Thursday, December 15, 2016

ராவி நதி

ஸ்டேஷனில் காத்திருந்த ரயிலில் துளிக்கூட இடமில்லை. பெட்டிகளின் கூரைகளில் புற்களைப் போல மக்கள் முளைத்திருந்தார்கள்.
இப்படிதான் அந்தக் கதை ஆரம்பித்தது. முதல் பிரசவமான ஷாஹ்னியின் கணவன் தர்ஷன் சிங். இரட்டைக் குழந்தைகள். அப்பா அம்மாவோடும் குழந்தை குட்டிகளோடும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தவனுக்கு வேதனையைத் தருவதற்கு சுதந்திரம் வந்தது என்று எழுதினால் அயோக்கியத்தனமாக இருக்கலாம். ஆனால் கதைப்படி பாகிஸ்தானிலிருந்து ஹிந்துஸ்தானுக்கு மேற்படி ரயிலேறி வரவேண்டும் என்ற கட்டாயம் அந்த சுதந்திரத்தால் அமைந்தது. விதி சுதந்திர ரூபமெடுத்து சுதந்திரமாக விளையாடியது.
சீக்கியர்களும் ஹிந்துக்களும் பாகிஸ்தானின் லாயல்பூரிலிலுள்ள குருத்வாராவில் ரகசியமாக கூடுகிறார்கள். சுதந்திரம் பெற்றதையடுத்து ஒரே அமளி. அடிதடி. இந்த சூழ்நிலையில் மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தர்ஷன் சிங்கின் அப்பா கூடத்திலிருந்த கோடாலியில் தலைமோதி இறந்துவிடுகிறார். அவனுடைய அம்மாவும் கலவரத்தில் காணாமால் போய்விடுகிறாள். இரட்டைக் குழந்தையைப் பிரசவித்து கட்டிலில் கிடக்கிறாள் மனைவி. ஊரெங்கும் சண்டை. கலவரம். பாவப்பட்ட குடும்பத் தலைவன். பயித்தியம் பிடிக்காமல் எஞ்சிய குடும்பத்தை காப்பாற்ற பாடுபடுகிறான்.
ஒருவாராக மனதைத் தேற்றிக்கொண்டு, தனது சொத்தான இரண்டு குழந்தைகளையும் கூடையில் வைத்து தலையில் வைத்துக்கொண்டு ஹிந்துஸ்தான் செல்லும் ரயிலின் மேற்கூரையில் ஏறிவிடுகிறார்கள். பத்துமணி நேரம் கழித்து ரயில் கிளம்புகிறது. இரண்டு குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தபடி வருகிறாள் ஷாஹ்னி. இரண்டும் கதறுகின்றன. ரயில் இரவு முழுவதும் நகர்ந்தபடி இருக்கிறது.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு சிசு அழ இன்னொன்று அசைவற்றுக் கிடப்பதைப் பார்க்கிறான் தர்ஷன் சிங். துணிச்சுருளுக்குள் கையைவிட்டுப் பார்த்து அதன் தேகம் சில்லிட்டிருப்பதைக் கண்டு அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது இறந்து போய் சிறிது நேரம் ஆகியிருக்கக்கூடும். சுற்றியிருந்தவர்களுக்கு விஷயம் விளங்கியது. இறந்த குழந்தையை அகற்றப்பார்த்த போது ஷாஹ்னி “தம்பி இல்லாம இவனும் பால் குடிக்க மாட்டான்..” என்று தர மறுக்கிறாள்.
ரயில் நின்று நின்று திக்கித் திக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. கைராபாத் தாண்டி குஜ்ரன்வாலா. அப்புறம் லாகூர் ஒரு மணி நேரம். தாண்டினால் ஹிந்துஸ்தான். சிலர் ரயில் மேலிருந்து “ஹர். ஹர் மஹாதேவ்!”” என்று கூச்சலிடுகிறார்கள்.
ரயில் ஒரு பாலத்தின் மேல் வருகிறது. பக்கத்திலிருந்த ஒரு ஆள் தர்ஷன் சிங்கிடம் “இது ராவி நதி. நாம இப்போ லாகூர்ல இருக்கோம். சர்தாஜி.... அந்த இறந்த குழந்தையை ராவி நதியில வீசிடுங்க.. அவனுக்கும் புண்ணியம் கிடைக்கும். செத்தவனைத் தூக்கிக்கிட்டு நாம ஏன் அந்தப் பக்கம் போவானேன்?” என்று கேட்கிறான்.
தர்ஷன் சிங் மனைவியின் கூடையைப் பிடித்து இழுக்கிறான். அவள் இறுகப் பிடித்திருக்கிறாள். கூடையிலிருந்த துணிச்சுருளைப் பிடித்து இழுத்து கடவுளின் பெயரைச் சொல்லி அதைத் தூக்கி ராவி நதியில் வீசி எறிந்தான்.
இருட்டில், ஆகாயத்தில், ஒரு சின்னக் குழந்தையின் அழுகையொலி கேட்ட பீதியில் மனைவி இருந்த பக்கமாய்ப் பார்த்தான். மனைவியின் மாரில் இறந்த குழந்தை புதைந்திருந்தது. அப்போது புயலென எழுந்தன உரத்த குரல்கள். = “வாகா... வாகா..” “இந்துஸ்தான் ஜிந்தாபாத்!”
-அசுபம்-
இது உருதுவில் குல்ஸார் எழுதிய கதை. தமிழாக்கம் தந்தவர் சிவசங்கரி. மனதைப் பிசையும் முடிவு. படித்து வெகுநேரமாய் மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது. வீட்டையும் நாட்டையும் பெற்ற தாய் தந்தையரையும் பிரிந்த தர்ஷன் சிங்கிற்கு... அதுவரை வந்த வேதனை பத்தாது என்று... தன் கையாலேயே உயிருள்ள குழந்தையை மனைவியிடமிருந்து பிடிங்கி நதியில் விசிறிவிட்டான். சம்பவங்களை நேரில் பார்த்து இருகைகளையும் தலையில் வைத்துக்கொண்டு “அடப்பாவமே!” என்று துக்கப்படலாம். ஆனால் நான் எழுத்து ரூபமாகப் படித்துவிட்டு இருகைகளையும் சிரசில் வைத்துக்கொண்டேன்.
நான் படித்த கதைகளில் இந்த “ராவி நதி” மறக்கவே முடியாத ஒன்று.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails