட்டி பார்க்கோட ஐந்தாறு சுமோ ஃபைட்டர்கள் தோள் மேல் கைபோட்டு சேர்ந்து போற அளவுக்கு நிலைவாசல் வச்சு ரோஜா நகர்ல சினிமாக்களில் நடிக்கும் கொங்கு நாடு பங்களா மாதிரி ஒரு வீடாம்.

ஆட்டுக்கு இலை பறிக்கும் அலக்கு மாதிரி நெட்டையாக, அரிசி மூட்டைக்கு குட்டை பாவாடை கட்டிய மாதிரி, எப்போதும் தலையை சொரிந்து நகக்கண்ணில் ஈறு பார்க்கும் ட்யூஷன் பயிலும் மாணவிகளுக்கிடையில் வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகி, சாம்பிராணி  மணக்கும் முடியை நுனியில் கட்டி, உலராத முடியின் ஈரம் பாவாடையின் பின்னால்  சில உலக நாடுகள் போல மேப் வரைந்து நனைக்க, நெற்றியில் போன பாரா முடிவில் இருக்கும் முற்றுப்புள்ளிக்கு சற்று பெரியதான அரக்கு நிற சாந்து பொட்டுக்கு மேலே மெலிதான சந்தனக் கீற்றோடு வருபவளை பார்த்தாலே இதயம் சைலென்ஸர் கழன்ற சென்னை ஆட்டோ போல உள்ளே அலற ஆரம்பித்துவிடும். அந்த அல்ஜீப்ரா படிக்க வேண்டிய கணித காலை நேரங்களை 1+1=1 என்ற காதல் கணித நேரங்களாக மாற்றியவள் அவள். 'அம்மா'வுக்கு கருநீலம் அணிந்த கமாண்டோ படை போல குறைந்தது ஐந்து பேர் முழு சாலையையும் தர்ணா பண்ணிக்கொண்டு பழைய பஸ் ஸ்டாண்ட், கான்வென்ட் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, மூணாம் தெரு, புதுத் தெருக்களை சைக்கிளால் புனிதப்படுத்திக்கொண்டு வந்துசேரும் அவளுக்கு பாதுகாப்பாக அவர்களுக்குள் பேசியபடியே அவள் பின்னால் ரோந்து வருவார்கள்.  காலடி மண் எடுத்து பூசிக்கொள்ளாதது தான் பாக்கி. அவ்வளவு பக்தி. பரீட்சை சமய இரவு நேர வகுப்புகளின் போது தெரு முனை வரை சென்று பாதுகாப்பாக வீடு அடைந்ததை உறுதிப் படித்திக்கொண்டு விட்டுதான்  தத்தம் வீடு திரும்புவார்கள்.  தேசப்பிதா காந்தி, முண்டாசுக் கவி போன்றோர் இருந்தால் இந்தப் 'பெண் மரியாதை' பார்த்து ஆனந்தக் கூத்தாடுவர். இந்தப் பொது சேவையிலிருந்து ஒருநாள் கூட இவர்கள் தவறியதாக தெரியவில்லை. காலை ஆறு மணி சிறப்பு வகுப்புக்கு டி.வி.எஸ் 50 யில் வந்திறங்கி அந்த ஈர மணலில் ஸ்டாண்ட் போட முடியாமல் அவள் தவிக்கும் போது தடாரென்று விழுந்தால் உடையும் நிலையில் இருக்கும் சைக்கிளை சடாரென்று கீழே போட்டுவிட்டு கர்மசிரத்தையாக ஆத்மசுத்தியுடன் வந்து அவள் வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டு தொண்டாற்றுவர்.

மாஸ்டர் "ஊர்மிளா நீ சொல்லு" என்று கேள்வி கேட்கும் போது எழுந்து நின்று அவள் பதில் தந்தாலும், தராவிட்டாலும் அழகு. தந்தால் அந்த "சார், அது லைக்..... இஃப் யூ ஆட் டூ பிளஸ்.... " என்ற தமிங்க்லிஷ் அழகு, தராவிட்டால் இருமருங்கும் உருண்டு புரண்டு தவித்து பதிலுக்கு கேள்வி எழுப்பும் அந்த கோலிகுண்டு கண்ணின் மொழி அழகு. "உங்க நோட்டை தரீங்களா, நா கொஞ்சம் காப்பி பண்ணிட்டு தரேன், ப்ளீஸ்..." என்று ஒரு நாள் கேட்டபோது பக்கத்தில் ஆயிரம் பேர் நின்று ஆர்க்கெஸ்ட்ரா வாசித்தது போல் இருந்தது கார்த்திக்கு.   அவளின் அந்த 'கன்னி'ப் பேச்சு கேட்ட கணத்தில் கார்த்திக்குக்கு கடவுள் பார்த்த பக்தன் போல கையும் காலும் ஓடவில்லை. அப்போது யாராவது அஞ்சும் மூனும் எவ்வளவு என்றால் ஒம்போது என்று சொல்லியிருப்பான்.

"அவ என்னடா பெரிய ஆளா, முன்னாடி ரெண்டு சிங்கப்பல்லு நீட்டிகிட்டு இருக்கு" என்று சக ட்யூஷன் மாணவன் மூன்றாம் தெரு முரளி கேட்டவுடன் அவன் பல்லை தட்டி கையில் கொடுக்கும் கோபம் வந்தாலும் அவள் கண்ணெதிரே இருந்ததால் முரளி தப்பித்தான். கோபத்தை அடக்கிக்கொண்டு  "அவள் தெத்துப் பல்லுக்கு என் சொத்தையே எழுதி வைக்கலாண்டா" என்று வாயிலிருந்து ஜொள் ஒழுக உதார் விட்டான்.  ஒரு செவ்வகத்தின் பரப்பளவு பார்முலா கூட சட்டென்று சொல்லத் தெரியாதவன் அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த பல்லின் அழகை ரசித்து அதன் நீளம், உயரம், அகலம் ஆகியவற்றை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுமளவுக்கு கணிதத்தில் முன்னேறிவிட்டான். அவளை முன்னும் பின்னும் காலையும் மாலையும் சுற்றி சுற்றி சுற்றளவு கணிதங்கள் கூட கற்றுக்கொண்டான்.

அந்த இரண்டு வருட 'சிறப்பு' வகுப்புகள் முடிந்தபின், ஊர்மிளா வீட்டு ரோடை முன்னும் பின்னும் சைக்கிளில் சென்று அரசாங்க சர்வேயர் போல அளந்தான். ஒரு நன்னாளில் அவளுக்கு திருச்சியில் அம்மன் பெயர் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் சீட் கிடைத்து ப்ரொஃபசர் திருச்சியோடு  ஜாகை மாற்றுவதாக கேள்விப்பட்டான். பதில் படுவதற்காக மறுநாள் போன போது அந்த வீட்டில் 'ஆள்' நடமாட்டமே இல்லாமல் வாசல் செக்யூரிட்டி யாரோ ஒரு கொண்டை போட்ட பெண்ணிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அப்புறம் கார்த்திக் எங்கேயோ ஏதோ ஒரு கிராமத்தின் வயல்வெளியில் அரை கி.மீ நடந்த சென்று படிக்கும் ஒரு கலைக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்புக்கு சேர்ந்தான்.  நான்கு வருடம் கழித்து ஆட்டோகிராப் சேரன் போல ஊருக்கு வந்து விசாரித்ததில் ப்ரொஃபசர் தலையில் கல்லைத் ( "அடிப்பாவி தலையில 'கல்லை' தூக்கி போட்டுட்டியேடி"- என்று காதல் சம்பவம் கேட்டு கதறும் பெற்றோர் வசனத்தில் வரும் அந்தக்  'கல்')   தூக்கி போட்டுவிட்டு, தன்னோடு படித்த ஒரு அழகாக இருக்கும்  நுனி கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டும் ஒருவனுடன் ELOPED என்று தெரியவந்தது. ஒருதலைக் காதலன் கார்த்திக் இந்த செய்தியறிந்து அந்த அடிமுட்டாளுடன் தன்னை ஒப்பிட்டு தற்காலிகமாக சிறிது நாள் ஒரு வாடகை வீட்டில் அவளுடன் கற்பனையில் குழந்தை  குட்டிகளுக்கு கிலு கிலுப்பை காட்டி ஆட்டி குடும்பம் நடத்தினான். 

பட உதவி: http://www.zazzle.com/she_took_my_heart_away_tshirt-235354443170477879

(Q வரிசையில் நிற்கும் கார்த்திக்கின் காதலிகள் இன்னும் வருவார்கள்)

6 comments:

பனித்துளி சங்கர் said...

எதார்த்தம் கலந்த எழுத்து நடை மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் . தொடருங்கள் மீண்டும் வருவேன்

Madhavan Srinivasagopalan said...

who's that karthik..? B'cos I am familiar with the situations you are telling.. Looks like he is one of my school days' friends....

RVS said...

மாதவன் அவர்களே.. இது வெறும் கதைதான். கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு மேலமர்ந்து கீழே விழாமல் எழுதியது ... ரொம்ப குழப்பிக்காதீங்க...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

வீட்டுல உங்க பெயர் கார்த்திக்கோ?
சும்மா.. தமாசுக்கு..

------அன்புடன்

RVS said...

மாதவன் சார், உங்க தமாசு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Anonymous said...

i am your fan :) i have read lot of your novels b4 marriage. but don't get to do so now. after a long time i got to read novel in this blog. i really enjoyed it. :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails