Thursday, December 15, 2016

பத்திரிக்கை உலகின் சிம்மக்குரல்

"மாதங்களில் நான் டிஸம்பராக இருக்கிறேன்" என்று யமதர்மராஜன் சென்னை விஜயத்தில் இருக்கிறான். வெகுஜனம் பாசம் வைத்திருப்பவர்களாகப் பார்த்து திதிக்கு ஒருவராக பாசக்கயிற்றை வீசுகிறான். நசிகேதர்கள் யாராவது போய் அவனது வாயிற் கதவைத் தட்டி மீட்டு வந்தால் பரவாயில்லை.
மஹாபாரதம் படிக்க வேண்டும் என்கிற பேரார்வம் எழுந்தபோது வாங்கிய புத்தகம் சோ அவர்கள் எழுதிய ”மகாபாரதம் பேசுகிறது”. துக்ளக்கில் தொடராக வந்து அல்லயன்ஸ் பதிப்பித்தது. லட்சம் கிரந்தங்கள் அடங்கிய புத்தகம் வியாசரின் மகாபாரதம். இரண்டு புத்தகங்களில், மொத்தம் சுமார் ஆயிரத்தைநூறு பக்கங்களில் மூலம் கெடாமல் ஐந்தாவது வேதத்தை அனுபவிக்கக் கொடுத்தவர். மனசுக்குள்ளே அவருக்குக் குரு நமஸ்காரம் செய்துவிட்டு தினமும் விபூதி இட்டுக்கொண்டு பயபக்தியோடு படித்திருக்கிறேன்.
மயிலையில் அல்லயன்ஸ் பதிப்பதிகத்திற்குள் நுழைந்தாலே சோ வாசனை அடிக்கும். அவரது ஹிந்துமஹா சமுத்திரத்தினால் உபநிஷத்துகளின் பெருமை அறிந்தோம். கூவம் நதிக்கரையினிலேவும் முகம்மது பின் துக்ளக்கும் வாழ்வாங்கு வாழும் காவியம். ”எங்கே பிராமணன்?” அந்தணர்களின் அடையாளங்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய படைப்பு.
அவரின் அரசியல் பகடிகளுக்குப் பஞ்சமேயில்லை. வாழ்நாள் முழுவதும் தனது கருத்துக்களை "சோ"வென மழையாகப் பொழிந்தவர். அவரது அட்டைப்பட கார்ட்டூன் அதில் இடம்பெற்றிருப்பவர்களையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கேள்வி பதிலால் ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் திணறத் திணற பேசமுடியாமல் அடித்தவர்.
எந்த அரசியல் விஷயத்தையும் தைரியமாகவும் தனது கருத்துகளில் விடாப்பிடியான நம்பிக்கையும் வைத்து எழுதியவர். மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் அசட்டுப்பிசட்டு என்று பேசினால் நொடி நேரத்தில் அவர்களது கூற்றை தவிடுபொடியாக்கியவர்.
மேலுலகத்திற்கு சென்ற ஜெயலலிதா சோ பேச்சை மட்டும்தான் கேட்பார் என்று இவரையும் அழைத்துக்கொண்டார்கள் என்கிற சமூக வலைத்தளங்களில் உலா வரும் Black humor வகையாறாவைக் கேட்கும் போது உதடுகள் மிமீ விரிந்தாலும் மனசுக்குள் வேதனை குடைகிறது.
நாடகம் சினிமா, அரசியல், வழக்கறிஞர், எழுத்து என்று பல்துறை வித்தகராகக் கோலோச்சிய சோ ராமசாமி அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். இன்னுமொரு சோ இப்புவியில் பிறத்தல் அரிது என்கிற உண்மையால் எங்களுக்கு மூச்சு முட்டுகிறது. விழி சிவக்கக் கண்ணீர் சிந்தி காலன் கொண்டு சென்ற தென் திசை நோக்கி விழுந்து தொழுது வணங்குகிறோம் சார்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails