Thursday, December 15, 2016

அமியின் ஆட்டுக்கு வால்

பக்கென்று துக்க “கார்க்பால்” ஒன்று மேலெழும்பித் தொண்டையை அடைத்துக்கொண்டது. இப்படி ஆரம்பிக்கலாமா? பரவாயில்லை. “த்சொ..த்சொ..” என்று துக்கம் கேட்க நான்கு பேர் இந்தப் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். பகிரும் சோகம் பலவீனமடையும்.
ஆஃபீஸில் ஓய்வொழிச்சல் இல்லாத வேலை. ரொம்பவும் எழுதமுடியவில்லை. பொதுவாகவே என்னுடைய (காவிய?!) படைப்புகளுக்குக் கருத்திடுபவர்களுக்கு நன்றியோ பதிலோ உரைக்காமல் ஃபேஸ்புக்கை லாக்கவுட் செய்ததில்லை. ஆனால் ஒரு மாசமாகக் கழுத்தை நெறிக்கும் கடும் வேலை.
பாப்கார்ன் கொறிப்பது போல கடலை மடித்துக்கொடுக்கும் பேப்பர் அளவுக்கு இந்த மாசம் முழுவதும் துக்கடாக்களாகப் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாளும் ஒருவரிக் கூட படிக்காமல் கட்டையைச் சாய்த்ததில்லை. இன்று அபூர்வமாகக் கொஞ்ச நேரம் வாய்த்து. எங்கள் பெருமைமிகு படைப்பான தினமணி தீபாவளி மலரைப் படித்தேன்.
சரி.. ஆரம்ப பாரா துயரச் சங்கதிக்கு வருவோம்.
இரண்டு சிறுகதைகள் சிக்கின. ஒன்று அசோகமித்திரனின் ”ஆட்டுக்கு வால்”. இன்னொன்று குல்ஸார் எழுதி சிவசங்கரி தமிழுக்குத் தந்த “ராவி நதியில்...” என்னும் சிறுகதை. இரண்டிலுமே ரயில் ஓடுகிறது. அ.மியின் கதையில் ஆந்திராவில் கிளம்பி மாயவரம் சேர்கிறது. குல்ஸாரின் உருது மொழிக் கதையில் சுதந்திரம் அடைந்தவுடன் பாகிஸ்தான் பிரிந்த வேளையில் அங்கிருந்து கிளம்பி ஹிந்துஸ்தான் வரும் ரயில். ஐந்தாறு பக்கங்களில் ஆயிரமாயிரம் எண்ணங்களை தோற்றுவிக்கும் சிறுகதைகள்.
ராமநாதன் ஜானகி தம்பதியர் தங்களுடைய மூத்த பெண்ணைக் காண பெஜ்வாடா---->ஓங்கோல் வழியாக எழும்பூர் வந்து அங்கிருந்து மாயவரம் இறங்கி கோமல் செல்கிறார்கள். புருஷனும் பொண்டாட்டியும் மூன்றாம் வகுப்பில் சீட் கிடைக்காமல் லோல்பட்டுப் பயணம் செய்கிறார்கள். பயணத்தின் காரணம் சோகமானது. மருமகன் மிலிட்டரிகாரன். தனது பெண்ணை ஒதுக்கிவைத்துவிட்டு இன்னொருத்தியை திருமணம் செய்துவிட்டான். அவன் சட்டையைப் பிடித்து “மகா பாவி” என்று திட்டி நியாயம் கேட்பதற்காகச் செல்கிறார்.
ரயில் பயணம் முழுவதையும் இரண்டு பக்கங்களில் எழுதி நம்மையும் அவர்களோடு பெட்டியில் ஏற்றிவிடுகிறார். அவர் நல்ல சகுனமாக மண் கூஜா வாங்குவது, சைவ உணவகத்திலிருந்து கேரியரில் சாப்பிடுவது என்று பார்த்துக்கொண்டே பயணிக்கிறோம். செண்ட்ரலிலிருந்து ஓரணாவிற்கு எழும்பூரில் விடுவதற்கு ஜட்காவில் ஏறுகிறார்கள். இங்கே ஒன்று சொல்கிறேன். அது ஷேர் ஆட்டோ மாதிரி ஷேர் ஜட்கா. மூன்று பேர் வந்தால்தான் எடுப்பேன் என்கிறான் வண்டிக்காரன். ஷேர் பிரயாண கான்செப்ட் ஆதி காலத்தது.
ஒருவழியாக கோமலில் இறங்கி அந்த வீட்டில் பார்த்தால் அந்த மிலிட்டரிக்காரன் இல்லை. அவனுடைய விதவை சகோதரியும் அம்மாவும் மட்டும் இருக்கிறார்கள். பெண்ணை மாயவரத்திலிருக்கும் அவளது அத்தை அழைத்துக்கொண்டு போய்விட்டாள் என்று கதவைச் சார்த்திவிடுகிறாள் அந்த நார்மடி அம்மணி. கோமலிலிருந்து மீண்டும் கிளம்பி மாயவரம் வந்து பெண்ணைப் பார்க்கிறார்கள்.
க்ளைமாக்ஸ். (இனி அமியின் வரிகளில்...)
ராமநாதன் அந்த வீட்டை அடைந்தார். ”சௌந்தரா..சௌந்தரா” என்று அழைத்தார். எலும்பும் தோலுமாக ஒரு பெண் எட்டிப் பார்த்தாள். அதுவரை அடக்கமாக இருந்த ராமநாதன் “சௌந்தரா” என்று அந்தப் பெண்ணைக் கட்டிக்கொண்டார். “அம்மாடீ” என்று அப்படியே தெருவில் உட்கார்ந்து கொண்டு விக்கி விக்கி அழத் தொடங்கினார்.
இத்தோடு கதை முடிகிறது. நானும்
-அசுபம்-
போடுகிறேன்.
குல்ஸாரின் மறக்கமுடியாத க்ளைமாக்ஸ் வரும் ”ராவி நதி..” அடுத்த பதிவில்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails