Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 26: திருவொற்றியூரில் ரமணாமிர்தம்

திருவண்ணாமலையிலிருந்து சென்னை வந்திறங்கியவுடன் நாயனாவும் வாசுதேவ சாஸ்திரியும் ஆதிபுரம் என்றழைக்கப்படும் புண்ணிய க்ஷேத்திரமான திருவொற்றியூருக்குச் சென்றார்கள். தென்னக கோயில்களுக்கு க்ஷேத்திராடனம் செல்பவர்கள் முதலில் ஆதிபுரத்தோடுதான் ஆரம்பிக்கவேண்டும் என்பது பலகாலமாகத் தொன்றுதொட்டு வரும் ஐதீகம். இச்சா க்ரியா ஞான சக்திச் ஸ்வரூபமாகத் திரிபுரசுந்தரி ஆட்சி செலுத்தும் ஸ்தலம். கோயிலுக்கு செல்லும் வழியில் தெற்குத் தெருவில் ஒரு பாழடைந்த கணபதி கோயில் இருந்தது. திரிபுரசுந்தரி கோயிலுக்குள் நுழையும் முன்னர் இந்த கணபதி கோயிலில் நாம் தவமியற்றலாம் என்று கணபதி மனதில் கணக்கு போட்டுக்கொண்டார்.

திரிபுரசுந்தரி சன்னிதி. தீபங்கள் இருபுறமும் ஆட அம்மன் கர்ப்பக்ரஹத்திற்குள் ஜொலித்துக்கொண்டிருந்தாள். ஓரிருவர் உதிரியாய் அங்குமிங்கும் இருந்தனர். கணபதி அம்பாளுக்கு நேராக பிரதானமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொண்டார். இதமான குரலில் தானியற்றிய உமாசகஸ்ரத்தை மெதுவாகப் பாட ஆரம்பித்தார். பக்கத்துத் தூணருகே அம்பாளைப் பார்த்து அமர்ந்திருந்தவர் இந்த ஸ்லோகங்களைக் கேட்டு நெக்குருகிப் போனார். உருக்கத்தில் கண்ணீர் மல்கி கணபதிக்கு நெருக்கமாக நின்றிருந்த வாசுதேவ சாஸ்திரிகளிடம் “சம்ஸ்க்ருத மழை பொழியும் இவர் யார்? ” என்று காதோடு காதாகக் கேட்டார்.
“காவ்ய கண்ட கணபதி”
வாசுதேவ சாஸ்திரிகள் கணீரென்று இந்தப் பெயரை உச்சரித்து முடிக்கும் முன்னர் அந்த நபர் கணபதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தார். ”இனி நான் என்னால் ஆன மட்டும் உங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வேன்.. அதுவே என் பாக்கியம்.. வாழ்நாள் பலன்.. என் கடன் உம் பணி செய்து கிடப்பதே....”
“நீங்கள்....” என்று புருவம் நெறித்து இழுத்தார் வாசுதேவ சாஸ்திரிகள்.
“கபாலி சாஸ்திரி”.
சில உமாசகஸ்ர ஸ்லோகங்கள் பாடி வழிபட்ட பின்னர் மூவரும் ஒவ்வொரு சன்னிதியிலிருக்கும் தெய்வங்களை வழிபட்டார்கள். வடக்கு பிரகாரத்தில் பாதாளக் காளி சன்னிதி இருந்தது. காளி உக்கிரமாக இருப்பதாக அவருக்குச் சொல்லப்பட்டது. அவளுடைய ரௌத்ராகாரத்தைத் தணிக்க முடியாமல் பாதாளத்தில் அவருக்கு சன்னிதி எழுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
நாயனா அந்தச் சன்னிதி வாசலில் நின்று காளியைப் பார்த்து ஒரு ஸ்லோகம் பாடினார்.
குபே விபாஸி கில கோப்வதி த்ரியாமா
சாரின்யஸேஷ ஜகதீஸ்வரி காளி பத்ரே
விப்ராஜதாதிபுரவாஸினி தாஸமாபத்
குபாதுதன்சய பதாம்புஜபக்தமேதம்

அர்த்தம்: அம்மா! துர்சக்திகளை துவம்சம் செய்ய உக்கிரமாக இருப்பவளே, இவ்வுலகின் ஈஸ்வரியே, காளிகே, ஜ்வலிக்கும் ஆதிபுரவாசியே, பாதாளத்தில் உறைபவளே, உன் காலடியில் சரணாகதியடையும் அறியாமை நிரம்பிய என்னைக் காத்தருள்வாய்!!
காளியின் உக்கிரத்தை சாந்தப்படுத்துவதுபோல கணபதி பாடியதைக் கேட்ட கபாலி சாஸ்திரியும் வாசுவேத சாஸ்திரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புளகாங்கிதமடைந்தார்கள்.
அன்றிரவு அவரது சிஷ்யர்களான நாராயண கணபதியும் களம்பூர் வெங்கட்ராமனும் திருவொற்றியூருக்கு விஜயம் செய்தார்கள். நாயனாவிடம் ஆசீர்வாதம் பெற்றார்கள்.
“நாராயணா! இந்த உமாசகஸ்ர பிரதியை வேலூருக்கு எடுத்துச் சென்று விசாலாக்ஷியிடம் கொடுத்துப் பத்திரமாக வைக்கச்சொல்” என்றார்.
நாயனாவின் வருகை சென்னைக்குள் காட்டுத்தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. மேதாவிலாசங்கள் திருவொற்றியூரை சம்ஸ்க்ருத தேன் குடிக்க ஈயாய் மொய்க்கத் தொடங்கின. ஆன்மிக மற்றும் இலக்கிய விசாரங்கள் அனுதினமும் காரசாரமாக நடந்தன. நாயனா இப்போது வானப்ரஸ்தாஸ்ரமத்திலிருந்தார். ஆகையால் இம்முறை இலக்கியத்தை விட ஆன்மிகமே அவரால் அதிகம் பிரவசனம் செய்யப்பட்டது. அஷ்டாவதானியான நாயனாவிடமிருந்து ஒரு அவதானமாவது காணக் கிடைக்காதா என்று ஏங்கியிருந்தார் கபாலி சாஸ்திரி. ”கபாலி! சமயம் வரும்போது செய்து காட்டுகிறேன்....” என்று பொறுமையாய் இருக்கச் சொன்னார்.
ஒரு நாள் கணபதிக்குப் பரிச்சயமானவர் ஒருவர் அவரைக் காண வந்தார்.
"கணபதி ஸ்வாமி... வசந்ததிலகம் என்னும் வகையறாவில் அமைந்த ஒரு ஸ்லோகம் இயற்றித் தர இயலுமா?”
வசந்ததிலகம் என்பது நான்கடிகள் கொண்ட ஸ்லோகம். ஒவ்வொரு அடியிலும் பதினான்கு அக்ஷரங்கள் இருக்கும்.
”அந்தப் பலகையில் 54 கட்டங்கள் வரையுங்கள்” என்றார் கணபதி. கபாலிக்கு அவதானம் பார்க்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி. வந்தவர் 54 கட்டங்களை கரும்பலகையில் வரைந்துவிட்டு கையில் சாக்கட்டியுடன் கணபதியின் பக்கம் திரும்பி தயாராய் நின்றார்.
வான்மேகம் சிந்தும் மாரியாய், மின்னல் வேகத்தில், ஐம்பத்து நான்கு கட்டங்களையும் இடதும் வலதும் அடியும் மேலுமாக மாறி மாறி அக்ஷர அம்புகளைத் தொடுத்தார். ஒன்று இரண்டு மூன்று என்று கட்டங்களை வரிசையாய் நிரப்பவில்லை. முதல் அடி மூன்றாம் அடி இரண்டாம் அடி நான்காம் அடி.... இடது மூலை.. வலது மூலை... நடுவில்.. கடைசியில் என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு எழுத்து.
கடைசியில் ஒன்றாய்ச் சேர்த்து அதைப் படித்தபோது....
ப்ரீதிம் ததாதி விபுலாம் ஸ்ரியுமாதனோதி
நிர்மாதி நூத்னா ஸமயம் துரிதம் துநோதி
ஆர்த்ரீர்கரோதி ஹ்ருதயான்யபி தேவதானம்
கஸ்மை ஸுபாய ந பவேத் கவிதா விதோஷ

என்றிருந்தது.
அர்த்தம்: அர்த்தப்பிழையில்லாது புனையப்பட்ட கவிதையினைக் கேட்பவர்கள் அளவில்லா இன்பம் துய்க்கிறார்கள். அது குதூகலத்தை வரவழைக்கும். கண்முன்னே புதுயுகத்தை சிருஷ்டிக்கும். மன மாச்சரியங்களை அடியோடு களையும். அதைக் கேட்கும் கடவுளர்களின் உள்ளம் குளிரும். வேறு என்னவெல்லாம்தான் ஒரு கவிதை தராது?
புலவருக்குப் புகழையும் கேட்பவருக்கு கவியின்பத்தையும் தரவல்லது கவிதைகள் என்பது புழக்கத்தில் இருக்கும் கூற்று. ஆனால் நாயனா கவிதைகள் அந்த எல்லைகளைத் தாண்டியது என்று பேசினார். பொதுவாக ”ராஜா காலஸ்ய காரணம்” என்பார்கள். அதாவது ராஜாவினால் ஒரு புது யுகம் பிறக்கிறது என்று அர்த்தம். நாயனா “கவி காலஸ்ய காரணம்” என்றார். ஒப்பற்ற ஒரு கவி அரசனை விட போற்றத்தக்கவன்.
ஒரு தலைசிறந்த உணர்ச்சிமிகு கவியினால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கணபதி சற்று நேரத்தில் அங்கே நிகழ்த்திக் காட்டினார். அது ஒரு அதிசயம்.
பண்டிதர்கள் நிரம்பிய அவை அது. இங்கொன்றும் அங்கொன்றுமாக கேள்விகள் முளைத்து அது நாயனாவின் செவிகளை அடையும் முன்னர் அவரது வாயிலிருந்து பதில்கள் பறந்தன. அதைக் கேட்டவர்கள் வாயடைத்துப் போயினர். கடைசியில் பாலா திரிபுரசுந்தரி உபாசனைப் பற்றி பிரவசனம் செய்ய பிரார்த்தித்தார்கள்.
நாயனா பாலா திரிபுரசுந்தரி அம்பிகையைப் பற்றி ஸ்லோகங்களை அக்கணமே புனைந்து பிரவாகமாக பாடினார். ஒன்றிரண்டு பாடியபின் திடீரென்று கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தார். ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அந்த சபையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. மொத்தமாக ஒரு இனம்புரியாத மௌனம் கவ்விக்கொண்டது. அப்போது.... அவர்களின் மனக்கண்ணில் நாயனா கடவுள் போல பிரசன்னமானார். அவர் பாலா திரிபுரசுந்தரி பற்றி சற்றுநேரத்திற்கு முன்னர் பாடியதை மீண்டும் கேட்டனர். ஆனால், நாயனா அங்கே இமை திறக்காமல் யோகநித்திரையில் இருந்தார்.
அனைவரும் கண்களை மூடியிருந்தனர். சில நிமிடங்களுக்கு முன்னர் நாயனா பாடியதை மீண்டும் இசையுடன் இரசித்தனர். ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தங்களும் நாயனா விளக்க அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. முகபாவங்களில் ஏற்பட்ட பரவசத்தில் அவர்களுக்கு பாலா திரிபுரசுந்தரியும் காட்சியளித்திருப்பாள் என்பது திண்ணமானது. இந்த தெய்வீக அனுபவம் நாயனாவினால் அந்தக் குழுவிற்கு ஊட்டப்பட்டது. இது பகவத் பிரசாதம்.
அவையோருக்கு நாயனா ஒரு தெய்வீக அவதாரமாக தோன்றினாலும், அவர் எப்போதுமே தன் தவத்துக்கு உகந்த ஒரு இடத்தை தேடிக்கொண்டேயிருந்தார். இம்முறை பதினெட்டு நாட்கள் தொடர் தவமியற்ற சித்தம் கொண்டார். தவமியற்றும் ஜீவனைக் காக்கும் பொருட்டு வெறும் பசும்பால் மட்டுமே அருந்தவும், இரவில் சில மணித்துளிகள் ஓய்வெடுக்கவும் முடிவானது. பகவான் ஸ்ரீரமணர் அருளியது போல ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு தெளிவடைய விரும்பினார்.
சில பண்டிதர்கள் ஆத்மவிசாரம் செய்பவனுக்கு உபாசனைகளும் மந்திரங்களும் வீண் என்பார்கள். தேவையில்லை என்பது அவர்களது கட்சி. ஆன்மிகத்தில் திளைக்காத ஒரு மனசுக்கு ஆத்ம விசாரம் எப்படி பழகும். இதுபோன்ற பண்டிதர்கள் அரைகுறையாக ஏதோ ஒரு நிலையை அடைந்துவிட்டு இதுபோன்ற தவறான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள். கணபதியும் கூட ஸ்ரீரமணர் சொன்ன ஆத்மவிசாரத்தில் மூழ்கிப்போவதில் லேசாக ஆட்டம் கண்டார். ஆன்மிகத்தில் ஊறாத மனசும் ஆத்மாவும் ஆத்மவிசாரத்தில் கரைகாண முடியாது என்று திட்டவட்டமாக நம்பினார் நாயனா. கணபதிக்கு இப்போது தன் குருவின் அருளும் வழிகாட்டுதலும் தேவைப்பட்டது. இதில் தோற்றுவிடுவோம் என்று கணபதிக்கு பயமில்லை. ஐயப்படவில்லை. அவருடைய ஆன்மிக பலம் அவருக்கு நான் யார் என்பதைத் தேடும் ஆத்மவிசாரத்திற்கு ஊற்றாக பயன்பட்டது. கற்றுக்கொடுத்தவர் ஸ்ரீரமணர். இருந்தாலும் இந்த ஆன்மபலன் ஆத்மவிசாரம் அடைய போதுமானதாக இல்லை என்று விசனப்பட்டார் கணபதி.
தீவிர தவத்தின் பதினெட்டாம் நாள். அந்த பாழடைந்த கணபதி கோயில் நாயனாவின் தபோபயனால் சுடர்விட்டிருந்தது. ஆனால் அவர் மொத்த தேகபலமும் இழந்து சுருண்டு போக இருந்தார். உட்காரமுடியவில்லை. முதுகு இழுத்தது. கைகால்கள் வெலவெலத்தன. படுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். ஆனாலும் முகத்தில் அப்படியொரு தேஜஸ்!! இருந்தாலும் யோகநிலையிலிருந்து தடுமாறாமல் தவத்தில் உறுதியாக இருந்தார்.
இதோ சாய்ந்துவிடுவார் என்ற தருணத்தில் ரமணர் அங்கே பிரச்சன்னமானார். பலவீனமாக இருந்த கணபதி எழுந்திருக்க முயன்றதும் அவரது சிரசில் தனது வலது கரத்தால் அழுத்தினார். அப்போது அங்கே ஒரு தெய்வீக மின்சாரம் தன் மேனியில் பாய்ந்தது போல உணர்ந்தார் கணபதி. உடம்பு ஒரு முறை விலுக்கென்று உதறியது. கண்களை திறக்க முடியவில்லை. நரம்புகளுக்குள் ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. எங்கிருந்தோ நூறு யானை பலம் அவருக்கு வந்தது. இப்போது கண்களை மெதுவாகத் திறந்தார் கணபதி. ரமணர் அங்கில்லை.
நாயனாவின் உற்சாகத்திற்கு எல்லையேயில்லை. ஸ்ரீரமணர் அருள் பூரணமாக தனக்கிருப்பதை எண்ணி சந்தோஷமடைந்தார். ஆத்மவிசாரம் செய்து முக்திநிலையை எட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று அமைதி கொண்டார்.
பிறிதொரு சமயத்தில் விரூபாக்ஷி குகையில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஸ்ரீரமணரிடம் அவரது சிஷ்யர்கள் விசாரித்தபோது...
“அன்று எனது ஸ்தூல சரீரமானது பிரகாசமான ஒளி வெள்ளத்தில் ஆகாயத்தில் மிதந்தது. வெகுதூரம் சென்று திருவொற்றியூர் என்னுமிடத்தில் இறங்கியது. அங்கிருந்த ஒரு பாழடைந்த கணபதி கோயிலினுள் சென்றேன்.”
மேலும் பேசாமல் நிறுத்தினார். அவருடைய அருட் பார்வை மீதியைப் பேசியது. பக்தர்கள் புரிந்துகொண்டார்கள். நாயனாவிற்கு அருளியதைக் கேட்டு பரவசமடைந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் தான் விரூபாக்ஷி குகையை வந்தடைந்ததாக கூறினார் ஸ்ரீரமணர்.
அடுத்த நாள் திருவொற்றியூரில் ஓய்வெடுத்தார் கணபதி. அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது.........

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails