Thursday, July 15, 2010

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..

blogதீவிரமாக சரசரவென நூறு பதிவுகளைக் கடந்த தீராத.வி.பிள்ளையைப் பற்றி ஊரெங்கும் தீப்பிடித்தார்ப்போல ஒரே தீப்பொறி பறக்கும் பேச்சு. ஒரே வாக்கியத்தில் எவ்வளவு தீ. ப்ளாக் பத்திக்கும் போலருக்கு. விட்டுடுவோம். நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஆட்டோ ஸ்டாண்டில் கூட ரெண்டு பேர் தந்தி படித்துக்கொண்டு மடக்கியது போக தொங்கவிட்ட காலை ஆட்டிக்கொண்டு இது பற்றி பேசியதாக அதிகாரப்பூர்வ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிண்டி மேம்பாலம் ஏறி வடபழனி நோக்கி இறங்கிய இடத்தில் நம் பேரன் பேத்தி காலத்தில் வரப்போகிற சென்னை மெட்ரோ ரயிலின் பாதை போடும் தடுப்புகளையும் இடர்பாடுகளையும் தாண்டி இரண்டு வெளியூர் சொகுசு பஸ், இரண்டு உள்ளூர் மாநகர பஸ், நான்கு ஆட்டோ, ஒரு எல் போர்டு சிகப்பு ஆல்டோ, இரண்டு சைக்கிள், கம்பி ஏற்றி நுனியில் சிகப்புதுணி சுற்றாத ஒற்றை மாட்டு வண்டி, பத்து டன் தண்ணீர் போத்தல்கள் எடை ஏற்றிய ஒரு குட்டி யானை, ரோடிலேயே ஆபிஸ் செல்லும் ரெண்டு பேரை இலவசமாக துணியோடு குளிப்பாட்டித் எஸ்டேட் திரும்பும் மெட்ரோ வாட்டர் லாரி என்று சகலவிதமான இடையூறல்களுக்குக்கிடையில் நாலைந்து பேர் என் கார் கண்ணாடியை தட்டி திறக்கச் சொல்லி "நூறு ஆச்சு எதுவும் சிறப்புப் பதிவு கிடையாதா?" என்று கொள்ளை ஆர்வமாக மனம் திறந்து கேட்க நம்முடைய ஆர்வக் கோளாறு ஆரம்பமாகியது. அதோடு மட்டுமல்லாமல் ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, ரெடிஃப் என்று மெயில் பேதம் பார்க்காமல் அனைத்து இலவச பொது மெயில் சர்வர்களிலும் குவிந்த எண்ணற்ற கணக்கிலடங்கா கேள்விகளுக்கு குலுக்கலில் எடுத்து பதில் சொல்லாமல் குலுக்கல் நடிகை (நம்மோட மனதை குலுக்கும்/உலுக்கும் நடிகை என்ற அர்த்தத்தில் படிக்கவும்) குமீதாவை நானாட நீ ஓட  நிகழ்ச்சியின் தேநீர் ஓய்வு நேரத்தில் அணுகி, கையை காலைப் பிடித்து (கெஞ்சி கேட்டதைத்தான் இவ்வாறு எழுதியுள்ளோம் என்று தீ.வி.பி வாசகர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்) அவரது பொற்கரங்களால் கிளிக்கி தேர்ந்தெடுக்கச் சொல்லி பதில் அளித்துள்ளேன்.  கிளி சீட்டு எடுப்பது போல அவர் தேர்ந்தெடுத்த சில மெயில்களுக்கு என்னுடைய அவையடக்கமான பதிலை படித்து இன்புறுக.


சுடலை.சுண்டல்@கிண்டல்.காம் கேட்டது....
நீங்க எப்போலேர்ந்து எழுத ஆரம்பிச்சீங்க?

நான் வடுவா ஒன்றாம் வகுப்பு படிக்கறதிலிருந்து எழுதிக்கிட்டு வரேன். நீ நல்லாவே எழுதலை, காக்கா கிறுக்கலா இருக்கு, காண சகிக்கலை அப்படீன்னு அப்பவே எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சகாயமேரி டீச்சர் அவங்க தலையில அடிச்சுகிட்டே சொல்லுவாங்க.

வெட்டியான்@சும்மாகிடந்தசங்கு.காம் ஊதியது...
பதிவு எப்போலேர்ந்து எழுதுறீங்க சார்?

2007 நவம்பர்ல இந்த பதிவு மூலமாக ப்ளாக் உலக சரித்திரத்திலேயே எவருமே என்ட்ரி ஆகாத வகையில் உள்நுழைந்து உலகப் பிரசித்தி அடைந்தேன்.  அந்தப் பதிவு மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியதால சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின் இந்த வருஷம் பிப்ரவரி முதல் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கேன்.

படைப்பாளி@நையபுடைப்பவர்கள்.காம்  புடைத்தது...
உங்களோடது எந்த மாதிரி படைப்புகள்?

மேல், கீழ், முன் மற்றும் பின்நவீனத்துவங்கள் அனைத்தும் எழுத்தில் கொண்டுவர ஆசைப்படுகிறேன். உப்புசப்பு இல்லாமல் எழுதாதே முடிந்தால் கொஞ்சம் கரம் மசாலா போட்டு காரமாக எழுது என்று என் நண்பர் எழுத்துலக தாதா சா.....தா குருபோதனை செய்துள்ளார். அவருக்கு குருவணக்கம் செய்யும் பொருட்டு அப்பப்போ அசைவமும் சைவத்தோடு சேர்த்து எழுதுகிறேன். நான் அக்மார்க் தூய தமிழில் எழுதினால் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போல் உள்ளது என்று தாய்லாந்தில் சியாங் மாய் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்யும் தூக்டா எனக்கு பாராட்டு கடிதத்துக்கு பதில் என்னைப் பற்றி எட்டுப் பக்க கட்டுரை வரைந்து எனக்கு மெயில் அனுப்பியுள்ளார். விரைவில் அதுவும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

காமவம்பன்@குசும்பு.காம் வம்படித்தது..
நீங்க காரோட்டும் போது ரோட்ல போறவர பொண்ணுங்களை வச்சகண் வாங்காமவும் இமைக்காமலும் திருட்டுத்தனமா கள்ளப்பார்வை பார்க்குறதாகவும், சில சமயங்கள்ல சடார்னு பின்னால திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிகிட்டதாகவும் அதனாலதான் உங்க வலைதளத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை அப்படின்னு பொருத்தமா ஒரு பெயர் சூட்டினதா ஊர்ல எல்லாரும் கும்பலா கூடி நின்னு பேசிக்கிறாங்களே அது உண்மையா?

இந்தக் கேள்விக்கான விடையை சில மாதங்களுக்கு முன்னாடியே மயிலை மாங்கொல்லையில் போஸ்டர் அடித்து கலாமை கூப்பிட்டு மேடை போட்டு ஒரு பொதுக்கூட்டத்துல சொல்லிட்டேன். அது இங்க இருக்கு. படித்து புரிந்துகொள்ளுங்கள்.

வாலிபகுறும்பன்@வயசுப்பையன்.இன் லிருந்து...
நீங்க எழுதற கார்த்திக்கின் காதலிகள் தொடர் பற்றிய ஒரு கேள்வி. எல்லோரும் அது உங்களோட உண்மைக்கதை சொந்தக்கதை நொந்தக்கதை என்கிறார்களே... இதைப் பற்றி உங்கள் கருத்து...

இந்த கதைகளுக்கான குறிச்சொல்லே புனைவு அப்படின்னு தான் போட்டிருக்கேன். பொதுவா கதைன்னு சொன்னாலே இந்த சமூகம் கை கால் மூக்கு நாக்கு வச்சு பேசும். இதுல என்னை வச்சு பேசுது. அதோட மட்டுமல்லாமல் என்னை நேர்ல பார்க்கிறவங்களுக்கு என்னோட தகுதி என்ன என்பது நல்லா தெரியும். கதையில வர எல்லாப் பொண்ணுங்க கூடவும் இந்த நையாண்டி உலகம் எவ்வளவுதான் இணைத்து கிசுகிசு பேசினாலும், என் தங்கத் தாரம் சொல்றா "உங்க மன்மதனையொத்த அழகுக்கு நான் ஒருத்தி மாட்டிகிட்டதே அதிகம்"ன்னு.

உயிரைவாங்கும்நண்பன்@கால்வாரி.காம் வாரிவிட்டது..
நீங்க ப்ளாக் எழுதறதப் பற்றி உங்கள் நண்பர்கள் கருத்து.. யாராவது ஒரு நண்பரின் உள்ளக்கருத்தோடு எடுத்துக் கூற முடியுமா?

சமய சந்தர்ப்பங்கள் பார்க்காம எந்நேரமும் ஜில்லெட் மாக் 3 சவர பிளேடு மாதிரி என் நண்பர்களை வாயாலேயே வகுந்ததின் விளைவாக, ஐயா சாமி தாங்கமுடியலை, நீ இதையெல்லாம் ப்ளாக்கா எழுதுப்பா ராஜா. நாங்கெல்லாம் அங்க போய் படிச்சிக்கிறோம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களோட ஊக்கத்தின் சிறப்புப் பரிசாக அவங்களுக்காகத்தான் இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். 
உங்களோட உள் கேள்விக்காக சிநேகிதர் ஒருவரின் கருத்துக்காக நண்பர் ரவியிடம் தொலைபேசியில் கேட்டபோது....
(கேள்வி கேட்ட பின்னர் அவர் குரல் சற்று கம்மி குமுறியது. நம் போன் கேள்விக்கு வெறிகொண்டு அவர் எழுதிய மின் மடலை அக்ஷரம் பிசகாமல் அப்படியே வாசகர்களின் பார்வைக்கு கீழே தந்துள்ளோம்)
  
எப்போதுமே ஓயாம ஒரு ரூபா காயினை தகர டப்பால போட்டு ஆட்டற மாதிரி  பேசிக்கிட்டே இருப்பான். நம்மால காது கொடுத்து கேட்க முடியலைன்னு ப்ளாக் எழுதுன்னு சொல்லிட்டோம். ஆனா இப்பதான் ஹிம்சை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு. முன்னாடியெல்லாம் ஒரு முறை ஒரு விஷயத்தை சொல்வான். இப்போ ஒரு தடவை சொல்லிட்டு இதையெல்லாம் ப்ளாக்ல எழுதியிருக்கேன் படிங்க, படிங்கன்னு நச்சரிக்கறான். ரத்தம் வர சொரியறான். ஒரு ப்ளாக் எழுதி ஊர் முழுக்க போன் போட்டு "மாமா இது எழுதியிருக்கேன்", "மச்சான் அது எழுதியிருக்கேன் படிங்கடா" அப்படின்னு வேற பிடுங்கறான். தொல்லை தாங்காம  சரி படிச்சோம் அப்படின்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தா போர்டு எக்ஸாம் மாதிரி அவன் எழுதின ப்ளாக்லேர்ந்து கேள்வி வேற கேட்டு நாம படிச்சோமான்னு டெஸ்ட் வச்சு படுத்தறான். இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலமோ?
(மரண தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நண்பரின் கண்ணீர்த் துளிகள் மின்மடலிலும் கூட கொஞ்சம் ஈரம் செய்திருந்தது)
அநியாயவாதி@குடும்பத்தில்கும்மியடிப்பவர்.காம்  கும்மியடித்தது...
இதைப் பற்றி உங்க மனைவி என்ன நினைக்கறாங்க?

ரொம்ப பெருமையா இருக்கு அப்படின்னு முதல்ல சொன்னாங்க. எதுக்கு அப்படின்னு கேட்ட போது முன்னாடியெல்லாம் உங்களுக்கு எதிர்த்தாப்ல, கூப்பிடற தூரத்தில இருக்கறவங்களை தான் பேசிப் பாடா படுத்துவீங்க. இப்ப ப்ளாக் ஆரம்பிச்சு பிரபஞ்சத்ல இருக்குற சகலவிதமான தமிழ் எழுதப் படிக்க தெரிந்த ஜீவராசிகளையும் படுத்த முடியும் அப்படின்னு நீங்க நிரூபிச்சதால உங்களை கட்டிகிட்டதற்காக நான் ரொம்பவே பெருமைப்படறேன். அப்படின்னு சொல்லும்போது அந்தப் பெருமை அவ கண்கள்ல மின்னுறதை நான் கண்கூடாக பார்த்தேன்.

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. பதில் எழுதி(அடித்து) கை வலிப்பதாலும், இது எப்போதுமே எவர் கிரீன் சப்ஜெக்ட் என்பதால் இருநூறு, முன்னூறு, ஐநூறு, ஆயிரம் போன்ற நூற்பதிவுகள் கொண்டாட்டத்திற்கு கவனித்து கொள்ள(ல்ல)லாம்  என்று இப்போதைக்கு இப்பதிவு இத்துடன் நிறைவடைகிறது. 

(அப்பாடி! end கார்டு போட்டான்டா என்று ஏகமனதாக எல்லோரும் பெருமூச்சு விடுவது பெரிய ஆலமரத்தையே சாய்த்துவிடும் போலிருக்கிறது. சே. விவஸ்தையே கிடையாது end சொல்லியும் இன்னும் எழுதறான்பா... அவன் கையிலேர்ந்து கீபோர்டை பிடுங்குங்கப்பா.. என்று நாலு பேர் ஓடி வருகையில்.. நான் எஸ்கே..................ப்)
பட உதவி: http://blogs.worldbank.org/

7 comments:

மதுரை சரவணன் said...

ரெம்ப பெருமையா இருக்குங்க.... பகிர்வுக்கு நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

நான் வடுவா ஒன்றாம் வகுப்பு படிக்கறதிலிருந்து எழுதிக்கிட்டு

வடுவா அல்ல, வடிவா

Shri ப்ரியை said...

நான் தான் முதல்.....

///தொல்லை தாங்காம சரி படிச்சோம் அப்படின்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தா போர்டு எக்ஸாம் மாதிரி அவன் எழுதின ப்ளாக்லேர்ந்து கேள்வி வேற கேட்டு நாம படிச்சோமான்னு டெஸ்ட் வச்சு படுத்தறான். இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலமோ?///

சொன்னவங்க வாயில சக்கர தாங்க போடனும்.....

Shri ப்ரியை said...

நான் தான் முதல்...

///தொல்லை தாங்காம சரி படிச்சோம் அப்படின்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தா போர்டு எக்ஸாம் மாதிரி அவன் எழுதின ப்ளாக்லேர்ந்து கேள்வி வேற கேட்டு நாம படிச்சோமான்னு டெஸ்ட் வச்சு படுத்தறான். இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலமோ?///

சொன்னவங்க வாயில சக்கர தாங்க போடனும்....

RVS said...

வடு தான் ராம்ஜி.. சின்னப் பையன் அப்படிங்கறத வடுன்னு சொல்லியிருக்கேன்...

சீனா, மதுரை சரவணன், ஸ்ரீ ப்ரியை, ராம்ஜி எல்லோருக்கும் ஸ்பெஷல் நூறு தாங்க்ஸ்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

congrats on this achievement.. keep going..

Anonymous said...

Super Sir, Congrats...........

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails