Sunday, August 22, 2010

ஞாயிற்றுக்கிழமைகளில்.....

avvai shanmugi

சோம்பேறித்தனமாக லேட்டாக எழுந்திருந்து நித்யப்படியைவிட கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவாக கோழித்தூக்கம் போட்டுப் பார்த்தால் பாழாய்ப்போற மணி ஏழு அடித்துவிடுகிறது. சரி இன்று லீவுதானே என்று கொஞ்சம் அசால்ட்டாக இருந்தால் கொஞ்ச நாழி கழித்து வயிற்றில் டாண்னு மணி அடிக்க ஆரம்பிக்கிறது. வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. மணி அடித்த வயிற்றுக்காக ஒரு காப்பிக்கு ரெண்டு காப்பி குடிக்கலாம் என்றால் இரண்டாம் தர காப்பி தான் இரண்டாம் தடவை கிடைக்கிறது. "இப்டி காப்பியே... குடிச்சுண்டிருங்கோ ..." என்று ராகம் பாடி ஒரு இடி இடிப்பாள் தர்மபத்தினி. "காலா காலத்ல எழுந்துண்டு சுருசுருப்பா குளிச்சுட்டு.. சாப்பிட்டுட்டு.. ஆத்து காரியம் எவ்ளோ இருக்கு. அதைப் பார்க்காம... மசமசன்னு.. நின்னுன்டே இருடா..." இது என்னைப் பெற்ற மகராசியின் பின்பாட்டு. இந்த ராகத்திற்கும் பாட்டுக்கும் எதிர்பாட்டு பாட நினைத்தீர்கள் நிச்சயம் அங்கே ஒரு கொலை விழும். நம்மை இடிப்பதில் அதிகம் வெற்றிபெறுவது தாயா? தாரமா? என்று ஒரு வழக்காடு மன்றம் வைக்கும் அளவிற்கு நிகராகவும் நிறைவாகவும் செய்வார்கள்.

க்ரஹஸ்த்தாஸ்ரமத்தில் வெற்றிகண்டு கோலோச்சுவதின் பலனாக எனக்கு வாய்த்த என் இரண்டு வெற்றிச்சின்னங்களையும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சி மகிழ்ந்தால் தான் உண்டு. வார நாட்களில் அலுவலகத்தில் இருந்து ஜூஸ் பிழியப்பட்ட ஆலைக் கரும்பாக அர்த்தஜாமம் முடிந்து முருகன் கோயில் நடை சாத்தும் நேரத்தில் திரும்புகையில் ஒருத்தி ஒருக்களித்தும் இன்னொருத்தி குப்புறவும் படுத்து சயனித்திருப்பார்கள். பால்கனியில் உட்கார்ந்து ஒரு அரைமணி மன்மோகன், சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், ஒபாமா,  ஒசாமா போன்றோர் பற்றியும், கள்ளக்காதலனுடன் ஓட்டம் எடுத்தவர்கள், தாயை கொன்று சொத்தை அபகரித்த பஞ்சமா பாதகர்கள், டீச்சர் திட்டியதால் அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு ப்ராணஹத்தி செய்துகொண்ட பள்ளி பயிலும் சிறுமி, ஒரு கிலோ தக்காளி நாற்பது ரூபாய் எட்டியது, விளையாட்டுப் போட்டி ஒப்பந்தங்களில் முறைகேடாக நடந்து கொண்டு எசக்கேடாக மாட்டிக்கொண்டவர்கள் என்று பலப்பல செய்திகளை அவரவர் இஷ்டத்திர்க்கு பொதுஜனங்களுக்கு விளம்பும் 'நடுநிலை' நாளேடுகளை சற்று மேய்ந்துவிட்டு செல்வங்களை எழுப்பி, படுக்கையில் உம்மா கொடுத்து, கிச்சு கிச்சு பண்ணி சீண்டி விளையாடி அவர்களை எழுப்பி நாமும் குளித்தால் ஆச்சு மணி பத்து ஆகிவிடும். அப்புறம் ஐந்தாறு இட்லி சாம்பார் பசிக்கும் ருசிக்கும் ஏற்ப ஊற்றி தின்று பசியாறிவிட்டு "அப்பாடா.." என்று உண்ட களைப்பில் ஊஞ்சலில் உட்காரும் போது, "ஏண்டா.. எல்.ஐ.ஸி கட்டின ரசீதெல்லாம் அங்கங்க கெடக்கு. எடுத்து உள்ள வை. பெட்ரூம் முழுக்க புஸ்த்தகமா இருக்கு. அதெல்லாம் எடுத்து புக் ஷெல்ஃப்ல வை. கொல்ல குழாய்ல தண்ணீ சொட்டு சொட்டா வரது, அந்த செல்வராஜை கூப்பிட்டு ரிப்பேர் பண்ணு.." என்று சரமாரியாக அடுத்த கட்ட வீட்டுப் பணிகள்  பற்றிய கட்டளைகள் பிறப்பிக்கப்படும். கட்டளை இடும் ராஜாங்க பொறுப்பில் என்னைப் பெற்ற தெய்வம்.

இட்ட கட்டளையை செவ்வனே நிறைவேற்றி, கொஞ்சம் அப்படியே உட்கார்ந்து டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் டி.வியில் பெண்களிடம் கெஞ்சி ஒரு ஸ்லாட் வாங்கி ஏதாவது பார்க்கலாம் என்றென்னும் சமயத்தில், "ஏன்னா.. உங்க பீரோவை கொஞ்சம் அடுக்கப்டாதா. ஆபிஸ் போகும் போது ஒன்னு எடுத்தா ரெண்டு சரியறது.. மேட்சா எடுத்து போட்டுக்க முடியலை.. சித்த செய்யுங்கோளேன்... எப்ப பார்த்தாலும் கொழந்தேளுக்கு போட்டியா டி.வி. முன்னாடி உட்கார்ந்துண்டு...." என்று இம்முறை மனைவியின் அன்பு ஆர்டர். வீட்டில் மதுரையோ சிதம்பரமோ, எந்த ஆட்சியாயிருந்தாலும் இந்த ஏவலுக்கு அடிபணிந்தே ஆகவேண்டும். இதற்க்கு கீழ்ப்படியாமல் இருந்தால் இதன் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரத்திற்கு கிட்ட அண்ட முடியாது. மொத்த ஆணினமும் இந்த பூச்சாண்டிக்கு அடிமை. "டாய்... நா யார் தெர்மா.. ச்சும்மா... வகுந்துருவேன்.." என்று முண்டு தட்டும் வஸ்தாது ஆணிலிருந்து சிக்கலான கொலை வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் மாண்புமிகு நீதியரசர்கள் வரை இந்த பொட்டை மிரட்டலில் பயந்து படிந்துவிடுவார்கள். மறு பேச்சு பேசாமல் எல்லாவற்றையும் அழகாக அடுக்கி, முடிந்தால் வாமபாகத்தின் துணிகளையும் கர்மசிரத்தையாக பிளவுஸ் மேட்சிங் பார்த்து அடுக்கினால் அதைவிட சிறந்த பணி ஒன்று உங்களுக்கு ஞாயிற்றுக்கிழைமையில் இருக்க வாய்ப்பே இல்லை.

கொடுத்த பணிகளை கடமையாய் செய்து வீட்டில் உள்ளோர் அன்புக்கும் பாசத்திற்கும் பாத்திரமான பின்னர் ஒரு இரண்டு மணி அளவில் மதியான்ன சாப்பாடு கிடைக்கும். மேல் சட்டை இல்லாமல் வேஷ்டியோடு கீழே சம்மணமிட்டு உட்கார்ந்து பொறுக்க ஒரு ஃபுல் கட்டு கட்டியபின்னர் ஒரு மூனு மணியளவில் கட்டையை கீழே சாய்க்கலாம். அப்போது பார்த்து பொண்ணு ரம்மி விளையாட கூப்பிட்டால் அதுவும் காலி. ஒருமணிநேர  சிரமபரிகாரத்திர்க்குப் பின்னர், அடுத்த வாரம் குடும்ப வண்டி ஓடுவதற்கு தேவையான காய்கறிகள், பிள்ளைகளின் ஸ்நாக்ஸிர்க்கான பழங்கள் பிஸ்கட்டுகள், தலை க்ளிப், கால் செருப்பு போன்ற அத்தியாவசிய பொருட் சேர்க்கையில் ஈடுபடவேண்டும். தலையே போனாலும் ஏழிலிருந்து ஏழரைக்குள் வீட்டிற்க்குள் வந்து அடைகாத்துவிட வேண்டும். எட்டரைக்கு சாப்பிட்டுவிட்டு ஒரு ஒன்பதரை வாக்கில் தூங்கினால் தீர்ந்தது சண்டே, இருக்கவே இருக்கிறது மறுநாள் மன்டே. ட்ராஃபிக்.... ஆபிஸ்...... மீட்டிங்..... டென்ஷன்..... இத்யாதி..... இத்யாதி......
பட விளக்கம்: லீவு நாட்களில் வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால், பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை என்று பாடிய அவ்வை ஷண்முகியின் படம். ஆம்பளையா இருக்கும் ஆம்பளைக்கும் வேலை வேறொன்றுமில்லை.
பட உதவி: yuvansuniverse.blogspot.com 


8 comments:

Madhavan Srinivasagopalan said...

அதுலாம் சரி.. இன்னிக்கு நம்ம கோபாலன் வூட்டுல (ஊருலயே) விசேஷங்க... அதைப் பத்தி சொல்லவே இல்லையே.. நா சொல்லியிருக்கேன்.. வந்து பாருங்க முடிஞ்சா..

// இரண்டாம் தர காப்பி தான் இரண்டாம் தடவை கிடைக்கிறது.// அது ஒங்க தப்புதானே..

//ஏண்டா.. எல்.ஐ.ஸி கட்டின ரசீதெல்லாம் அங்கங்க கெடக்கு. எடுத்து உள்ள வை.// அப்பப்ப அதல்லாம் ஒரு சரியான இடத்துல வெக்க மாட்டீங்களா.. இனிமேயாவது டிரை பண்ணுங்க..

RVS said...

அறிவுரைக்கு நன்றி மாதவன். நீங்க இதுலெல்லாம் கரெக்ட்டா இருக்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அப்பாதுரை said...

குழந்தைகளோட கொஞ்சி விளையாடுற ஒரு வருச சந்தோசத்துக்கு என்ன விலை கொடுக்கிறோம் பாருங்க!

(குழந்தைகள் பிறந்ததிலிருந்து பதினாறு வயசு வரை அவங்களோடு சந்தோசமா இருக்கச் சாத்தியமான எட்டாயிரத்து சொச்ச மணித்துளிகளை மொத்தமா சேர்த்தா ஒரு வருசம் தேறும்னு சொல்லுறாங்க.. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா ..ப்ப்பூ இவளோ தானானு தோணுது இல்லையா?)

RVS said...

வாஸ்தவம்தான் அப்பாதுரை சார். ;-( நிதர்சனத்துல எதுவும் செய்ய முடியலை. ஆபிஸ் வாழ்க்கையை கபளீகரம் செய்துடிச்சு..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Mani said...

Aha.. Nalla ezuthureenga sir.. ellorukkum intha anubavam undu....

RVS said...

Nandri Mani Sir,

anbudan RVS

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த ஞாயிற்றுக் கிழமை தான் நமக்கே வேலை ஜாஸ்தி. ஏண்டா இந்த நாள் வருதுன்னு இருக்கும்.

RVS said...

ஹும்.. இன்னிக்கு கூட ஓவர்லோடு தான் ஆர்.ஆர்.ஆர் சார்.... வாய தெறக்கப்படாது...... கப் சிப்....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails