Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 33: தத்வ கண்ட சதகம்

சென்னையில் நாயனாவைச் சதா சர்வகாலமும் மொய்த்தார்கள். தினமும் பொழுது விடிந்தால் நாயனா வீட்டு வாசலில் ஒரு கூட்டம்.

“ஐயா... எனக்கு உங்களது அறிவுரை தேவை...”
“ஸ்வாமி... ஒரே குழப்பம்.. தெளிவு உங்கள் கையில்... தயவு செய்து....”,
“காளிதாஸனின் குமார சம்பவத்தில்....”
இப்படியெல்லாம் பல்வேறு தேவைகளுக்காக அவரைச் சந்தித்தனர். ஸ்ரீரமணரின் போதனைகளிலிருந்து அதன் ரசத்தை எடுத்துப் பிழிந்து வந்தவர்களுக்கு வாரி வாரி வள்ளலாக வழங்கினார். குழப்பமும் பலவீனமாகவும் வந்தவர்கள் புதுத் தெம்புடன் திரும்பினர்.
இப்படி நாட்கள் பறந்து கொண்டிருந்தபோது, விசாலாக்ஷிக்கு காலடி சென்று அத்வைத ஸ்தாபகரான ஸ்ரீசங்கரரின் ஜென்ம பூமியைத் தரிசித்து வர ஆவல் எழுந்தது. தர்மபத்னியின் விருப்பத்திற்கு நாயனாவும் இசைந்தார்.
இருவரும் காலடிக்கு புறப்படுவதற்கு முன்னர் நாயனாவின் சிஷ்யர்களில் சிலர் விசாலாக்ஷி அம்மையாருக்கு ஜிமிக்கி, பட்டுப் புடவை போன்றவற்றைப் பரிசளித்தனர்.
“எனக்கு ஏனம்மா இதெல்லாம்?” என்று விசாலாக்ஷி மறுத்தார்.
“நீங்க இதெல்லாம் பூட்டிக் கொள்ள வேண்டும்...” என்று அடம் பிடித்தனர். அரைமனதாக அவர்கள் அன்போடு அளித்த பரிசுகளை அணிந்து காலடிக்கு நாயனாவுடன் புறப்பட்டார்.
காலடி. ஸ்ரீசங்கரர் அவதரித்த பூமி. மனமெல்லாம் ஒருவிதமான சந்தோஷத்துடன் நாயனாவும் விசாலாக்ஷியம்மாவும் தம்பதி சமேதராக வீதிகளில் நடந்து வருகின்றனர். போவோர் வருவோரெல்லாம் இவர்கள் இருவரையும் வினோதமாகத் திரும்பித் திரும்பி பார்த்துவிட்டுச் சென்றனர். நாயனாவுக்கு இது புதிராக இருந்தது. “ஏன் இவர்கள் நம்மை இப்படி பார்க்கிறார்கள்? நம்மிடம் என்ன வித்தியாசம்?” என்று விசாலாக்ஷியும் கணபதியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு புருவம் சுருக்கினார்கள்.
“ஆமாம்.. இவள்.. அவளைப் போலவே இருக்காளே...” என்று ஒரு நடுத்தர வயது அம்மணி பக்கத்தில் தண்ணீர்க் குடம் தூக்கிப் போனவளிடம் சொன்னது விசாலாக்ஷியின் காதுகளுக்கே எட்டியது. இன்னும் இரண்டு பேர் இவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சாலையோரத்தில் கிடந்த கல் இடறி தடுமாறினார்கள். விசாலாக்ஷி ”என்ன இது?” என்பதாகக் கணபதியைப் பார்த்தார். அவர் மௌனமாக மடத்தை நோக்கி நடந்தார்.
மடத்தின் ஸ்ரீகார்யம் நாயனாவுக்கு தகுந்த மரியாதையோடு உள்ளே அழைத்துச்சென்றார். நாயனாவுக்கும் விசாலாக்ஷிக்கும் தங்கி தவம் புரிவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். மடத்தின் தலைமை கணபதியிடம்...
“ஸ்வாமி.. இங்கு நடைபெறும் ஆன்மிக விவாதங்களில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.. அப்படியில்லையெனில் தத்துவ சாரங்களை உபன்யசிக்கலாம்... தங்களது சித்தம்.... புண்ணியம் செய்தவர்கள் இதைக் கேட்டு பயனடைவார்கள்...” என்று விஞ்ஞாபித்தார்.

நாயனா பகவான் ஸ்ரீரமணரின் ”நான் யார்?” என்கிற ஆத்ம தேடுதல் தத்துவங்களையும் அவரது போதனைகளையும் அங்கே சொற்பொழிவாற்றினார். அதில் லயித்துப் பலர் ஸ்ரீரமணரின் சீடர்களாக சித்தமாயினர். ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் அகம் மகிழ்ந்தனர். பல நூற்றாண்டுக்களுக்குப் பிறகு ஸ்ரீசங்கரர் பிறந்த மண்ணில் அதே போல ஒருவரைக் கண்டும் கேட்டும் மகிழ்வதாக பக்தர்கள் பூரிப்படைந்தார்கள்.
இப்படி உபன்யாசங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நேயர்களோடு உட்கார்ந்திருந்த விசாலாக்ஷியை ஒரு ஸ்த்ரீ தயங்கித் தயங்கி நெருங்கினாள்.
”அம்மா.. என்னை மன்னித்துவிடுங்கள்...” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு விசும்பினாள். விசாலாக்ஷிக்கு உடனே அடையாளம் தெரியாவிட்டாலும் பின்னர் காலடியில் கால் வைத்தவுடன் தன்னைப் பார்த்தவள் என்று சுதாரித்துக்கொண்டார். காலடியில் இறங்கிய அன்று “இவ.. அவளைப் போலவே இருக்காளே..” என்று சொன்ன அதே அம்மணிதான் இவள்.
“நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?” என்று சொற்பொழிவு கேட்பவர்களுக்கு இடைஞ்சலில்லாமல் சன்னமானக் குரலில் கேட்டார் விசாலாக்ஷி.
”நீங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முன்னால் நாங்கள் ஒரு விஷயம் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டோம்... அந்த செய்திக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணி உங்களை சந்தேகித்தோம்... ஆகவே....” என்று இழுத்தாள்.
“என்னைப் பற்றி என்ன கேள்விப்பட்டீர்கள்? என்ன சங்கதி?” என்று விசாரித்தார் விசாலாக்ஷி.
“ஒரு செல்வச்செழிப்பான பிராம்மண சீமாட்டி ஒருத்தி எவனோ ஒருவனுடன் ஓடிவிட்டதாகவும்.. அவள் அவனோடு ஊர் ஊராக யாத்திரை கிளம்பி வருவதாகவும் பேசிக்கொண்டார்கள். நீங்கள் தான் அவள் என்றும் எண்ணிக்கொண்டோம்..”
எவ்வளவு முறை வேண்டாம் என்றாலும் நாயனாவின் பக்தர்கள் வற்புறுத்தி தனக்கு அலங்காரம் செய்துவிட்டது எப்படிப்பட்ட வில்லங்கத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது என்று வருத்தப்பட்டார் விசாலாக்ஷி. அவருக்கு அதற்கு மேல் அவ்விடத்தில் இருக்க பிடிக்கவில்லை. அன்றைய உபன்யாசம் முடிந்தவுடன் நாயனாவிடம்...
“நாம் வேறு எந்த புண்ணிய க்ஷேத்திரத்திற்குத் தவமியற்றச் செல்லலாமா?”
“ஏன்?”
விசாலாக்ஷி முழுக்கதையையும் சொன்னார்.
“சரி.. நாம் கோகர்ணம் செல்வோம்...” என்று காலடியிலிருந்து விடைபெற்றார்.
காலடியிலிருந்து புறப்பட்ட நாயனாவும் விசாலாக்ஷியும் கோகர்ணம் செல்லும் வழியில் ஸ்ரீகிருஷ்ணர் அனுக்கிரஹிக்கும் உடுப்பியை அடைந்தார்கள். நாயனாவின் பிரதான சிஷ்யர்களில் ஒருவரான வாஸுதேவ சாஸ்திரியின் சொந்த ஊர். அவரின் இல்லத்தை அடைந்தார்கள்... ஆனால் அவரோ சென்னைக்கு சென்றிருந்தார். நிச்சயம் அங்கே தங்கவேண்டும் என்று அவரின் தர்மபத்னி விசாலாக்ஷியின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார்.
நாயனா அருகில் கடற்கரையோரமிருக்கும் வடபந்தேஸ்வரா க்ஷேத்திரத்திற்குச் சென்றார். அது பலராமர் திருக்கோயில். ஸ்ரீமத்வாச்சார்யாருக்கு ஸ்ரீகிருஷ்ணர் காட்சி கொடுத்த கடற்கரை. இந்த ஆலயமும் அதன் இயற்கை எழில் கொஞ்சும் சுற்று வட்டாரமும் தவம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கணபதி தீர்மானித்தார்.
உடுப்பியில் பண்டிதர்கள் அதிகம். நாயனாவின் வருகை தெரிந்தால் அவரை சம்ஸ்க்ருத இலக்கியம், தத்துவ உபதேசங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள் என்று நிர்பந்திப்பார்கள். தீவிரமான இறைத் தேடலுக்கும் தவம் செய்வதற்கும் இதெல்லாம் தடைகற்கள். ஆகையால் அவர் வடபந்தேஸ்வரத்துக்கு விரைந்தார். அங்கு ஊருக்கு வெளியே தொந்தரவில்லாத, ஆட்கள் நடமாட்டமில்லாத சில குன்றுகளுக்கு மத்தியில் தவமியற்ற முடிவு செய்தார்.
பகலெல்லாம் கடும் தவமியற்றுவார். இரவு கிளம்பி ஊருக்குள் வருவார். வீதியில் பிக்ஷையெடுத்து சாப்பிட்டுவிட்டு கிடைக்கும் திண்ணையில் படுத்துத் தூங்குவார். மீண்டும் பொழுது புலர்வதற்குள் அதிகாலையிலேயே யார் கண்ணிலும் படாமல் வெளியேறி குன்றுகளுக்கு இடையில் சென்றமர்ந்து தவம் செய்வார். பதினைந்து நாட்கள் இப்படிக் கடந்தபின்... உண்பதற்கும் தூங்குவதற்கும் ஊருக்குள் செல்லும் பழக்கத்தையும் கைவிட்டார்... இரவுகளிலும் முழுவதும் அயராமல் தவம் புரிந்தார்... இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் செல்வார். நாட்கள் செல்லச் செல்ல எலும்பும் சதையும் நரம்புமாய் இருக்கும் புறவுடம்பை உதறி ஆன்ம ஒளி பெருகிய அகத்துக்குள் மூழ்கிக் கரைந்துபோனார். பசி தூக்கம் மறந்தார். இருப்பிடம் மறந்தார். வெளியுலகம் மறந்தார். பஞ்ச பூதங்களை மறந்தார். வெயில் நிழல் மறந்தார். உற்றார் உறவினர் என்று எல்லோரையும் மறந்து “நான் யார்?”ரில் மூழ்கி உள்ளே வெகுதூரம் சென்று... வெளியில் வரவும் மறந்தார்.
ஒரு வாரம் கண் திறக்காமல் ஆழ்ந்த தியானத்துடன் கூடிய தவத்தில் புதைந்தார். அந்தப் பக்கமாக சென்ற ஒருவர் “இதுவல்லவோ தவம்! இவரல்லவோ மஹா தபஸ்வி!!” என்று அவர் வெகுநாட்களாக தொடர் தவத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எப்போது குளித்தாரோ எப்போது சாப்பிட்டாரோ என்ற கவலையில் கணபதியின் தவத்தைக் கலைக்காமல் அவர் கண் திறக்கும் வரையில் அருகிலேயே அசையாமல் சிலையாய் நின்றிருந்தார்.
வெகுநேரம் கழித்துக் கணபதிக்குச் சமாதி நிலையிலிருந்து திடுமென விழிப்பு வந்தது. அவரைக் கைத்தாங்கலாக மெதுவாக அருகிலிருந்த சுனைக்குக் கூட்டி வந்தார். நீர் பருக வைத்தார். பின்னர் அருகிலிருக்கும் மடத்திற்கு ஓடினார். அங்கே குன்றுகளுக்கிடையில் தவம் இயற்றும் தபஸ்வியைப் பற்றி அந்த மடத்தின் தலைமையிடம் தெரிவித்தார்.
சாத்துக்குடி பழச்சாறும் பத்தாறு வேஷ்டியுமாக கணபதியிருக்குமிடத்திற்கு ஓடிவந்தார் அந்த மடத்தின் தலைமை அதிகாரி. நாயனாவிற்கு திருப்தியேற்படும் வரை பழரசத்தைப் பருகக் கொடுத்தார். பின்னர் விசாலாக்ஷி அம்மையாருக்கு கணபதியைப் பற்றிச் செய்தி அனுப்பினார்.
இப்போது கணபதியின் வருகை எல்லோர் காதுகளுக்கும் எட்டியது. சம்ஸ்க்ருத பண்டிதர்கள் மாநாடு போல ஒன்று கூடினார்கள். நாயனாவைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் பாடினார்கள். இந்து தர்மத்தை பற்றி சொற்பொழிவாற்ற வேண்டி நின்றார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்க ”தத்வ கண்ட சதகம்” என்று ஒரு மணி நேரத்தில் நூறு ஸ்லோகங்களைப் பாடினார்.
வடபந்தேஸ்வரம் கோயிலின் பிரதானக் கடவுளை உபாசித்து வழிபட்டார். மானுட சேவையிலோ, ஆன்மிக தவத்தினாலோ அல்லது அந்த வித்தை கற்கும் முயற்சியில் அடையும் ஞானத்தாலோ நாம் எல்லாம் வல்ல பரம்பொருளை அடையலாம் என்று அந்த பண்டித குழாமிற்கு அருளினார்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பகவான் ஸ்ரீரமணரிடம் இதைப் பற்றி நாயனா அகஸ்மாத்தாகச் சொன்னபோது ”தத்வ கண்ட சதகம்” என்ற அந்த நூறு ஸ்லோகங்களையும் சிரத்தையுடன் தனியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டார் ஸ்ரீரமணர்.
கோகர்ணம் செல்வதற்கு முன்னர் பத்து நாட்கள் வாஸுதேவ சாஸ்திரியின் வீட்டில் தங்கினார். அப்போது ஒரு துயரச் சம்பவம் நடந்தது... அது...

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails