Thursday, October 15, 2015

சூரியனார்கோயில்

”ஒரு முனிவருக்கு லெப்பரஸி வந்துடுமே.... யாரது?” சங்கீதாவின் சீரியஸ் கேள்வி.
“ஏதோ பசி, கோபம், ஆசை வந்துடுமே..ங்கிறா மாதிரி தொழு நோய் வந்துடுமேன்னா.. புரியலையே... ஏன் கேட்கிறே?”
“இல்ல... காவலர்..ம்பேளே.....”
“ஏய்... அது காவலர் இல்லே... காலவர்.... சூரியனார் கோயில்... அவரைத்தானே கேட்டே...”
“ம்.... அது என்ன கத?”
பத்து நிமிஷம் சொன்னதை இருபது நிமிஷம் எழுதினேன்.
**
விந்தியமலைச்சாரல். அடர் மரங்கள். சலசலக்கும் காட்டாற்று அருவிகள். முனிவர்களின் பெரிய வரிசை வாசுகி போல நீண்டிருந்தது. ஜடாமுடியுடன் நின்றிருந்த முனிபுங்கவர்களின் வரிசையின் தலையில் காலவர் அமர்ந்திருந்தார். தவ சிரேஷ்டர். முக்காலமும் உணர்ந்தவர்.
“உம்.. உமக்கு கைலாய வாஸம் இன்னும் ஓரிரு வருடங்களில் சித்திக்கும்....”
“நீர் இன்னமும் கொஞ்ச காலம் கழித்து தென் திசை பயணிப்பீர்....”
“உமக்கு ஈஸ்வர தரிசனம் உண்டு....”
இப்படியாக தன்னைச் சந்தித்த முனிவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தை காட்டிக்கொண்டிருந்தார். ஒரு நாள் நதிக்கரையில் நீராடி ஆசிரமத்திற்கு வரும் வழியில் ஒரு இளந்துறவி அவரைச் சந்தித்தார்.
“இவ்வையகத்திலுள்ளோர்க்கு வருங்கால பலன் சொல்லும் காலவரே.. எனக்கு சொல்லமுடியுமா?” என்று சிரித்தார்.
கண்ணை மூடினார். அத்துறவியின் எதிர்காலத்தை ஞானதிருஷ்டியால் துழாவினார். ஊஹும். ஒன்றும் புலப்படவில்லை. இரண்டு மூன்று முறை தவ வலிமையைச் செலவழித்துத் தேடினார். இல்லை. ஊஹும். அறியமுடியவில்லை.
“ஐயா! நீர் யார்? என்னால் எதையும் கணிக்க முடியவில்லையே!” என்று மண்டியிட்டார்.
எதிரில் புகைதோன்றி மறைந்த இடத்தில் துறவி போய் தேவன் உருவில் ஒருவர் தகதகவென்று நின்றார்.
“நான் காலதேவன். காலவரே.. நீரும் உன் எதிர்காலத்தைக் கணித்துக் கொள்ளும்... உபயோகமாக இருக்கும்....” என்று ஒரு துப்பு தந்து மாயமானார்.
ஆசிரமத்தை அடைந்ததும் காலவர் தீவிரமாகச் சிந்தித்தார். கண்களை மூடி காலத்தின் கண்ணாடியில் நோக்கினார். அதில் முற்பிறவியில் ஒரு நண்டின் கால்களை முறித்துத் தின்று கொண்டிருந்தார். அந்த பாபத்தினால் இந்த ஜென்மத்தில் தனக்கு தொழுநோய் வரும் என்றறிந்தார். வருமுன் அதிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமே என்று பரபரத்தார்.
பஞ்சாக்னி வளர்த்தார். அதன் நடுவில் நின்று கொண்டு நவக்கிரஹங்களைத் துதித்து தவமியற்ற ஆரம்பித்தார். நாட்கள் செல்லச் செல்ல தபோவலிமையால் நவக்கிரஹ மண்டலங்கள் கொதித்துப்போயின. நவநாயகர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு ஆலோசித்தனர். பூவுலகில் காலவர் இயற்றும் யாகமும் தவமுமே தங்களைத் பொசுக்குகின்றன என்று அறிந்துகொண்டு ஒரு அணியாகப் புறப்பட்டு காலவரின் முன்னே தோன்றினார்கள்.
“காலவரே! ஏனிந்த உக்கிர தவம்? என்னாயிற்று?” சூரியபகவான் சூடாக விசாரித்தார்.
“நமஸ்காரம் சூரியபகவானே! எனக்கு இந்த ஜென்மத்தில் தொழுநோய் பீடிக்கும் என்கிற சாபம் இருக்கிறது. என்னை அதிலிருந்து காத்து ரட்சிக்கவேண்டும் எம்பொருமானே!” என்று தொழுதார்.
சூரியன், சந்திரன் அக்னி வாயு என்று நவநாயகர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்களால் சம்மதம் பரிமாறிக்கொண்டனர். இறுதியாக சூரியன் “உம்மை தொழுநோய் பீடிக்காமல் இருக்கும்... கவலை வேண்டாம்..” என்று வரம் தந்து மறைந்தனர்.
***
சத்தியலோகம். பிரம்மன் சபை. நவநாயகர்களும் கை கட்டி நின்றிருந்தார்கள். அக்னியே கருகும்படி பிரம்மன் கோபாக்கினியில் திளைத்தார். இந்திராதி தேவர்கள் குழுமியிருந்தனர்.
“நீங்கள் என் ஆளுகையில் இருக்கிறீர்கள். என்னைக் கேட்காமல் எப்படி காலவருக்கு வரம் தந்தீர்கள். வினைப்பயனை அனைவரும் அனுபவத்தே தீர வேண்டும். அதைக் கருத்தில் கொள்ளாமல் காலவருக்கு தொழுநோயிலிருந்து விடுதலை தந்தீர்கள். ஆகையால்.. உங்கள் ஒன்பது பேரையும் தொழுநோய் தொற்றக் கடவது...” என்று கடும் சாபமிட்டார்.
நவநாயகர்கள் நடுங்கினார்கள். பிரம்மன் சாபத்திலிருந்து தப்பிப்பது எங்கனம் என்று சபையின் ஒரு தூணருகே சவட்டமாக நின்று பேசினார்கள். கடைசியில் “ப்ரபோ.. தாங்களே சரணம்...” என்று ஒன்பது பேரும் அவரது காலடியில் சரணாகதி அடைந்தார்கள். பிரம்மன் மனம் குளிர்ந்தார்.
“கொடுத்த சாபத்தை திரும்பப் பெறுவது இயலாத காரியம். இதற்கு பரிகாரம் சொல்கிறேன்." என்றார் பிரம்மதேவர்.
ஒன்பது கிரக நாயகர்களும் பவ்யமாக நின்றார்கள். பிரம்மன் தொடர்ந்தார்..
”பரதக்கண்டத்தில் தெக்ஷிண பாரதத்திலிருக்கும் தமிழ்நாட்டின் காவிரி வடகரையில் அமைந்த அர்க்கவனத்தை அடையுங்கள். அந்த வெள்ளெருக்கங்காட்டில் எழுபத்தெட்டு நாட்கள் தவம்புரியுங்கள். திங்கட்கிழமைதோறும் உஷத் காலத்தில் காவிரியில் நீராடி பிராணவரதரையும் மங்களநாயகியையும் வழிபட்டுவாருங்கள். நிதமும் அர்க்க இலையில் ஒரு பிடி அளவு தயிர் சாதம் வைத்து அதை புசித்துவாருங்கள். எஞ்சிய வார நாட்களில் உபவாசம் இருங்கள். இதை தவறாமல் செய்து வந்தால் சாபவிமோசனம் பெருவீர்கள்” என்றார்.
பூலோகம் வந்தடைந்தனர். காவிரியாற்றின் வடகரை நோக்கி நடந்தார்கள். வழியில் வாமன உயரத்திலிருந்த அகத்திய மாமுனியைச் சந்தித்தார்கள்.
“முனிவரே! எங்களுக்கு அர்க்கவனத்திற்கு வழிகாட்டுவீரா?” என்று கேட்டனர்.
“நானும் அங்கேதான் செல்கிறேன். என்னைப் பின் தொடருங்கள்...” என்று கமண்டலமும் கையுமாக நடந்தார்.
காவிரியின் வடகரையை அடைந்தார்கள். அனைவரும் அங்கே நீராடினார்கள். பின்பு அங்கிருக்கும் பிராணவரதைத் தொழுதார்கள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அகத்தியர் தனது கையை காவிரி வரை நீட்டி அதிலிருந்து தண்ணீர் முகந்து அபிஷேகம் செய்தார். நவக்கிரங்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
காலவ முனிவரை தொழுநோய் தொற்றக்கூடிய நேரம் வந்தது. நவக்கிரகங்களும் அந்த தொழுநோய் பீடித்தது. அங்கங்கள் அழுகி தொங்கலாயிற்று.
அகத்தியர் அவர்கள் நிலையைக் கண்டு வருந்தினார்.
“இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கு பகுதி அதாவது ஈசான்ய பகுதியில் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து தவத்தை ஆரம்பியுங்கள். சாபவிமோசனமாக பிரம்மன் கூறியபடி திங்கட்கிழமைதோறும் காவிரியில் நீராடி பிரணவரதரைத் தொழுது எருக்கு இலையில் தயிர் அன்னம் புசியுங்கள். தொழுநோய் நீங்கும்.” என்று ஆசீர்வதித்துக் கிளம்பினார்.
சூரியதேவன் ஓடிப் போய்....”முனிவரே.. இதில் எருக்க இலையில் தயிரன்னம் ஏன் புசிக்கவேண்டும் என்கிறார்?” என்று வினவினர்.
”எருக்க இலையின் சாரத்தில் ஒரு அணுப்பிரமாணம் அதில் தயிர் அன்னம் வைத்துச் சாப்பிடுவதில் கலக்கும். அதுவே தொழுநோய்க்கு சிறந்த மருந்தாகும்.” என்கிற தேவரகசியத்தைச் சொன்னார். நவநாயகர்களும் இதை சிரத்தையாக செய்தனர்.
எழுபத்தெட்டாம் நாள். தொழுநோய் முக்கால்வாசி குணமடைந்திருந்தது. பிராணவரதர் அவர்களுக்கு பிரத்யட்சமாகி உங்களது தவத்தை மெச்சினோம். இந்த அர்க்கவனத்தின் வடகிழக்கில் நீங்கள் கோயில்கொண்டு உங்களை வந்து வணங்குவோர்க்கு அனுக்கிரஹம் செய்ய ஆசி வழங்குகிறேன் என்று சொல்லி மறைந்தார்.
இப்போது அவர்களது தொழுநோய் நீங்கிவிட்டது. மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அப்போது காலவ முனிவர் அங்கே வந்து கதறினார்.
”ஐயோ.. என்னால் உங்களுக்கு இப்படியொரு கஷ்டமா? இது என்ன சோதனை?” என்று புலம்பினார். நவநாயகர்கள் காலவரைத் தேற்றினார்கள்.
“நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று நவநாயகர்கள் காலவரைக் கேட்டார்கள்.
“அகத்திய மாமுனியை விந்திய மலைச்சாரலில் சந்தித்தேன். அவர் உங்களுக்கு அர்க்கவனத்திற்கு வழிகாட்டியதைப் பற்றி பிரஸ்தாபித்தார். ஓடோடி வந்துவிட்டேன்” என்றார்.
நவநாயகர்களும் காலவரும் விநாயகர் சன்னிதியை அடைந்தனர். நவநாயகர்கள் தங்களது சாபப்பிணியான கோளை நிவர்த்தி செய்ததினால் அந்த விநாயகருக்கு “கோள் தீர்த்த விநாயகர்” என்று பெயர் சூட்டினர்.
“காலவரே.. எங்களுக்கென நீங்கள் இங்கே தனிக்கோயில் அமைத்து வழிபடுங்கள்...” என்று கூறி மறைந்தனர்.
காலவ முனிவர் கோயில் கட்டினார். நவக்கிரக பிரதிஷ்டை செய்து வழிபடலாயினார்.
சில குறிப்புகள்:
ரத வடிவில் அமைந்தது சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்க சோழன் 1079-1120 சிவசூரியப்பெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாட்டுக்கு நிவந்தங்கள் எழுதிவைத்தான். விஜயநகர் மன்னர்கள் பின்னர் நவக்கிரங்களுக்கும் கோயில் கட்டினார்கள். ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு இருக்கிறது. சௌரம் என்று ஷண்மதங்களில் ஒன்றாக சங்கரர் போற்றிவைத்தார். 
திருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். சூரியபகவான் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஒன்பது தீர்த்தங்கள். அதில் சூரியன் நீராடிய தீர்த்தம் சூரிய புஷ்கரணி.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails