Thursday, December 15, 2016

காற்றுக்கென்ன வேலி?!

வார்தாவின் சண்டமாருதம் சென்னையை மொட்டையடித்திருக்கிறது. கண் நிறைக்கும் பச்சையாய் இருக்கும் பாண்டி பஜார், ஆழ்வார்ப்பேட்டை, மந்தைவெளி, நங்கைநல்லூர் பேட்டைகளையும் இந்த சூறாவளி துவம்சம் செய்துவிட்டது. சைக்கிள் கேப் சந்துபொந்துகள் கூட போர்க்களம் போல காட்சியளிக்கிறது. மன்னையில் மின்னல் இடிக்குப் பயந்து நடுநடுங்கி பாட்டியிடம் ஒதுங்கினால் "அர்ஜுனா.. அர்ஜூனா சொல்லுடா... இடிக்காது... போய்டும்.." என்று ஆறுதல் சொன்னவள் புயலோடு ஆளைத் தூக்கும் சூறைக்காற்றடித்தால் யாரைக் கூப்பிடவேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கலாம்.
காலை பத்தரை மணி வாக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மிகச்சரியான நடவடிக்கை. காற்றடித்து மரம் மின்கம்பங்களில் சாய்ந்து, கால் வைத்து கணிசமான பேர் பரலோகம் போயிருப்பார்கள். பதினொன்றரைக்கு திடுமென ஒரு காரிருள் சூழ்ந்தது. நடுப்பகல் பன்னிரெண்டு தாண்டும் போது ஊழிக் காலம் போல "ஊ..ஊ..ஊ..ஊ.." என்ற பெரும் சத்தத்தோடு காற்றோடு மழை கைகோர்த்துக் கொண்டு "வா... சென்னையை மொட்டயடிக்கலாம்.." என்று தீவிரவாதத்தனம் காட்டியது.
வாசலில் சேப்பாயிக்கு ஷெட்டாகப் போட்டிருந்த ஷீட் "ட்ர்ர்ர்ட்....ட்ர்ர்ர்ர்ர்ட்...ட்ர்ர்ர்ர்ட்...ட்ர்ர்ர்ர்ர்ட்" என்று ராகமாகக் கீதமிசைக்க பால்கனி ஓர தென்னைமரம் சுவற்றில் "தொம்.. தொம்.." என்று முட்டித் தாளமிசைத்து டிசம்பர் சீஸன் கச்சேரி செய்துகொண்டிருந்தன. வாழ்க்கைப் புயலில் அனாதையாய்ச் சிக்கிய காகம் ஒன்று காற்றோடு சுழன்று கூடு தேடியது பாவமாக இருந்தது. நாணல் போல இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற வாழ்க்கை பாடத்தை நேரடியாகக் காண முடிந்தது. அறுபது டிகிரி வரை காற்றின் போக்கில் சாய்ந்து தலைவிரி கோலமாக அழுத தென்னைமரமெல்லாம் இறுதியில் பிழைத்துக்கொண்டது. ஆனால் நெஞ்சு நிமிர்த்தி வீரம் காட்டிய மாமரங்கள் தலை சாய்ந்துவிட்டது.
வாசலில் காலெடுத்து வைக்க முடியாதபடிக்கு காற்று. மடிக்கணினியில் சொச்சமிருந்த மின்சக்தியில் செய்திச் சேனல் எதுவும் சிக்குகிறதா என்று இணையத்தில் உலாவினேன். சன் ந்யூஸ் லைவ் கிடைத்தது. மழை புயல் பாராமல் டிஆர்பி ஏற்றுவதற்கு நாலைந்து செய்தியாளர்கள் ரெயின்கோட்டும் மைக்குமாய்ப் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். "இதற்கு முன் இதை விடப் பெரிய புயல் பார்த்திருக்கிறீர்களா?" என்று காசிமேடு, எம்.ஆர்.சி நகர் பீச்சோர இளம் வலைஞர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள். சேனலின் காலடியில் போடப்படும் பளிச் செய்திகளில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உத்தரவுகள் பிரதானமாக வெளியிடப்பட்டன.
வார்தா என்றால் சிவப்பு ரோஜாவாம். பாகிஸ்தான் காதலுடன் இந்தப் புயலுக்குக் கொடுத்த பெயர் இது. எல்லா அமைச்சர் பெருமக்களும் முழு வீச்சில் சென்னையின் இயல்புவாழ்க்கையை மீட்டெடுப்பதில் பங்குகொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. மாலைக்குள் மின்சாரம் மீண்டு விடும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். சிஎம் ஓபிஎஸ்ஸின் பிரத்யேக ஈடுபாடு தெம்பூட்டுகிறது. மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
கார்த்திகை தீபம் ஏற்றி பொரி உருண்டையோடு வெண்பொங்கலும் தொட்டுக்க கத்ரிக்காய் கொத்ஸுவும் சாப்பிட்டாயிற்று.
ஆகாயத்தில் ஜிலுஜிலுவென்று முழு நிலா உதித்திருக்கிறது. பூர்ண சந்திரன் மனம் குளிர்விக்கும் எல்லையில்லா ஒரு அமைதியைத் தருகிறான்.
ஓம் சாந்தி ஓம்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails