Thursday, December 15, 2016

ரெமோ

பாய் நெக்ஸ்ட் டோர் அந்தஸ்தில் இருந்த சிவகார்த்திகேயன் நர்ஸ் நெக்ஸ்ட் ஹாஸ்பிடல் ரெஜினா மோத்வானியாக லிப்ஸ்டிக் வாயோடும் ஸ்கர்ட்டோடும் பளிச்சென்று தோன்றும் படம் ரெமோ. டைவர்ஸ் பண்ணின பொண்டாட்டியைக் கரெக்ட் பண்ண பொம்பளை வேஷம் போட்டால் அது அவ்வை ஷண்முகி. இன்னொருத்தனுக்கு நிச்சயம் ஆன பொண்ணை மடிக்க நர்ஸ் வேஷம் போட்டால் அது ரெமோ. இதுதான் இரத்தினச் சுருக்கமான ஒன்/டூ லைனர்.
“ரத்தம் கக்கி சாவாய்...”, “போனா திரும்பமாட்டே...”, “நிச்சயம் உனக்கு சங்குதாண்டி....” போன்ற பல எச்சரிக்கைகளைக் கடந்து சென்று பார்த்தேன். சிகானை அவ்வப்போது கண்ணைக் கசக்கி காபரா பண்ணாமல் இருக்க வைத்திருந்தால் இன்னும் தேறியிருக்குமோ என்பது என்னுடைய அபிப்ராயம். பொம்பிளை வேஷம் எடுபடுவதற்கு ஒரு முகவெட்டு வேணும். அது சிகானுக்குத் தாராளமாக இருக்கிறது.
ஆம்பிளைகள் போட்ட பொம்பளை வேஷத்திற்கு நாரீமணி அவார்ட் தரவேண்டுமென்றால் நான் பிரசாந்த்தாக்குதான் கொடுப்பேன். ஆணழகன் படத்தில் ஹீரோயின்களே பிச்சையெடுக்க வைக்கும் அதிரூப சுந்தரியாகத் தோன்றியவருக்குப் பின்னர் தான் அவ்வையும் ரெமோவும். சத்தியராஜ் சரத்குமாரெல்லாம் பொம்பளை வேஷம் போட்டதற்கு மாதர் சங்கங்கள் கொடி பிடிக்காததுதான் ஆச்சரியம்.
சிகானின் பலம் காமெடிதான். அதை கேயெஸ் ரவிக்குமாரை வைத்து படத்திலேயே கேஷுவலாக சொல்ல வைத்திருக்கும் டைரக்டரின் சாமர்த்தியத்தைப் பாராட்டவேண்டும். வெஸ்ட் இண்டீஸ் டீம் காப்டனாக வரும் அந்த சுருள்முடியரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கையில் கிதாருடன் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடும் அவருக்கு சதமானம் பவதி சதாயுஷ் புருஷ:"
சினிமாக்களில் வரும் அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளுக்குதான் எவ்வளவு செல்லம் தருகிறார்கள்!! தண்ணி அடித்துவிட்டு சத்யம் வாசலில் கார்மேலேறி நிற்கும் சிகானுக்கு சரண்யா இன்னும் ஒரு பெக் ஊத்திக்கொடுக்காததுதான் பாக்கி. சிகானுக்கும் சரண்யாவுக்கும் அம்மா-பிள்ளை பயாலஜி நன்றாக ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. படத்தில் பல காட்சிகள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.
”இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்ற விரதத்திலிருக்கும் நான்.... சரி.. சரி... கல்லெறியாதீர்கள்... வேண்டாம்... இந்த ஹீரோயினைப் போன்ற முகத்தை எண்பதுகளிலேயே பார்த்திருக்கிறோமே என்று மூளையைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கும்போது “இந்த கீர்த்தி சுரேஷ்... யாரோ பழைய ஹீரோயின் மேனகாவோட பொண்ணாம்...” என்ற அசரீரியாய் வந்த வாக்கில் “ராமனின் மோகனம்....” ஒருமுறை என் காதுகளில் பாடியது. உள்ளங்கையில் “ஐ லவ் யூ” காட்டி காட்சி ஓடியது. ஆஹா.. ராஜாவின் ஜாலம் அந்தப் பாடல். இதிலும் பாடல்கள் இருக்கிறது. இசையமைப்பாளர் “வொய் திஸ் கொலைவெறி” புகழ் அனிருத்.
குழந்தை செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், காதல் செண்டிமெண்ட் போன்றவை இப்படத்தின் ஸ்பீட் ப்ரேக்கர்கள். அவ்வை ஷண்முகியை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் அதன் தடைபடாத நகைச்சுவை ஓட்டமே அதன் பிரதான வெற்றிக்குக் காரணம்.
படம் முடிந்து அனைவரும் நகர்ந்துகொண்டிருக்கும்போது ஒரு ஓரத்தில் எதையோ பறிகொடுத்தது போல ”வச்சு செஞ்சுட்டாங்களே....”வாக நின்றிருந்த ஒரு வயோதிக தம்பதியரின் சோகப் பார்வையில் இப்படத்தின் முழுமையான விமர்சனம் இருப்பதாக எனக்குப்பட்டது. சிகானின் ரசிகர்களுக்கும்... பொழுதுபோக்கில் போக்கத்துப்போய் கலை பார்க்கப்படாது என்று சங்கல்பம் செய்த மகானுபாவர்களுக்கும் குறையொன்ற்றும் வைக்கவில்லை ரெமோ.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails