Wednesday, June 23, 2010

சலவைக்காரி

"ஒரு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்"  கே.டி.எஸ் தியேட்டர் எதிரில் இருந்த குட்டை ராஜு டீக்கடையில் கேட்டு வாங்கி கட்டையில் ஒரு முடிச்சுடன் தொங்கிக்கொண்டிருந்த தீக்கயற்றில் குனிந்து பற்றவைத்துக் கொண்டான் மணி. சிகரெட்டை கொஞ்சம் ஆழமாக இழுத்து விடும்போது சட்டையில் வந்து விழுந்த தீப்பொறியை இடதுகையால் தட்டிவிட்டு பெஞ்சில் அமர்ந்தான். இராத்தூக்கம் இல்லாத கண்ணிரெண்டும் கோவப்பழ சிவப்பாக இருந்தது. வெளியே மழை லேசாக,சற்று கனமாக, ஊதக் காற்றோடு, காற்றில்லாமல் என்று பல படிவங்களில் பெய்து ஊரில் உள்ள ஜன்னல் கம்பிகளை ஜில்லாக்கிக் கொண்டிருந்தது. அவ்வப்போது "உஸ்....ஸ்..ஸ்.." என்ற மழைக் காற்றின் சப்தமும், டீக்கடை மேற்க்கூரையில் விழுந்த மழைத்துளிகளின் ஓசையும் ஒரு பின்னிரவு நேர விவிதபாரதி சேர்ந்திசைக் கச்சேரி செய்து கொண்டிருந்தது. இது மதியமா, மாலையா என்று தெரியாமல் ஊருக்கே கருமேகத்தால் பந்தல் போட்டிருந்தது வானம். போட்டிருந்த வெளிர்நீல சட்டை லேசாக நனைந்து பனியன் இல்லாத உடம்பு படும் இடங்களில் சட்டையை ஒட்டி கருப்பு வண்ணம் காட்டியது. சற்று மிதமான காற்றுடன் நின்று நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை ஒவ்வொரு காற்று சுழற்சிக்கும் அவ்வப்போது கடைக்குள் எட்டிப்பார்த்து பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவனுடைய நீல கலர் ஹவாய் செருப்பணிந்த கால்களை அலம்பியது.

நேற்றிரவு நடந்த சம்பவங்கள் அவனை இரவு முழுவதும் விழித்திருந்து மழையை வேடிக்கை பார்க்க விட்டிருந்தது. இரவு பூராவும் "க்ரீச்....க்ரீச்...." சப்தங்களுடன், சுவர்க்கோழிகளின் பின்னணி இசையுடனும் பொழுதைக் கழித்தான். நடந்த சம்பவங்களை தற்போது ரீவைண்ட் செய்து பார்த்தான் மணி.


இரண்டு மூன்று முறை ஆற்றுக்கு அந்தப் பக்கமாக சைக்கிளில் செல்லும்போது அவளைப் பார்த்திருக்கிறான். மலையாக சேர்ந்திருக்கும் நூறு இருநூறு உருப்படிகளை ஒவ்வொன்றாக கையிரண்டாலும் மேலே தூக்கி அந்த ஆற்றுப் படிக்கட்டில் "டப்... டப்..." என்று குனிந்து அடித்து துவைக்கும் போது பார்ப்பவர் லப்டப்பையும் சேர்த்து துவைத்தாள். ஆள் கண் மை நிறம்தான். இருந்தாலும் பிரம்மா ஆங்காங்கே குறைத்தும் கூட்டியும் தனது முழுத் திறமையை காட்டியிருந்தான்.

"ஆளு சூப்பர் கட்டடா... கருப்பா இருந்தாலும் களையா இருக்குடா.. " என்றான் மனோகர்

"சரிடா.. ஆனா.. ஒருத்தன் லைசென்ஸ் வச்சிருக்கான் போலிருக்கே..." இது மணி

"அவன் சரியான தண்ணி வண்டிடா மாப்ள.. ஆறு மணிக்கப்புறம் தான் இருக்கோம்னு அவனுக்கே தெரியாது... புல்லா ஊத்திக்கிட்டு கடைத்தெருவில வேட்டி அவிழ விழுந்து கிடப்பான்.."

"அதனால...."

"மாதா கோயிலுக்கு இரண்டு தெரு தள்ளிதான் வீடு... விளக்குவெச்சு ஒரு  ஆரறைக்கா போனாம்னா போதும்... பக்கத்துல இருக்குற ஆட்டோக்காரன் கூட, ஆட்டோ ஓட்டின நேரம் போக  அதைத்தான் ஓட்றதா கேள்வி.." எரிகிற ஆசைக்கு எண்ணெய் ஊற்றினான் மனோகர்.

"இல்லைடா வேணாம்...ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போவுது..."

வாய் சொன்னாலும், மனது அலைபாய ஆரம்பித்தது. இரு கையையும் மேலே  ஓங்கி குனிந்து நிமிர்ந்து ஆற்றோரக் கல்லில் அடித்து துணி தோய்க்கும் பிம்பம் மாறி மாறி கண்ணுக்குள் வந்துபோனது. எப்படியும் இன்று அவளை சலவை செய்துவிடவேண்டும் என்று முடிவுக்கு வந்தவனாய் மனோகரை கழட்டிவிட்டு விட்டு , ஆறரை மணி அளவில் ச.காரி வீட்டை அடைந்தான். கீற்று வேய்ந்து மேலே வைக்கோல் போட்ட ஒரு குடிசை. வாசலில் சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அரையிருட்டாய் இருந்த வீட்டின் உள்ளே ஒருவரையும் காணோம்.  லேசாக தலையை மட்டும் எட்டிப்பார்த்தான் மணி. "ம்....ம்...ம்..." என்று ஈனஸ்வரத்தில் முனகும் சப்தம் வந்துகொண்டிருந்தது. ஆவலாக உள்ளே எட்டிப்பார்த்தவனைப் பார்த்து காலில் விஷமுள் ஏறி உப்புப் பத்து போட்டுக்கொண்டிருந்த ச.காரி  "ஆ. ஐயோ.. திருடன்...யாராவது வாங்களேன்..." என்று வாய்விட்டு அலறி கூப்பாடு போட்டாள். அவள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரத்தயாராக  இருந்த ஆஜானுபாக கைலி பனியன் போட்ட அடுத்தவீட்டு ஆட்டோக்காரன் பாய்ந்து உள்ளே புகுந்தான். வீட்டு வாசலில் விட்டு ஆ.காரனும் ச.காரியும் சரமாரியாக வெளுத்துக் கட்டினார்கள். நிறைய உள்குத்து வாங்கிக்கொண்டு ஊமைக்காயங்களுடன் சத்தம் காட்டாமல் ஓடி மறைந்தான் மணி.

தெரு முக்கில் ச.காரி புருஷன் அவிழ்ந்த வேட்டியை கையில் சுற்றிக்கொண்டு வெள்ளை நீல கோடு போட்ட அண்ட்ராயர் தெரிய ரோடை அளந்துகொண்டு நடுந்து வருபவனைப் பார்த்து வாங்கின அடியில் வீங்கின வாய் வலித்தாலும் பல் தெரிய சிரித்துக் கொண்டான் மணி.

"மாப்ள.. மாதா கோயில்ல ஏதோ திருவிழாவாம்.. போலாம் வரியா..." என்ற மனோகரின் குரலைக்கேட்டு ராஜு டீக்கடையில் விழித்தெழுந்து அந்த அடாது பெய்த மழையிலும் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே சைக்கிள் ஏறி பறந்தான் மணி.

பட உதவி:  www.guardian.co.uk

1 comments:

Anonymous said...

//தலையை மட்டும் எட்டிப்பார்த்தான் மணி

Mani new character. His that Manohar ???

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails