Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 31: திராவிட ராஜ யோகி


====================
தீவிரத் தவத்தின் பதினைந்தாம் நாள். அர்த்தஜாமத்திற்கு இன்னும் சற்று நேரமிருந்தது. திறந்த கண்களுடன் ஆத்மவிசாரத்தில் மூழ்கியிருந்த கணபதியின் கண்ணெதிரே பட்டுப் பாவாடை சட்டையில் அழகான சின்னப் பெண்ணொருத்தி நடந்து வந்தாள். பக்கத்தில் வந்தவுடன் தெய்வீக மணம் கமழ்ந்தது. முகத்தில் தெய்வீக தேஜஸ். மழலையில் கொஞ்சு மொழி பேசினாள். ஆனால் அர்த்தபுஷ்டியான பேச்சு. நுணுக்கங்களும் நுட்பங்களும் நிறைந்தது. பல சாக்த சூத்திரங்கள், ஆன்மிக இரகசியங்களை காதோடு காதாக சொன்னாள். கேட்கக் கேட்க கணபதி மெய்சிலிர்த்தார். குளிர்ந்து போனார்.

அஸ்த்ர வித்யாவை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு இவ்வுலகம் இன்னும் தயாராகவில்லை என்றும் விராட் மந்திரத்தை உபதேசம் செய்து இவ்வுலகம் உய்யுமாறு செய்யலாம் என்றும் அறிவுறுத்தினாள். வேதங்களின் சூட்சுமங்களை சொல்லிக்கொடுத்தாள். மகிழ்ச்சியில் திளைத்தார் கணபதி. மனசு ஆனந்தக் கூத்தாடியது. எல்லாவற்றிர்க்கும் மகுடமாக “நீயும் ரமணரும் நாளைய ஆன்மிக விழிப்புணர்வுக்கு வித்திடுங்கள். தக்க சமயத்தில் அடுத்த கட்டத்திற்கான கட்டளை உங்களைத் தேடி வரும்” என்றாள்.
எவ்வளவு மணி நேரம்.. மணித் துளிகள் இது நடந்தது என்று தெரியாது. அவளது பேச்சில் கணபதி மயங்கியிருந்த வேளையில் பட்டென்று அந்த உருவம் மாயமாய் மறைந்துபோனது. அங்கே அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான சுவடே இல்லை. ஊர் உறங்கிய அவ்வேளையில் அவர் உள்ளுணர்வு படக்கென்று விழித்துக்கொண்டது. பேசியது பாலா திரிபுரசுந்தரியா? தெய்வீக அம்சங்களுடன் வந்த அந்தக் குட்டிப் பெண் யார்? எதற்காக எந்த உரையாடல்? எது நம்மை இப்படி இயக்குகிறது? என்று அவரது மனம் இந்த ஆன்மிக அனுபவத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது..
தவம் கலைந்தது. இதற்கு மேலும் அங்கே தங்க மனமில்லாமல் வேலூருக்குத் திரும்பினார் கணபதி. மாவுலி கிராம மக்கள் மறுநாள் பொழுது புலர்ந்ததும் கணபதி கோயில் மண்டபத்தில் இல்லாதது கண்டு வருந்தினர். அந்தக் கிராம மக்களுக்கு அவரது பெயர் கூட என்னவென்று தெரியாது. அவர்கள் கணபதி முனியை “திராவிட ராஜ யோகி” என்றே அழைத்துவந்தனர். ஹோஸ்பெட் இன்ஸ்பெக்டர் அவரது மகிமையை எடுத்துக் கூறி அவரது தவ குரு பற்றியும் சொன்னவுடன் நிறைய பேர் பகவான் ஸ்ரீரமணரின் பக்தர்கள் ஆனது தெய்வசங்கல்பம்.
கணபதி அருணாசலம் வந்தடைந்தார். மாமரக் குகையில் அமர்ந்து தவம் செய்ய அவரது சிஷ்யர்கள் கேட்டுக்கொண்டார்கள். உமாசகஸ்ரத்தை மறுதிருத்தம் செய்து முடிக்காமல் அங்கே அமர்வதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தார்.
அந்த சமயத்தில் திடுதிப்பென்று தென்னக தலயாத்திரைக்குப் புறப்பட்டார். கன்யாகுமரியை அடைந்தார். கன்னியாகுமரியம்மனை வழிபட்டார். தக்ஷன் ஈஸ்வரனை அழைக்காமல் நடந்திய யாகக் குண்டதில் குதித்து தன்னை மாய்த்துக்கொண்ட சக்தியானவள் மீண்டும் சிவனை அடைய தவமியற்ற தேர்வு செய்த இடம் கன்னியாகுமரி. ஆகையால் பக்தர்களை தவம் செய்ய அழைக்கும் இடம்.
நாயனா அங்கிருந்து சுசீந்திரம் சென்றார். அடுத்தது ராமேஸ்வரம். சமுத்திரராஜனின் ஆயிரம் அலைகளை தடுத்தாண்ட ராமனுக்கும், கார்த்தவீர்யனின் ஆயிரம் கரங்களை அறுத்து சம்ஹாரம் செய்த பரசுராமனும் அவதாரபுருஷர்களில் ஒருவரே என்று நாயனா புரிந்துகொண்டார். அங்கிருந்து கிளம்பி மதுரை, பாபநாசம், ஸ்ரீரங்கம் என்று தரிசனம் செய்துகொண்டு கடைசியில் ஜம்புகேஸ்வரம் என்றழைக்கப்படும் திருவானைக்காவலுக்குள் நுழைந்தார். அவருடைய சிஷ்யர்கள் சிலரை சந்தித்தார்.
ஆனைக்காவலில் தவம் செய்ய தோதாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்து பத்து நாட்கள் தவமியற்றினார். ராமகிருஷ்ணர் என்கிற சிஷ்யர் அவரது தேவைகளைக் கவனித்துக்கொண்டார். பத்து நாட்கள் கழிந்த பின்னர் திரும்பவும் உமாசகஸ்ரத்தை எழுத உட்கார்ந்தார். மூளையைக் கசக்கிப் பிழிந்து பார்த்தாலும் ஆயிரமும் அவரால் மொத்தமாக திரும்பவும் நினைவூட்டலுக்குக் கொண்டு வர முடியாதது அதிசயம்தான். எழுநூறு தேறிற்று. எழுநூறை மட்டும் இப்போது எழுதுவது என்று முடிவு செய்துவிட்டு ரமணருக்கும் செய்தி அனுப்பினார்.
பின்னர் திருவொற்றியூரை அடைந்தார். கபாலியின் துணையோடு புராதன காலத்து புஸ்தகங்கள் சிலவற்றை படிக்கும் வாய்ப்பு பெற்றார். தனது குருவின் புஸ்தக ஈடுபாடும் அதை அவர் வாசிக்கும் அசாத்திய வேகமும் கபாலியைக் கட்டிப்போட்டது. ஆச்சரியக் கடலில் மூழ்கிய கபாலி ஒரு நாள் கணபதியிடமே.... “நீங்கள் இந்த புஸ்தகங்களை முழுவதும் வாசிப்பீர்களா? அல்லது அனைத்துமே வெறும் பக்கப் புரட்டல்களா?” என்று தைரியமானக் கேள்வியால் கணபதியைக் குத்திப் பார்த்தார். பதிலுக்கு நாயனா இதுவரை தான் வாசித்த புத்தகங்களில் இருக்கும் அத்தியாயங்களின் பெயரைச் சொல்லி அதிலிருக்கும் சில வரிகளையும் அப்போதே பாடிக் காட்டினார். ஆச்சரியமடைந்த கபாலி “ஆ”வென வாய் பிளந்தார். விவேகானந்தர் தான் படிக்கும் அத்துனை விஷயங்களையும் மொத்தமாகவும் காலக்கெடு இல்லாமல் நிரந்தரமாகவும் நினைவிலும் தேக்கி வைத்துக்கொள்வாராம்.
சிறுகுழந்தையின் விளையாட்டுப் போல மிக எளிதாக எல்லா விஷயங்களையும் படித்து அதைச் சாரமோடு சிந்தையில் ஏற்றிக்கொள்வது லேசுப்பட்ட காரியமல்ல. கபாலி இதைக் கண்டு அதிசயித்தார். கணபதியின் தெய்வாம்சம் புரிந்து, அவரை பரீட்சை செய்து பார்த்தத் தவறுக்கு வருந்தி குருவிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
திருத்தணிக்கு சாந்திகிரி என்றொரு பெயர் உண்டு. நாயனா அங்கும் சென்றார். சில நாட்கள் தவம் செய்தார். பின்னர் அவரது மகன் மஹாதேவனின் உபநயன வைபவத்திற்கு ஊருக்கு வரும்படி அவரது மனைவி விசாலாக்ஷி அழைத்தார். ஃபிப்ரவரி 1910ம் வருடம் ஊருக்குத் திரும்பினார்.
மெட்ராஸில் வக்கீல் தொழில் செய்பவர் பஞ்சாபகேச சாஸ்திரி. நாயனாவின் அத்யந்த சிஷ்யர். அவருக்கு நாயனா சென்னையில் ஜாகையிருக்க வேண்டும் என்று பிரியப்பட்டார். ஆனால் நாயனாவோ பகவான் ஸ்ரீரமணர் அருகிலேயே எப்போதும் இருக்க ஆசைப்பட்டார். ஏப்ரல் 1910ம் வருஷம் அவரும் விசாலாக்ஷி அம்மையாரும் மாமரக் குகையிலேயே சில காலம் தங்கினர்.
வேலூரில் அப்புவும் காமாக்ஷியும் வஜ்ரேஸ்வரியைப் பார்த்துக்கொண்டார்கள். மஹாதேவன் தந்தையின் சிஷ்யனாக அவர் காலருகிலேயே வசித்தான். மாதுக்கரம் (எப்போதும் பிக்ஷை பெண்களால் இடப்படும் என்பதால் மாதுக்கரம்) என்றழைக்கப்படும் பிக்ஷை எடுத்துவந்து தந்தைக்கும் கொடுத்து தானும் உண்டான். விசாலாக்ஷியும் கணபதிக்கு இணையாக தவத்தில் ஈடுபட்டு தபஸ்வி அந்தஸ்து பெற்றார். இவர்களது இந்த நவீன வானபிரஸ்தாஸ்ரமத்தை கண்டு ரமணர் அகமகிழ்ந்தார்.
*
ஒருநாள் பகவான் ஸ்ரீரமணர் கிரிவலம் செய்ய திருவுளம் கொண்டார்... அப்போது....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails