Thursday, December 15, 2016

கார்கில் நாயகன்: லலித் ராய்

1999ம் வருஷம். மே மாதம். கார்கில். கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரத்திலிருந்து பதினெட்டாயிரம் அடி மேலே இருக்கும் குளிர்ப் பிரதேசம். பனி மூட்டத்துடன் கூடிய மங்கலான அதிகாலை நேரம். தலைக்கு முண்டாசும் கையில் பெருங்கழிகளோடும் மாடுகளோட்டிச் செல்கிறார்கள் சில கிராமத்து இடையர்கள். வழக்கத்திற்கு மாறாக யாரோ ஆட்கள் இங்குமங்கும் ஏதோ ஒரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
உற்றுப்பார்த்ததில் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை தாண்டி நமது எல்லையிலிருப்பவர்கள் இராணுவ வீரர்கள் என்று அறிகிறார்கள். பொதுவாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் கீழே இறங்கும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய படைகள் மீண்டும் ஜூன் ஜூலை மாதங்களில்தான் மேலேறி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த வருடம் க்ளோபல் வார்மிங்கில் முன்னதாகவே பனிக்குன்றுகள் கரைந்து ஏப்ரல் மேயிலேயே தெளிவான வழி ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் அவர்களின் மேல் “யாரது?” என்ற சந்தேகம் பற்றிக்கொள்கிறது.
இடையர்களில் ஒருவர் வேகவேகமாக கீழே இறங்கி இராணுவ முகாமிற்கு ஓடிவருகிறார்.
“நமது வீரர்கள் அதற்குள் எல்லைக்குப் போய்விட்டார்களா?” என்ற மூச்சிரைக்க விசாரிக்கிறார்.
“ஊஹும். இல்லையே...” என்று புருவம் சுருக்குகிறார் அங்கு காவலில் இருந்த கமாண்டர்.
”நிறைய இராணுவ வீரர்களை இன்று நம் எல்லையில் நாங்கள் பார்த்தோம்...” என்றார் அந்த இடையர் நிதானமாகம் உறுதியாகவும்.
இது பாகிஸ்தானின் ஊடுருவல் என்று புரிந்துவிட்டது. உடனே இந்திய இராணுவத்தினர் உஷார் படுத்தப்படுகிறார்கள். சட்டென்று ஒரு படாலியன் அங்கே அனுப்பபடுகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலே அவர்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. கீழேயிருப்பவர்கள் அச்சப்பட்டபடி அங்கே பாகிஸ்தான் இராணுவத்தினர் ஆக்கிரமித்து அவர்களைச் சிறைப்படுத்தி சித்ரவதைக்குள்ளாக்கிக் கொன்றுவிடுகிறாரகள். இப்போது தேசமே விழித்துக்கொள்கிறது. பின்னர் ஒவ்வொரு படாலியன்களாக மேலே அனுப்பப்பட்டு இரு மாதப் போரில் கார்கிலை வெற்றிகரமாக மீட்டெடுக்கிறோம்.
கார்கிலின் முக்கியத்துவம் என்ன? ஸ்ரீநகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை ஒன்று கார்கிலைக் கிழித்துக்கொண்டு லேவுக்குச் செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைதான் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் இராணுவத்திற்கான தளவாடங்கள், மருந்து மற்றும் இதர உதவிகளை அனுப்புவதற்கு ஹேதுவான சாலை. இந்தச் சாலையை தகர்ப்பதன் மூலம் இந்தியர்களை அந்த பிரதேசத்திலிருந்து நீக்கிவிட்டால் அதை பாகிஸ்தானுடன் சுலபத்தில் இணைத்துவிடலாம். இதுதான் எதிரிகளின் திட்டம்.
இந்தப் பெருமை மிகுந்த கார்கில் போரில் பங்குபெற்று அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணிடம் வீர் சக்ரா பரிசு பெற்ற சீஃப் கமாண்டர் லலித் ராயை நேற்று டாடா கம்யூனிகேஷன்ஸின் வாடிக்கையாளர் ஆண்டு விழாவான “We Connect"ல் சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள். தங்குதடையில்லாத ஆங்கில உரை. 7/11 கூர்க்கா ரெஜிமெண்ட் வீரர். பதினெட்டாயிரம் அடி உயரத்தில் எல்லைக்காவல் பணியின் சிரமங்களை அசால்ட் புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார்.
காலைக்கடன் முடிப்பதற்கு வெந்நீரை எடுத்துக்கொண்டு போய் மறைவாக உட்கார்ந்து அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அந்த நீர் உறைந்து ஐஸ் கட்டிகளாகிவிடுமாம். அங்கே குந்தியிருந்தபடியே ”நாளைக்கு உனக்கு கொண்டு வந்து தரேன்.. இன்னிக்கி எனக்கு தாயேன்..” என்று உறுதிமொழி கொடுத்து அடுத்தாள் கொடுத்ததைக் கொண்டு கழுவிக்கொள்ள வேண்டும். இதை அவர் சொன்னபோது கடுமையான சூழ்நிலையிலும் நாட்டைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் தியாகங்களை நினைத்து கண்களில் தானாகக் கண்ணீர் கசிகிறது.
படாலிக் பிரதேசம் என்கிற இஞ்சித் துண்டு போன்ற வரைபடம் காட்டினார். அதன் நடுவில் எல்லைக் கட்டுப்பாட்டு வேலி ஓடுகிறது. அதுதான் பாகிஸ்தானுக்கும் நமக்குமான எல்லை. 1999 குளிர்கால சீசனில் இரு படைகளையும் கீழே இறங்கும் போது பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் இன்னொரு படையைத் தயார் செய்து மேலேயேற்றினார்களாம். இந்த ஊடுருவலை முறியடித்தது இந்தியாவின் பெரும் சாதனை என்றார். இதற்கு முன்னர் 1947 மற்றும் 1971 என்று சில முறைகள் கார்கில் பொருட்டு யுத்தம் நடந்திருக்கிறது.
ஒவ்வொருமுறையும் அந்நாட்டு வீரர்கள் நம் வீரர்களை நேருக்கு நேர் சந்திக்கும்போது கன்னாபின்னாவென்று ஹிந்தியில் திட்டிக்கொள்வார்களாம். திட்டும் மொழியில் பிஹெச்டி செய்தவன் நான் என்று மார்தட்டி சிரிக்கிறார் லலித். அப்படி பேசிக்கொள்ளும் போது 1947ல் ஒரு பாகிஸ்தானிய வீரன் பத்து இந்திய வீரனுக்குச் சமானாம் என்று மார்தட்டுவார்களாம். பின்னர் அடிகொடுத்த பின்னர் 1971ல் ஒரு பாகிஸ்தானிய வீரன் ஐந்து இந்திய வீரனுக்கு சமானம் என்றவர்கள் திரும்பத் திரும்ப செம்மையாக அடிபட்ட பிறகு ஒரு இந்திய வீரனுக்கு பத்து பாகிஸ்தானிய வீரன் சமன் என்று ஒத்துக்கொண்டார்கள் என்றபோது அவையில் எழுந்த கரவொலி முழு சென்னைக்கே கேட்டிருக்கும்.
செங்குத்தாக ஏறும் மலைப்பிரதேசங்களில் முன்னேறுவது லேசுப்பட்ட காரியமல்ல என்பதற்கு பல உதாரணங்களை லலித் சொன்னார். துணி மூடாத பிரதேசங்களில் ஊசியை வைத்துக் குத்துவதுபோலத் தாக்கும் குளிர். தோளிலும் கைகளிலும் துப்பாக்கி குண்டு போன்ற தாக்குதலுக்குத் தேவையான பொருட்கள். பனியால் மூடிய குன்றுகளில் ஏறவேண்டும். பூட்டுகளால் பனியை உதைத்து ஓட்டையேற்படுத்தி காலை நுழைத்து மேலே இன்னொரு ஓட்டை இன்னொரு கால்.. இப்படியே மேலே ஏறவேண்டும். கேட்கவே மயிர்கூச்சமேற்படுகிறது. இவர்களே மேரா பாரத் மகான்கள்.
-32 டிகிரி செல்ஷியஸில் வீரர்களுக்கு ஏற்படும் சில தேக அசௌகரியங்களையும் அது எப்படி அவர்களது உயிருக்குக் கேடாக முடிவதையும் சொல்லும்போது நமக்கு படபடப்பாயிருக்கிறது. நேற்றுவரை நம்மோடு பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு சாய் அருந்திக்கொண்டிருந்த வீரன் வியர்வையே வெளியில் வராமல் வாயிலிருந்தும் மூக்கிலிருந்து இரத்தம் வர திடீரென்று கீழே விழுந்து இறக்கும்போது எப்படியிருக்கும்?. அவர்களிடமிருக்கும் ஹெலிகாப்டரில் அந்த உடலைக்கூட அப்படியே முழுதாகக் கீழே அனுப்பமுடியாதாம். உடலை இரண்டாடகக் கூறு போட்டு மூட்டைக் கட்டி கீழே அனுப்பவார்களாம். இறைவா!! பிரேதத்தைக் கண்ட அவர்களது குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும்?
அவர் பேசப் பேச அவையே அமைதியாக இருந்தது. காலில் அணிந்து கொள்ளும் பூட்டுகள் எப்போதுமே ஒன்று பெரியதாக இருக்கும் இல்லையேல் காலுக்குள்ளேயே நுழையாதபடி இருக்கும். பெரிதாக இருக்கும் பூட்டுகளினால் கூட நன்மை உண்டு என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சொன்னார். கார்கில் போரில் எதிரிகள் சுற்றிவளைத்துச் சுடுகிறார்கள். சீஃப் கமாண்டாராக லலித்தும் சில இந்திய வீரர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது எதிரிகள் சுட்ட குண்டு ஒன்று லலித்தின் காலில் படுகிறது. அதிர்ஷ்டவசமாக பூட்டின் பெரிய அளவு காரணமாக நுனியில் பட்ட குண்டு காலுக்குச் சேதமில்லாமல் செய்கிறது. இதை அவர் சிரிப்போடு பகிர்ந்துகொண்டாலும் நமக்குச் சிலிர்க்கிறது.
”ஜெய் காளி” என்று அவர் கையை உயர்த்தி கோஷமிடும் போது அவரது வார்த்தையிலிருந்து வீரம் பிறந்து நமது நாடிநரம்புக்குள் புகுந்து உடம்பை ஒரு முறை விலுக்கென்று உதறிப்போடுகிறது. அப்பப்பா... என்னவொரு கணீர்க்குரல். கமாண்டர் குரல். திரையில் ஒரு சேதமடைந்த பைனாகுலரைக் காட்டினார். மயிரிழையில் உயிர் பிழைக்க வைத்த பைனாகுலர் அது. எதிரிகள் சுட்டபோது பைனாகுலரின் இடதுபுறம் நுழைந்து வலதுபுறம் சென்றது என்றும் அதை இன்னும் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருப்பதாகவும் சொன்னார்.
மூன்று இரவுகள் நான்கு பகல் பல்லில் பச்சைத்தண்ணீர் கூடப்படாமல் காவல் காத்ததைச் சொன்ன போது ஓடிப்போய் கட்டிப்பிடித்து உச்சி மோந்து நமஸ்காரம் செய்யவேண்டும் போல இருந்தது. ரியல் ஹீரோ. ராசாய்யா நீ!! அடிக்கடி “ஜெய் காளி” என்று விண்ணுக்கு கையைக் குத்தி கோஷமிடும்போது நம்மையறியாமல் ஒரு தாய்நாட்டுப் பற்றோடு வீர உணர்ச்சி எழும்புகிறது. ஐடிஸி கிராண்ட் சோழா குளிரூட்டப்பட்ட அறையில் கார்கிலைக் கொண்டு வந்து காட்டினார்.
கார்ப்பரேட்டுகளில் பணிபுரிவதற்கும் கமாண்டாராகப் பணி புரிந்ததற்கும் என்ன வித்தியாசம் என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார். கமாண்டராகப் பணி புரிந்த போது என்னுடைய கையசைப்பிற்கு ஆயிரம் வீரர்கள் என்னவென்றே கேட்காமல் எதிரிகள் மேலே குண்டு மழை பொழிவார்கள். கார்ப்பரேட்டில் சேர்ந்த பின்னர் தனக்கு ஒரு டீ வேண்டும் என்பதற்காக கை கால் எல்லாவற்றையும் அசைத்தபின்னரும் ஒருவர் ஆயாசமாக வந்து நின்று பின்னால் சொரிந்துகொண்டே ”ஜி.. இன்னும் கொஞ்ச நாழி ஆவும்” என்றாராம். கூட்டம் சிரித்தது.
கார்ப்பரேட்டுகளுக்கு எதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா? என்றொரு கேள்வி. கார்ப்பரேட்டுகளில் லீடர்கள் இல்லை என்றார். எவருமே முன்னால் நின்று சாதகபாதகங்களை தன் தலைமேல் ஏற்றிக்கொண்டு பணிபுரிய விரும்புவதில்லை. பிழை ஏற்பட்டால் தனக்குக் கீழ் பணிபுரிபவன் மேல் போட்டுவிட்டு தப்பிப்பிழைக்க எண்ணுகிறார்கள். இதனால் ஒருபயனும் இல்லை. கார்ப்பரேட்டுகளில் லீடர்கள் வேண்டும் என்றார்.
உரை முடித்து லலித் ராய் கீழே வந்து அமர்ந்தவுடன் கார்கிலில் நமக்காகப் போரிட்டவரின் கையைப் பிடித்துத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஓடினேன். கையைக் குலுக்கிவிட்டு ஒரு முறைக் கட்டிக்கொண்டேன். கார்கில் குளிரில் விரைக்க நின்று துப்பாக்கித் தூக்கிச் சண்டையிட்டது போல உடம்பு சிலிர்த்துக்கொண்டது. செல்ஃபி எடுத்து திருப்தியடைந்துகொண்டேன்.
செல்ஃபிக் குறிப்பு:
என்னுடன் எனது பாஸ் ரவீந்திரன் மற்றும் கம்யூனிகேஷன் கல்பனா. பின்னால் உதடு கடித்துச் சிரிப்பவர் எனது நெடுநாள் நண்பர் முரளி ஜெகன்னாதன். டாடா ஆள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails