Monday, July 12, 2010

விடுதலைச் சுரங்கம்

நெட்வலம் வருகையில் கிடைத்த மற்றுமொரு சுவாரஸ்யமான வீடியோ. பாதாள ரயில் பாதையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியது. 1930களில் ரோபர்ட் மோசேஸ் என்பவரால் அமெரிக்க பாதாள ரயில் அம்ட்ராக் (Amtrak) திட்டப்பணிக்காக நியூயார்க்கின் மான்ஹட்டன் நகரில் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையானது ஓரிரு வருடங்களில் அந்த ரயில் திட்டம் கைவிடப்பட்டவுடன் அந்தப் பகுதியின் குப்பை கூளங்களின் வசமாயிற்று. அதுவே சில காலங்களில் வீடற்ற மற்றும் திக்கற்றவர்களுக்கு வசிப்பிடமாயிற்று.
freedomtunnel
அப்படி இருந்த இடத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக சுவர் சித்திரங்களை தீட்டும் வல்லவரான க்றிஸ் பேப் இங்குதான் பல அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார். மைக்கல் அன்ஜெலோவின் ஆதமுக்கு இறைவன் உயிர் கொடுக்கும் ஓவியம் போன்றவைகளுக்கு இவரின் தனித்துவமான விளக்கப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று. ஸ்ப்ரே குடுவை தலை கொண்ட இவரது ஓவியம் சிறப்பான ஒன்று. இவரது பட்டப் பெயர் ஃப்ரீடம் (Freedom). தமிழில் சுதந்திரம்னு சொல்றதா இல்லை விடுதலைன்னு சொல்றதான்னு தெரியவில்லை. சரி பரவாயில்லை ஃப்ரீயா விடுவோம். மேட்டருக்கு வருவோம். மேலே ஓடும் தண்டவாளங்களில் இடையில்  கீழே சிந்திச் சிதறும் ஒளியில் இவர் தீட்டிய பல சித்திரங்கள் நம்மை சுரங்கப்பாதையை விட்டு வெளியே செல்ல விடாமல் அங்கேயே கட்டிப்போடும் தன்மையுடையவை. இந்த சுதந்திர சுரங்கப்பாதையின் ஒரு வீடியோ காட்சிதான் கீழே நீங்கள் பார்ப்பது.

இந்த வீடியோவும் அந்தப் பின்னணி இசையும் அந்த ஏகாந்தமான இடமும், அவ்வப்போது செல்லும் ரயிலும், பல காலம் தொட்டு அழியாத சுவர் சித்திரங்களும் நம்மை நிஜமாகவே அதனடியில் வாழ்ந்த அந்த ஓவிய மேதையிடம் இட்டுச்செல்கிறது. இதற்க்கு பயன்படுத்திய பின்னணி இசையின் சொந்தக்காராரின் இருப்பிடம் www.zenzile.com. இந்த வீடியோவையும் படத்தையும் இசையையும் அக்கக்காக எடுத்து நம் பார்வைக்கு தொடுத்துக் கொடுத்தவர் முகவரி இதோ charleslebrigand.blogspot.com/. இதை எடுத்திருக்கும் மேற்படி சொந்தக்காரர் நம்ம சந்தோஷ் சிவன் கேமரா சாயலில் எடுத்திருப்பதாக எனக்குப்பட்டது. வீடியோவின் பின்னணி இசையில் அவ்வப்போது ரயில் கூவுவது போல வரும் ஒரு இசையின் கோர்ப்பில் யாசிப்பவர்களின் குடியில் இருக்கும் அந்தச் சோகமும் கலந்து வருவது தான் இதன் ஹிட் என்பது என் கருத்து. வீடியோ முழுக்க எங்கேயோ நம்ம ராஜாவின் இசை ஒலிப்பது போல இருப்பது எனது பிரமையா? அல்லது நிஜமா?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails