Monday, July 26, 2010

மீசைகள் பலவிதம்

நம்ம ஏரியாவில் சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுக்கும், பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருக்கும் வேலு ஒரு கருப்பு புல்லேட்டில் "டம் டம் டம்" என்று வந்து தான் கடை திறப்பார். புஜங்கள் தெரிய கை மடித்த வெள்ளை சர்ட்டும், ஒரு காக்கி பேண்டும் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து அந்த என்பீல்டில் வரும் பொழுது நம்ம பேட்டைக்கு வந்திருக்கும் புது சப் இன்ஸ்பெக்டர் என்று தோன்றும். எல்லாவற்றையும்விட தூக்கலாக இருப்பது அவர் நறுநெய் தடவி வளர்க்கும் ஒரு காட்டான் மீசை. யாராவது புது ஆள் தெருவிற்கு வந்தால், வேலு வந்திறங்கும் தோரனையை பார்த்தவுடன் சல்யூட் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை. அப்படி ஒரு களை அந்த மீசையால் வந்தது வேலுவிற்க்கு. 

தி.நகர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாசலில் காவல் பணியில் ஈடுபடும் அந்த அரை அடி நீல மீசைக்காரை பார்த்து காவலர்களுக்கே வெட்கம் வரும். அவ்வளவு பெரிய மீசை, கேஷுவலாக அவரிடம் விசாரித்த போது நன்றாக நிமிர்ந்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அவர் மீசை வளர்ப்பில் ஈடுபட்டது பற்றி விலாவாரியாக பேசுவதற்கு முற்ப்பட்டபோது நாம் அங்கிருந்து எஸ்கேப். அருகில் சென்று பார்த்த நமக்கே சற்று உதறல் எடுத்துவிட்டது. 

கல்லூரி காலங்களில் நாங்கள் பயணிக்கும் வாடிக்கையான பேருந்தில் வரும் டிரைவர் அச்சு அசப்பில் ஊர் எல்லையில் காவல் காக்கும் வீரனார் மாதிரியே தோற்றமளிப்பார். உடற்கட்டிலும் கூட.  ஒரு நாள் கூட அவரது மீசை தொங்கியதே கிடையாது. வீட்டு மின்சாரத்திற்கு கரண்டு கம்பத்தில் இருந்து ஒயர் எடுத்து கட்டும்போது ஸ்டே வயர் கொடுத்து கட்டுவோம். அது கூட ஓரிரு மாதங்களில் தழைந்து கொடுத்து விடும். ஆனால் நம்ம டிரைவர் அண்ணன் மீசை கீழே இரும்பில் வளைத்து கம்பி கட்டி நிற்க வைத்தார் போல அப்படியே ஸ்ட்ராங் ஆக நிற்கும். மீசை அன்னிக்கு டூட்டிக்கு வரவில்லை என்றால் நமது மனசு தொங்கி விடும். அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி முளைக்க தொடங்கிய காலத்தில் அவரது மீசை அழகில் மயங்கி "மீசை டிரைவர் ஆசை மன்றம்" என்று ஒரு ரசிகர் மன்றமே தொடங்க உத்தேசித்து இருந்தோம்.  அந்த மீசையுடன் ஸ்டீரிங் பிட்த்தால் நமக்கே ஒரு தெம்பு வரும். ஆனால் பேசினால் அவ்வளவு தங்கம். இளகிய மனசு டிரைவருக்கு.

நவீன கால இலக்கியங்களுக்கு வித்தாக, சுதந்திர தாகத்திற்கு கவிதை தண்ணீர் ஊற்றி வளர்த்த, முண்டாசுக் கவியின் மீசை ஒரு தனி ரகம். இந்தியா ஆங்கிலேய அடிமைத் தனத்தில் ஊறிக் கிடந்த அந்தக் காலத்தில் புரட்சிகரமான மீசை பாரதியுடையது. ஒரு குங்குமப் பொட்டும் அந்த உதட்டு மேல் மேல்நோக்கி நிற்கும் கரு நிற மீசை ஒன்றுமே போதும் பாரதியின் அடையாளத்திற்கு. அதை மிக அழகாக வரைந்தவர் எழுத்தாளர் ஞானி. பேட்டன்ட் வாங்காததால் எல்லோரும் உபயோகிக்கிறார்கள். பரவாயில்லை, அது கூட தமிழுக்கு ஆற்றும் தொண்டுதான்.

தமிழர்களுக்கு மீசை தான் ஆண்மையின் அடையாளம். மீசை இல்லாமல் இருந்தால் பொம்பளை மாதிரி இருக்கான் என்று தூற்றுவார்கள். அப்பாஸ், குணால் என்று சுத்தமாக மழித்த நடிகர்களை களத்திலிருந்து வெளியே எறிந்து விட்டார்கள். ரிடயர்ட் ஆன போலீஸ் அதிகாரி தேவாரம், சர்வீசில் இருக்கும் சைலேந்திர பாபு, வி.சி.கவின் தொல்.திருமா, முன்னால் அ.தி.மு.க தற்போது தி.மு.கவில் கழகப் பணியாற்றும் KKSSR ராமச்சந்திரன், முன்னால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் மற்றும் மேர்வ் ஹுக்ஸ், என்று வெட்டரிவாள் மீசைக்காரர்கள் நம்மைச் சுற்றி ஏராளம். ஆனால், நாம் கணினியில் உபயோகப்படுத்தும் font ஸ்டைல்களை வைத்து மீசை வரைந்து ஒரு ரகளை செய்திருக்கிறார்கள் சுவாரஸ்யம் மிகுந்த சில கலாட்டாக்காரர்கள். அதைப் பிரிண்ட் போட்டு வேறு விற்கிறார்கள்.  ஒவ்வொரு மீசையும் தனி முறுக்கு மற்றும் ஒவ்வொன்றும் தனித்தனி நெய் தடவிய அட்டகாசம். ஒவ்வொரு font மீசையும் தனி அழகோடும் நேர்த்தியாகவும் செதுக்கி வரைந்து வளர்த்திருக்கிறார்கள் கணினியில். கொடுவா மீசைகளை பார்ப்போம்.
meesai
 

தேவர் மகன் படத்தில் வரும் கமல் வைத்திருக்கும் மீசையும், சிவாஜியின் மீசையும், மாயத்தேவன் நாசர் மீசையும் பற்றி சொல்ல முற்படுவதற்கு நம் வீரத் தமிழின் எந்த வார்த்தையிலும் அடங்காது. விருமாண்டி கமல ஹாசனும், பசுபதியும், வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜியும் நம் மனதை விட்டு இறங்குவதற்கு சண்டித்தனம் செய்கிறார்கள்.


வழக்கம் போல் ப்ளாக் முடிக்கும் தருவாயில் வெள்ளித்திரையோடு நமக்கு இருக்கும் பந்தம் காரணமாக மைக்கேல் மதன காமராஜனில் நம்ம ராஜ் கமல்ஹாசன் மீசை எடுக்கச் சொல்லும் மதன் கமலிடம் சிணுங்கும் காட்சி கீழே. காட்சியின் பின்புலத்தில் ஹிட்லர், பாரதி போன்ற மீசை வைத்தோர் பட்டியல் மாதிரி சுவற்றில் காட்சியளிப்பது இந்த சீனுக்கு பக்கபலம்.  ஓவர் டு வீடியோ.


எல்லாம் சரி, உங்களோட மீசை எந்த வகையறா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
 
பட உதவி: http://torweeks.blogspot.com/2009/10/i-made-poster-for-you.html, www.outlookindia.com, http://videolife.tk/magan/

6 comments:

Madhavan Srinivasagopalan said...

//தமிழர்களுக்கு மீசை தான் ஆண்மையின் அடையாளம்.//

I object your honour.

நா அப்பாஸ் டைப்பு மீசை வைச்சிருக்கேன்.

அந்த டிரைவரோட பேரு?

பொன் மாலை பொழுது said...

நம்ம ஏர் இந்திய மகாராஜாவின் மீசை ஒரு தனி ரகம் கம்பீரமும், சிறிது நையாண்டியும் கலந்தமாதிரி?
அது கூட இருக்கே ! மேலிருந்து மூன்றாவது வரிசை. இடமிருந்து இரண்டாவது. தூள். !!!

RVS said...

கக்கு சார், ஏர் இந்தியா மீசை, நம்ம நக்கீரன் கோபால் மீசை, வீரப்பன் மீசை இப்படி பலப்பல மீசை வகையாரக்களைப் பற்றி எழுத ஆசைதான். நேரமின்மை காரணமாகவும், ரொம்பவும் வள வள என்று இருந்தால் மக்கள் அடுத்த பக்கம் தாவி விடுவதாலும், குறைத்துக் கொண்டேன். நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மாதவா அந்த டிரைவர் பேர் வேல் மாணிக்கம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

'பரிவை' சே.குமார் said...

//தமிழர்களுக்கு மீசை தான் ஆண்மையின் அடையாளம்.//

correct.

RVS said...

ஆனால், முடி நரைத்தால், யாரேனும் மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பழிச்சொல்லுக்கு அஞ்சி ஒன்று மை தடவ ஆரம்பிப்பார்கள் அல்லது முழுவதையும் சிரைத்துவிடுவார்கள். என்ன சரிதானே குமார்? வருகைக்கு நன்றி :)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails