Sunday, July 4, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part III


KKP-3


பள பளக்கும் பச்சைப் பாவாடையை கொஞ்சமாக இழுத்து இடுப்பில் சொருகி ஒரு காலால் தத்தி தத்தி வேர்க்க விருவிருக்க, மேலே போட்டிருந்த மஞ்சள் சட்டை நனைந்து ஈரத்தோடு வெள்ளை உள்சட்டையோடு ஒன்றோடு ஒன்றாகி, பின்னலிட்ட சடை இரண்டும் முன்னும் பின்னும் ஆட, ஒரு லோடு மண் அப்பிய காலோடு ரோடுக்கு இருமருங்கிலும் தங்கு தடையின்றி வளைந்து நெளிந்து சிகப்பு கலர் குட்டை  ஹெர்குலஸ் கேப்டன் சைக்கிள் கற்றுக் கொள்ள ஓட்டும் போது தான் ரமாவை பார்த்தான் காரத்தின். இல்லை இடித்தான். இல்லை இல்லை தள்ளினான். இல்லை இல்லை இல்லை விழுந்தான். மேலே கண்ட எல்லா இல்லையும் ஒன்றுவிடாமல் "ஆமாம் ஆமாம்" என்று நடந்தேறியது ஒரு அரையாண்டு விடுமுறையில். ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகனாக சைக்கிள் போக்குவரத்தின் அனைத்து விதிகளையும் கரைத்து குடித்து அதற்கேற்ற உதாரண புருஷனாக இரு சக்கர வாகனம் ஒட்டி வந்த கார்த்திக் தன் நண்பன் மல்லிராஜ் இருக்கிறானா என்ற ஆர்வப் பார்வையில் வீதியில் சைக்கிள் பழகிய ரமாவை பார்க்க தவறிவிட்டான். சைக்கிள் பழகுவதால் ரோட்டை தவிர எதையும் பார்க்கக்கூடாது என்று கூண்டு ஏற்றாமல், கீதை புத்தகத்தின் மேல் கை வைக்காமல் சத்தியப்பிரமாணம் வாங்கிக்கொண்டு கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தார் ராமாவின் அப்பா. அப்பப்பா ஆளைப் பார்த்தாலே ஆறடி தள்ளி போகும் அளவிற்கு கிராம வாசலில் காவலுக்கு நிற்கும் பதினாறடி வீரனார் மீசை. நடிகர் சத்தியராஜின் திரையில் தெரிந்த பாகங்களில் எல்லாம் தெரியும் அந்த ஆம்பளை சிங்கத்தின் அடையாளங்கள்.

அப்போது விழுந்த கார்த்திக் பிற்பாடு கொஞ்ச நாள் எழுந்திருக்கவேயில்லை. இரு சைக்கிள் மற்றும் இந்த இடி சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்கள் இருவரும் ரம்மி விளையாடும் போது கையில் விசிறி போல் அடுக்கி சேர்க்கும் AKQJ போல சரிந்து கிடந்தனர்.  Aவும் Jயும் சைக்கிள்கள். கிடா மீசையின் தடா பார்வையில் பொடிந்துபோனான்  கார்த்திக்.  "இல்லை சார்... வந்து சார்..." என்று இம்போசிஷன் போல, ஸ்க்ராட்ச் விழுந்த CD போல ஐந்து  ஆறு முறை அவர் எது கேட்டாலும் பதில் சொல்லிவிட்டு இது ஆகிற கதை இல்லை என்று அந்த திக்குக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு வளைந்த ஹான்டில்பாரை கூட நேராக்காமல் கோணிக் கொண்டே  ஒட்டி சென்றான். ரிடயர்ட் வாத்தியார் கணிதப் புலி சாளேஸ்வரம் கிரியின் மூன்று பெண்களும் முப்பெருந்தேவியர் போல் வீட்டு வாசலில் சேர் போட்டு உட்காராமல் கையை கட்டி நின்று கொண்டு முழு ஷோ கண்டு களித்தார்கள்.  மூவரும் தலா இரண்டு வருட இடைவெளியில் இப்பூவுலகில் அவதரித்தவர்கள். நடு நடுவே காட்சிக்கு கணம் கூட்டும் பின்னணி இசை போல் 'கொள்..', 'கள்...'  என்று வாய்ப்பொத்தி சிரிப்பு வேறு. கை கால்களில் சிராய்த்தது மறுநாள் ஹமாம் போடும்போது எரிந்தபோது தான்  தெரிந்தது. எல்லாம் முதல்நாள் மோதி விளையாடிய அனுபவத்தின் பலன்கள்.

ரமா நல்ல சூட்டிகையான பெண். இரண்டே நாட்களில் ஹாண்டில் பார் கைகளில் அடங்கியது. கை இரண்டையும் நேர்கோட்டில் பிடித்து தலையை ஒரு பதினைந்து பாகை கீழே சாய்த்து அதே பதினைந்து டிகிரி கண்ணை மேலே உயர்த்தி அடக்க ஒடுக்கமாக அனைத்து சாலைகளிலும் வலம் வர ஆரம்பித்தாள். மேலும் இரண்டு நாட்கள் செக்யூரிட்டியாக வந்த தகப்பன் வீரனார் சாமி வருவதை நிறுத்தியவுடன் அந்த வேலையை கார்த்திக் தனதாக்கிகொண்டான். எல்லா கவிதை, சினிமா வசனங்களில் வருவது போல நிழலென தொடர்ந்தான். ஒரு முறை வரசித்தி விநாயகர் கோயில் திரும்பும்போது பின்னால் காரியரில் கிளிப் போட்டு வைத்திருந்த நோட்டுகள் இரண்டு விழுந்த போது அதை எடுத்து அவளிடம் கொடுத்தபோது இந்த ஜென்மம் எடுத்ததற்கு புண்ணியம் அடைந்ததாக எண்ணிக்கொண்டான். கொடுக்கும் பொது அவள் விரலோடு இடித்த தன விரலை அசல் சட்டை கிழித்து ரோடில் திரிவது போல பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான்.

அவளுக்கும் சிரிக்கத் தெரியும் என்பதை ஒருமுறை அவள் தோழி ஒருத்தி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவளோடு அரட்டையடிக்கும்போது தெரிந்த பளீரென்ற முத்துப் பற்களைக் கண்டு தெளிவுற்றான். அவள் பத்மா டீச்சரிடம் கணிதம் பயிலுகிறாள் என்று தெரிந்ததும் தன் மாஸ்டரிடம் இருந்து அங்கே கட்சித் தாவ முயற்ச்சித்தான். இங்கு கண்டிப்பாக பெண்களுக்கு மட்டுமே வகுப்புகள் என்றும் கார்த்திக் போன்ற கயவாளிகளுக்கு இல்லை என்று முகத்தில் அடிக்காத குறையாக சொல்லி திருப்பியனுப்பி விட்டார்கள். நிழல் போல் பின் தொடர்தலை எங்கோயோ பார்த்திருக்கவேண்டும் அந்த பத்மா டீச்சர். குதிரைக்கு கடிவாளம் போட்டது போன்று சென்று கொண்டிருந்த கோழி (chick) சற்று நாளைக்கப்புறம் திரும்பி பார்க்க, அருகில் நோக்க, புன்னகைக்க ஆரம்பித்தது. அந்த தருணங்களில் நூலறுந்த பானா காத்தாடி போல வானத்தில் பறந்தான் கார்த்திக்.

ஒரு நாள் நித்யபடி வழக்கமான எல்லா ரோடுகளிலும் வாலை ஆட்டாமல்  அந்த ஜந்துவை நினைவு படுத்தும் வகையில் திரிந்தான்  கார்த்திக். ஊஹும், எங்கேயும் காணோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. கஞ்சா கிடைக்காத போதையடிமை போல பர பரவென்று சைக்கிளில் இங்குமங்கும் சக்கரம் போன போக்கில் திரிந்தான். கடைசியில் டைலர் கடை வாசலில் கோபால் தான் சொன்னான், "என்னடா குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வரே... ஊருக்கு வெளியே இருக்கிற V.G.N நகர்ல சொந்த வீடு கட்டிகிட்டு கிளி பறந்து போச்சு...". 

அவன் சொன்னவுடன் நூலறுந்த காத்தாடியாக விண்ணிலிருந்து கீழே தரைக்கு இறங்கி வந்த கார்த்திக் தன் சைக்கிள் பஞ்சர் என்றுனர்ந்தான்.

பட உதவி: http://farm5.static.flickr.com/4076/4748931961_fc5ef66a08_b.jpg
 
(கார்த்திக்கின் காதலிகள் இன்னும் தொடர்வார்களா? மாட்டார்களா? பொறுத்திருந்து கார்த்திக்கை கேட்டுப் பார்ப்போம்.)

1 comments:

S.Selvaraj, sel@alpha.iuc.res.in said...

Mosamillai

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails