Thursday, December 15, 2016

நாகரிகமான காக்கை ஜாதி!

முதலிலேயே தெண்டனிட்டுவிடுகிறேன்... பாரதியின் பெருமைகளை கவிநயமாக எழுதுமளவுக்கு எனக்கு வித்வத் பத்தாமலிருக்கலாம். எனது மொழி பாண்டித்தியம் அவ்வளவு சோபனமாயிருக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும் கவிராஜனுக்கு ஒரு வ்யாசம் எழுதலாம் என்று எனக்கு அருளப்பட்டிருக்கும் லவலேசம் தமிழில் எழுத விருப்பம். தலைகாணி தலைகாணியாக “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - சீனி. விசுவநாதன்” புத்தக அலமாரியிலிருந்து முண்டாசோடு எட்டிப் பார்த்தது. பாரதியின் புத்தகங்களைக் கையிலெடுத்து வருடிக் கொடுத்து பாரதியின் அண்மையில் ஆத்ம திருப்தியடைந்தேன்.

தொட்டால் சுடும் வார்த்தைகள் அடங்கிய பாரதியின் தீப்பொறி பறக்கும் உணர்ச்சிகரப் புரட்சிப் படைப்புகளை காட்டிலும், ஆளை மயக்கும் அவரது காதல் ததும்பும் “வீணையடி நீயனக்கு மேவும் விரல் நானுக்கு... ”, “நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி...” வகையறா கண்ணம்மா பாடல்களும் ஹாஸ்யம் புரளும் சில பயணக் கட்டுரைகளும் ரொம்பவும் பிடிக்கும்.
”என் ஈரோடு யாத்திரை” என்று சக்திதாஸன் என்கிற பெயரில் பாரதி எழுதிய கட்டுரையில் இரண்டு பாராக்களை கீழே தருகிறேன். சிரிச்சு மாளலை.
//
கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக்கொண்டு போயிற்று.
அரைமைல் தூரத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் எனக்கு வேலை. அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன்.

கருங்கல்பாளையத்துக்குப் போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது. அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடி மனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிறோம்
//
இதில் மாட்டுப் பூனை என்கிற ப்ரயோகமும் போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டதும் எப்போது படித்தாலும் சிரிப்பூட்டுபவை.

பாபநாசம் என்கிற பயணக் கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்துவிடலாம். கட்டுரையின் தொடக்கத்திலேயே “கிழக்கே என் கண்ணெதிரே ஸுர்யன் உதயமாய் ஒரு பனையளவு வான் மீதேறி ஒளிர்கிறான். நான் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருக்கிறேன். என் காலின் கீழே மாதாவாகிய தாம்ரபர்ணி ஓடுகிறாள்” என்று எழுதி நம்மை அழைத்து பக்கத்தில் உட்கார்த்திவிடுகிறார்.
ஸூர்யோதயத்தில் சலசலக்கும் தாம்ரபர்ணியின் ஓசையில் தாம்ரபர்ணியை சங்கீதக்காரியாக்கிவிடுகிறார். எத்தனை யுகங்களாக இந்தத் தாம்ரபர்ணி இங்கே ஓயாமல் தீராமல் ஒரே ராகமான பாட்டு பாடிக்கொண்டிருக்கிறாளோ!! என்று அதிசயத்து “நாத ப்ரஹ்மம்” ஆகிய ஒலிக்கடவுளை உபாஸனை செய்ய விரும்புபவன் பாபநாசத்தில் வந்து வாழக் கடவது என்று சிபாரிசு செய்கிறார்.
மந்திரமொன்றை உச்சரித்து யோகஸித்தி பெற விரும்புபவர்கள் இந்த தாம்ரபர்ணி ஆற்றங்கரையில் உட்கார்ந்து அந்த சலசலப்பை ஸ்ருதிப் பெட்டியாக பாவித்து “ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம் சக்தி...ஓம் சக்தி” என்று ஜபிக்கலாமாம். யப்பா!! என்னவொரு சிந்தனை!!!
அந்த ஆற்றில் குளிக்க இறங்கும் போது மீன்களைப் பார்க்கிறார். பாபநாசத்தில் மீன் பிடிக்கக்கூடாதென்ற சம்ப்ரதாயம் இருக்கிறதாம். இதை மீறி ஒரு ஆங்கிலேயன் மீன் பிடித்து கண்களை இழந்த கட்டுக்கதை இருக்கிறது என்று எழுத்தால் சிரிக்கிறார். ஆகையால் மனிதர்களிடம் பயமில்லாமல் மீன்கள் பழகுகின்றனவாம். அந்த மீன்களின் கண்களை கீழ்க்கண்ட விதம் வர்ணிக்கிறார்.
இலேசான தங்கக் கம்பியினால் ஒரு சிறு வளையம் பண்ணி அதனிடையே நீல ரத்நம் பதித்தது போல இவற்றின் கண்கள் மிளிர்கின்றன.
மேலும் அவை நாம் போடும் சோறுண்ண மேலே வரும் போது....
நீரோட்டத்தை எதிர்த்து இந்த மீன்கள் அணி யணியாக வந்து நிற்பதைப் பார்க்கும் போது, எதிரிகளின் குண்டுகளைக் கருதாமல் அணிவகுத்து நிற்கும் காலாட்படைகளைப் போன்ற தோற்ற முண்டாகிறது.
மீன்களின் தரிசனம் ஆயிற்றா? அடுத்தது அங்கு பிரசித்தியாகத் திரியும் குரங்குகளைப் பற்றிய வர்ணனை...
பாபநாசத்து மீன்களைப் போலவே அவ்விடத்துக் குரங்குகளுக்கும் கீர்த்தியுடையன என்று ஆரம்பித்து ஒரு குட்டிக் கதை போல சொல்கிறார். அங்கு வசிக்கும் குரங்குகள் யாத்திரைக்கு வரும் மனிதர்களோடு பழகி தாமும் இயன்றவரை மனித நாகரிகத்துடன் ஒத்த நடைகள் பெற்றிருக்கின்றனவாம். மனிதர்களின் கைகளிடமிருந்து தின்பண்டங்களை மிகவும் பயபக்தியுடனும் விநயத்துடனும் வான்கித் தின்கின்றன.
இப்படி எழுதிவிட்டு ஒரு பகடி செய்கிறார். அதாவது இவ்வளவு விநயத்துடன் இருப்பதால் கள்வு கொள்ளைகள் நடத்துவது கிடையாது என்று எண்ணி விடவேண்டாமாம். அந்தச் செயல்கள் முறைப்படியே நடைபெற்று வருகின்றனவாம். அதாவது குரங்குகளின் மனித நாகரிகம்!!!! மனிதன் குரங்குகளுக்குக் கூட கற்றுக்கொடுக்கும் நாகரிகம். :-)
இரண்டனாவுக்குப் பொரி கடலை வாங்கி அவைகளுக்குப் போடுகிறார். அதில் “தாட்டையன்” என்கிற பெரிய முரடான ஆண் குரங்கு மட்டும் வாங்கித் தின்கிறது. பெண் குரங்குகளுக்கு “மந்தி” என்று பெயராம். தாட்டையன் பின்னால் ஒரு சைனியமாக நிற்கும் குரங்குள் எதுவுமே தின்ன முன் வரவில்லை. தாட்டையன் மீதுள்ள பயம்.
இதைப் பார்த்தவுடன் தூரத்தில் இருக்கும் குரங்குகளுக்கு பொரி கடலையை வீசியிருக்கிறார் பாரதி. தாட்டையன் அதிகாரத்தில் இருக்கும் ஸந்நிதியில் கட்டுப்பட்டிருக்கும் குரங்குகளுக்கு பொரி அள்ளி வீசியதால் அந்த தாட்டையன் பாரதியாரை நோக்கிப் பற்களை விரித்துக் காட்டி பயமுறுத்தியதாம். அதைக் கண்டு கோபமுற்று மீண்டும் மீண்டும் பொரி கடலைகளை பின்னால் நிற்கும் குரங்குகளுக்கே அள்ளி வீசினாராம் பாரதி.
வெறுப்புற்ற தாட்டையன் பாரதியின் முன்னால் வந்து முன்னைக் காட்டிலும் விகாரமாகப் பற்களைக் காட்டி கை ஓங்கியதாம். உடனே பாரதி அந்தத் தாட்டையன் முகத்தில் காறி யுமிழந்தாராம். அப்போது அங்கு வந்த பாப்பாரப் பெண்ணொருத்தி கீழ்வருமாறு சொன்னாளாம்.
“குரங்குகளுக்குள்ள வழக்கமே இப்படித்தான். யார் என்ன தீனி போட்டாலும் அதைப் பெண் குரங்குகளுக்குத் துளிக்கூட கொடுக்காமல் தாட்டையன்களே தின்னுகின்றன. அதிலும் சின்னத் தாட்டையன்களைப் பெரிய தாட்டையன் பக்கத்தில் அணுக விடுவதில்லை. ஒரு குர்ங்கு தின்பதைக் கண்டால் மற்றொன்றுக்குப் பொறாமை! மனுஷ்யர்களைப் போலேதான் இக் குரங்குகளும்!!”
உடனே பக்கத்திலிருந்தவர்கள் கல்லெடுத்து தாட்டையன் மேலே வீசினார்கள்.”சீச்சி.. ஏழைப் ப்ராணன்! அஹங்காரத்தை அதனிடம் மாத்திரம்தானா கண்டோம்” என்று பாரதி தடுக்கும் முன் உயிர்பிழைக்க ஓடிவிட்டதாம். பின்னர் பிற குரங்குகளுக்கு தானியம் போடும் போது நடந்த பொறாமைக் கதைகளை எழுதினால் இந்த வ்யாசம் மிதமிஞ்சிய நீட்சி பெறும் என்று முடிக்கும் போது திரும்பவும் அந்த பிராம்மணப் பெண் சொன்னதை இவ்விதம் எழுதுகிறார்.
“ஆனாலும் சோற்று விஷயத்தில் மனுஷ்யர்களும் இந்த குரங்குகளும் ஒன்றுக்கொன்று பொறாமைப்பட்டும், அடிமைப் படுத்தியும் செய்யும் அநியாயங்கள் வேறெந்த ஜாதியிலும் நான் பார்த்ததே கிடையாது. காக்கை ஜாதியைப் பார், தங்கம் போலே! எல்லாக் காக்கையும் “அக்கா வா, தங்கை வா” என்று ஒன்றையொன்று கூவி ஒக்க விருந்துண்ணுகின்றன. குரங்கும் மனிதனும் சுத்த அநாகரிக ஜந்துக்கள்! காக்கை ஜாதி மிகவும் நாகரிகமானது”
***
நேற்று எங்கள் வீட்டுக் கொல்லையில் செத்த எலிக்காக இரண்டு காக்கைகளுக்கிடையே பழி சண்டை. பாரதி கால காக்கைகள் சௌஜன்யமாக வாழ்க்கை நடத்தியிருக்கின்றன. ஆனால் காக்காய் பிடித்தால் சௌக்கியமாக வாழலாம் என்று சமகால மனித ஜந்துக்கள் கற்றுத் தெளிந்திருக்கின்றன.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails